தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பில் கவிஞர், எழுத்தாளர், ஆய்வியல் அறிஞர் பெரியசாமித்தூரன் நினைவாக, ஆண்டுதோறும் தமிழ்விக்கி தூரன் விருது வழங்கப்படுகிறது. தமிழ் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய மேதையான பெரியசாமித்தூரனின் பங்களிப்பைப் போற்றும் வகையில் இவ்விருது உருவாக்கப்பட்டுள்ளது. பண்பாடு, இலக்கியம் ஆகிய தளங்களில் ஒட்டுமொத்த பங்களிப்புகளைச் செய்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. விருது, ரூபாய் இரண்டு லட்சமும், சிற்பமும் அடங்கியது.
2022ல் இவ்விருது ஆய்வாளர் கரசூர் பத்மபாரதிக்கு வழங்கப்பட்டது. 2023ம் ஆண்டுக்கான விருது பேராசிரியர், ஆய்வாளர், முனைவர் மு. இளங்கோவனுக்கு வழங்கப்பட்டது. 2024ம் ஆண்டுக்கான விருது, பேராசிரியர், ஆய்வாளர், முனைவர் மோ.கோ. கோவைமணி அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
முனைவர் கோவைமணி சுவடியியல் அறிஞர், ஆய்வாளர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையில் 33 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பல ஓலைச்சுவடிகளை நூலாகப் பதிப்பித்தவர். தஞ்சைப் பல்கலைக்கழகச் சுவடி சேகரிப்புகள் பெரும்பாலானவற்றை மின்னாக்கம் செய்தது இவரது பணிகளில் குறிப்பிடத்தகுந்தது. பிரிட்டிஷ் நூலக ஆவணக் காப்பகத் திட்டத்தின் (Endangered Archives Programme - EAP) நல்கை பெற்று இப்பணி மேற்கொள்ளப்பட்டது.
சுவடியியல் கற்பிப்பதும் சுவடிப்பயிற்சி அளிப்பதும் இவரது முக்கியப் பணிகள். திருக்குறள் ஆய்வுமாலை, முருக இலக்கியக் கோவை, தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணை (பல தொகுதிகள்) போன்ற பல நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
ஆகஸ்ட் 14, 15 நாட்களில் ஈரோட்டில் நடக்க இருக்கும் தூரன் விருது விழாவில் இவ்விருது கோவைமணிக்கு வழங்கப்படும்.
முனைவர் மோ.கோ. கோவைமணிக்குத் தென்றலின் வாழ்த்துக்கள். |