டாக்டர் ஜி.யு. போப்
தமிழ்ச் சிந்தனை, வாழ்வியல் மற்றும் பண்பாட்டில் கிறித்தவம் வழிவந்த ஓர் மரபு வன்மையான தாக்கம் செலுத்தியது. இதனாலேயே தமிழ் நவீன மான கூறுகளுக்கான தடங்கள் பற்றிச் சிந்திக்கும் பொழுது கிறித்தவம் வழிவந்த மரபு முக்கியத்துவம் பெறுகின்றது. தமிழ் தமிழர் பற்றிய தேடலிலும் சிந்தனையிலும் விரிவான பன்முகத் தன்மைகளை இது வழங்குகின்றது.

ஐரோப்பாவில் இருந்து கிறித்தவ மறை பரப்புநர்கள் கி.பி 16ம் நூற்றாண்டு தொடக்க முதல் தமிழ்நாட்டுக்குள் வந்தனர். அவர்கள் கிறிஸ்துவின் செய்தியினைப் பரப்புவதே தங்களது முதல் நோக்கமாகக் கொண்டிருந்தாலும் அவர்களின் முழுப்பணி அத்துடன் நின்றுவிடவில்லை.

நவீன காலத்தில் தமிழருக்கான அடையாளத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றிய கால்டுவெல்லும் தமிழிலக்கியங்களின் மேன்மையினை மேற்குலகுக்கு அறிவித்த ஜி.யு. போப்பும் பரவலாக அறியப்பட்ட பெயர்கள். இதுபோல் இன்னும் பலர் உண்டு. இவர்கள் யாவரும் தமிழராகவே மாறிப்போன ஐரோப்பியக் கிறிஸ்தவர்கள். இவர்களால் தமிழ் புதுவளம் கண்டது. இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்ற பொழுது தமிழுக்கு வளம் சேர்த்த புலமையாளர் சிலருக்குத் தமிழக அரசு மெரீனா கடற்கரையில் உருவச்சிலை அமைத்துப் போற்றியது. இவ்வாறு போற்றப்பட்ட ஒருவர் தான் ஜார்ஜ் உக்ளோ போப் என்ற ஜி. யு. போப் (1820-1908). தமிழும் தமிழரும் இருக்கும்வரை தமிழ் மரபில் ஜி.யு. போப்புக்கு நிலையான இடமுண்டு.

ஜி.யு. போப் 1820 ஏப்ரல் 20ஆம் நாள் வட அமெரிக்காவில் பிரின்ஸ் எட்வர்ட் தீவிலுள்ள நோவா ஸ்கோஷியாவில் வணிகர் குடும்பத்தில் தோன்றினார். பத்துப் பிள்ளைகள் கொண்ட பெரிய குடும்பம். ஜி.யு. போப் ஆறு வயதில் பிரின்ஸ் எட்வர்ட் தீவைவிட்டு பெற்றோருடன் இங்கிலாந்தை அடைந்தார்.

19ஆம் வயதுவரை ஆக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார். போப் சிறுவராயிருந்த போதே சமயப் பணியையே தமது வாழ்க்கைத் தொண்டாகக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் செய்தார். இதனாலேயே கிறித்தவத் திருமறையின் இரு பகுதிகளிலும் ஆழ்ந்த புலமையை வளர்த்துக் கொண்டார். சமயத் தொண்டு செய்ய வேண்டுமென்று நினைத்தவுடன் எபிரேயமும் கிரேக்கமும் தெளிவுற ஆழ்ந்து படித்தார். எபிரெய மொழியில் பழைய ஏற்பாட்டையும் கிரேக்க மொழியில் புதிய ஏற்பாட்டையும் கற்று அறிந்தார்.

தென்னிந்தியாவில் தனது சமயப்பணியை மேற்கொள்ள விரும்பினார். 1838ம் ஆண்டில் வெஸ்லியன் மிஷனரியுடன் தொடர்பு கொண்டு தம்மை இந்தியநாட்டு ஊழியனாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொண்டார். அது முதல் போப் தமிழும் வடமொழியும் கற்கத் தொடங்கினார். அவர் தமிழ்நாட்டில் பணிபுரிவது என்பதைத் தெளிவாகத் தீர்மானித்துக் கொண்டதனால் தமிழ் மொழியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு கற்கத் தொடங்கினார்.

