தென்றல் பேசுகிறது...
ஒரு நல்ல விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லி, அதை உண்மையில் நடந்ததுபோலக் கற்பனை செய்து, அதுவே உண்மையென நமது ஆழ்மனத்தில் பதிய வைத்தால், அது நிஜமாகும் வாய்ப்பு உண்டு என்று உளவியல் சொல்கிறது. நல்லதல்லாத விஷயத்துக்கும் இதைப் பயன்படுத்தலாம். அப்படி இந்தத் தந்திரத்தைத் தனது அரசியல் நோக்கத்துக்குப் பயன்படுத்துகிறார் டோனல்டு ட்ரம்ப். எதிர் வேட்பாளரைப் 'பிசாசு', 'மார்க்ஸிஸ்ட்' என்பது போன்ற சொற்களால் எல்லா மேடைகளிலும் வாய்க்கு வந்தபடி வர்ணிக்கிறார். முதலில் கூறிய மனோதத்துவ தந்திரம், இப்படிப்பட்ட எதிர்மறை விஷயத்திலும் பலன் தரக்கூடும். அதாவது, இதைக் கேட்பவர்கள் நாளாவட்டத்தில் இதையே உண்மை என நம்பி ட்ரம்ப்பின் எதிரி வேட்பாளரை அவர் வர்ணித்தபடியே இருப்பதாக நம்பிவிடலாம். இன்றைய நிலைமை தனக்குச் சாதகமாக இல்லை என்பதால் அவர் இப்படிப்பட்ட மலிந்த உத்தியைக் கையாளுகிறார் போலும். மக்கள் இன்றைய நிலவரத்தையும் இவரது ஆட்சிக் காலத்தின் சாதனைகளையும் நன்கு அறிவார்கள். வேட்பாளர்களின் கொள்கை, அவற்றை நடைமுறைப்படுத்தும் திறமை, நெடுநோக்கு முதலியவற்றைப் பார்த்தே மக்கள் அரியணை ஏற்றுவார்கள். அதில்தான் மக்களாட்சியின் வெற்றி இருக்கிறது.

★★★★★


ஒருபக்கம் இந்தியாவின் மேற்கு வங்காளம் பாலியல் வன்முறையால் கொந்தளித்துப் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அண்டை நாடான வங்கதேசமோ அரசியல் புரட்சியை அடுத்து வெடித்த சமூக எரிமலையின் நெருப்புக் குழம்பின் ஓட்டம் நிற்காததால் தத்தளித்துக்கொண்டு இருக்கிறது. அங்கு கிறிஸ்தவர், ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. ரஷ்யா-யுக்ரெய்ன், இஸ்ரேல்-ஹமஸ் என்று யுத்தங்கள் வேறு. பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி என்று எங்குமே அமைதியில்லை. நல்லதை எண்ணி, நல்லதைப் பேசி, நல்லதைச் செய்வோம். நல்லதே நடக்கட்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.

★★★★★


நற்றமிழறிஞர் தெ. ஞானசுந்தரம் அவர்களின் வாழ்க்கை குறித்த சிறப்புப் பார்வை மனதுக்கு இதமானது. 'முன்னோடி' பண்டித கோபாலகிருஷ்ண ஐயர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் குறித்த கட்டுரைகளும் உற்சாகம் தருபவை. ஒரு புயல் வீசிய நாளில் பாரதியார் என்ன செய்தார் என்பது குறித்த அவரது மகள் தங்கம்மாள் பாரதியின் சொற்சித்திரம் சுவையானது. அன்பின் உயர்வைப் பேசும் அருமையான கதையும் உண்டு. முற்றிலும் புதிய பின்னணியில் 'சூர்யா துப்பறிகிறார்' துவங்குகிறது.

வாசகர்களுக்கு விழாக்கால வாழ்த்துக்கள்.

தென்றல்
செப்டம்பர் 2024

© TamilOnline.com