இல்லாத எதிரி
ஒரு பக்தன் செய்த அஷ்டோத்தர சஹஸ்ரநாம அர்ச்சனையில் சூரியதேவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். தீவிர சிரத்தையுடன் பக்தன் உச்சரித்த ஒவ்வொரு நாமத்தையும் அவர் கேட்டார். குறிப்பாகத் தன்னை அவன் "அந்தகார த்வேஷி" (இருளின் எதிரி) என்று அழைத்ததைக் கவனித்தார்.

தனக்கு ஓர் எதிரி இருப்பதை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. எனவே அந்த இருள் என்னும் அரக்கனைக் கொல்லும் பொருட்டாகப் போருக்கு அழைத்தார். எங்கெல்லாம் இருள் ஓடி ஒளிந்து கொண்டதோ அங்கெல்லாம் அவனைத் துரத்திச் சென்றார். இவரைக் கண்டவுடனே இருளரக்கன் காணாமல் போய்விட்டான். சூரியனால் அவனைப் பிடிக்கவே முடியவில்லை. இறுதியாக இருள் என்பது இல்லவே இல்லை, தன்னை வழிபடுவோரின் கற்பனைதான் அது என்ற முடிவுக்கு வந்தார்! அமரத்துவத்தின் பேரொளிக்கு முன்னே மரண இருள் ஓடி ஒளிந்து கொள்ளும்.

உடலுக்குள் வசிப்பவனுக்கு பிறப்பு இல்லை, அதனால் மரணமும் இல்லை. ஆனால், மனிதன் தன்னை உடல் என்று எண்ணும் பொய்யை இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிறான். அதனால் அவன் மரணத்துக்கும் பிறப்புக்கும் ஆளாகிறான். ஒரு வெள்ளிக் கிண்ணத்தை ஆசாரி ஒரு தட்டாகவோ அல்லது வெற்றிலைப் பெட்டியாகவோ மாற்றிச் செய்யமுடியும். பெயர், உருவம், பயன்பாடு இவை மாறினாலும் அது வெள்ளியாகவே இருக்கும்.

நன்றி: சனாதன சாரதி, ஏப்ரல் 2024

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா

© TamilOnline.com