வெஸ்லியன் மிஷனரி 1839ம் ஆண்டில் போப்பைத் தென்னிந்தியாவில் ஊழியஞ் செய்வதற்குத் தெரிந்து கொண்டார்கள். அவரது கனவு நனவாகும் நாள் வந்தது. தனது பத்தொன்பதாம் வயதில் தென்னிந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அவர் புறப்பட்ட காலம் நீராவிக் கப்பல் பயணம் ஏற்படுவதற்கு முற்பட்ட காலம். மரக்கலம் சென்னைத் துறைமுகத்தைத் தொடுவதற்கு எட்டு மாதங்களாயின.

போப் இப்பயணத்தின் போது நாள் தோறும் எட்டுமணி நேரம் தமிழும் வட மொழியும் படித்து வந்தார். கப்பலில் இருக்கும் போதே தமிழ்ச் சொற்பொழிவு ஒன்று எழுதி முடித்தார். இந்தக் கடற்பயணத்தில் வில்லியம் ஆர்த்தரும் ஜோனஸ் காரெட்டும் துணைவர்களாக உடன் வந்தனர். கப்பற் பயணம் போப்புக்குத் தமிழ்நாட்டில் பணி புரிவதற்கேற்ற மொழியறிவையும் தன்னம் பிக்கையையும் கொடுத்தது.

சென்னையைச் சேர்ந்ததும் போப் தனது பணியைத் தொடங்கினார். தமிழ்நாட்டைச் சேர்ந்து ஒரு மாதமாகு முன்னரே சென்னை சாந்தோமில் தான் கப்பலில் தயாரித்த சொற்பொழிவைச் செய்தார். தமிழர்கள் மத்தியில் அவர்கள் மொழியில் பணி செய்வது தான் சரியான அணுகுமுறை என்பதற்கு முதற் சொற்பொழிவே எடுத்துக்காட்டு.

தமிழ்மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்த போப் தமிழ் இலக்கண இலக்கியங்களை ஆழ்ந்து கற்கத் தொடங்கினார். புலவர் ஆரியங்காவுப் பிள்ளையிடத்தில் தமிழ் கற்றார். மகாவித்துவான் இராமனுஜக் கவிராயரிடத்தில் நன்னூல், புறப்பொருள் வெண்பாமாலை முதலிய இலக்கண நூல்களையும், புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தா மணி போன்ற இலக்கியங்களையும், தேவாரம், திருவாசகம் போன்ற பக்தி நூல்களையும் நாலடியார், நன்னெறி, நல்வழி, நான்மணிக்கடிகை போன்ற அறநூல்களையும் கற்றார். தமிழ் மொழியில் புலமைத் தாடனம் மிக்கவராக வளர்ந்தார். மேற்குப் புலமைமரபு சார்ந்து பயிற்றப்பட்ட ஒருவர் தமிழைக் கற்று, அதனை நோக்குவதிலும் புரிந்து கொள்ளலிலும் வேறுபட்ட பார்வையை வழங்க முடியும் என்பதற்கு போப்பின் செயற்பாடுகளே சான்று. போப் மேற்கொண்ட கல்வி மற்றும் சமயப் பணிகள் தமிழ் மரபுக்கு புதுவளம் சேர்த்தன. கற்றல், கற்பித்தல் செயற்பாட்டில் அறிவியல் நோக்கு வெளிப்பட்டது. கல்வித் திட்டமிடல் பாடத்திட்ட உருவாக்கத்தில் தமிழ்மரபு அறிவியல் கண்ணோட்டத்தை உள் வாங்கி யது. மொத்தத்தில் போப்பின் செயற்பாடுகள் தமிழ் நவீனமயமாதலின் தொடர்ச்சிக்கு உறுதியான தளம் அமைத்துக் கொடுத்தது.

போப் நாற்பத்து இரண்டு ஆண்டுகள் சாயர்புரம், தஞ்சாவூர், உதகமண்டலம், பெங்களுர் ஆகிய இடங்களில் பணியாற்றி வந்தார். தமிழ்மொழியின் சிறப்பை தான் புரிந்து கொண்டதோடு மட்டும் நிற்காமல் மேற்குலகுக்கும் அதனை அறிவிக்க வேண்டுமென்று அவாக் கொண்டார். அதற்கான காரியார்த்தமான பணிகளில் ஈடுபட்டார்.

தமிழ்நாட்டுக்குப் பணியாற்ற வந்த போப் கடைசியாக பெங்களுரில் சிலகாலம் பணியாற்றிவிட்டு 1882 ஆம் ஆண்டு இங்கிலாந்து பயணமானார். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் 1885ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கற்பித்தார்.

போப்பின் பன்மொழிப் புலமை, பரந்த அறிவு மற்றும் ஆராய்ச்சித் திறமையைப் பல்கலைக் கழகத்தார் அறிந்து 1886ஆம் ஆண்டு அவருக்கு எம்.ஏ. பட்டம் அளித்தனர். இளைஞர்களோடு சென்று அவர் அப்பட்டத்தைப் பெற்றார். போப் ரெவரண்ட் டாக்டர் ஜி.யு. போப் எம்.ஏ, டி.டி. ஆயினார்.

உலக நாகரிகத்துக்குத் தமிழினத்தின் பங்களிப்புகள் பல. அவற்றினுள் ஒன்று திருக்குறள். தமிழில் மிகச்சில சொற்களில் ஆன கவிதை வடிவம் குறள் வெண்பா ஆகும். மிக விரிந்த உலகச் சிந்தனைகளை மிகச் குறுகிய வடிவத்தில் தரமுடியும் என் பதை உலக இலக்கிய அரங்கில் முதலில் வள்ளுவரே செய்து காட்டினார். இதனை மேற்குலகு அறிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கில் ஜி.யு. போப் குறளில் அடங்கியுள்ள 1330 பாக்களையும் முழுமையாக முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்புச் செய்தார். 1886இல் இது வெளிவந்தது.

"தமிழ்மொழி பண்பட்ட மொழி. சொற் செல்வம் படைத்த தனிமொழி. தென்னிந்திய மொழிகளுக்கெல்லாம் அது தாய்மொழி! தமிழ் மொழியின் இலக்கண நெறிகள் தத்துவ உண்மைகள் நிறைந்தன. தமிழின் இலக்கியங்கள் ஒழுக்கத்தையும் அறிநெறிகளையும் ஊட்டுவதற்கென்றே உருவானவை, உருவாகியவை! அதற்கோர் எடுத்துக்காட்டு திருக்குறள். உயர்ந்த அறநெறியும் உயிரினும் சிறந்த ஒழுக்கமும் பேணப்பெறும் மக்கள் வாழும் நாட்டில்தான், திருக்குறள் போன்ற நீதிநூல் உருவாகும், உருவாகவும் இயலும்! அழுக்கில்லாத தூய நீருற்றுப் போலத் திருக்குறள் தோற்றம் தருகிறது! ஆம் உலகின் அழுக்கைப் போக்க வந்த உயர் தனித் திருநூல் திருக்குறள்" என்று ஆங்கில மொழி பெயர்ப்பு நூலின் முன்னுரையில் போப் குறிப்பிட்டுள்ளார். "யான் தமிழ் மொழியைப் பயிலத் தொடங்கிய சிறிது காலத்திலேயே திருக்குறளை ஜரோப்பியரும் படித்துப் பயன்பெற வேண்டுமென்ற எண்ணத்தில், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கத் தொடங்கினேன். இப்பணி பல்லாண்டுகளுக்குப் பின் முற்றுப் பெற்றமை கண்டு, இறைவனுக்கு நன்றி செலுத்து கின்றேன். என் நெடுங்கால உழைப்பின் பயனாக இது வெளியிடப் பெறுகின்றது" என முன்னுரையை நிறைவு செய்கின்றார்.

