ஆள் வளர்ந்த அளவுக்கு...
சனிக்கிழமை மதியம் மணி இரண்டரை. உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று என் கண்கள் செருகிக் கொண்டிருந்த வேளையில், வேகமாக வந்தார் என் கணவர். "சீக்கிரம் 2 மணிக்கே போகணும்னு நெனச்சேன், இன்னும் கிளம்பலையா? நம்ம ஆனந்த் வீட்டில்தான இருக்கப் போறான்? நம்ம மட்டும்தான போறோம்?" சின்ன அதட்டலுடன் என்னைப் பார்த்தார். அழைப்பிதழே மூணு மணிக்குத்தான். ரெண்டு மணிக்குப் போய் என்ன செய்ய என்று நினைத்தவாறே, "இல்ல, இல்ல. அவன் வரட்டும். கண்ணனை அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். அவன் பரிசு வாங்குவத இவன் பார்க்கணும்னு நினைப்பான். அப்படிதானடா, அப்புறம் அங்க வந்துட்டு போரடிக்குதுன்னு தொல்லை பண்ணக்கூடாது" என்றவாறு ஆனந்திடம் திரும்பினேன். "ஆமாம்மா நானும் வரேன்" என்றான் ஆனந்த்.

ஒரு வழியாக மூன்று பேரும் கிளம்பிக் காரில் ஏறிவிட்டோம். காரில் ஏறும்போது ஆனந்தின் கைக்கடிகாரம் என் தலை முடியில் சிக்கி அதைக் கொத்தாக இழுத்தது. "கொஞ்சம் பார்த்து ஏறக்கூடாதா? வலிக்குது. ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரல," வலியும் எரிச்சலும் சேர்ந்து கோபத்தின் உச்சியில் கத்தினேன் நான்.

"சாரி அம்மா தெரியாம பட்டுடுச்சு" என்றவாறு ஆனந்த் என்னை அணைத்தான். "சரி சரி உட்காரு. என் முடி கலஞ்சிட்டு" சின்ன எரிச்சலுடன் என் முடியைச் சரிசெய்து கொண்டேன்.

சரியாக 3 மணிக்கு விழா நடக்கும் இடத்திற்குப் போய்ச் சேர்ந்தோம். நான் நினைத்த மாதிரி விழாவும் தொடங்கவில்லை, வனிதாவும் அங்கு இல்லை. சொல்ல மறந்து விட்டேன் என் தோழி வனிதாவின் அழைப்பில்தான் நாங்கள் குடும்பத்துடன் சென்றிருந்தோம். அவள் மகன் கண்ணன்தான் இன்று ஸ்லோகங்களைச் சொல்லிப் பரிசை வாங்கப் போகிறான். மெதுவாகப் படியேறி ஹாலுக்குள் நுழைந்தோம். உள்ளே நுழைந்ததுதான் தாமதம் என் மகன் பின்வரிசையை நோக்கி ஓடினான்.

பரிச்சயமான சில முகங்களைப் பார்த்ததும் புன்னகை பரிமாறிக் கொண்டே என் தோழி அனிதாவின் அருகில் அமர்ந்தேன். அனிதா கண்களில் நீர் தளும்ப அமர்ந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் கண்ணீர் வழிந்தோடியது. புரியாமல் விழித்தேன் நான். என்னால் முடியவில்லையடி, இந்தக் குழந்தைகள் எல்லாம் பார்க்கும்போது என்று தழுதழுத்தாள்.

அப்போதுதான் நான் சுற்றிலும் பார்த்தேன். 100 பேர் அமரும் அந்த அரங்கம் கிட்டத்தட்ட நிறைந்திருந்தது. இடது பக்கத்தில் ஆசிரியைகள் என்று நினைக்கிறேன், ஒரே நிறத்தில் புடவையும், புன்னகையுமாய்க் கைகட்டி நின்று கொண்டிருந்தனர். ஏழு முதல் 17 வயதுள்ள குழந்தைகள் பெற்றோர்களுடன் அமர்ந்திருந்தனர். அமர்ந்திருந்தனர் என்று சொல்வதைவிட அமர்த்தப்பட்டு இருந்தனர் என்றே சொல்ல வேண்டும். இந்த வீட்டில் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக அமர்ந்திருந்தது. ஆம் ஆட்டிசம் குழந்தைகளுக்கான விழா இது.

