கேள்விகள்... விடைகள்!
(இலக்கணச்‌ செல்வர்‌ பாலசுந்தரனார்‌ அவர்கள்‌ எழுதிய 'தமிமும்‌ யானும்‌' என்னும்‌ நூலுள்‌ காணப்படும்‌ பண்டிதர்‌ கோ.வடிவேல்‌ செட்டியார்‌ அவர்களைப்‌ பற்றிய சுவையான செய்திக்குறிப்பு)

ஒருநாள்‌ மாலை என்‌ ஆசிரியர்‌ மகாவித்வான்‌ கொ. இராமலிங்கத்‌ தம்பிரான்‌ என்னைச் சிந்தாதிரிப்பேட்டை சாமிநாயக்கன்‌ தெருவில்‌ உள்ள வேதாந்த சங்கத்திற்கு அழைத்துச்‌ சென்றார்‌.

சங்கத்தலைவர்‌, இலக்கண இலக்கிய தருக்க வேதாந்த போதகாசிரியர்‌ கோ. வடிவேலு செட்டியார்‌ என்பவரென்றும்‌, அவர்‌ யாரிடமும்‌ இருபொருள்‌ படப்‌ பேசும்‌ வழக்கமுடையவர்‌ என்றும்‌, எத்தகையோரையும்‌ கேள்விகேட்டுத்‌ திணற அடிப்பவர்‌ என்றும்‌, நாடகப்‌ பேராசிரியர்‌ சதாவதானம்‌ தெ.பொ. கிருட்டிணசாமிப்‌ பாவலர்க்கும்‌ அவர்தம்‌ இளவல்‌ பன்‌மொழிப்புலவர்‌ தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்க்கும்‌ இவரே வேதாந்தத்திற்கும்‌ தமிழ்‌ இலக்கிய இலக்கணங்களுக்கும்‌ ஆசிரியர்‌ என்றும்‌, இவரிடம்‌ பக்குவமாகப்‌ பேச வேண்டுமென்றும்‌ வழியிடை என்‌ ஆசிரியர்‌ சொல்லி எனக்கு விழிப்புணர்ச்சி ஊட்டியிருந்தார்‌. வேதாந்த சங்கக்‌ கட்டடத்தை அடைந்தோம்‌. செட்டியாரைக்‌ கண்டோம்‌. வணக்கங்கள்‌ பரிமாறப்பெற்றன.

செட்டியார்‌ சாய்வு நாற்காலியில்‌ சாய்ந்து கொண்டு 'கைவல்ய நவநீதம்'‌ என்னும்‌ வேதாந்த நூலுக்கு உரை விளக்கம்‌ சொல்லிக்‌ கொண்டிருந்தார்‌. சங்கச்‌ செயலர்‌ குந்தன்‌ பிரசாத்லால்‌, இராமச்சந்திர நாயுடு, அரங்கநாத முதலியார்‌ முதலிய அகவை முதிர்ந்தோர்‌ பாடம்‌ கேட்டுக்‌ கொண்டிருந்தனர்‌. அது அக்காலத்திய ஒருவகை முதியோர்‌ கல்வி எனலாம்‌. செட்டியார்‌ பாடத்தை நிறுத்திவிட்டு என்‌ ஆசிரியரது நலம்‌ பற்றி கேட்டுக்‌ கொண்டிருந்தார்‌. யான்‌ ஒன்றுந்‌ தெரியாதவனைப்‌ போல்‌ நீள மர இருக்கையில்‌ ஓர்‌ ஓரமாய்‌ உட்கார்ந்திருந்தேன்‌. செட்டியார்‌ யானைக்கணகளுக்குப்‌ பூனைபோல்‌ பதுங்கியிருந்த நான்‌ பட்டுவிட்டேன்‌. அவ்வளவுதான்‌. 'தம்பிரான்‌ அவர்களே உம்மோடு நூலும்‌ கையுமாக வந்த‌ இந்த குட்டித்‌ தம்பிரான்‌ யார்‌? பெயர்‌ என்ன?' என்று எள்ளலாகக் கேட்டார்‌. ஆசிரியர்‌ சொன்னது நூற்றுக்கு நூறு உண்மைதான்‌ என்று அப்போது உணர்ந்தேன்‌. எனக்கு நடுக்கம்‌ எடுக்கலாயிற்று.

