அவன் ஒரு மாணவன். இருபத்து மூன்று வயதாகிறது. அவன் படித்துக் கொண்டிருந்த தாவரவியலில் முதுநிலை பட்டயப் படிப்பின் இறுதியாண்டுத் துவக்கத்திற்கு முன்பு தன் நண்பனுடைய அழைப்பை மறந்து விட்டது அவனுக்கு நினைவுக்கு வந்தது. நினைவு வந்ததும் தன் பெற்றோரிடம் விசேஷமான சில புது மாதிரி செடிகளைச் சேகரிக்க, தான் தன்னுடைய நண்பனின் கிராமத்துக்குப் போக வேண்டும் என்ற தன் ஆசையை வெளியிட்டான்.
சந்திரகேசன் அவன் பெயர். பெற்றோரின் செல்லப்பிள்ளை. படிப்பில் ஆர்வம் மிகுதியுள்ளவன். தேர்வில் வெற்றி பெற மட்டுமே படிப்பவன் அல்ல. தான் கற்றறிந்திருக்கும் தாவர இயல் பற்றி அவன் மிகுந்த அக்கறை கொண்டிருந்தான் அவனுடைய மனப்போக்கை அவன் தந்தை நன்கு அறிந்தவர். அவர் அவனுடைய ஆசைக்குக் குறுக்கே நிற்கவில்லை.
ஒரு ஞாயிறு அன்று அவன் பயணப்பட்டான். பதினைந்து நாட்களுக்கு வேண்டிய உடைகள் மற்றும் ஆராய்ச்சிக் குறிப்புகள் அடங்கிய குறிப்பேடு, செலவுக்குப் பணம் என்று திட்டமிட்டுச் சேகரித்துக் கொண்டு போனான்.
அவன் ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் இருந்து அந்த கிராமத்துக்குச் செல்ல வேண்டும். முன்னறிவிப்பின்றிச் சென்று தன் நண்பனை திகைப்பில் ஆழ்த்த வேண்டும் என்ற நினைப்பில் அவன் நண்பனுக்குக் கடிதம் போடவில்லை.
ரயில் நிலையம் சிறிதாக இருந்தது. வெகு சிலரே அங்கே இறங்கினார்கள். கப்பி மண்ணடித்த பிளாட்பாரம். அதில் பூவரசு மரங்கள். சிமெண்ட் இருக்கைகள். பழுப்பேறின வெள்ளைச் சீருடையில் நிலைய அதிகாரி தூக்கக் கலக்கத்துடன் இவன் கொடுத்த பயணச் சீட்டைப் பெற்றுக் கொண்டார்.
"பெருமாள்மலை கிராமத்திற்கு எப்படி சார் போகணும்?"
சில வினாடி மௌனத்துக்குப் பின் சொன்னார்: "வெளியில் வண்டி இருக்கும். வாடகை பேசிக்கிட்டு போங்க. 5 கி.மீ. தூரம்" என்றார்.
பழுப்புநிறக் காளை பூட்டிய வண்டி ஒன்று வெளியே நின்றிருந்தது. இவன் வண்டிக்காரரை அணுகி, விஷயத்தைச் சொல்லி, வாடகை பேசி ஏறி அமர்ந்தான்.
மலைநாடு. நடுநடுவே ஆறுகள். தென்னை அமோகமாக வளர்ந்திருந்தது. வீடுகள் தனித்தனியாய் இருந்தன. சுற்றிலும் தோட்டம். நடுவே வீடு. ஆற்றோரங்களில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். சிலர் வலை விரித்தும் பிடித்துக் கொண்டிருந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த பகுதிதான் என்றாலும் பேச்சில் மலையாள ஓசை கலந்திருந்தது. வண்டி 1 கி.மீ. தூரம் போயிருக்கும். வெளிர்நீல வண்ணப் புடவை அணிந்து சாலையில் சென்று கொண்டிருந்த ஓர் இளம்பெண் கை நீட்டினாள்.
"வண்டிக்காரரே எங்கே போகுது?" என்றாள். நாஞ்சில் நாட்டுத் தொனி.
"பெருமாள்மலை கிராமத்துக்கு" என்றார் வண்டிக்காரர்.
"ஆள் அதிகம் இருக்கா?"
"இல்ல. இவிட ஒரு ஆளு மட்டும் தான் பயணிக்கும்" பாதி தமிழும் பாதி மலையாளமுமாகப் பதில்.
சந்திரகேசன் அவளைப் பார்த்தான். பின் சொன்னான் "எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. நான் முன் பக்கத்தில் நகர்ந்து இருக்கிறேன்" என்றான்.
"அம்மை நீங்கள் வரணும்னா வரலாம். அய்யா முழு வண்டிக்கு வாடகை பேசி இருக்கிறதுனால எனக்கு தயக்கமாயி."
"இடம் நிறைய இருக்கு" என்றான் சந்திரகேசன்.
"தேங்க் யூ சார். எனிக்கி பெருமாள் மலைக்கு போகணும்" சொல்லிக் கொண்டே உள்ளே ஏறி அமர்ந்து வண்டியின் பின்பக்கக் கம்பியை இரும்பு வளையத்தில் செருகினாள்.
சந்திரகேசன் அவளைப் பார்த்தான். பத்தொன்பது, இருபது பிராயம் இருக்கலாம். ஈரக் கூந்தலைப் பிரித்துப் போட்டிருந்தாள். அடர்த்தியான நீண்ட கூந்தல். புருவங்களை ஒழுங்குபடுத்தி இருந்தாள். எடுப்பான நாசி. உணர்ச்சிகளைக் கொட்டும் பார்வை. பொன்னிறம். கழுத்தில் மெல்லிய தங்கச் சங்கிலி. பிளாஸ்டிக் கூடையில் சில புத்தகங்கள். உணவுப் பொட்டலம் போன்ற ஒரு சிறு பொட்டலம். அவள் இவனைப் பார்த்துச் சிரித்தாள்.
சாலை மேடாக இருந்தது. "சாரே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். அம்மே குறச்சு முன்னுக்கு வரும். முன் பாரம் வேணும். இல்லங்கில் மாடு கஷ்டப்படும்" என்றார் வண்டிக்காரர்.
அந்தப் பெண் முன்புறமாக நகர்ந்தாள். இப்போது இருவரும் மிகவும் சமீபமாக அமர வேண்டியது ஆயிற்று. பூத்த புதுமலர் போன்று இருந்தவள் மேனியின் மீது பூசி இருந்த வாசனை பவுடரின் சுகந்தம் காற்றில் கலந்து வந்தது. செழுமையான தேக வாகு.
"சார் யார் வீட்டுக்கு வரீங்க?"
"என் சினேகிதன் பாலச்சந்திரன் வீட்டுக்கு. அவங்க தகப்பனார் மிஸ்டர் தாணு ஐயர்."
"ஓ பாலண்ட தோஸ்தா நீங்க. எங்க எங்க பக்கத்து வீடுதான். மெட்ராஸ்ல இருந்தா வர்றீங்க?"
"ஆமாம்."
"சார் மாணவரோ?"
"எம்.எஸ்ஸி. கடைசி வருஷம். பாட்டனி மாதிரிகள் சேகரிக்க வரேன். பெருமாள் மலைப்பக்கம் விசேஷமான மாதிரிகள் இருக்குன்னு பாலச்சந்திரன் சொல்வான். நானும் அவனும் பி.எஸ்சி. ஒண்ணா படிச்சோம். அவன் படிப்பைத் தொடரலை. பி.எட். படிச்சிட்டு இங்கே வாத்தியாரா இருக்கான்."
"ஞான் அறியும். பாலச்சந்திரன் நாகர்கோவிலில் மாஸ்டர். ஞான் இங்கே ஒரு ஸ்கூல் உண்டு அதிலே டீச்சர்."
