தே.ப. பெருமாள்
தேசிக விநாயக பகவதிப் பெருமாள் எனும் தே.ப. பெருமாள், கவிஞர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியவாதி, சுதந்திரப் போராட்ட வீரர். கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள கோட்டாறில், தேசியப்பப் பிள்ளை - நீலா இணையருக்கு 1916ம் ஆண்டு பிறந்தார். ஆறாம் வகுப்போடு பள்ளிக்கல்வி நிறைவுற்றது. தமிழ்மீது கொண்ட விருப்பத்தால் பண்டிதர் சாஸ்தாங்குட்டிப் பிள்ளையிடம் கல்வி கற்றார். ஹிந்தி, மலையாள மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார். காந்தியக் கருத்துக்களால் மிகவும் ஈர்க்கப்பட்ட பெருமாள், காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். திருவிதாங்கூர் காங்கிரஸ், தமிழக காங்கிரஸ் இயக்கங்கள் நிகழ்த்திய பல போராட்டங்களில் கலந்துகொண்டார். கிராமந்தோறும் சென்று கதர் விற்பனை செய்தார். பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறையிலடைக்கப்பட்டார். விடுதலையானதும் மீண்டும் தன் சுதந்திரப் போராட்டச் செயல்பாடுகளில் ஈடுபட்டார்.

தே.ப. பெருமாள் கடை ஒன்றில் பணியாளராகப் பணி செய்தார். மிகுந்த சமூக அக்கறை கொண்டிருந்த அவர், தனது நண்பர்களுடன் இணைந்து, 'நாகர்கோவில் வர்த்தக குமாஸ்தாக்கள் சங்கம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதன்மூலம் பல போராட்டங்களை நடத்தி, மாதம் ஒருநாள் மட்டுமே விடுமுறை என்பதை மாற்றி வாரம் ஒருநாள் விடுமுறை என்பதை நடைமுறைக்குக் கொண்டு வந்தார். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் உதவியாளராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார்.



தே.ப. பெருமாள், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார். கவிமணியுடனான சந்திப்பு பெருமாளைக் கவிஞராக்கியது. அவருக்கு மாணவரானார். முதல் கவிதை 'மழை' ஆனந்தபோதினி இதழில் வெளியானது. தொழிலாளர் உலகம் என்ற இதழிலும் பெருமாளின் கவிதைகள் வெளிவந்தன. கவிமணியால் ஊக்குவிக்கப்பட்ட பெருமாள், அவரது ஆலோசனையின் பேரில் அக்கவிதைகளை நூலாக வெளியிட்டார். கதை, கவிதை, கட்டுரை, சிறார் படைப்புகள் எனப் பல இதழ்களுக்குப் பங்களித்தார். இலங்கையிலிருந்து வெளிவந்த 'வீரகேசரி' இதழின் பகுதிநேர நிருபராகப் பணியாற்றினார். சிங்கப்பூர் திரையொளி இதழின் நிருபராகப் பணிபுரிந்தார். வசந்தம், அமுதசுரபி, குமரி மலர், அணிகலன், ஆனந்தவிகடன், சிவாஜி, கலைமகள், சக்தி, ஆனந்தபோதினி போன்ற இதழ்களில் கவிதை, கட்டுரைகளை எழுதினார்.

மரபிலக்கியத்தில் தேர்ந்திருந்த பெருமாள் இசைப்பாடல்கள், கதைகள், நாடகங்கள் எனச் சிறார் இலக்கியத்திற்கும் முக்கியப் பங்காற்றினார். நாகர்கோவிலில் 'இளங்கோ மன்றம்' என்ற அமைப்பை உருவாக்கினார். அதன் மூலம் பல இலக்கிய நிகழ்வுகளை முன்னெடுத்தார். தமிழறிஞர்கள் பலரை அழைத்துச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி இளைஞர்களிடையே தமிழார்வத்தைத் தூண்டினார். 'ஆசாத் வாசிப்புச் சாலை' என்ற பெயரில் கோட்டாற்றில் படிப்பகம் ஒன்றை நிறுவி இளைஞர்களிடையே வாசிப்பார்வத்தை வளர்த்தார். திருச்சி வானொலி நிலையம் கவியரங்கம் என்ற நிகழ்ச்சியை முதன்முதலில் தொடங்கியபோது கலந்துகொண்ட கவிஞர்களுள் பெருமாளும் ஒருவர். நாடகம், வாழ்க்கை வரலாறு, நூல் திறனாய்வு, பதிப்பு, தொகுப்பு, ஆய்வு எனப் பல களங்களில் தமிழ் இலக்கியத்திற்குப் பங்களித்தார். 75-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் தே.ப. பெருமாளின் நூல்கள் பல பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாட நூலாக வைக்கப்பட்டன. 'தளவாய் வேலுத்தம்பி' நாவல், கேரளப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் புகுமுக வகுப்புப் பாடநூலாக வைக்கப்பட்டது.

தே.ப. பெருமாளின் படைப்புகள்
கவிதைத் தொகுப்புகள்: இயற்கையின் நடனம், கன்னியாகுமரி (காவியம்), வாசவதத்தை (காவியம்), குழந்தை அரங்கு, சிறுவர் அமுது (இரு பாகங்கள்), நெஞ்சமலர்கள் (இரு தொகுதிகள்), சுகானந்த மலர்கள், தமிழ்ச்சுனை, வேய்ங்குழல் கீதம்.
கதைத் தொகுப்புகள்: ஆணவ அரசகுமாரி, சிந்திக்க வைக்கும் சிறுகதைகள், சிரிப்பூட்டும் தெனாலிராமன் கதைகள், சிற்பத்தின் சக்தி, தமிழக மன்னவர் தெய்வீகக் திருக்கதைகள், நாத ஓவியம், நீதி பூத்த நெஞ்சம், புலவர் வரலாற்றுக் கதைகள், ஆழ்வார்கள் வரலாற்றுக் கதைகள், பெரியபுராணக் கதைகள் (நான்கு பாகங்கள்), மறக்க முடியாத மாமன்னர் கதைகள், முத்துக் கதைகள், பூவும் நினைவும்.
நாவல்கள்: சிற்பியின் கனவு (இரு பாகங்கள்), தளவாய் வேலுத்தம்பி, புதிய நெஞ்சம் புதிய உணர்ச்சி, வஞ்சிக் கோமகள், இசைக் கோமகள், வீரதீபம், வாழ்விலே வசந்தம், வேணாட்டு வேந்தன்.
நாடகங்கள்: ஆறு நாடகங்கள், சாந்தி முதலிய ஓரங்க நாடகங்கள், சுதந்திர தீபம் (கவிதை நாடகம்), தமிழுக்கு தன்னையே தந்தவன், மன்னன் திருமகள்,
திறனாய்வு நூல்கள்: இலக்கியத்தில் இன்பச்சுவை, கவிஞர் கண்ணதாசன் திரை இசைப் பாடல்கள் ஒரு திறனாய்வு, கவிமணியின் வாழ்வும் கவிதை வளமும், தமிழ்ச்சுவை இன்பம், முத்துக்குவியல்.
மற்றும் பல
(தகவல் நன்றி: தே.ப. பெருமாளின் வாழ்க்கை வரலாறு, முனைவர் க. மாணிக்கராஜ், கலைஞன் பதிப்பக வெளியீடு.)


கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பெருமாளுக்கு 'இளங்கவிஞன்' என்று பட்டமளித்துப் பாராட்டினார். கவிஞர் கண்ணதாசனால் 'மூத்த கவிஞர்' என்று கவியரங்கில் அழைக்கப்பட்டுப் பாராட்டப்பட்டார். தமிழ்க் கவிஞர் மன்றத்தின் முதல் மாநில மாநாடு சென்னை மயிலாப்பூரில் 30-11-1975 அன்று நடந்தபோது அப்போதைய முதல்வர் மு. கருணாநிதியால் கேடயம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். சென்னை கவிமணி மன்றம் திறப்பு விழாவின்போது மேனாள் அமைச்சர் க. ராசாராமால் பொன்னாடை போர்த்திச் சிறப்பிக்கப்பட்டார். ஸ்ரீலஸ்ரீ வடிவ அடிகளார், தே.ப. பெருமாளுக்கு 'தேன்தமிழ்க்கவிஞர்' என்ற பட்டமளித்துப் பாராட்டினார். 30 செப்டம்பர் 1987 அன்று நாகர்கோவிலில் நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தமிழ் எழுத்தாளர் சங்க மூன்றாவது சிறப்பு மாநாட்டில் 'தேன்கவித்தென்றல்' என்ற பட்டமளிக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.

தே.ப. பெருமாள் ஜூலை 05, 1989 அன்று காலமானார். கவிதை, கட்டுரை, நாடகம், சிறுகதை, நாவல், திறனாய்வு, சிறார் இலக்கியம் எனப் பன்முகப் படைப்பாளியாகத் திகழ்ந்த பெருமாள், தமிழர்கள் நினைவில் நிறுத்தவேண்டிய முன்னோடிகளில் ஒருவர்.

பா.சு. ரமணன்

© TamilOnline.com