இவர்‌ என்னென்ன கேள்விகள்‌ கேட்டு என்னை மடக்கி மானக்‌கேட்டிற்கு உட்படுத்தப்‌ போகிறாரோ என எண்ணினேன்‌.

ஆசிரியர்‌ இருக்க அச்சமேன்‌ என ஒருவாறு துணிவு கொள்ளலானேன்‌.

மன்னுடை மன்றத்து ஓலை தூக்கினும்‌
தன்னுடை ஆற்றல்‌ உணரார்‌ இடையிலும்‌
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும்
தன்னை மறுதலை பழித்த காலையும்‌
தன்னைப்‌ புகழ்தலும்‌ தகும்புல வோர்க்கே


என்னும்‌ நன்னூல்‌ நூற்பா வரிகள்‌ என்‌ நினைவுக்கு வந்து சிறிது தறுகண்மை தந்தன.

'தம்பியின்‌ பெயர்‌ பாலசுந்தரம்‌ என்பது. என்பால்‌ தமிழ்‌ பயிலுகிறார்‌. தங்கள்‌ வேடிக்கையாகக்‌ கூறிய போதிலும்‌ இவரை ஒரு குட்டித்‌ தம்பிரானாகவே ஆக்க முயன்று கொண்டிருக்கிறேன்‌. வித்துவான்‌ முதனிலைத்‌ தேர்வுக்கு இப்போது இலக்கணத்தில்‌ நன்னூல்‌ பாடம்‌ கேட்டு வருகிறார்‌' என்றார்‌ என்னாசிரியர்‌.

வெறும்‌ வாய்க்கு அவல்‌ கிடைத்துவிட்டது செட்டியார்க்கு. "அப்படியா இலக்கணத்தில்‌ கேள்விகள்‌ கேட்கலாம்‌ அல்லவா" என்றார்‌. ஊர்க்குருவி மீது இராமவாளி தொடுக்கலானார்‌. ஒரு வாளியோ?

"தம்பி இந்த இடத்திற்கு என்ன பெயர்‌?"

"வேதாந்த சங்கம்."

"இஃது என்ன புணர்ச்சி? வேற்றுமைப்‌ புணர்ச்சியா, அல்வழிப்‌ புணர்ச்சியா?"

தயங்கினேன்‌.

"நாணப்படாதே தம்பி? இலக்கணம்தானே சொல்‌."

"வேற்றுமைப்‌ புணர்ச்சியில்‌ வேற்றுமைத்‌ தொகை."

"அத்தொகையை விரித்துரைப்பாயா?"

"வேதாந்தத்தை நீங்கள்‌ பயிற்றுவிக்கின்ற சங்கம்."

மேலும்‌ விளக்க வேண்டும்‌.

"வேதாந்தத்தை = வேதம்‌ + அந்தம்‌ + அத்து + ஐ, இதனுள்‌ ஐ இரண்டாம்‌ வேற்றுமை உருபு; அத்து என்பது சாரியை, பயிற்றுவிக்கின்ற பயன்‌, 'ஐ' என்னும்‌ இரண்டாம்‌ வேற்றுமை உருபும்‌ பயிற்றுவிக்கின்ற என்னும்‌ பயனும்‌ மறைந்து வந்துள்ளதால்‌ இரண்டாம்‌ வேற்றுமை உருபும்‌ பயனும்‌ உடன்‌ தொக்க தொகையாம்‌. அதனால்‌ இது வேற்றுமைப்புணர்ச்சியில்‌ வேற்றுமைத்தொகையாம்‌."

"சரி, சரி, இத்தொடருக்கு இலக்கணமும்‌ பொருளும்‌ ஒருவாறு கூறிவிட்டாய்‌. 'சங்கம்‌' என்னும்‌ சொல்லுக்கு இலக்கணம்‌ சொல் பாக்கலாம்‌."

நான் விழித்தேன்‌. ஆசிரியரைப் பார்த்தேன்‌. "முயன்று பார்" என்றார்.