எனக்கு முன்வரிசையில் 10 வயது இருக்கும் அந்தப் பையனுக்கு, சத்தமாகச் சிரித்துக்கொண்டே அங்கும் இங்குமாய் ஆடிக் கொண்டிருந்தான். அவன் அம்மாவின் கவனம் வேறெங்கோ இருந்தாலும் அவன் மணிக்கட்டை மட்டும் அவள் விரல்கள் சங்கிலியாய்ப் பூட்டி வைத்திருந்தன. அதே வரிசையில் அமைதியற்ற தன் பையனை சமாதானப்படுத்திய படி மற்றொரு அம்மா.

என் அருகில் இருந்த பையனுக்கு என் மகனின் வயது இருக்கும் சிணுங்கியபடியே அழுத அவனிடம் "தோ, இப்போ கிளம்பிடலாம். நீ படிச்சத சொல்லிடு. உடனே போயிடலாம்பா" என்று அவன் அம்மா சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார். வயதுப் பையன் பொதுவில் சிணுங்குவதைப் பார்க்கக் கவலையாக இருந்தது. அந்த குழந்தைகளையும் பெற்றோர்களையும் பார்க்கும்பொழுது மனம் பதைபதைத்தது. இப்பொழுது புரிந்தது என் தோழியின் கண்ணீருக்குக் காரணம்.

குழந்தைகளை வெறித்த படியே கனத்த இதயத்துடன் என் தோழியுடன் பேச ஆரம்பித்தேன். "வனிதா கிளம்பிட்டாங்களா?"

"கிளம்பிட்டாங்க, இன்னும் பத்து பதினைந்து நிமிஷத்துல இங்க வந்துருவாங்க."

எங்கள் உரையாடல் அங்கு ஆரம்பித்து எங்கள் மகன்களின் படிப்பிற்குத் தாவுகிறது. "ரொம்ப விளையாட்டுப் பிள்ளையா இருக்காங்க அடுத்த வருஷம் ஹைஸ்கூல் போகப் போறாங்க, ஆனா எப்ப பாரு மொபைலும் கையுமாதான் இருக்காங்க" என்று சலித்துக் கொண்டோம்.

திடுமென்று ஒரு பெரிய சத்தம். 16, 17 வயதிருக்கும் ஒரு பையன் ஓடி வருகிறான். நான் என் வரிசையில் கடைசியாக அமர்ந்திருக்கிறேன். அதே மாதிரி எனக்குப் பின்னால் வரிசையில் என் கணவர் கடைசியாக அமர்ந்திருந்தார். எங்களின் இடதுபுறத்தில்தான் அந்தப் பையன் ஓடிவந்து கொண்டிருந்தான். அவனைத் துரத்திக்கொண்டு வந்த அவன் பெற்றோர் அவனைப் பிடித்து விட்டார்கள். நல்ல வேளை.

ஆனால் இமைப்பொழுதில் அவர்கள் பிடியை உதறிவிட்டு மீண்டும் ஓடினான். அப்பொழுதுதான் எங்களுக்குப் புரிந்தது, அவன் எங்கள் மிக அருகில் வந்து விட்டான் என்று. அந்தப் பையன் எப்படியும் ஆறடிக்கு மேல் இருந்தான். நான் தடுமாற்றத்துடன் எழுந்தேன் என் கணவரோ அவர்களுக்கு உதவ ஓடினார். அதே நேரத்தில் அவனை கிட்டத்தட்டப் பிடித்துக் கீழே படுக்க வைத்துவிட்டார்கள் அவன் பெற்றோர். கால்களை அப்பா பற்றிக்கொள்ள, கைகளைப் பற்றிக் கொண்டு அவன் தலைக்கருகில் அம்மா அமர்ந்திருந்தாள்.

