ஸ்ரீதேவி நிருத்யாலயா: நாட்டிய நிகழ்ச்சி
யூட்யூப் மூலம் உலகெங்கிலும் பிரபலமடைந்த ஸ்ரீதேவி நிருத்யாலயாவின் நிகழ்ச்சியை ஆகஸ்ட் 17ம் தேதி ஹேவர்டில் உள்ள சாபட் கல்லூரி கலையரங்கில் காணும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த நடனக் குழு முதன்முதலாக அமெரிக்கா வந்து வாஷிங்டன், கனெக்டிகட், சிகாகோ, நியூஜெர்சி ஆகிய இடங்களில் செப்டம்பர் மாதம் 29ம் தேதி வரை நிகழ்ச்சிகள் நடத்த இருக்கிறார்கள். அவர்களது அமெரிக்க விஜயத்தில் முதல் இடம்பெறுவது விரிகுடாப் பகுதியில் உள்ள சான் ஹோஸே என்ற செய்தி மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. வாய்ப்பைத் தவறவிடாமல் கச்சேரிக்குச் சென்று அனுபவித்த இன்பத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஸ்ரீதேவி நிருத்யாலயா பற்றிச் சில செய்திகள்
ஸ்ரீதேவி நிருத்யாலயா நாட்டியக் குழுவின் நிறுவனர் திருமதி ஷீலா உன்னிகிருஷ்ணன். இவர், கடந்த 36 வருடங்களாகக் கலைச்சேவை செய்து வருகிறார். மாங்குடி துரைராஜ பாகவதரின் சீடரான ரயில்வே ஸ்ரீ சுந்தரம் அவர்கள்தான் டாக்டர் ஷீலா உன்னிகிருஷ்ணனின் குரு. ஆரம்பத்தில் ஏழு, எட்டு மாணவிகளாகச் சேர்ந்து மெலட்டூர் பாணியில் நடனம் கற்றுக் கொண்டிருந்தார்கள். நடுவில் அந்தப் பயிற்சி தடைப்பட்டுவிட, அவரது அன்னையின் அறிவுரைப்படி ஷீலாவே வகுப்பை எடுத்து நடத்தும்படி ஆகிவிட்டது. தற்போது சகோதரி ஷோபா கொரம்பில் துணையுடன் இதை நடத்தி வருகின்றார்.

இந்த நடனப் பள்ளியில், தற்போது 120 மாணவியர் பயின்று வருகின்றனர். வருடத்திற்கொரு நாட்டியத் தொகுப்பு, ஸ்ரீ கிருஷ்ண விஜயம், தசாவதாரம் போன்ற நிகழ்ச்சிகளை அளிக்கிறார்கள். ஒரு நடன நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, கலையார்வமிக்க நன்கு பயிற்சி பெற்ற மாணவியரைத் தேர்ந்தெடுத்து, மேலும் நல்ல பயிற்சி கொடுத்து, தரமான கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்யக் காலமும், பொருளும் நிறையத் தேவைப்படுவதால், வருடத்திற்கு ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளையே தர முடிகின்றது என்கிறார் ஷீலா.



இனி நிகழ்ச்சியைப் பார்ப்போம்.
நாட்டிய நிகழ்ச்சி சரியாக மாலை 4 மணி அளவில் ஆரம்பமாயிற்று. முதலில் அலாரிப்பு. சிறப்பான தாளக்கட்டுடன், இனிய ஸ்வரத் தொகுப்பும், மிருதங்க வித்வான் 'லய தபஸ்வி' குரு டாக்டர் பரத்வாஜ் அவர்களால் அமைக்கப்பெற்று, மாணவியர் சஞ்சனா ரமேஷ், பைரவி வெங்கடேசன், மிருதுளா சிவகுமார் ஆகிய மூவரும் அழகாக ஆடினார்கள். இரண்டாவதாக, காஞ்சியில் எழுந்தருளி இருக்கும் வரதராஜப் பெருமாளை வணங்கி, அவர் புகழ்பாடும் முத்துசாமி தீட்சிதர் இயற்றிய சாரங்க ராக 'வரதராஜம் உபாஸ்மஹே' என்ற இனிய பாடலுக்கு ஆடினார்கள். பெருமாளைத் தொடர்ந்து மூன்றாவதாக வருவது ஆனந்த தாண்டவம் என்னும் சிவசக்தி நடனம். டாக்டர் ஷீலா உன்னிகிருஷ்ணனின் நடனத் தயாரிப்பில், கமாஸ் ராகத்தில் அமைந்த 'நீ ஆட நான் ஆடுவேன்' என்ற இனிமையான பாடல். சிவனும் சக்தியும் இணைந்து ஆடுவதைக் காணும்போதே நமக்கு தேவலோகத்தில் இருப்பதைப் போன்ற பிரமிப்பைத் தோற்றுவித்தது. சிவனாக சஞ்சனா ரமேஷும், சக்தியாக மிருதுளா சிவகுமாரும் அழகிய நடன அசைவுகளுடன், தகுந்த பாவங்களுடன் ஆடியது கண்ணிலேயே நிற்கிறது. அற்புதமான இந்தப் பாடலை இயற்றியவர் குரு மாங்குடி துரைராஜ் ஐயர்.