திருக்குறள் மொழிபெயர்ப்பு மூலம் மேற்குலகுக்குத் தமிழ்ச் சிந்தனையின் வளம் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தைப் போப் ஏற்படுத்திக் கொடுத்தார். "குறள் வடசொற் கலப்பில்லாத தூய தமிழில் ஆக்கப் பெற்றுள்ளது. தமிழ் வடமொழியின் கிளை மொழியன்று. அது சொற் செல்வம் படைத்த தனிமொழி. தமிழ் இலக்கண நெறி தத்துவ உண்மைகளை அடங்கியது, தெளிவானது. தமிழ்மொழி பண்பட்ட மொழி, அது எவ்வகையிலும் வடமொழிக்கு இணையானது" எனவும் அதே முன்னுரையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

போப் திருக்குறளின் மொழிபெயர்ப்பே தமிழுக்குத் தான் செய்யும் இறுதிப் பணியாக இருக்குமென்று நினைத்தார். ஆனால் அதற்குப் பின் பல்லாண்டு வாழ்ந்து தமிழ்ப்பணி செய்தார். தமிழில் உள்ள நீதி நூல்களின் கருத்தை உலகோர் அறிதல் வேண்டுமென்று அவர் மிகவும் விரும்பினார். இதனால் 'நாலடியார்' என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, 1893இல் வெளியிட்டார்.

இந்நூலுக்கும் ஆராய்ச்சியோடு கூடிய முன்னுரையொன்று எழுதியுள்ளார். நாலடியாரிலுள்ள அத்தியாயங்களின் பொருளை விரித்துரைத்திருக்கிறார். முதலில் நாலடியாரிலுள்ள வெண்பா, அதன்பின் ஆங்கில வடிவம், இறுதியில் விரிவுரை என மிகச் செம்மையாக வெளியிட்டுள்ளார். அதன்பின் பாட்டு முதற் குறிப்பு அகராதி, சொற்பொருள் அகராதி தவிர நூலின் இறுதியில் பொது அகராதி யொன்றும் அவர் தொகுத்துத் தந்துள்ளார்.

'தமிழ்நாட்டில் எழுந்த பேரிலக்கியங்களை இவ்வாறு வெளியிடுவதால் நலன் விளையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தமிழ்நாட்டு இளைஞர் மிக்க ஊக்கமும் திறமையுமாய் ஆங்கிலக் கல்வி பெறுகின்றனர். அவர்கள் வியக்கத் தகுந்த தங்களது இணையற்ற தாய்மொழியைப் புறக்கணிப்பதை நோக்கி வருந்துகின்றேன். அவர்களுள் சிலராவது இத்தகைய பதிப்பு களை விரும்பிப் படித்து நன்மை அடைவர் என்று நம்புகிறேன்' என்ற நாலடியார் நூலுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறிய இந்தக் கருத்து அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் பொருந்துமாறு உள்ளது.

நாலடியார் மொழிபெயர்ப்பைத் தொடர்ந்து திருவாசகத்தை மொழிபெயர்க்கத் தொடங் கினார். முதுமைக்காலத்தில் விடாமுயற்சியுடன் அப்பணியை மேற்கொண்டார். திருவாசகம் மொழிபெயர்ப்பு 1900 ஏப்ரல் 24ம் நாள் வெளியிடப்பட்டது.

திருவாசகத்தின் முன்னுரையில் போப் எழுதிய சில கருத்துகள் நமது கவனத்திற்குரியன. 'தமிழ்நாட்டில் வாழும் ஐரோப்பியர் யாவரும் தமிழ்மக்களுடைய உணர்ச்சிகளையும் கருத்துகளையும் திட்டமாக அறிய முயலுதல் நன்று. தமிழ் மக்களுக்குப் பயன்பட வாழக் கருதுவோர் தமிழில் நினைக்கப் பழகுதல் மட்டுமன்று, தமிழில் உணர்ச்சி கொள்ளவும் பயிலுதல் வேண்டு மென்று பல்லாண்டுகளாக நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.'

'அழிந்தொழியும் மக்களின் மொழியை அழிந்தொழிய விட்டுவிடலாம். தமிழ் மக்களைப் பற்றி அவ்வாறு சொல்ல முடியாது, தமிழ் மொழியை அழியவிட லாகாது.'