"உங்க பேர் என்ன?"
"நிர்மலா" சொல்லிவிட்டு நிர்மலமாகச் சிரித்தாள். எதிர்பாராத அந்த குலுக்கலில் அவள் இவன்மீது சரிந்தாள். சுதாரித்துக்கொண்டு பின்புறம் சாய்ந்தாள். "வண்டிக்காரரே பார்த்து ஓட்டும்" என்றாள்.
"எத்தனை திவசம் தாமசம்?"
"ரெண்டு வாரம் தங்கலாம்னு உத்தேசம்."
"அருவிக்குப் போய் குளிக்கணும். இந்த ஜூலை மாசம் ரொம்ப நல்லா இருக்கும்."
"இங்கே அருவிகூட இருக்குதா?"
"ம். வலிய அருவியல்ல. செறுசு. ஆனால் குளிக்க தமாஷா இருக்கும்."
ஒரு வழியாகப் பெருமாள்மலை கிராமத்திற்கு வந்து சேர்ந்தான். வண்டிக்காரரிடம் இரண்டு ரூபாய் தாள்களை கொடுத்தான்.
"சில்லறை இருக்கான்னு பார்க்கும்."
"பரவாயில்லை வச்சுக்கோங்க."
நிர்மலா இறங்கியதும் சற்றுத் தாமதித்தாள். "ஸார் எங்களோட வீட்டுக்கு வரணும்" என்று சொல்லிப் போனாள்.
"வரேன்."
பதினைந்து படிக்கட்டுகளை ஏறி காம்பவுண்ட் கதவைத் திறந்து கொண்டு இவன் உள்ளே நுழைந்த சமயம், கருப்பு நிற நாயொன்று குரைத்தது. அதைக் கேட்டுவிட்டு வெளியே வந்த பாலச்சந்திரன், இவனைப் பார்த்ததும் திகைத்து விட்டான்.
"டேய் சந்திரன் எந்தடா இது? லெட்டர் ஹிட்டர் போடாம!"
நண்பர்கள் இருவரும் தழுவிக் கொண்டனர். இவன் பார்வையில் பாலச்சந்திரன் சற்றே மாறிப்போய் இருந்தான். நிறம் கூடியிருந்தது. மேனியில் தேங்காய் எண்ணையின் பளபளப்புத் தெரிந்தது.
"வாடா."
பெரிய வீடு. கேரளா பாணியில் உயரமான வீடு. மங்களூர் ஓடு வேய்ந்திருந்தது
"அம்மா என் பிரண்டு சந்திரகேசன் வந்திருக்கான் பாரு."
பாலச்சந்திரன் இவன் பெட்டியையும் ஜோல்னாப் பையையும் வாங்கிக் கொண்டான்.
இவன் தன் விஜயத்தின் நோக்கத்தைச் சொன்னான்.
"நிச்சயமாக ஒரு மாசம் வேணும்னாலும் தங்கு. எனக்கு வாரத்தில் 5 நாள்தான் ஸ்கூல் 12 மைல். பஸ்லதான் போய் வரேன். சனி, ஞாயிறு விடுமுறை. உனக்கு இடங்களைக் காண்பிச்சுடறேன். சைக்கிள் இருக்கு. எடுத்துட்டுப் போ. காலை 6:00 மணிக்குப் புறப்படு. 10:00 மணிக்கு உள்ளார திரும்பிடு. மலை இங்கிருந்து 3 கி.மீ.ல இருக்கு. அப்பா, அம்மாவெல்லாம் சௌக்கியமா? எம்.எஸ்ஸில நீ தங்கப்பதக்கம் நிச்சயம் வாங்கிடுவே. பிறகு என்ன செய்யப் போறே? அமெரிக்கா போற எண்ணமிருக்கா? இங்கேதான் நமக்கு எந்தவிதமான ஒளியும் தெரியலயே. ஒசந்த ஜாதிக்காரன்னு சொல்லி எல்லாத்துலயும் ஒதுக்கிட்டு வராங்களே. இந்த ரீதியில போனா நம்ம சமூகம் இன்னும் 10 வருஷத்துல பின்தங்கிய சமூகமாகப் போயிடும். என்ன சொல்றே?" நிறுத்தாமல் பேசினான் பாலச்சந்திரன்.
