லோகேஷ் ரகுராமன்
34 வயதாகும் லோகேஷ் ரகுராமன் இளம் எழுத்தாளருக்கு சாகித்ய அகாதமி வழங்கும் யுவ புரஸ்கார் விருதைப் பெற்றுள்ளார். இறுதிப் பட்டியலில் இடம்பெற்ற 14 பேர்களின் சிறுகதை, கவிதை, நாவல் படைப்புகளில் லோகேஷ் ரகுராமனின் 'விஷ்ணு வந்தார்' சிறுகதைத் தொகுப்பு 2024ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெறுகிறது. டாக்டர் க. பஞ்சாங்கம், டாக்டர் எம். திருமலை, மாலன் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு இப்படைப்பை விருதுக்குத் தேர்ந்தெடுத்தது. இந்நூல் லோகேஷ் ரகுராமனின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் சிறுகதைத் தொகுப்புக்கே சாகித்ய அகாதமி விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்க சாதனைதான். 'சால்ட்' பதிப்பகம் இந்நூலைப் பதிப்பித்துள்ளது. 'அரோமா' என்னும் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பையும் லோகேஷ் வெளியிட்டுள்ளார்.

லோகேஷின் பின்னணி சுவாரஸ்யமானது. எழுத்தாளர் குடும்பத்தைச் சேர்ந்தவரல்ல இவர். சாதாரண நடுத்தர வர்க்கக் குடும்பம்தான். லோகேஷ் ரகுராமன் திருவாரூர் மாவட்டம் விஷ்ணுபுரத்தை அடுத்துள்ள எரவாஞ்சேரியில், என்.எஸ். நடேசன்-வேதாம்பாள் தம்பதியருக்கு மே 23, 1990-ல் பிறந்தார். தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி. மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பொறியியல் இளங்கலைப் பட்டம். பள்ளி நாட்களிலேயே வாசிப்பார்வம் வந்துவிட்டது. கல்லூரியில் படிக்கும்போது சில சிறுகதைகளை எழுதினார். இவர் எழுதிய சில நாடகங்களை நண்பர்கள் நடித்தனர். என்றாலும் தீவிரமாக லோகேஷ் அப்போது எழுதத் தொடங்கவில்லை. வாசிப்பில்தான் கவனம் சென்றது. ஜெயமோகனின் வெண்கடல், யுவன் சந்திரசேகரின் குள்ளச்சித்தன் சரித்திரம், புதுமைப்பித்தனின் சிறுகதைகள், ஜானகிராமனின் எழுத்துக்கள் தாக்கத்தை ஏற்படுத்தின.



பெங்களூருவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் (நெட்வொர்க்கிங் டொமைன்) பணியாற்றும் போது எழுத்தார்வம் தீவிரமானது. முதல் சிறுகதை 'திருஷ்டி' சொல்வனம் இதழில் வெளியானது. தொடர்ந்து கவிதைகளையும், சிறுகதைகளையும், கட்டுரைகளையும் தனது இணையதளத்திலும், தமிழினி, அரூ, வல்லினம், சொல்வனம், கனலி, நடு போன்ற இணையதளங்களிலும் எழுதி வந்தார். வாழ்க்கை அனுபவங்களையும் கண்டதையும், கேட்டதையும், கிராமத்து அனுபவங்களையும், எதிர்கொள்ளும் சவால்களையும் புனைவு கலந்து எழுத்தாக்கினார். எந்த முன்னோடியின் சாயலும் இல்லாமல் புது மாதிரியான எழுத்தாக லோகேஷ் ரகுராமனின் கதைகள் மதிப்பிடப்படுகின்றன.

