சாகித்ய அகாதமி யுவ புரஸ்கார் விருது 2024 இந்தியாவின் பன்மொழிப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில், ஒவ்வோர் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளுக்கு தேசிய அளவிலான விருதுகளை வழங்கிக் கௌரவித்து வருகிறது சாகித்ய அகாதமி. 35 வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் யுவபுரஸ்கார் விருது வழங்குகிறது. கடந்த ஆண்டுகளில் இவ்விருதை ம. தவசி, மலர்வதி, அபிலாஷ் சந்திரன், கதிர்பாரதி, வீரபாண்டியன், லக்ஷ்மி சரவணக்குமார், மனுஷி, சுனீல் கிருஷ்ணன், சபரிநாதன், ஷக்தி, கார்த்திக் பாலசுப்ரமணியன், ப. காளிமுத்து, ராம்தங்கம் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.
2024ம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது பெறுகிறார் எழுத்தாளர் லோகேஷ் ரகுராமன். இவர் எழுதிய 'விஷ்ணு வந்தார்' சிறுகதைத் தொகுப்பு விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. டாக்டர் க. பஞ்சாங்கம், டாக்டர் எம். திருமலை, மாலன் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு இப்படைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளது.
லோகேஷ் ரகுராமன் திருவாரூர் மாவட்டம் நாடாகுடியைப் பூர்வீகமாகக் கொண்டவர். பெங்களூருவில் தொழில்நுட்பத் தகவலியல் துறையில் பொறியாளராக உள்ளார். 'விஷ்ணு வந்தார்' லோகேஷ் ரகுராமனின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் சிறுகதைத் தொகுப்புக்கே சாகித்ய அகாதமி விருது பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
யுவபுரஸ்கார் விருது, செப்புப் பட்டயமும் ₹50,000 பரிசுத் தொகையும் அடங்கியது. விருது நிகழ்வு டெல்லியில் இவ்வாண்டு இறுதிக்குள் நடைபெறும்.
லோகேஷ் ரகுராமனுக்குத் தென்றலின் நல்வாழ்த்துக்கள்.
சாகித்ய அகாதமி பால புரஸ்கார் விருது 2024 குழந்தை இலக்கியத்திற்கு எழுத்தாளர்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக சாகித்ய அகாதமியால் வழங்கப்படுவது பால புரஸ்கார் விருது. மா. கமலவேலன், ம.லெ. தங்கப்பா, ரேவதி, கவிஞர் செல்லகணபதி, இரா. நடராசன், குழ. கதிரேசன், கிருங்கை சேதுபதி, கொ.மா. கோதண்டம், யெஸ். பாலபாரதி, மு. முருகேஷ், ஜி. மீனாட்சி, உதயசங்கர் ஆகியோர் வரிசையில், 2024ம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது எழுத்தாளர் யூமா வாஸுகிக்கு வழங்கப்படுகிறது. இவர் எழுதிய 'தன்வியின் பிறந்த நாள்' என்ற சிறுகதைத் தொகுப்பு இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யூமா வாஸுகி ஏற்கனவே மலையாளத்தில் வெளியான 'கசாக்கிண்ட இதிகாசம்' நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பிற்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். (யூமா வாசுகி பற்றி மேலும் வாசிக்க).
டாக்டர் நிர்மலா மோகன், டாக்டர் இரா. காமராசு, எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராசன் அடங்கிய நடுவர் குழு இப்படைப்பை விருதுக்குத் தேர்ந்தெடுத்துள்ளது.
பால புரஸ்கார் விருது, செப்புப் பட்டயமும் ₹50,000 பரிசுத் தொகையும் அடங்கியது. விருது நிகழ்வு டெல்லியில் இவ்வாண்டு இறுதிக்குள் நடைபெறும்.
யூமா வாஸுகிக்கு தென்றலின் நல்வாழ்த்துகள் |