அரசுசார் அமைப்புகளாலும் கல்வித் துறையாலும் கௌரவிக்கப்படாத படைப்பாளிகளைக் கௌரவிக்கும் வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் அவரது நண்பர்களால் 2010ல் ஆரம்பிக்கப்பட்டது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். இது ஆண்டுதோறும் தகுதி வாய்ந்த சிறந்த இலக்கியப் படைப்பாளிகளைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கிக் கௌரவித்து வருகிறது.
இதுவரை ஆ. மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப், ஞானக்கூத்தன், தேவதச்சன், வண்ணதாசன், சீ. முத்துசாமி, ராஜ் கௌதமன், கவிஞர் அபி, எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித், கவிஞர் விக்கிரமாதித்யன், சாருநிவேதிதா, யுவன் சந்திரசேகர் போன்றோர் விஷ்ணுபுரம் இலக்கிய விருது பெற்றுள்ளனர். இந்த ஆண்டுக்கான (2024) விருதுக்கு எழுத்தாளர் இரா. முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இரா. முருகன் என்னும் முருகன் இராமசாமி, 1953ல், சிவகங்கையில் பிறந்தார். இவர் பயின்ற சிவகங்கைக் கல்லூரி பல வாசல்களைத் திறந்துவிட்டது. கவிஞராக அறிமுகமாகி, கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், திரைப்படம் எனக் கலையின் பல தளங்களிலும் ஆழமான முத்திரை பதித்தார். தமிழ், ஆங்கிலம், மலையாளம் என மூன்று மொழிகளிலும் தேர்ந்தவர். மலையாளத்திலிருந்து குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து அருண் கொலாட்கரின் எல்லாக் கவிதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார். கணினித் துறையில் வேலை பார்ப்பவர்களின் மன அழுத்தங்களை, பணிச் சிக்கல்களை, அனுபவங்களைப் பற்றிப் பேசும் 'மூன்று விரல்' இவரது முதல் நாவல். இவரது இளம்பருவ வாழ்வியல் அனுபவங்களைக் கொண்ட, 'நெம்பர் 40, ரெட்டைத் தெரு' கட்டுரை நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஒன்று. இது பின்னர் ஆவணப்படமாகவும் வெளியானது. மாந்திரீக யதார்த்த நடையில் இவர் எழுதிய 'அரசூர் வம்சம்', 'விஸ்வரூபம்', 'அச்சுதம் கேசவம்', 'வாழ்ந்து போதீரே' நாவல் தொடர்கள், இவரது அசாத்தியத் திறனை வெளிப்படுத்துபவை. 'உன்னைப் போல் ஒருவன்', 'பில்லா - 2' போன்ற திரைப்படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.
வங்கியில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற இரா. முருகன், சென்னையில் வசித்து வருகிறார். (மேலும் விவரங்களுக்குப் பார்க்க: எழுத்தாளர் கட்டுரை; நேர்காணல்
விஷ்ணுபுரம் விருது ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கமும், கேடயமும் கொண்டது. பரிசு பெறுபவர் பற்றிய விரிவான ஆவணப்படத்துடன் அவரது வாழ்க்கை, படைப்பு பற்றிய புத்தகங்களும் வெளியிடப்படுவது இந்த விருதின் முக்கியமான சிறப்பம்சம்.
இரா. முருகனுக்குத் தென்றலின் வாழ்த்துக்கள். |