உண்மையான பாசத்தை உணர்ந்து...
நான் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவள். எனக்கு மூன்று சகோதரிகள், இரண்டு சகோதரர்கள். என் சகோதரர்கள் இந்தியாவிலேயே அப்பாவின் வியாபாரத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். நான்தான் கடைக்குட்டி. ஆனால் எனக்குத்தான் முதலில் கல்யாணம். அத்தைக்கு ஒரே மகன். சிறுவயதிலிருந்தே அத்தைக்கும்,அவருக்கும் நான் மிகவும் செல்லம். வயசும் எனக்குத் தான் சரியா இருந்தது, என் அக்காமாருங்களைவிட. அதனாலே எல்லாரும் விருப்பப்பட்டு தான் கல்யாணம். எனக்குப் படிப்பிலே அவ்வளவு ஈடுபாடு இல்லே. அவுங்க 2 பேரும் மேலே படிச்சுக்கிட்டு இருந்தாங்க. அதுவும் ஒரு காரணம். நான் சந்தோஷமா கல்யாணம் முடிந்து என் வீட்டுக்காரருடன் அமெரிக்கா வந்தேன். எனக்குப் படிப்பில ஈடுபாடு இல்லைங்கறதாலே அவரு ஒரு பிசினஸ் வழியைக் காட்டிக் கொடுத்தாரு. நல்லா போயிட்டிருக்கு.

நான் முன்னாடியே கட்டிக்கிட்டேங்கற காரணமோ என்னமோ எங்க சமூகத்துல எங்க அக்காங்களுக்கு கல்யாணம் தள்ளி போய்க்கிட்டே வந்தது. நான் ரொம்பக் கவலையடைந்தேன். அவர்களுக்காக இறைவனை வேண்டிக்கொண்டேன். இங்கே என் நண்பர்களிடையேயும் அவர் களைப் பற்றிச் சொல்லி நான்தான் என் அக்கா இரண்டு பேருக்கும் இங்கேயே மாப்பிள்ளை பார்த்தேன். ஒரு வருஷ இடைவெளியில இரண்டு பேரும் செட்டிலாய்ட்டாங்க. முதல் அக்கா ஒரு மூன்று மாதம் என்னுடன்தான் இருந்தாள். அப்புறம் இரண்டாவது அக்காவும் கல்யாணம் முடிஞ்சு அவ புருஷனோடோ ஒரு மாதம் தங்கியிருந்தா. அவுங்களுக்கு எல்லா வசதியும் செஞ்சு கொடுத்தேன். ஒரு அக்கா பக்கத்திலே தான் வீடு வாங்கியிருக்கா. இன்னொரு அக்கா 200 மைல் தள்ளி இருக்கா. இதெல்லாம் 12 வருடத்துக் கதை.

என்னமோ தெரியவில்லை நான் என்ன தான் பாசமா இருந்தாலும் அவுங்களுக்கு எங்கிட்ட அவ்வளவா ஒட்டுதல் இல்லை. எப்பவும் பொறாமைதான். அவுங்க அடிக்கடி பேசிக்கிறாங்க, சந்திச்சுகிறாங்க. விடுமுறை கொண்டாட்டங்களுக்கான திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் என்னை எதிலும் சேர்த்துக்கிறதில்லை. எந்த விஷயமும் சொல்வது கிடையாது. எனக்கே பொறுக்காமல் கொஞ்ச நாள் முன்னாடி அவங்ககிட்ட சண்டை போட்டேன். ''நான் உங்க தங்கைதானே, எவ்வளவோ உங்களுக்கு செஞ்சு இருக்கேன். என்னை ஏன் இனம் பிரிச்சு பாக்கறீங்க?'' என்று கேட்டேன். அவ்வளவுதான். பிலுபிலுவென பிடிச்சி கிட்டாங்க. ''எங்களுக்கு முன்னாடி கல்யாணம் செஞ்சுகிட்டு செட்டில் ஆயிட்டே. உன் அதிர்ஷ்டம் எங்களுக்குக் கிடையாது. நாங்க ஒவ்வொரு பைசாவையும் யோசிச்சு யோசிச்சுதான் செலவு செய்யணும். ஆகவே கூட்டா போயி காசு பிடிக்கப் பார்ப்போம். உங்க வீட்டுக்காரர்தான் ஒன்னை எல்லா இடத்துக்கும் கூட்டிட்டு போறாரே. ஆகவே உன்னையும் எங்களையும் கம்பேர் பண்ணாதே"ன்னு சொல்லி திட்டி அனுப்பிச்சுட்டாங்க.