"நீ சொல்றது வாஸ்தவம்தான். நாம பிறந்த மண்ணில நம்மையே அந்நியப்படுத்துறாங்க. ஆனா இவங்க ஈழத்தமிழர்களுக்காக வக்காலத்து வாங்குறாங்க. இப்ப நம்ம சமூகத்தில் எவன் ஜாதி பேதம் பார்க்கிறான்? எல்லாம் அரசியல் லாபத்துக்காக அரசியல்வாதிகள் செய்கிற கோலம். சகிப்புத்தன்மையுள்ள சமூகம்கிறதுனால இப்போ அளவுக்குமீறி நம்மைப் பழிக்கிறார்கள்" என்றான் சந்திரகேசன்.
"நமக்குள்ளே ஒத்துமை வேணும். ஏழை, பணக்காரன் என்கிற பேதம் நீங்கி ஒரு கலாச்சாரப் பின்னணியை சேர்ந்தவங்க என்கிற ஐக்ய பாவம் வளரணும். தமிழ்மொழிக்கு நம்ம சமூகம் என்ன செஞ்சிருக்குங்கறத பொதுமக்கள் அறிய எடுத்துச் சொல்லத் தயங்கக்கூடாது" என்றான் பாலச்சந்திரன்.
நண்பர்கள் சிறிது நேரம் பேசிவிட்டு, அதன் பிறகு சந்திரகேசன் குளித்து, பின் இருவரும் உணவருந்தினார்கள்.
இவனுக்குத் தன் நண்பனிடத்தில் நிர்மலாவைப் பற்றி கேட்க தோன்றியது. பிறகு கேட்கலாம் என்று இருந்துவிட்டான்.
மறுநாள் காலை, இருவரும் சைக்கிளில் பெருமாள் மலைக்குப் போனார்கள். வயல்வெளிகள். பிறகு காடு ஆரம்பித்தது. மலை தெரிந்தது.
"இந்த மலைக்குத் தெற்குப்புறமா அருவியொண்ணு இருக்கு. சனிக்கிழமை அதில் குளிப்போம். இலைகளைப் பறித்து வா. நான் புறப்படறேன். 8:00 மணி பஸ் போயிடும்" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் பாலச்சந்திரன்.
ஒரு மணி நேரத்துக்கு மேலாக இவன் அந்தப் பகுதியைச் சுற்றிப் பார்த்தான். மலை கம்பீரமாக இருந்தது. 150 மீட்டர் உயரம் இருக்கலாம். வெயில் அவ்வளவாகத் தெரியவில்லை. கிராமத்துப் பெண்கள் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். இவன் பலவிதமான செடிகளைக் கண்டான். சிலவற்றை வேரோடு பறித்து ஜோல்னா பையில் போட்டுக் கொண்டான். காற்று வேகமாக வீசியது. திடீரென்று மேகம் சூழ்ந்து மழை தூறத் தொடங்கியது. உடனே புறப்பட்டான்.
கிராமத்தை நெருங்கியபோது நல்ல மழை. இவன் நனைந்து போனான். தார் போட்ட சாலை வந்ததும் இவன் கண்ணில் அவள் தென்பட்டாள். தாழங்குடையொன்றைப் பிடித்திருந்தாள். அவளும் இவனைப் பார்த்தாள்.
"ஐய சாரே, மழையில நனஞ்சு போய்ட்டீங்களே" என்றாள்.
