முன்கதை: சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணராக இருந்தவர் சூர்யா. அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளர் ஆவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிகுந்த ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன்! அவனுக்குத் தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவழிக்கிறான். ஷாலினி ஸ்டான்ஃபோர்ட் மருத்துவமனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவ நுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.
★★★★★
ஒரு பண்டிகைக்காக சூர்யா சினேகிதர் முரளியின் வீட்டுக்குப் போயிருந்தார். பண்டிகைக்காக மட்டுமல்ல, ஷாலினியோடு குடும்பச் சூழலில் உரையாடுவதும் ஒரு நோக்கந்தான் என்று கிரணுக்குத் தெரிந்திருந்தாலும் அவன் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை!
முரளியும் கிரணும் தொலைக்காட்சியில் உலகக் கோப்பைக் கிரிக்கெட் பந்தயம் ஒன்றை ரசித்துக் கொண்டிருந்தனர். சூர்யாவுக்கு அதில் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லாவிட்டாலும், அவர்களோடு அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். கிரண் இந்திய வீரர்கள் ஒவ்வொரு பந்து அடிக்கும் போதும் துள்ளிக் குதித்து விவரணை அளித்தான், "அடப்பாவி, இப்படி அடிச்சிண்டிருந்தா அதோ கதிதான்! பவர் ப்ளேன்னா தூக்கி அடிக்க வேண்டியதுதானே!" என்பது போல.
சூர்யா முறுவலித்துக் கொண்டு வினவினார், "ஏய் கிரண், கிரிக்கெட் மேல உனக்கு எப்படி இவ்வளவு ஆர்வம்? அதுவும் நுட்பங்களையெல்லாம் பிட்டுப் பிட்டு வைக்கறயே!"
முரளி கை தூக்கி இடையில் நுழைந்தார், "அந்தப் பெருமையெல்லாம் எனக்குத்தான் சேரும்! நான்தான் இவனுக்கு இந்த அளவுக்கு ஆர்வம் வரும்படி தூண்டி விட்டிருக்கேன். சின்ன வயசுலேந்து வீட்டுக்குப் பின்னாடியும் ஸ்கூல் விளையாட்டுத் திடலிலயும் அவனுக்கு விளையாடக் கத்துக் குடுத்தேன். மேலயும் வீடியோ டேப்ல இந்தியால பதிப்பெடுக்க வச்சு அப்பப்போ இங்க வரவழைச்சு போட்டுக் காட்டி விவரமா விளக்கியிருக்கேன். அதான் இப்படி!"
சூர்யா கை தட்டிப் பாராட்டினார். "ரொம்ப நல்லாவே பழக்கியிருக்கீங்க முரளி, சபாஷ்!" முரளி கை கூப்பித் தலை வணங்கி ஏற்றுக் கொண்டார்.
அப்போது ஷாலினி சமையல் அறையிலிருந்து இரண்டு கைகளில் இரண்டு தட்டுக்களை ஏந்திக்கொண்டு தொலைக்காட்சி அறைக்குள் வந்தாள். ஒரு தட்டில் முறுமுறு வடை. இன்னொரு தட்டில் சிறு கோப்பைகளில் காஃபி.
கிரண் துள்ளிக் குதித்தெழுந்து கை கொட்டி ஆரவாரித்தான். "ஆஹா! ஆஹா! ஆஹா! ஷாலூ! நீ எங்கயோ போயிட்டே போ! இப்பதான் நான் டிவியில விளையாட்டு பாக்கறச்சே எதாவது கொரிக்கவும் குடிக்கவும் இருந்தா நல்லா இருக்குமேன்னு நெனச்சேன், உடனே நீ கொண்டு வந்துட்டே, வாழ்க வாழ்க!"
ஷாலினி பழிப்புக் காட்டினாள். "ஆங், வெவ்வே! உனக்காக ஒண்ணுமில்லே மிஸ்டர்.. நீ மட்டும்னா உள்ளேந்து, வந்து எடுத்துக்கோன்னு குரல் மட்டுந்தான் வந்திருக்கும். எதோ வீட்டுக்குச் சிறப்பு விருந்தாளி வந்திருக்காரேன்னுதான் கரிசனமா இங்கயே எடுத்துட்டு வந்தேனாக்கும்!"
கிரண் சிரித்தான். "ஓ சூர்யா ஸ்பெஷலா! அதானே பாத்தேன், என்னடா ஷாலுகூட நமக்கு சேவை பண்றாளேன்னு?!"
