அன்றிரவு வீடு திரும்பும்போதே களைப்பாக உணர்ந்தாள் கவிதா. வீட்டை அடைந்து அப்படியே கட்டையைச் சாய்த்தால் போதும் என்றிருந்தது. ஆனால் முடியாது. நேற்றே ஃப்ரிட்ஜ் துடைத்து வைத்தாற்போல காலியாக இருந்தது. இவர்கள் இருவர் என்றால் சமாளித்து விடலாம். நாளை வாரயிறுதி என்பதால் ஸ்வேதா வந்தாலும் வருவாள். விடுதியுணவு உண்டு நாக்கு மரத்து வரும் பிள்ளைக்கு ருசியாகச் செய்துபோட வேண்டுமே, 'U' எடுத்து வழக்கமாகச் செல்லும் அங்காடிக்குள் வண்டியைச் செலுத்தி இறங்கினாள் கவி. நடக்கும்போது அலைபேசியை ஆராய, 'வருகிறாய் தானே?' என்று இவளனுப்பிய குறுஞ்செய்திக்கு இன்னும் பதில் வந்திருக்கவில்லை. இப்படித்தான் போன வாரமும், ஏன் அதற்கு முதல் வாரமும் கூட மகள் வருவாள் என்று இவள் விதவிதமாய்ச் சமைத்து வைக்க, ஏதோ அவசர வேலை வந்தது என்று கடைசி நிமிடம் வராமல் போனாள். வெறுத்துப் போய் எதுவும் செய்து வைக்காவிட்டாலும் திடீரென வந்து நிற்பவள், "ம்மா. வெறும் சாம்பாருக்கும் கீரைக்குமா ஓடி வந்தேன்? பாருங்கப்பா இந்தம்மாவை. என்மேல பாசமே இல்ல" என்று மூக்கால் அழுவாள்.
'சரியான ட்ராமா க்வீன்' மகளைச் செல்லமாகத் திட்டிக்கொண்ட கவி, 'பிசியா இருக்காளோ, நேத்தே கேட்டு வச்சிருக்கணும்' என்று நினைத்தபடி நகரும் கூடை ஒன்றை எடுத்து உள்ளே சென்றாள். வழக்கமாக வெள்ளி இரவுகளில் இருக்கும் ஷாப்பிங் உற்சாகம் இன்றில்லை. இந்த ஒரு வாரமாக நல்ல வேலை. அதற்கு இன்னும் சுருதி கூட்டுவது போல இன்று காலை மிகப்பெரிய சிக்கலொன்று வெடித்திருந்தது. என்ன பிரச்சனை என்று புரிவதற்குள்ளாகவே எத்தனை அழைப்புகள், புகார்கள், அதிருப்திகள்? மூலம் ஆராய, இவர்கள் குழு சென்ற வாரம் செய்த மாற்றம் ஒன்று எதிர்பாராத வகையில் இன்னொரு இடத்தில் தாக்கியிருந்தது புரிந்தது.
எப்படியோ ஒரு வழியாக எல்லோரிடமும் பேசி, சமாளித்து, தீர்வு கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்றானது. மதிய உணவுக்குக்கூடச் செல்லாமல் குழுவினருடனே அமர்ந்திருந்த கவி, நான்கு மணிக்குமேல் தீர்வை அனுப்பியபின் தான் ஒரு காபி குடிக்கலாம் என்று எழுந்தாள்.
அறை வாசலில் "சாரி மேடம்" என்று ஜுனியர் பெண் வந்து நின்றாள். இருந்த அழுத்தத்தில் "என்ன வேலை செய்றீங்க, கொஞ்சமும் பொறுப்பில்லாம?" என்று கத்தவே தோன்றியது. அவள்தான் அப்பிழையைச் செய்தது. அலட்சியத்தில் நிகழ்ந்த, நன்கு தெரியக்கூடிய தவறு அது. ஆனால், அவளின் கனிந்த கண்களையும், உப்பிய முகத்தையும் கவனித்த கவிக்கு நா எழவில்லை. "சாரி மேடம்" என்று அப்பெண் மீண்டும் சொல்ல, "இனிமே பார்த்து கவனமா செய்ங்க. உங்களை மட்டும் குறை சொல்லிப் பிரயோசனம் இல்ல. நானும் கவனிச்சிருக்கணும். உங்க லீட் பார்த்துப்பாருனு விட்டது என் தப்பு" என்று சொல்லி, "சியர் அப். இதெல்லாம் நடக்கிறதுதான்" என்று உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தாள். 'பாவம் சின்னப் பொண்ணு. பயந்துடுச்சு' என்ற எண்ணமே இப்போதும் தோன்ற, வாரத்துக்குத் தேவையான காய்கறி, மளிகைகளை எடுத்து நிரப்பியபடி நடந்தாள்.