இவன் பதிலுக்கு சிரித்துவிட்டுக் கேட்டான். "ஸ்கூலுக்கு போகவில்லையா?"
"இல்லை. அம்மைக்கு உடம்பு சுகமில்லா. ஞான் லீவு. எங்கள் வீட்டுக்கு வரணும் ஸாரே!"
"வீட்டுக்குப் போய்த் துணி மாத்திட்டு வரேன் நிர்மலா."
"அவசியம் வரணும்."
"வரேன்."
மிக உற்சாகமாக வரவேற்றாள். நடுத்தரமான வீடு. கச்சிதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிசப்தமாக இருந்தது.
"இருக்கோணும்" என்று சொல்லி மர நாற்காலி ஒன்றைக் காட்டினாள். "இதோ வரும்" உள்ளே போனாள். இரண்டொரு நிமிடங்களில் ஒரு தட்டில் பலாச்சுளைகளும், நேந்திரங்காய் வறுவலும் கொண்டு வந்து வைத்தாள்.
"ம். சாப்பிடுங்கோ எனக்குத் தமிழ் சரியா பேச வராது. இந்த ஊரில் பிறந்து வளர்ந்தவ. அதனால கொஞ்சம் பேச வரும்" சிரித்தபடி சொன்னாள்.
'இந்தப் பெண்ணிடம் என்ன பேசுவது? இவள் நம்மிடம் ஏன் இவ்வளவு ஒட்டுதலா இருக்கிறாள்? இவளைப் பற்றி பாலச்சந்திரனிடம் கேட்காமல் போய் விட்டோமே' என்றெல்லாம் எண்ணினான்.
"எண்ட அச்சன் மரிச்சுப் போயி. நானும் அம்மையும் தான். எண்ட ஜேஷ்டன் பம்பாயில் உத்தியோகம் பார்க்கும். பம்பாய் கண்டிருக்கோ சார்?"
"ஆம் நான் நிறைய ஊர் பார்த்திருக்கிறேன் நிர்மலா. ஆனால் எனக்கு இந்த மாதிரி கிராமம் தான் பிடிச்சிருக்கு. நகரத்திலே ஜனக் கூட்டம் ஜாஸ்தி. சத்தம் ஜாஸ்தி."
"இங்கே பைசா கிட்டில்ல ஸாரே! தேங்காய் வித்துப் பைசா வரும். எண்ட ஜேஷ்டன் மாசம் நூறு ரூபாய் அனுப்பும். ஞான் 110 ரூபாய் சம்பாதிக்கும். மூணாங் கிளாஸ் டீச்சர். பிரைவேட் ஸ்கூல். ரசீதில் 200 ரூபாய்க்குக் கையெழுத்துப் போடணும். மானேஜர் பேரு கொச்சி கிருஷ்ணன். வலிய ஆளு. ஏதேனும் கேள்வி கேட்டால் 'வேலை இல்லே. போய்க்கோ'ன்னு பறையும். இந்நாட்டில் ஈ மாதிரி மனுஷங்களை யார் கேட்கறாங்க. கொச்சு கிருஷ்ணனுக்கு மந்திரிங்களைத் தெரியும். போலீஸ் எல்லாம் அவரோட தோஸ்த்." தமிழும் மலையாளமும் ஆகப் பேசினாள்.
"சாப்பிடுங்கோ ஸாரே"
இவன் இரண்டொரு பலாச்சுளைகளைத் தின்றான். வறுவலைக் கொரித்தான். "நிர்மலாவுக்கு எப்ப கல்யாணம்?" என்று கேட்டான்.
"கல்யாணமா... எனக்கா... நான் ஏழை ஸாரே! பாவப்பட்ட ஜென்மம். எண்ட அச்சன் நம்பூதிரியாணு. ஆனா அம்மை நாயர் ஸ்திரீ. நாயர் கம்யூனிட்டில கூட டௌரி கேட்கும். கல்யாணம் கழிக்கும்னு சொன்னால் வாலிப வயசில் ஆளில்லா ஸாரே! நான் ஒங்களைப் போல ஒருத்தரை பிரேமிச்சு. அந்த ஆளு பேரு பல்பநாபன் பி.ஏ. முடிச்சு மாஸ்டராயிடுத்து."
திடீரென்று அவள் அழ ஆரம்பித்தாள். அவனுக்குத் திகைப்பாக இருந்தது. வேறுபுறம் முகத்தைத் திருப்பிக் கொண்டான். ஆற்றங்கரையில் அமர்ந்த நிலையில் அழகிய இளம்பெண் ஒருத்தி வண்ணச் சித்திரமாக சுவரில் தெரிந்தாள்.
அழுகையினூடே அவள் சொன்னாள். "பல்பநாபன் மரிச்சுப் போயி. ஞான் ஒரு பாவப்பட்ட ஸ்திரீ ஜென்மம் ஸாரே!" அவள் அழுதுகொண்டே இருந்தாள்.
இவன் சங்கடப்பட்டான். அவளைச் சமாதானப்படுத்தும் வகை அறியாது மௌனமாக இருந்தான். கண்கள் மீண்டும் அந்தச் சித்திரத்தில் லயித்தன. மாலை நேரம்! ஆற்றங்கரை! அழகிய குமரிப் பெண்.
"எந்தாடி மவளே? இப்ப எதுக்குக் கரையணும்?" கேட்டுக் கொண்டே வந்த பெண்மணியைப் பார்த்தான். நிர்மலாவின் தாய் போலும். வயது 45 இருக்கலாம்.
"நீங்க பாலண்ட ஸ்நேகிதரா?" என்றாள்.
"ஆமாங்க."
"அம்மை பல்பநாபன் மரிச்சுப் போயி. சரி இல்லம்மா?"
அந்த அம்மாள் தன் பெண்ணைப் பார்த்தாள். இவனைப் பார்த்தாள். பெண்ணின் அருகே வந்து அவளை அணைத்துக் கொண்டாள். தலையைத் தடவிக் கொடுத்தாள். நிர்மலா தேம்பினாள்.
"சாரே, என் மகளுக்கு மனசு சரியில்லா" என்றாள் தாயார்.
இவன் பேசாமல் வெளியேறினான்.
அருவி 20 அடி உயரத்தில் இருந்து கொட்டிக் கொண்டிருந்தது. குளிக்கச் சுகமாக இருந்தது. மூன்று திக்குகளிலும் அந்தக் குன்றின் வியாபகம். கூட்டம் அதிகம் இல்லை ஆதலால் சௌகரியமாகக் குளிக்க முடிந்தது.
குளித்து முடிந்ததும் உடை அணிந்து கொண்டே பாலச்சந்திரன் இவனிடம் கேட்டான். "நீ பக்கத்து. வீட்டு நிர்மலா கூட பேசினியா?"
"ஆமாம். நான் இங்கே வந்த அன்னைக்கு அவளும் என்னோட வண்டியிலே வந்தா."
"நல்ல பெண். பாவம் புத்திதான் சரியில்லை. சித்தம் கலங்கிப் போனவ"
"என்னடா சொல்ற நீ? மூணாங்கிளாஸ் டீச்சர்னு கூடச் சொன்னாளே!"
பாலச்சந்திரன் சிரித்தான் "அந்த மயக்கம் அவளுக்குத் தேவைப்படுகிறது. அதுவும் இல்லன்னா முழுப் பைத்தியமா மாறிப் பாயப் பிராண்டி இருப்பா. அது ஒரு சோகமான நிகழ்ச்சியோட பாதிப்பு. அவ நல்லா பெயிண்ட் பண்ணுவா. சித்திரங்களை ரொம்ப அழகா வரைவாள். நீ அவ சித்திரங்களைப் பார்க்கலியா?"
"அந்த ஹால்ல ஒரு படம் மாட்டியிருந்தது. ஆற்றங்கரையில் ஒரு பெண் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு, முகத்தை முழங்கால் மேல் வைத்திருந்து ஆற்றுப் பிரவாகத்தை பார்த்துக் கொண்டிருக்கிற மாதிரி.."
"அதுக்குக் கீழே என்ன எழுதி இருந்ததுன்னு பார்க்கலயா?"
"'காத்திருத்தல்' அதாவது 'வெயிட்டிங்'னு எழுதி இருந்தது. நான் அந்தப் பெண் கிட்டே அவ கல்யாணத்தைப் பற்றி கேட்டேன். உடனே அழ ஆரம்பிச்சிட்டா."
"அது அவளோட அடி மனத்தோடு நுண்ணிய உணர்வுகளைக் கிளறி விடற கேள்வி. மென்மையான புஷ்பத்தை முள்ளால் கீறி விடுற மாதிரி" சொல்லிவிட்டு பாலச்சந்திரன் பெருமூச்சுவிட்டான்.
சிறிது மௌனத்துக்குப் பின் அவன் தொடர்ந்தான்.
"நிர்மலாவோட தகப்பனார் கேசவன் நம்பூதிரி ஒரு நல்ல ஓவியர். அவர் வரையும்போது இவ கூடவே இருந்து பார்த்து தானும் சிறு வயது முதலே ஓவியம் வரைய ஆரம்பிச்சா ஓவியத்திற்குப் பல பரிசுகள் வாங்கி இருக்கா கல்லூரியில் சேர்த்தார் நம்பூதிரி. அங்கே முதல் வருஷமே பரிசு வாங்கினாள். அப்பத்தான் பத்மநாபன்ங்கிறவன் இவள் வாழ்க்கையில் குறுக்கிட்டான்."
"யார் அவன்?"
"இந்த ஊர்ல கொச்சு கிருஷ்ணன்னு ஒரு ஆள் இருக்கான். செமத்தியான பணக்காரன். சாராயக்கடை வச்சிருக்கான். கள்ளக்கடத்தல் தொழிலும் உண்டு. இந்த கிருஷ்ணனோட தம்பி தான் அந்த பத்மநாபன். இந்தப் பெண் அருவியில் குளிக்கப் போய் இருக்கா. அன்னிக்கு அவனும் போயிருந்தான். இவ அழகில் சொக்கிப் போய், மெதுவாகப் பேச்சு கொடுத்து, நாளடைவில் இவளுடன் பழகி இவளைக் கெடுத்துவிட்டான். இந்தப் பெண்ணின் தகப்பனார் காலமான வருஷமே இது நடந்தது. விஷயம் தெரிஞ்சு போய் இவளோட அம்மா அந்த கொச்சு கிருஷ்ணன் கிட்ட போய் நியாயம் கேட்டா. அந்த அம்மாவை கண்டபடி பேசி ஏசிவிட்டான். 'பெண்ணை வேசித்தனம் செய்யவிட்டுச் சம்பாதிக்கிறியான்'னு கேட்டான். அந்த அம்மாள் பதறிப்போய் அழுதுகிட்டே திரும்பிட்டாள். ஆனால், விஷயம் ஊர் பூராவும் தெரிஞ்சு போச்சு. இவள் மறுபடியும் ஓவியக் கல்லூரிக்குப் போக முடியாமல் செஞ்சுட்டான் கொச்சு கிருஷ்ணன். நம்பூதிரியோட பழைய சித்திரங்களைப் பற்றி கேள்விப்பட்டு ஓர் அமெரிக்கன் டூரிஸ்ட் நல்ல விலை கொடுத்து வாங்கிட்டு போனான். அந்தப் பணத்தை பேங்கில் இந்த பெண் மேலே போட்டு மாசம் 200 ரூபாய் வட்டி வருது. அதைத்தான் கொச்சு கிருஷ்ணன் ஸ்கூல் சம்பளம் தரான்னு நிர்மலா சொல்றது."