சூர்யா ஷாலினியைப் பார்த்து முறுவலித்தார். "ரொம்ப தேங்க்ஸ் ஷாலூ!" அவர் தன்னை ஷாலூ என்று செல்லப் பெயரிட்டு குறீப்பிட்டதால் புளகாங்கிதமடைந்த ஷாலினி பூரித்துக் கொஞ்சம் நாணத்துடன் புன்னகைத்தாள். "வெரி வெல்கம் சூர்யா" என்றவள் துள்ளலுடன் நடந்து ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்து தன் கைபேசியில் குறுஞ்செய்திகளையும் மின்னஞ்சல்களையும் பார்க்க ஆரம்பித்தாள். அவர்கள் இருவரின் பாசக் காட்சியைக் கண்கொட்டாமால் கவனித்த முரளியும் கிரணும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்து புன்னகைத்துத் தலையசைத்துக் கொண்டனர்.
சில நிமிடங்கள் கடந்தன. திடீரென்று ஷாலினி "ஓ மை காட்!" என்று கூவி எழுந்து நின்றாள். அப்போது தான் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஒரு விக்கெட் இழந்த சமயம். அதனால்தான் கூவுகிறாள் என்று நினைத்துக் கிரண் ஆச்சர்யமடைந்தான். "என்ன ஷாலூ இது? நீ எப்போ இப்படி அலர்ற அளவுக்கு கிரிக்கெட்ல ஆழ்ந்து போனே?" என்றான்.
ஷாலினி கடிந்து கொண்டாள். "போடா மண்டூ! எனக்கும் கிரிக்கெட்டுக்கும் ரொம்ப ரொம்ப தூரம். இப்போ எனக்கு ரொம்ப அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒண்ணு வந்திருக்கு. அதைப் பாத்துத்தான் அடக்கிக்க முடியாம கூவிட்டேன்" என்றாள்.
அறையிலிருந்த மூவரும் பதட்டமடைந்தனர். சூர்யா முந்திக்கொண்டு விசாரித்தார், "அதிர்ச்சி அளிக்கும் செய்தியா? யாருக்கு என்ன ஆச்சு?"
ஷாலினி இன்னும் அடக்கிக் கொள்ள முடியாத பதட்டத்துடன் தட்டுத் தடுமாறி விளக்கினாள். "அது... வந்து... என்னோட… எனக்கு நல்லாத் தெரிஞ்சவங்க... மேரின்னு பேரு..." என்றவள், பெருமூச்சுடன் மீண்டும் செல்பேசியை நோக்கினாள்.
சூர்யா மிக்க கரிசனத்தோடு , "மேரிக்கு என்ன ஆச்சு, ஷாலூ? நாம எதாவது உதவமுடியுமா?"
அவருடைய கரிசனத்தாலும், ஷாலூ என்று செல்லப் பெயரில் குறிப்பிட்டதாலும் குளிர்ந்து போய் அமைதியடைந்த ஷாலினி, ஒரு நீள் மூச்செடுத்துக் கொண்டு தொடர்ந்து தடுமாறாமல் கோவையாக விளக்கினாள். "மேரி ஒரு குவான்ட்டம் கணினித்துறையில் நிபுணர். அந்தத் துறையில் நுட்ப எல்லையை உயர்த்திக் கொண்டே போகும் ஒரு சிலரில் ஒருவர். அவர் ஒரு பிரமாதமான நுட்பத்தைக் கண்டு பிடித்திருப்பதாகக் கூறியிருந்தார். ஆனா, இன்னிக்கோ..."
கிரண் இடை புகுந்து "ஹூம் இன்னனிக்கு என்ன ஆச்சு? மேரியே அவுட்டா?" என்றான்.
ஷாலினி அவனைக் கடிந்து கொண்டாள். "சே! அபசகுனமா சொல்லாதே! அப்படியே ஆயிடப் போகுது. இன்னிக்கு அவங்களோட தொழில்ரீதியா பெரிய பிரச்சனை. யாரோ அவங்களோட ஆராய்ச்சிக் கூடத்துல நுழைஞ்சு களேபரமாக்கி முக்கியமான பொருளைத் திருடிக்கிட்டு போயிட்டாங்களாம். அதுனால் அவங்க நிறுவனமே முழுகிடக்கூடிய நிலைக்கு வந்துடுச்சாம். என்னால அதைப்பத்திக் கண்டுபிடிச்சு நிவர்த்திக்க எதாவது உதவமுடியுமான்னு கேட்டிருக்காங்க."