நல்லவேளையாகப் போனதும் சமைக்கும் வேலை இல்லை. ராஜேஷ் டின்னருக்கு வெளியே போகலாம் என்று சொல்லியிருந்தான். சமையலுக்கும் மேல்வேலைக்கும் உள்ள செல்வி நான்கு நாட்களாக ஆளையே காணோம். இதற்கும் போனவாரம்தான் அவசரத் தேவை என்று பணம் வாங்கியிருந்தாள். போன் செய்தாலும் எடுக்கவில்லை. வாங்கிய பணம் கரைந்ததும் வழக்கம் போல 'அக்கா' என்று வந்து நிற்பாளாக இருக்கும். 'ப்ச். அவளுக்குப் பாவம் என்ன கஷ்டமோ, தெரியாம தப்பா நினைக்கக்கூடாது' என்றும் தோன்றியது.
செல்வியின் உதவியும் இல்லாமல் போக, இருபக்க அழுத்தத்தில் எங்காவது ஓடிவிடலாம் போலிருந்தது உண்மை! 'எங்கே ஓடுவது, வேண்டுமானால் இந்தக் கடையைச் சுற்றி நான்கு முறை ஓடலாம்' தன் நினைப்பில் புன்னகைத்தவள் 'சிலிங்'கென்ற சத்தத்தில் பதறிச் சிலையாய் நின்றாள். எதிரில் அந்தச் சிறுவன் மலங்க மலங்க நின்றான். ஆறேழு வயது இருக்கும். கண்மண் தெரியாத வேகத்தில் ஓடிவந்தவன் அவள் கார்ட்டில் இருந்த ஊறுகாய் பாட்டிலைத் தட்டி விட்டிருந்தான். எண்ணெயும் சாறுமாகத் தரையில் வழிய, பயத்தில் ஓடப் பார்த்தவனை கண்ணாடி சில்லுகள் குத்திவிடாமல் கவி இழுத்து நிறுத்திக் கொண்டாள். "அச்சோ. ஸாரி ஸாரி மேடம். இப்படித்தான் எப்பவும். ஒரு இடத்துல நிற்க மாட்டான். ஏண்டா இப்படி பண்ற?" அவனுடைய அம்மாவாக இருக்க வேண்டும். ஓர் இளம்பெண் வந்து அவனை அதட்ட, "பரவால்ல.விடுங்க சின்னப்பையன் தானே. நானும் மேலாப்புல வச்சிருக்கக் கூடாது" என்று கவி அவளைச் சமாதானம் செய்ய வேண்டியிருந்தது. அதற்குள் சுத்தம் செய்யக் கடை ஊழியர்கள் வந்து விட்டார்கள். இவளும் தன் பங்குக்கு மன்னிப்புக் கேட்டு, உடைந்ததற்கும் பணம் செலுத்தி, வெளியே வந்தாள்.