அப்பாடா என்று மூச்சு விடுவதற்குள் அவன் திமிரத் தொடங்கினான். மீண்டும் தன் நீளக் கால்களை உதறி, அவன் அப்பாவின் நெஞ்சில் எட்டி உதைத்தான். அதே கணத்தில் என் கணவர் அவன் கைகளை இறுகப் பற்றினார் வேறொருவர் அவன் கால்களை அமுக்கிப் பிடித்தார். அன்னியர் தன்னைத் தொடுகிறார்கள் என்று வெகுண்டான் அவன். கைகளை விடுவிக்கப் போராடி, நகத்தால் என் கணவரின் கைகளைப் பதம் பார்த்தான். இப்படியாக நடந்த அந்தப் பத்து நொடிப் போராட்டத்தில் அவனது ஒரு கை வெற்றி கண்டது. அவனின் வலது கை வேகமாக என் கணவர் கழுத்திற்குச் சென்றது. கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பலம்கொண்டு இழுத்தான். விடுவிக்க முயன்று தோற்று, சங்கிலி அறுந்து தூரப் பறந்துபோய் விழுந்தது. அவர் ஒரு நிமிடம் தடுமாறிப் போனார்.

அதே வேகத்தில் தன் அருகில் இருந்த அவன் தாயின் தலையை நோக்கிப் பறந்தன கைகள். வகிடு பிரித்த அவள் தலைமுடியின் இரு பாகத்தையும் அவன் கைகள் வாகாகப் பற்றிக்கொண்டன. சீப்பைப் போன்ற விரல்களுக்கிடையில் அந்தச் சுருட்டை முடி சிக்கிக் கொண்டது.

இதைப் பார்த்தும் ஒரு நிமிடம் என்னை அறியாமல் அந்த அம்மாவை நோக்கி ஓடினேன். என் கணவர் வராதே உன்னால் முடியாது என்றதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவன் கைகளைப் பற்றினேன். அம்மாவின் கூந்தலை விடுவிக்கும் போராட்டத்தில் என் கையையும் பிடித்து இழுத்தான். என் கையில் மாட்டி இருந்த பிரேஸ்லெட் மணிகள் தெறித்து ஓடின. அவன் நகங்களின் அடையாளம் என் கைகளிலும் ஆழப் பதிந்தது.

எங்கள் முயற்சி அதிகரிக்க அதிகரிக்க, அவன் பிடி இன்னும் இறுகியது. தன் கூந்தலில் ஒரு கொத்தை மகனுக்குக் காணிக்கை கொடுத்த பிறகுதான் அந்த தாயின் தலைக்கு விடுதலை கிடைத்தது. ஒரு வழியாக நான்கு பேர் கொண்ட குழு அவனைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. அவனை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். கலங்கிய கண்களோடு அவன் தாய் போவதை நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

இது நடந்து முடிப்பதற்கும் என் தோழி வனிதா வருவதற்கும் சரியாக இருந்தது விழா தொடங்கியது. அனைவரும் அமைதியாக இருக்கும்படி அறிவிப்பு வந்தது. குழந்தைகள் ஒவ்வொன்றாகத் தட்டுத் தடுமாறிப் பாடினார்கள். கண்ணன் மிக அழகாக ஸ்லோகங்களைச் சொல்லிப் பரிசை வாங்கினான். "குட் ஜாப் கண்ணன்" என்றேன் நான், விட்டுவிட்டுப் பேசிய அந்த மழலைப் பேச்சை ரசித்தபடி.

கண்ணன் வளர்ந்திருந்தான், கிட்டத்தட்ட என் பையன் உயர்த்திற்கு வந்திருந்தான். என் பையனைவிட ஆறு மாதம்தான் சிறியவன் அவன். அப்போதுதான் என் மகன் ஆனந்தின் நினைவு வந்தது. ஆனந்தைத் தேடிப் பார்த்தேன். கடைசி வரிசையில் அவன் மொபைல் ஃபோனை நோண்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

"ஆனந்த், ஆனந்த்" என்றபடி பையனை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

அப்பொழுதுதான் என் கண்ணில் பட்டது அந்த தாயின் கொத்து முடி.

அதை வெறித்துக் கொண்டிருக்கும் போதே என் பையன் வந்து நின்றான். "அம்மா நான் இங்கதான் இருக்கேன்" என்றவனை அண்ணாந்து பார்த்தேன்.

"ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரலையே" காரில் நான் சொன்னது என் காதில் ஒலித்தது.

தாரை தாரையாக என் கண்களில் கண்ணீர்.

மீனாக்ஷி,
மாசசூஸட்ஸ்

© TamilOnline.com