அழகாபுரி அழகப்பன்
மண்ணின் மணத்தோடு கிராமப்புறம் சார்ந்த பல படைப்புகளை உயிர்ப்புடன் தந்தவர், இராம.சுப. அழகப்பன் என்னும் அழகாபுரி அழகப்பன். தேவகோட்டையில் உள்ள அழகாபுரியில் ஏப்ரல் 27, 1937 அன்று பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்த பின் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்தார். அமராவதிபுதூர் சுப்ரமணியம் செட்டியார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

அழகப்பன் இளவயதில் படித்த பாப்பா மலர், பாலர் மலர், அணில், ஜிங்லி, டமாரம் போன்ற இதழ்கள் இவரது வாசிப்பார்வத்தை வளர்த்தன. மாணவப் பருவத்தில் படித்த ஆனந்தவிகடன், கல்கி, குமுதம் போன்ற இதழ்கள் எழுதத் தூண்டின. முதல் சிறுகதை, 1950-ல் பள்ளி மாணவராக இருக்கும்போது வெளியானது. தொடர்ந்து இதழ்களில் எழுதத் தொடங்கினார். குமுதம் இதழ் நடத்திய இளமைக் கதை போட்டியில் அழகாபுரி அழகப்பனின் 'ஒரு பஸ் நிற்க மறுக்கிறது' சிறுகதை 5000 ரூபாய் பரிசு பெற்றது. தொடர்ந்து குமுதம் இதழில் சிறுகதைகள் எழுதினார். அவரது எழுத்துக்கு இருந்த வரவேற்புக் காரணமாக குமுதம் இதழ் வெளியிட்ட 'மாலைமதி' இதழில், கொல்லுவதெல்லாம் உண்மை, அதுவந்து நிற்கிறது, ரத்தம் இனிக்குதடா, கிராமத்து அநியாயம், திகில் மாளிகை எனப் பல்வேறு நாவல்களை எழுதினார். ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், தினமணி கதிர் போன்ற இதழ்களில் பல சிறுகதைகளை எழுதினார். திரை, நீரோடை, குங்குமச்சிமிழ், நிறைமதி, ரம்யா, கார்த்திகா, கலைப்பூங்கா, இதயம், மதிமுகில் போன்ற மாத இதழ்களில் பல நாவல்களை எழுதினார்.



அழகாபுரி அழகப்பன் சிறுகதை, நாவல், நாடகம், திரைக்கதை வசனம் என நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்துள்ளார். இதழ்கள் நடத்திய பல்வேறு சிறுகதை மற்றும் நாவல் போட்டிகளில் நடுவராகச் செயல்பட்டார். 'வான்மதி' என்ற இதழில் சில காலம் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அழகப்பனின் சிறுகதைகள் சில பள்ளித் துணைப்பாட நூல்களில் இடம்பெற்றன. ஆய்வாளர் சி. சந்திரன், அழகப்பா பல்கலைக்கழகத்தில் 'அழகாபுரி அழகப்பன் புதினங்கள்-ஓராய்வு' என்ற தலைப்பில் ஆய்வுசெய்து ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார்.

அழகாபுரி அழகப்பன் கிராமத்து நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துவதில் தேர்ந்தவர். குறிப்பாக செட்டிநாட்டுப் பகுதிகளையும், அம்மக்களின் வாழ்வு, கலாசாரத்தையும் தன் நாவல்களில் உயிர்ப்புடன் சித்திரித்தார். உளவியல் ரீதியாகப் பல சிறுகதைகளை எழுதினார். சற்றே பாலியல் கலந்து எழுதிய இவரது எழுத்துக்குப் பரவலான வரவேற்பு இருந்தது. காதல், சமூகம், குற்றப்புதினம் எனப் பல களங்களில் தனது நாவல்களை எழுதினார். நாடகம் பலவற்றை எழுதி, இயக்கி, அரங்கேற்றிய அனுபவத்தால் திரைப்படங்களிலும் பங்களித்தார். தேவராஜ்-மோகன் இயக்கிய 'சக்களத்தி' திரைப்படத்திற்குக் கதை வசனம் எழுதினார். 'கண்ணில் தெரியும் கதைகள்' படத்திற்கு அமுதவனுடன் இணைந்து வசனம் எழுதினார். 'சக்களத்தி' திரைப்படத்தில் டாக்டராக நடித்தார்.



அழகாபுரி அழகப்பன் தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகளையும், பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்றார். இவர் எழுதிய சத்தியத்தின் கேள்வி, ஒரு பஸ் நிற்க மறுக்கிறது, கீரைக்கட்டு, ஒளிந்திருந்த வயோதிகம் ஆகிய சிறுகதைகள் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றன. விண்வெளி விஞ்ஞானக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசும் ராஜாஜியின் பாராட்டும் கிடைத்தது. 1976-ல் நடந்த அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் 'கணங்களும் யுகங்களும்' என்ற சிறுகதைக்கு முதல் பரிசு 1000 ரூபாய் கிடைத்தது. தினமணிகதிர் நாவல் போட்டியில் முதல் பரிசு ரூ.3000 பெற்றார். குமுதம் இதழ் நடத்திய இளமைக் கதைப் போட்டியில் முதல் பரிசு ரூ.5000 கிடைத்தது. ஆனந்த விகடன் பொன்விழா சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றார். சிறுகதைச் செம்மல், கிராமிய எழுத்தாளர் போன்ற பட்டங்களைப் பெற்றார்.

2000-ல் அழகாபுரி அழகப்பன் காலமானார். இவரது மகள் சந்திராதேவி, மகன் வானவர்கோன் இருவரும் எழுத்தாளர்கள்.

அரவிந்த்

அழகாபுரி அழகப்பனின் நாவல்கள் சில
சக்களத்தி, நீலக்கொலை, நள்ளிரவு நாயகி, பூங்காற்று திரும்புமா, புதுப் புதுப் பெண்கள், கொல்லுவதெல்லாம் உண்மை, அதுவந்து நிற்கிறது, அவள் போட்ட கோலம், அத்தானைப் பார்த்தீங்களா?, ஒரு மனைவி ஒரு குழந்தை ஒரு சந்தேகம், நள்ளிரவு நாயகி, அவள் தனியாய் இருக்கிறாள், கார்த்திகா கடத்தப்பட்டாள், ஓர் இரவு ஒரு பிணம், செல்வா காதலிக்கிறான், அவள் போட்ட கணக்கு, இரவல் கணவன், வாரத்திற்கு எட்டு நாட்கள், மதுரை லாட்ஜ் மஞ்சுளா, ரத்தம் இனிக்குதடா, ஒரு ரோஜா மலர்ந்தபோது, கிராமத்து அநியாயம், எவ்வளவோ ஆபத்துக்கள், திலகா ஒரு திறந்த வீடு, பிச்சிப் பூ வச்ச கிளி, யாருக்கு யார் காவல், லதா லதா பாடி வா, நான் அவள் அல்ல, திகில் மாளிகை, காதல் ஜன்மங்கள், அகதி வாழ்க்கை, மற்றும் பல.
(தகவல் உதவி: தமிழ் விக்கி தளம்)

© TamilOnline.com