நல்லி திசை எட்டும் விருது
2003 முதல் தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் மொழிபெயர்ப்புக்கான காலாண்டிதழ் 'திசை எட்டும்'. குறிஞ்சிவேலன் இதன் ஆசிரியர். நல்லி குப்புசாமிச் செட்டியார் இவ்விதழின் புரவலர். தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களுக்கு 2004-ம் ஆண்டு முதல், 'நல்லி – திசை எட்டும்' மொழியாக்க விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழிலிருந்து பிற இந்திய மொழிகளுக்குச் செல்லும் நூல்கள், பிற இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் நூல்கள், ஆங்கிலப் புனைவிலக்கிய நூலின் தமிழாக்க நூல்கள், ஆங்கிலம் அல்லது பிற அயல்மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் புனைவு இலக்கியம் அல்லாத நூல்கள் போன்றவற்றிற்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் மூத்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, மாணவர் விருதுகளும் வழங்கப்படுகின்றன. 2023 வரை 157 மொழிபெயர்ப்பாளர்கள் இவ்விருதுகளைப் பெற்றுள்ளனர்.

அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான விருதுகளுக்கு கீழ்க்காண்போர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

'கருமை' சிறுகதைத் தொகுப்பிற்காக எழுத்தாளர் சமயவேல்.

'ஆரண்ய தாண்டவம்' நாவலுக்காகப் பேராசிரியர் க. மூர்த்தி.

'நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்' கவிதைத் தொகுப்புக்காக பேராசிரியர் எம்.டி. முத்துக்குமரசாமி.

'Black Soil' ஆங்கில மொழியாக்க நாவலுக்காக டாக்டர் பிரியதர்ஷினி.

'Palm Lines' ஆங்கில மொழியாக்க நாவலுக்காக பேராசிரியர் பி. ராம்கோபால்.

'பார்த்திபன் கனவு' மலையாள மொழியாக்க நாவலுக்காக பாபு ராஜ் களம்பூர்.

'புத்திசாலி பெட்டூனியா' சிறார் சிறுகதைத் தொகுப்புக்காக கொ.மா.கோ. இளங்கோ.

விருதாளர்களுக்குத் தென்றலின் வாழ்த்துகள்.

© TamilOnline.com