"ஐயா! இச்சொல்‌ ஒரு வினைச்சொல்போல்‌ தோற்றுகிறது."

"இதற்கு இவ்வளவுதான்‌ இலக்கணமோ?" எனக்‌ கூறி கலகலவென நகைத்தார்‌. அப்போது அக்கேள்வி வாளியைத்‌ தம்பால்‌ தாங்கிக்‌ கொண்டார்‌ என்‌ ஆசிரியப்‌ பெருந்தகை.

"என்ன ஐயா? பெரும்‌ புலவர்களைக்‌ கேட்க வேண்டிய கேள்வியை இச்சிறுபிள்ளையிடம்‌ கேட்டுவிட்டீர்களே? செய்தல்‌, போதல்‌ முதலியவற்றை, செய்‌+தல்‌, போ+தல்‌ எனப்‌ பகுதி விகுதிகளாகப்‌ பிரிக்கலாம்‌. பகுபதமாகும்‌. இவை விகுதி பெற்ற தொழிற்பெயராகும்‌. ஆனால்‌ சங்கம்‌ என்பது, சங்கு+அம்‌ எனப்‌ பிரிக்க முடியாத பகாப் பதமாகும்‌. அதனால்‌ அச்சொல்‌ விகுதி பெறாத தொழிற்பெயராகுமன்றோ? நான்‌ தம்பிக்கு இன்னும்‌ நன்னூல்‌ வினையியலைத்‌ தொடங்கவில்லையே. பதவியல்‌ வரைதான்‌ பாடம்‌ முடித்திருக்கிறேன்" என்று உண்மை நிலை கூறி என்னைக் காத்து நின்றார்‌.

"நன்னூல்‌ வினையியல்‌ பாடம்‌ கேட்டிருப்பாய்‌ என்ற நினைவில்‌ தெரியாமல்‌ கேள்வி கேட்டுவிட்டேன்‌. சங்கம்‌ - வினைச்சொல்தான்‌. கூடுதல்‌ என்ற பொருள்‌ தருவதுதான்‌. தம்பி நீ வருத்தப்‌ படாதே. தவறு என்னுடையதுதான்‌ உன்னுடையதன்று" எனக் கூறினார்‌.

"நீ ஒரு நல்லாசிரியனை அடுத்திருக்கிறாய். நல்லாசிரியனாக ஆவாய்‌. வாழ்த்துகிறேன்‌. இவர்பால்‌ நன்றாகப்‌ படி. எதிர்காலம்‌ உனக்குப்‌ பொற்காலமாகும்" எனவும்‌ வாழ்த்தினார்‌.

என்‌ ஆசிரியர்‌, "ஐயா! யானே தவறுடையேன்‌, பதவியல்வரை பாடம்‌ சொல்லியிருக்கிறேன்‌ என முன்னரே சொல்லியிருப்பின்‌, இந்த 'சங்கம்‌' என்னும்‌ சொல்‌ நம்மைச்‌ சங்கடப்படுத்தியிராதல்லவா?" என்று பெருந்தன்மையோடு தவற்றைத் தம்பால்‌ ஆக்கிக்கொண்டார்‌. இவர்கள்‌ இருவரும்‌ வெற்றி தோல்வியின்றி. வழக்காடியதையும்‌, இலக்கணப் பெரும்புலமையையும்‌ கண்டு யானும்‌ மற்றோரும்‌ வியந்தோம்‌. கற்றாரிடம்‌ எத்துணை விழிப்பாக இருக்கவேண்டும்‌ என்பதையும்‌ இந்நிகழ்ச்சி வாயிலாய்‌ யான்‌ நன்கு உணர்ந்துகொண்டேன்‌. என்‌ ஆசிரியர்‌ யான்‌ தளர்ந்தபோது ஊன்றுகோல்‌ போல்‌ ஆனார்‌. என்‌ தன்மானம் காக்கப்பெற்றது.

தன்மானம்‌ காக்கப்பெற்றது.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.


இலக்கணச்‌ செல்வர் பாலசுந்தரனார்‌

© TamilOnline.com