வீட்டுக்கு வந்து மனசு உடைஞ்சு அழுதேன். என் கணவருக்கு என் நல்ல மனசு புரியும். பெரியவங்க ஏதோ புரியாம பேசிட்டுப் போறாங்க. அதைக் கண்டுக்காதே அவுங்களுக்கு போன் போட்டு மறுபடியும் திட்டுவாங்காதே என்று சொல்லிட்டுப் போயிட்டாரு.

இது நடந்து மூன்று மாசம் இருக்கும். இன்னும் எங்களுக்குள் பேச்சு வார்த்தை இல்லை. நான் மனசு உடைஞ்சு போயிருக்கேன். என் பேரிலே என்ன தப்பு? அவுங்க ஏன் என்னைப் பார்த்துப் பொறாமைப்படணும்? தொலைபேசியில் கூப்பிட்டு ஊரிலிருக்கும் எங்க அம்மாவிடம் ஒரு குரல் அழுதேன். 'வயசுதான் அதிகமே ஒழிய, அவுங்க சின்னப் புள்ளைங்க மாதிரிதான் நடந்துகிறாங்க. அவுங்களே வழிக்கு வருவாங்க. நீ கொஞ்சம் பொறுத்துக்கோ. அக்கா, தங்கச்சின்னா அடிச்சிக்கிறது சகஜம்தான்னு'' எனக்கு புத்தி சொல்றேன்னு சொல்லி என்னை இன்னும் அழ வச்சாங்க. என்னை திருத்திக்க, இல்ல அவுங்களை திருத்த ஏதேனும் வழியிருக்கா? எனக்கு அக்கா தங்கச்சிங்க எல்லாரும் சண்டை போடாம சந்தோஷமா இருக்கணும்னு ஆசை. அவுங்களும் 'தென்றல்' படிப்பாங்கன்னு நினைக்கிறேன். பரவாயில்லை. இருக்கட்டும். உண்மையைத்தான் எழுதறேன்.

இப்படிக்கு,
............

அன்புள்ள,

நீங்கள் குறிப்பிட்ட சம்பவத்திற்கு அடிப்படையில் இன்னும் ஏதோ அழுத்தமான காரணம்/நிகழ்ச்சி நடந்து இருப்பதால் உங்கள் சகோதரிகள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஒன்று உங்கள் திருமணத்தால் அவர்கள் வாழ்க்கை அமைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இருக்கலாம். அல்லது அவர்கள் இந்த நாட்டில் உங்கள் வீட்டில் விருந்தின ராக இருந்தபோது நீங்கள் உங்களை அறியாமல் பேசிய சொற்களோ, செய்கை களோ அவர்களுக்கு மனதில் ஒரு வேறு பாட்டைத் தோற்றுவித்து இருக்கலாம். உங்கள் வாக்கில் உண்மையும் மனதில் நன்மையும் நிறைந்து இருக்கலாம். ஆனால் truth is more painful and bitter than harsh words. எனக்குத் தெரிந்த வரை சொல் கிறேன். சகோதரிகள் ஒற்றுமையாகப் பாசத்துடன் இருக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியும், பாதுகாப்பு உணர்ச்சியும் ஒரு தனி வகை. உங்களுக்கு அவர்களுடைய நட்பு வேண்டியிருக்கிறது. அவர்கள் உங்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டால் அதைப் பற்றிய வருத்தத்தைத் தவிருங்கள். Jealousy is a form of compliment. நீங்கள் அவர்களைவிட சமூக, பொருளாதார ரீதியில் உயர்வாக இருந்தால் அந்த அதிர்ஷ்டத்தை எண்ணி, அனுபவியுங்கள். ஆனால் அவர்கள் பொறாமைப்படக்கூடாது என்று எந்தச் சட்டமும் கொண்டு வர முடியாது. பொறாமை, மனித இயல்பு. மனதில் முதிர்ச்சி வளர வளர அந்தக் குணம் குறைய ஆரம்பிக்கும்.

நிறைய நேரங்களில் ஒருவர் நமக்கு எதிராகச் செய்யும் விஷயங்களோ, (அதாவது நமக்குத் தெரியாமல்) பேசும் செய்திகளோ, நமக்குத் தெரிய வந்தாலும், அதைக் கண்டுக் கொள்ளாமல் இருந்தால், அவர்களே அது போன்ற முயற்சிகளை விட்டுவிடுவார்கள். நமக்கு அவர்கள் செய்வது தெரியும் என்பதை மறைமுகமாக வேண்டுமென்றால் காட்டிக் கொள்ளளலாம். ஆனால் எதிர்க்கக்கூடாது.

உறவுகளைப் பொறுத்தவரை நாம் யாரிடமும் ''நீ அன்பாக இருக்க வேண்டும். உண்மையாக இருக்க வேண்டும். அக்கறையாக இருக்க வேண்டும்'' என்று எத்தனைக் கட்டளைகள் போட்டாலும் வளராது. Unconditional acceptance and understanding of people is what that can make the relation to grow.

நடந்ததைப் பற்றிப் பேசாமல் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியைச் சாக்கிட்டு உங்கள் சகோதரிகளை விருந்துக்குக் கூப்பிடுங்கள். அவர்கள் வருத்தப்படக்கூடும் என்று நினைத்தால், உண்மையாக இருந்தாலும் பேசுவதைத் தவிருங்கள். அவர்களைக் கூப்பிடும்போது அவர்கள் உங்கள் வீட்டிற்கு வருவதற்குச் சாக்குப் போக்கு சொன்னாலும் அதற்குத் தயாராக இருங்கள்.

நீங்கள் பலமுறை கூப்பிட்டாலும் அவர்கள் மறுத்து விட்டால், அதற்கும் உங்கள் மனதைத் தயாராக்கிக் கொள்ளுங்கள். ஒரே தாயின் வயிற்றில் பிறந்து, பல வருடம் ஒன்றாக இருப்பதால் நமக்கு குடும்பம், பாசம் என்று நினைக்கிறோம். ஆனால் இந்த உலகில் ஆயிரம் ஆயிரம் அன்னைகள் உண்டு. அவருக்கு ஆயிரம் ஆயிரம் பெண்களும் உண்டு. அத்தனைப் பேரிடமும் அன்பைப் பொழிந்தால் எத்தனை ஆயிரம் சகோதரிகள் நமக்கு என்று நினையுங்கள். அன்பு, பாசம் எல்லாம் மனதைப் பொறுத்தது. நிச்சயம் உங்கள் சகோதரிகள் உங்கள் உண்மையான பாசத்தை உணர்ந்து வருவார்கள். நடந்து போனதைப் பற்றி மட்டும் பேசாதீர்கள்.

*****


இந்தப் பகுதிக்குக் கேள்விகளை அனுப்ப விரும்புகிறவர்கள் thendral@tamilonline.com என்ற முகவரிக்கு snegithiye என்ற தலைப்பிட்டு அனுப்பலாம். சாதாரண அஞ்சலில் தென்றல் அலுவலக முகவரிக்கு 'சிநேகிதியே' என்று குறிப்பிட்டு அனுப்பவும். எழுதுபவர்களின் பெயர் மற்றும் முகவரி வெளியிடப்பட மாட்டாது. வெளியிடுவதில் தென்றல் ஆசிரியரின் முடிவே இறுதியானது.

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com