வீட்டை அடைந்தது எப்படித்தான் தெரிந்ததோ, சரியாக ராஜேஷ் அழைத்தான். "என்ன சார், ஏதாவது வேலை வந்திருக்கணுமே?" அவள் கிண்டலாகக் கேட்க, அந்தப் பக்கம் அசடு வழிந்தது. "ஸாரிடா. திடீர்னு ஒரு மீட்டிங். வர லேட்டாகும்" ஏமாற்றமாக இருந்தாலும் அவனுடைய வேலைப்பளு தெரியும் என்பதால், "புதுசா ஏதாவது சொல்லுங்க பாஸ். இது வழக்கம்தானே?" என்று விளையாட்டாகவே கடந்தாள். முடிந்தமட்டும் சீக்கிரம் வரச்சொல்லி அழைப்பை வைத்தவளுக்கு 'பத்து நிமிஷம் முன்னாடி தெரிஞ்சுருந்தா அங்கேயே சாப்பிட வாங்கியிருக்கலாம்' என்றிருந்தது. 'நானே யோசிச்சு வாங்கியிருக்கணும். இப்ப பிரெட்தான் இருக்கு. ராத்திரி சாப்பிட்டா தொண்டை அடைக்கும். பேசாம கிச்சடி செய்யலாம், ஒன்பாட் மீல்' கணத்தில் திட்டம் போட்டு அதற்கான வேலைகளை ஆரம்பித்து, கையோடு கையாக வாங்கி வந்தவற்றை உள்ளே வைத்து, குக்கர் விசில் வருவதற்குள் கலைந்து கிடந்த வீட்டையும் ஒழுங்கு செய்தாள், 'அப்பப்ப சுத்தம் பண்ணா ஈஸியா இருக்கும். வரவர உனக்கு சோம்பேறித்தனம் ஜாஸ்தியாகிடுச்சு' என்று தன்னை நக்கல் செய்தபடியே.
எல்லா வேலைகளையும் முடித்த ஆசுவாசத்துடன் உடையை எடுத்து குளியலறைக்குள் நுழைந்தவளை 'கவி' என்று யாரோ அழைப்பது போலிருந்தது. பலகீனக் குரல். பூட்டிய வீட்டுக்குள் வேறு யாரிருக்க முடியும்? காலையில் இருந்து கண்ணோடு கண் நோக்காத உருவம் அழைப்பதான பிரமையில் முறுவல் தோன்ற, அறையின் மங்கிய ஒளியில் கிளாஸட்டை நெருங்கி நின்றாள் கவி.
'உன் புருஷனை, மகளை, செல்வியை, வேலைல தப்பு பண்ண பொண்ணை, ஏன் முன்ன பின்ன தெரியாத அந்த சின்னப்பையனைனு எல்லோரையும் பாவம் பாவம்னு சொல்றியே, என்னைப் பார்த்தா மட்டும் உனக்கு பாவமாவே இல்லையா?'
'வாட்?'
'அடுத்தவங்க பண்ற தப்பை, போதாமையை, சிரமங்களை புரிஞ்சு மன்னிச்சு அவங்களுக்கே ஆறுதல் சொல்ற நீ உன்னை மட்டும் ஏன் எல்லாத்துக்கும் குறை சொல்லிக்கிற? செல்ஃப் கிரிட்டிசிஸம் தேவைதான். அதுவே அளவுக்கு மிஞ்சினா… சுயவிமர்சனம் செஞ்சுட்டே இருக்கிறதை நிறுத்திட்டு when are you going to love yourself unconditionally?'
'எப்ப உன்னையே நீ நிபந்தனையில்லாம நேசிக்கப்போற?' அக்களைத்த தோற்றத்தின் கண்களில் உள்ள கேள்வி சொடுக்க, கன்னத்தில் மாறி மாறி அடிவாங்கிய பாலுத்தேவர் போல தன்னை உணர்ந்தாள் கவி.
வெகுநேரம் அப்படியே நின்றவள், 'சே. ஆமாம்ல. எதுக்கு எல்லாத்துக்கும் என்னையும் சேர்த்து blame பண்ணிக்கிறேன்? மாறணும் கவி, புது பன்னீர்செல்வமா மாறணும்' முகத்தில் வந்து விழுந்த முடியை உதடு குவித்து ஊதியபடி அருகிலிருந்த மின்விசையை அழுத்த, பளிச்சென்ற வெள்ளை ஒளி அவ்வறை முழுக்க வெளிச்சம் பாய்ச்சியது.
அந்த நாளின் முதன்முறையாகத் தன் உருவத்தின் விழியோடு விழி பார்த்து, 'இனி ஒரே ஸெல்ப்-லவ் மோட் தான். உன்னை லவ் பண்ற வேகத்துக்கு நீயே மிரண்டு போயிடணும்' தன்னுள்ளான தனக்குப் புன்னகை பூத்துக்கொண்டாள் கவி, நிறைவான காதலுடன்.
ஹேமா ஜெய், யுடா |