"அது சரி இவ சித்தம் கலங்கி போனது?"
"இவளோட அம்மா இவகிட்ட உண்மையை மறைத்து விட்டாள். இவ தொல்லை பொறுக்க மாட்டாமல் ஒரு நாள் பத்மநாபன் லாரியில் அடிபட்டு செத்துப் போயிட்டான்னு சொல்லிட்டா. ஆனா அதுவே வினையா போயிடுத்து. இந்தப் பெண் அதை உண்மையா நினைச்சுட்டு கொச்சு கிருஷ்ணனையே நேரில் பார்த்துக் கேட்டு இருக்கா. அவனும் ஆமாம்னு பொய் சொல்லிட்டான். பாவம் நிர்மலா, அன்னிக்கு மதியை இழந்துட்டா."
"என்ன அநியாயம்டா இது"
"ஆமாம், அநியாயம் தான். ஏழைக்கு யார் உறவு? யார் நட்பு? எங்க அப்பா இந்தப் பொண்ணுக்கு ஒரு நல்ல வழி பண்ணனும்னு நினைச்சு அந்த கொச்சு கிருஷ்ணன் மேலே போலீசில் பிராது கொடுக்கலாம்னு சொன்னார். இது தெரிஞ்சு போய் அந்த அம்மாவை அவன் மிரட்டி இருக்கான். ஐநூறு ரூபாய் பணம் கொடுத்தானாம். 'ச்சீ போயா'ன்னு வந்துட்டா அந்த அம்மா. இந்தக் கிராமத்திலே அவனை விரோதிச்சுக்க யாருக்கும் தைரியம் இல்லை. அவன் கையில 5000 வோட்டு இருக்கு. சுற்று வட்டாரத்தில் ஐந்து, ஆறு மைலுக்கு இவன் கொடிதான் பறக்குது. கேப்பார் இல்லை. கேட்டா எங்களையும் தீர்த்துக் கட்டிடுவேன்னு அவன் மிரட்டுறான். என்ன பண்றது, நமக்குத் தெம்பும் இல்லை. பொருள் பலமும் இல்லை. தர்மமும் நியாயமும் ஊரைவிட்டே ஓடிப் போயிடுத்து. அவன் பணக்காரங்கிறதுனாலே ஊரே அவன் பக்கம் இருக்கு" பாலசந்திரன் முடித்தான்.
"அந்த பத்மநாபன் இப்போ எங்கே இருக்கான்?"
"அவனுக்கு என்ன.. திருவனந்தபுரத்தில் அகில இந்திய கட்சிப் பிரமுகர் ஒருத்தர் இருக்கார். அவர் மகளைக் கல்யாணம் பண்ணிட்டு ஒயின்ஷாப் வச்சு நடத்தறான். கார், பங்களான்னு கொழிக்கறான். இங்கே இவள் அவன் செத்துப் போயிட்டான்னு நெனச்சிட்டு மதிமயங்கி அம்மாவுக்குப் பாரமா இருக்கா."
மௌனமாக இருவரும் நடந்தனர். அந்தக் குன்றின் மௌன கம்பீரம் சந்திரகேசனின் மனதில் ஒருவித மோன நிலையை உண்டாக்குவது போல் இருந்தது.
இப்போது அவன் மனக்கண்ணில் 'காத்திருத்தல்' என்ற தலைப்பில் நிர்மலா வரைந்த ஓவியம் தெரிந்தது. இந்த பாரத நாட்டின் கோடானுகோடி பாமர மக்களும் படித்தும் அரசியல் வலுவோ, பொருள் வலிமையோ இன்றி, தங்களுடைய வாழ்வின் விடியலுக்காக எதையோ நம்பிக் காத்திருப்பது போன்றே தோன்றியது.
(நன்றி: கலைமகள் தீபாவளி மலர், 1982)
கிருஷ்ணமணி |