கிரண் மீண்டும் துள்ளினான். "ஹையா! ஆக்ஷன். சரியாத்தான் கேட்டிருக்காங்க. உடனே போய் விசாரிக்கலாம் வா."
சூர்யா அவனைக் கண்டித்தார். "சே என்ன கிரண் இது? யாரோ அவங்க நிறுவனத்தையே இழக்கற நிலையில துடிக்கறாங்க. நீ என்னன்னா இப்படித் துள்ளிக் குதிக்கறே?" என்று கூறிவிட்டு ஷாலினியிடம் கரிசனத்தோடு தொடர்ந்தார். "நீ கவலைப்படாதே ஷாலினி, நம்மால ஆன அளவுக்கு உதவி செய்யலாம். எங்க இருக்கு அந்த ஆராய்ச்சிக் கூடம்?"
கிரண் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். "ஹுக்கும். அவங்களுக்கு உதவி வேணும், எனக்கு ஆக்ஷன் வேணும். இதுல என்ன பிரச்சனை ? இது வின்-வின் நிலைமைதானே?"
ஷாலினி அவனைக் கண்டு கொள்ளாமல் மேற்கொண்டு விளக்கினாள். "அது பெர்க்லி கிட்ட இருக்கு. இங்கேந்து கார்ல போக ஒரு மணி நேரமாகும்!"
அதற்குள் முரளியின் மனைவி கமலா உள்ளிருந்து அவசரமாக வந்து, "என்ன ஷாலூ இது யாரும் இன்னும் ஒண்ணும் சாப்பிடலையே. சமையல் எல்லாம் ஆச்சு! சாப்பிட்டப்பறம் போகாலாம்." என்று வேண்டுகோள் விடுத்தாள்.
சூர்யாவும், "சரி, சாப்டுட்டே கிளம்பலாம். திரும்ப வர ரொம்ப நேரம் ஆகும் போலிருக்கு!" என்று கூறவே அனைவரும் ஆமோதித்துவிட்டு மேஜையைச் சுற்றி அமர்ந்து பண்டிகைச் சாப்பாட்டை ஒரு கை பார்த்தனர்!"
சூர்யா சிலாகித்தார். "ஆஹா, சாப்பாடு வழக்கம்போல மிகப் பிரமாதம். தேவாமிர்தம்!"
கமலா சற்று வெட்கத்துடன் "ரொம்ப சொல்லாதீங்க சாதாரணமான சமையல்தான். இருந்தாலும் நீங்க பிரமாதம்னு சொன்னா எனக்கு சந்தோஷந்தானே" என்று ஏற்றுக்கொண்டாள்!
கிரண் உடனே, "ஆங்! சாப்பாடு ஆச்சு இல்லே, கிளம்பலாமா! நான் கார் ஓட்டறேன்!" என்றான். ஆனால் ஷாலினி "அய்யோ வேண்டாம்ப்பா. நீ ஓட்டற விதத்துல சாப்பிட்டதெல்லாம் வெளில வந்துடும்!" என்றாள்.
அவளுக்கு எதோ பதில் அளிக்க வாய் திறந்த கிரணை சூர்யா அடக்கினார். "கிரண் நீ ஓட்ட வேண்டாங்கறத்துக்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கு. ஷாலு ஓட்டட்டும். நாம பெர்க்லி போய் சேர்றத்துக்குள்ள நீ இந்தக் குவான்ட்டம் கணினித் துறையில எந்த நிறுவனங்கள் என்ன செய்யறாங்கன்னு ஓரளவுக்கு ஆராய்ஞ்சு எனக்கு சொல்லு. நான் அதுக்குள்ள குவான்ட்டம் கணினித் தொழில் நுட்பத்துல என்னென்ன நுணுக்கம் இருக்குன்னு கொஞ்சம் குடைஞ்சு பாக்கறேன்."
நம் துப்பறியும் மூவரும் ஷாலினியின் வண்டியில் ஏறிக்கொண்டு பெர்க்லியை நோக்கி விரைந்தனர்.
குவான்ட்டம் கணினிக்கு நேரிட்ட குழப்பம் என்ன? சூர்யா அதை எவ்வாறு நிவர்த்தித்தார்? வரும் பகுதிகளில் காண்போம்.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |