முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவைகள் கடைபிடிக்க வேண்டிய அணுகு முறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பலப்பலத் தருணங்களில் என்னை வினாவியுள்ளனர். அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சிலக் குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படையாகின்றன. வடிவமைப்புக் கோர்வைக்காக இக்கட்டுரை வரிசை CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து அமைத்துள்ளேன். ஆனால் இக்கட்டுரைத் தொடர் வெறும் தமிழாக்கம் மடடுமல்ல. இந்தத் கட்டுரை வரிசையில் என் அனுபவ பூர்வமானக் கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ளக் கருத்துக்களையும், ஒன்று சேர்த்தளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் உங்களுக்குக் குறிப்பிட்டுக் காட்டுவதாக உத்தேசம். இப்போது ஆரம்ப நிலை யுக்திகளை மேற்கொண்டு கற்கலாம் வாருங்கள்!
★★★★★
கேள்வி: நான் ஒரு நல்ல நிறுவனத்தில் உயர்நிலை மேலாண்மைப் பதவியில் சௌகரியமாக வேலை பார்த்து வருகிறேன். ஆனால் என் நண்பர்கள் சிலர் தாங்களே நிறுவனங்களை ஆரம்பித்து வெற்றி பெற்று, செல்வந்தர்கள் ஆகியுள்ளார்கள். எனக்கும் ஒரு நல்ல யோசனை உள்ளதால் நானும் ஆரம்பநிலை நிறுவனக் களத்தில் குதிக்கலாமா என்று தோன்றுகிறது. ஆரம்பித்தால் எவ்வளவு சீக்கிரம் வெற்றி கிடைக்கும்? உங்கள் பரிந்துரை என்ன? கதிரவனின் பதில்: ஆரம்பநிலை நிறுவனத்தில் வெற்றி காண்பது நீங்கள் நினைக்கும் அளவு ஒன்றும் எளிதல்ல என்று முன்பு கூறினோம். நிறுவனம் எதிர்கொள்ளும் இன்னல்களையும் பட்டியலிட்டோம். இதோ அந்த இன்னல் பட்டியல்:
* சொந்த/குடும்ப நிதிநிலைமை மற்றும் தியாகங்கள் * நிறுவனர் குழுவை சேர்த்தல் * உங்கள் யோசனையை சோதித்து சீர்படுத்தல் * முதல்நிலை நிதி திரட்டல் * முதல்நிலை திசை திருப்பல் (initial pivoting) * முதல் சில வாடிக்கையாளர்கள் * விதைநிலை நிதி திரட்டல் * வருடம் மில்லியன் டாலர் வருவாய் நிலை * முதல் பெரும்சுற்று நிதி திரட்டல் * சந்தை மெத்தனம், சந்தை மாற்றம், அதனால் திசைதிருப்பல் * குழுக் கோளாறு அல்லது கருத்து வேறுபாடு; குழு பிரிவு * வெற்றிக் கோட்டைத் தாண்டத் தடங்கல்கள்
சென்ற பகுதிகளில், குடும்ப நிதிநிலைமை, குழுச் சேர்த்தல், யோசனை சீர்படுத்தல், முதல்நிலை நிதி திரட்டல், முதல் திசைதிருப்பங்கள், முதல் வாடிக்கையாளர்களைப் பெறுதல், விதைநிலை நிதி திரட்டல், வருடாந்திர மில்லியன் டாலர் நிலைக்கு வளர்தல், முதல் பெரும்சுற்று நிதி திரட்டல் போன்றவற்றில் எதிர்காணக்கூடிய இன்னல்களை விவரித்தோம். இப்போது மற்றும் சில இன்னல்களைப் பற்றி விவரிப்போம்.
மீண்டும் திசைதிருப்பம்: யோசனை சீர்திருத்தலின் போது திசைதிருப்புவதைப் பற்றி ஏற்கனவே விவரித்தோம். ஆனால், நிறுவனத்தின் பிற்காலத்திலும், விற்பொருள் தயாராகும் தருணத்தில் வணிகச்சந்தை வேண்டிய அளவுக்கு வளராததாலோ, அல்லது வாய்ப்பாளர் தேவை விற்பொருள் உருவாக்கும் காலத்துக்குள் மாறி விட்டதாலோ, அல்லது வேறு தொழில்நுட்பம் வாய்ப்பாளர்களின் தேவைகளை நன்கு பூர்த்தி செய்து தன்னை நிலைநாட்டிக் கொண்டு விட்டதாலோ, நிறுவனம் முதல் முறையாகவோ, மீண்டுமோ திசை திருப்ப நேரிடக் கூடும்.
திசை திருப்புவதைப் பற்றி உதாரணங்களோடு ஏற்கனவே விவரித்து விட்டதால், அதை மீண்டும் இங்கு ஆழ்ந்து அலசத் தேவையில்லை. முன்பு விவரித்ததை மீண்டும் படித்தறியுங்கள். ஒரு முக்கியமான புது அம்சம் என்னவென்றால், இந்தப் பிற்காலத் திசைதிருப்பம் நிறுவனத்தின் குழுவில் பெரும் மாற்றங்களை உண்டாக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், புதுத்திசையில் நிறுவனத்தின் தொழில்நுட்பம் அல்லது வணிகத்துறையில் பெரும்மாற்றம் தேவைப்பட்டால், குழுவில் உள்ள சிலரை மாற்றியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். மேலும், நிறுவனத்தின் கையிலிருக்கும் நிதியுடன் இன்னும் அதிககாலம் தாக்குப் பிடிக்க வேண்டும் என்பதால் ஊழியர்களைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படக்கூடும்.
