ஜூலை மாதத் தென்றல் இதழில் இந்த வருடம் சாகித்ய அகாதமி யுவபுரஸ்கார் விருதைப் பெற்றுள்ள லோகேஷ் ரகுராமன் அவர்களைப் பற்றிய அட்டைப்படக் கட்டுரை படித்தேன். அவரது இணையதளத்தில் படைப்புகளைப் படித்தேன். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. வித்தியாசமானநடை, மேலே என்ன என்ன என்று எதிர்பார்க்க வைக்கும் எழுத்து, இப்படியும் எழுதலாம் என்று மெருகூட்டிய வார்த்தைகள், எளிமையான அதே சமயம் மனதை நெகிழவைக்கும் பதைப்பு நிறைந்த காட்சிகள். நம் கண்முன்னர் நடக்கும் சம்பவங்களையே எழுதி வியப்பில் நம்மை ஆழ்த்திவிட்டார் என்றால் மிகையல்ல. தமிழ் இலக்கிய உலகத்திற்குக் கிடைத்திருக்கும் இன்னொரு பொக்கிஷம்.
இந்த வருடம் சாகித்ய அகாதமி பாலபுரஸ்கார் விருது பெற்றுள்ள யூமாவாசுகி அவர்களின் எழுத்துக்களில் வெளிவந்த சில மொழிபெயர்ப்புப் படைப்புக்களைப் படித்துள்ளேன். மிக அருமையாக இருக்கும். ஓவியர், கவிஞர் என்பதால் நுண்ணிய பல அவதானிப்புகளை இவரது படைப்புகள் வெளிப்படுத்தும். தமிழ்ப் படைப்புலகின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் அவருக்கு விருது கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
இறுதி முடிவு, வெளிச்சம் என்ற, வெவ்வேறு கருத்துக்கள் கொண்ட இந்த இரு சிறுகதைகளும் மனதைத் தொட்டன. அலமாரி பகுதியில் இலக்கணச் செல்வர் பாலசுந்தரனார் எழுதிய தமிழும் யானும் என்னும் நூலுள் காணப்படும் பண்டிதர் கோ. வடிவேல் செட்டியார் அவர்களைப் பற்றிய சுவையான செய்திக் குறிப்பு மிகமிக அருமை. கற்றாரிடம் எத்துணை விழிப்பாக இருக்க வேண்டும் என்பதைச் சிறு நிகழ்ச்சி மூலம் நன்கு உணர்த்தியது. பழமை, புதுமை என்று அனைத்தையும் அள்ளித்தரும் தென்றலுக்கு நன்றி.
சசிரேகா சம்பத்குமார், யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா |