தென்றல் பேசுகிறது...
சுற்றுச்சூழல் விஞ்ஞானி க்ளாடியா ஷைன்பாம் மெக்ஸிகோவின் அதிபராக மிக அதிக வாக்குகளைப் பெற்று ஜெயித்துள்ளார். அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ நாடுகளில் ஒரு பெண்மணி அதிபராவது இதுவே முதல்முறை. "ஒரு பெண் வேட்பாளருக்கு வாக்களிப்பேன் என்று நான் நினைத்ததே இல்லை. நான் வாக்களிக்கத் தொடங்கிய நாளிலிருந்து கணவன் சொல்லாத ஒருவருக்கு வோட்டுப் போட்டது இதுவே முதல்முறை" என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார் எடல்மிரா என்று 87 வயது மூதாட்டி. அப்படிப்பட்ட ஆணாதிக்க சமுதாயத்தில், க்ளாடியாவின் வெற்றி குறிப்பிடத் தக்கதாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவிலும் தேர்தல் வெகு தூரத்தில் இல்லை. இங்கும் ஒரு பெண்மணி, அதிலும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர், தேர்ந்தெடுக்கப்படலாம் என்கிற நம்பிக்கை வலுவாக உள்ளது.

★★★★★


ஹங்கேரியின் புடாபெஸ்ட்டில் நடந்த 45வது FIDE செஸ் ஒலிம்பியடில் பொதுப்பிரிவிலும் மகளிர் பிரிவிலும் பாரதம் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. விஸ்வநாதன் ஆனந்த் பராமரித்த திறன் விதைகளும் இவ்வணிகளில் உண்டு. இவ்வெற்றியில் அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி தவிரச் சென்னையைச் சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோரின் பங்களிப்பு மிகச் சிறப்பானது. மகளிர் பிரிவில் வைஷாலி, ஹரிகா, வந்திகா, தான்யா சச்தேவ் ஆகியோர் தங்கம் வெல்வதற்குக் காரணமாயினர். சென்னையைச் சேர்ந்த உடன்பிறப்புகளான பிரக்ஞானந்தா, வைஷாலி இருவரும் மிக எளிய குடும்பப் பின்னணியில் வந்தவர்கள் என்பது கவனிக்கத் தக்கது. இந்தச் சதுரங்க வீரர்களுக்கு எடுக்கப்பட்ட விழாக்களும், குவிந்த பரிசுகளும், கிடைத்த வரவேற்பும் கிரிக்கெட் ஹீரோக்களையும் விஞ்சிவிட்டது என்று சொல்லலாம். அதிலும் குகேஷ் தனது அனல்பறக்கும் வெற்றியினால் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது உண்மை. நமக்கும் பெருமிதம்தான்.

★★★★★


ஆயுர்வேத மருத்துவர் சுனில் கிருஷ்ணனின் சிறப்பான தகவல்கள் நிரம்பிய நேர்காணல் இவ்விதழை வளப்படுத்துகிறது. இளம் சாதனையாளர் ஸ்ரீ மீனாட்சி தமது குதிரையில் ஏறி மிகுந்த உயரங்களைத் தாண்டுவதும் நமக்குச் சந்தோஷம் அளிப்பதே. இவ்வளவு தெய்வீகமான வாழ்க்கையை நம் முன்னோர்கள் வாழ்ந்தார்களா என்று வியக்க வைப்பது அலமாரி கட்டுரை. சிறுகதை, நிகழ்வுகள் எனப் பல அம்சங்களுடன் இம்மாதத் தென்றல் வருகிறது. சுவைக்கத் தாமதமேன்!

வாசகர்களுக்கு காந்தி ஜயந்தி, நவராத்திரி பண்டிகை நாள் வாழ்த்துகள்.

தென்றல்
அக்டோபர் 2024

© TamilOnline.com