'தமிழர் தம் தாய்மொழியைப் பற்றி வெட்கங்கொள்வார் போல் தோன்று கின்றனர், அவ்வெட்கத்தை அவர்கள் ஒழிப்பார்களாக.'

'கிறித்துவத் தமிழ் என்பதொன்று தோன்றியுள்ளது. அது தரங்கம்பாடி டேனிஷ் மிஷனரியாரால் தோற்றுவிக்கப்பட்டு பல தலைமுறைகளைச் சேர்ந்த ஜெர்மன் மிஷனரியாராலும் மற்றையோராலும் வளர்க்கப்பட்டது. அது ரேனியஸ்யாலும் திருநெல்வேலி மக்களாலும் தூய்மைப்படுத்தப்பட்டு, ஆங்கிலேயரால் செம்மையாக்கப்பட்டது. அவ்வாறு செய்தவர்களுள் முக்கியமானவர் பவல் என்பவராவார். இனித் தமிழ்நாட்டில் பிறந்த தமிழ்க் கிறிஸ்தவர் ஒருவர் இனிமையும் வன்மையும் வாய்ந்த செம்மொழியாக அதனை ஆக்குதல் வேண்டும்.'

'என் எண்பதாவது பிறந்த நாளில் இந்நூலை வெளியிடுகிறேன். 1837ம் ஆண்டில் முதன்முதல் தமிழ் படிக்கத் தொடங்கினேன். நெடுங்காலம் உண்மையான பற்றுக்கொண்டு தமிழ் நூல்களை ஆராய்ந்தேன். இந்நூல் வெளியீட்டோடு என் இலக்கியப் பணி முற்றுப்பெறுகின்றது.'

திருவாசக மொழிபெயர்ப்புப் பணியே தமது இறுதி வேலையாக இருக்குமென்று போப் கருதினார். ஆயினும் அவர் எட்டாண்டு வாழ்ந்து இறுதிவரை பணி செய்து கொண்டிருந்தார்.

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகிய மணிமேகலை எனும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்தார். அது முற்றுப் பெறவில்லை. அவர் மறைந்த பின் அதன் பகுதிகள் 1911ம் ஆண்டில் 'சிந்தாந்த தீபிகை' யில் வெளியாயின. தம் வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் 'புறப்பொருள் வெண்பா மாலை', 'புறநானூறு', 'திருவருட்பயன்' என்னும் நூல்களைப் பதிப்பித்தார். புறநானூற்றின் சிலபாடல்களை மொழி பெயர்த்ததோடு அந்நூல் குறித்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

போப்பின் முதுமைக் காலத்தில் அவரது புகழ் எங்கும் பரவலாயிற்று. அவரது பணிகளை கௌரவித்து பாராட்டும் வகையில் 1906ம் ஆண்டில் ராயல் ஏஷியாட்டிக் சொசைட்டி அவருக்குத் தங்கப் பதக்கம் அளித்து கௌரவித்தது.

ஜி.யு. போப் 1937 முதல் தமிழ் மாணவராகவும், ஆசிரியராகவும், ஆய்வாளராகவும், புலமையாளராகவும் விளங்கித் தமிழின் சிறப்பை, பெருமையை, தனித்துவத்தை மேற்குலகும் புரிந்து கொள்ளும் வகையில் தனது இறுதிக்காலம் வரை விடாமுயற்சியுடன் பணியாற்றி வந்தார். அத்தகைய பெருந்தகை 1908 பெப்ருவரி 11ஆம் நாள் இவ்வுலகை விட்டுச் சென்றாலும் அவரது பணிகள் தமிழ் தமிழர் உள்ளவரை நினைவு கூறப்படும். ஜி.யு. போப் ஒரு தமிழராகவே வாழந்து தமிழ் மொழியின் சிறப்பை உலகுக்குக் காட்டிய பெருந்தகை என்பதை வரலாறு தெளிவாகவே உணர்த்துகிறது.

தெ.மதுசூதனன்

© TamilOnline.com