'விஷ்ணு வந்தார்' சிறுகதைத் தொகுப்பில் 10 கதைகள் இடம்பெற்றுள்ளன. முதல் கதையான 'விஷ்ணு வந்தார்' என்பதே நூலின் தலைப்பாக உள்ளது. பிராமணர்கள் இல்லத்தில் நடக்கும் பித்ரு காரியத்தில் 'விஷ்ணு இலை'க்குச் சாப்பிட வரும் ஒருவரை மையமாகக் கொண்டு பல்வேறு அடுக்குகளில் விரிந்து செல்லும் கதை. கிராமத்து வர்ணனை, பித்ரு காரியங்களின் செயல்பாடுகள், மந்திரங்கள், கர்த்தா, வாத்தியார், விஸ்வே தேவர், பித்ருவாக வரிக்கப்படுவர், விஷ்ணு இலைக்குச் சாப்பிட வருபவர் என மிகவும் விரிவாகப் பித்ரு காரியங்கள் பேசப்படுகின்றன. கதையின் மையம் பித்ரு பூஜையாக இருந்தாலும் அதன் பின்னணியில் மகன் தத்துக் கொடுக்கப்பட்டதன் நினைவிலே வாழும் தந்தையின் புத்திர சோகம் மிக ஆழமாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னால், இதே போன்று பித்ரு காரியங்களை மையமாக வைத்து, ம.ந. ராமசாமி எழுதிச் சர்ச்சையை ஏற்படுத்திய, 'கணையாழி'யில் வெளிவந்த 'யந்மே மாதா'வுக்குப் பிறகு மிக ஆழமாக, விரிவாக பிராமணர் இல்லங்களில் நடக்கும் பித்ரு காரியங்கள் இந்தச் சிறுகதையில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. தி. ஜானகிராமன், லா.ச. ராமாமிர்தம், சிவசங்கரி, பாலகுமாரன் உள்ளிட்டோர் பித்ரு விஷயங்கள் பற்றி தங்கள் படைப்புகளில் எழுதியிருந்தாலும், லோகேஷ் தன் கூறல் முறையிலும், கதையின் மையத்தினாலும் வித்தியாசப்படுகிறார். ஒரு சிறுகதைக்கு இத்தனை 'டீடெயிலிங்' தேவையா என்ற கேள்வி எழுந்தாலும், கதையின் தன்மையும், மையமும் அதை வைத்தே பின்னப்பட்டுள்ளதால் அவை இங்கு அவசியமாகின்றன. மிக ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய சிறுகதையாக விஷ்ணு வந்தார் அமைந்துள்ளது..



உரையாடல்களும் வர்ணனைகளும் 'விஷ்ணு வந்தார்' தொகுப்பின் பலம். ஒரு கதையைப் போல் மற்றொரு கதை இல்லை என்பது மற்றுமொரு சிறப்பு. 'அது நீ', 'பாஞ்சஜன்யம்', 'இடிந்த வானம்' போன்ற கதைகள் இதுவரை கூறப்படாத களங்களைக் கொண்டவை. 'அன்ன', 'தேனாண்டாள்', 'கடல் கசந்தது' போன்றவை குறிப்பிடத்தகுந்த கதைகள்.

தன் எழுத்துப் பற்றி லோகேஷ் ரகுராமன் ஒரு நேர்காணலில், "என் வீட்டிற்குள் நடப்பது, என்னைச் சுற்றி நடப்பது, நான் பார்த்த இடங்கள், சந்தித்த மனிதர்களை என் கதைகளில் சேர்க்கிறேன். சில நேரங்களில் கற்பனையும் சேரும். சகமனிதர்களின் அனுபவங்கள் என்பதை விடச் சக உயிரிகளின் அனுபவங்களை சேர்க்கிறேன். கடல், காற்று, மண், மலை, பூச்சிகள், நத்தை என உயிரிகள் எல்லாவற்றையும் கதைகளில் கலந்து வைப்பேன். நான் மனித மையக் கதைகளை, அதாவது மனித உறவுச் சிக்கல்களை அதிகமாக எழுதுவது இல்லை. இந்த உலகின் பிற உயிரிகளையும் இணைத்து என் கதைகளில் எழுதுகிறேன். அப்படி எழுதும்போது 'பெருங்கருணை' என்ற அம்சம் கதைகளில் சேர்கிறது. யாருமற்றவனுக்கு தும்மல் வருகிறது; அவன் நினைக்கிறான், யாரோ தன்னை நினைக்கிறார்கள் என்று! அந்தத் தும்மல், தன்னிச்சையாகத்தான் வருகிறது. மனித அறிவிற்கு எல்லைகள் என்ன என்பதை எழுதுகிறேன். மனித அறிவின் எல்லையில் இந்த தன்னிச்சை நிறையவே இருக்கிறது" என்கிறார்.



விதவிதமான கதைகளை, விதவிதமாகக் கூறும் ஆற்றல் கைவசப்பட்டிருக்கும் லோகேஷ் ரகுராமன், மனைவி ஜெயசுகந்தி, மகன் அத்வைத் உடன் பெங்களூருவில் வசிக்கிறார். இளம்புயலென எழுத்துலகில் புறப்பட்டிருக்கும் லோகேஷ் ரகுராமன் இலக்கிய உலகின் நம்பிக்கை முகம்.

லோகேஷ் ரகுராமன் இணையதளம்: lokeshraghuraman.wordpress.com
லோகேஷ் ரகுராமன் ஃபேஸ்புக் பக்கம்: facebook.com/lokesh.natesan

தென்றல்

© TamilOnline.com