சிவசக்தி நடனத்தைத் தொடர்ந்து தொய்வில்லாமல் வந்தது ஊத்துக்காடு வெங்கடசுப்பையரின் மிகப் பிரபலமான 'தாயே யசோதா'. ராகமாலிகாவில் ஆதி தாளத்தில் அமைந்த பாடல். கண்ணனின் குறும்பும், கோபியர்களின் புகாரும், யசோதை அவர்களைச் சமாளிப்பது ரசிக்கும்படியாக இருந்தது. யசோதையாக சஞ்சனா ரமேஷும், கோபியாக மிருதுளா சிவகுமாரும், கண்ணனாக பைரவி வெங்கடேசனும் தக்க அலங்காரங்களுடனும், முக பாவங்களுடனும் ஆடியது அவையோரின் மனதைக் கவர்ந்தது. கண்ணனின் குறும்பை பைரவி படம் பிடித்துக் காட்டி பார்ப்போர் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

நடராஜரைப் பற்றி 'சரண ச்ருங்க ரக்ஷித' என்ற பதஞ்சலி முனிவரின் பாடல், கேட்பவர்களின் துன்பங்களை நீக்கி நிம்மதியைத் தருவது. பாவத்தை நீக்கிப் பரவசம் தருவது. சிதம்பரத்தில் உள்ள உலக நாட்டிய நாயகன் நடராஜரின் புகழ் பாடுவது.



அடுத்தது ஜாவளி. பொதுவாக ஜாவளிகள் உரையாடலாக இருக்கும். பல்லவி, அனுபல்லவி, சரணம் இருக்கும். தலைவி-தலைவனுக்கு இடையே நடக்கும் ஊடல், சமாதானப் பேச்சு, கோபத்தை வெளிப்படுத்துதல் போன்ற உணர்வுகளைக் குறிக்கும் பாடல்களாக இருக்கும். இங்கு தலைவி ஊடல் கொண்டு கோபித்துக் கதவை மூடுவது போல அமைந்திருக்கும் அந்த அழகுக் காட்சியைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டார் பைரவி வெங்கடேசன். தத்ரூபமான முகபாவங்களும் தகுந்த அபிநயமும் மிக அருமை.

நிகழ்ச்சியின் நிறைவாக வந்தது ஜயதேவரின் தசாவதார அஷ்டபதி. இதில் பாட்டு, நடனம் ஆகியவற்றுடன் ஓவியமும் இடம்பெற்றது. அவையோருக்குப் புது அனுபவம். மேடையில் வைக்கப் பெற்ற ஒரு பலகையில் மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறித்து மாணவியர் மாறி மாறி தனித்தனியாக வந்து படத்தைப் பாட்டுக்குத் தக்கபடி ஆடிக்கொண்டே வரைந்து பூர்த்தி செய்தனர். இதில் பாராட்டுப் பெறும் அம்சம் என்னவெனில், தசாவதாரம் பாடல் முடியவும், படம் வரைந்து முடிக்கவும் சரியாக இருந்தது. மாணவியர் மூவரும் சற்றும் பிசகாமல் ஆடிக்கொண்டே வந்து மகாவிஷ்ணுவின் படத்தை வரைந்து முடித்தது ஆச்சரியம்தான். பார்வையாளர்கள் எழுந்து நின்று கரகோஷங்களால் அரங்கத்தை நிரப்பினர். அருமையான, மனதிற்கு நிறைவான நிகழ்ச்சியைக் கொடுத்த ஸ்ரீதேவி நிருத்யாலயாவைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

இறுதியில் புகழ்பெற்ற குச்சிபுடி நடனக் குழுவின் திரு கிஷோர் மோசாலி கண்டி அவர்கள், குரு டாக்டர் ஷீலா உன்னிகிருஷ்ணன், திருமதி ஷோபா கொரம்பில், மாணவியர் சஞ்சனா ரமேஷ், பைரவி வெங்கடேசன், மிருதுளா சிவகுமார் ஆகியோருக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். இத்தகைய அருமையான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த, 'வரத ரங்கம் ஆர்கனைசேஷன்' திரு ரங்கநாதன் நன்றியுரை கூற, விழா இனிதே நிறைவுற்றது.

சுபத்ரா பெருமாள்,
சான்ஹேஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com