நிறுவனர் குழுப் பிரச்சனை: ஆரம்பநிலை நிறுவனத்தை வெற்றிப் பாதையில் நடத்திச் செல்வதில் பலப்பல தடங்கல்கள், இன்னல்கள், இடையூறுகளைச் சந்திக்க நேரும். இவற்றில் பலவற்றைப் பற்றி ஏற்கனவே இந்த யுக்தியில் முன்னர் விவரித்துள்ளோம். ஒருநாள் முற்பகல் பெரும் வெற்றிகரமாக இருந்தாலும் அதேநாள் பிற்பகல் ஒரு படுதோல்வியைச் சந்திக்க நேரலாம். அல்லது நிறவன நிதிநிலைமை சரியில்லாவிட்டால், வருவாய் பெறாமலே பலகாலம் பணியாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படக்கூடும். அப்படி இருக்கையில் நிறுவனர் குழு, ஆழப் பிணைந்த குடும்பமாக ஒருவொருக்கொருவர் பக்கபலமாக இருந்து செயல்பட வேண்டும்.
அத்தகைய ஆழ்ந்த பிணைப்பு எல்லா ஆரம்பநிலை நிறுவனங்களுக்கும் உடனே வருவதில்லை. பல காலமாகப் பழகிய நண்பர்கள் அல்லது பல நிறுவனங்களில் இணைந்து பணியாற்றிய குழு உறுப்பினர்கள் போன்றோர்க்குத் தான் நிறுவனத்தின் ஆரம்பம் முதலே அத்தகைய பிணைப்பு இருக்கும்.
நிறுவனர் குழுவினர் பலகாலப் பழக்கமின்றி நிறுவனத்தை ஆரம்பித்தால் கருத்து வேறுபாடுகள் எழுவது சகஜம். அத்தருணங்களில் குழுவினர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து பிணைப்பை அதிகரித்துக்கொள்ள வேண்டும். இது பெற்றோர்கள் பார்த்து இணைத்த புதுத் தம்பதியர் போல என்று வைத்துக் கொள்ளலாம். அப்படி அந்த தம்பதியரிடம் ஆழ்ந்த இணைப்பு இல்லாவிட்டால் பிரியவேண்டிய நிலை (விவாக ரத்து) ஏற்படக்கூடும் அல்லவா! அதேபோல் நிறுவனர் குழுவுக்குள் உடன்பாடும் இணைப்பும் இல்லாவிட்டால் குழு பிரிய நேரிடும்.
இத்தகைய குழுப் பிரிவுச் சிக்கல்கள் சில சமயங்களில், பல காலமாகப் பழகிய குழுவினரிடமும் ஏற்படுவதுண்டு. நண்பர்களாகப் பழகியவர்கள் நிறுவனத்தில் பணிபுரிகையில் யார் தலைமை மேலாளர் யார் தலைமைப் பொறியாளர் என்ற பிரச்சனையால் ஆரம்பகாலத்திலேயே பிரியலாம். அல்லது, அதில் உடன்பாடு இருந்தாலும், மேலாளர் தன் துறையில் அளவுக்கதிகமாகத் தலையிடுகிறார் என்ற குறைபாட்டால் தகராறு உண்டாகலாம். மூலதனம் பெருகையில் பங்குப் பிரச்சனை எழக்கூடும். இப்படிப் பல காரணங்களால் குழுப் பிரியக்கூடும்.
குவுக்குள் உள்பூசலால்தான் பிரிவு ஏற்பட வேண்டும் என்பதில்லை. சில சமயம் நிறுவனர்களில் ஒருவருடைய குடும்பச் சூழ்நிலையில் எதாவது அசம்பாவிதம் நேர்ந்தாலோ, அவருக்கு நிதிநிலைமை மாறி, நிலையான வேலையில் அதிக வருமானம் வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டாலோ அவர் விருப்பமின்றி விலகிக் கொள்ள நேரிடலாம். ஆனால் அத்தகைய நிலையில் பொதுவாக அவர் ஆலோசகராகத் தொடர்ந்து உதவுவார். இருந்தாலும் அவருடைய இடத்துக்கு மற்றொருவரை அமர்த்திக் கொள்வதற்குக் காலதாமதம் ஆகும். அதனால் நிறுவனத்தின் உத்வேகம் குறையும். மேலும், புதிதாகச் சேர்பவர் குழுவில் மற்றவர்களுக்குப் புதியவரானால் குழுவோடு இணைந்து செயல்படுவதில் சில சங்கடங்கள் உண்டாகக்கூடும். அவற்றைச் சமாளித்து மீண்டும் வேகம் பிடிப்பதற்கு கால விரையமாகும்.
இத்தகைய குழுப் பிரிவு அசம்பாவிதம் பல நிறுவனங்களில் ஏற்பட்டதுண்டு. சில நிறுவனங்கள் முதலில் தடுமாறினாலும் அந்த இன்னலைச் சமாளித்துக் கொண்டு மீதமுள்ள நிறுவனர்களோடும், இன்னும் சில புதிய குழுவினரோடும் வெற்றி கண்டுள்ளன. ஆனால் சில நிறுவனங்களோ அத்தகைய குழுப் பிரிவினால் உண்டாகும் துர்விளைவுகளால் அடியோடு சீர்குலைந்து, அடிமட்ட விலைக்கு விற்கப்படும் அல்லது சுத்தமாக மூடப்பட்டுவிடும்!
அடுத்த பகுதியில், மற்ற இன்னல்களையெல்லாம் சமாளித்து நிறுவனம் நன்கு வளர்ச்சிபெற்ற பிறகு இறுதியாக வெற்றிக் கோட்டைத் தாண்டும் முன் ஏற்படக்கூடிய சில இன்னல்களைப் பற்றி விவரிப்போம். அத்தோடு இந்த யுக்தியின் விவரிப்பு நிறைவுறும்.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |