விண்வெளியின் வெகு தொலைவில் இருந்து ஒரு மேம்பட்ட செயற்கை அறிவுள்ள இயந்திர மனிதன் (Super Artificial Intelligence Humanoid) ஒன்று, பூமிக்கு வந்து மனிதர்களிடம் பழகினால் எப்படி இருக்கும்? இதை ஒரு புதுப் பரிணாமத்தில், ஆழ்ந்த கருத்தோடு பாரம்பரியத் தமிழ் மேடை நாடகமாக, தந்திரக் காட்சிகளும் சாகசங்களும் நகைச்சுவையும் சேர்த்து ரசிகர்கள் வியந்திட மேடை ஏற்றினர் ஹூஸ்டன் மீனாக்ஷி தியேட்டர்ஸ் குழுவினர்.
சாய் ஆஷ்ரயா அறக்கட்டளையின் மருத்துவச் சேவைப்பணிகளுக்கு நிதி திரட்டும் உன்னத நோக்கத்தில் இந்த நாடகம் மே 11, 2024 அன்று மேடை ஏறியது. மருத்துவத்திலும், தமிழ் நாடகக் கலையிலும் புகழ்பெற்ற Dr. K. சாரநாதன் அவர்களின் இயக்கத்தில் உதயமானது இந்த நாடகம்.
கலைச்சேவையை ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து செய்துவரும் மீனாக்ஷி தியேட்டர்ஸின் 44-வது மேடை நாடகம் இது. ஹூஸ்டன் சந்திரமெளலியின் சிறப்புக் கைவண்ணம் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களில் மின்னியது. விஷி ராமனின் திறமையான தயாரிப்பு நிர்வாகம் நாடகத்தின் உயிர்நாடி
நாடகத்தின் மூலக் கதையைப் பார்ப்போம், வாருங்கள்.
ராமசாமி ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்.. குடும்பத்தின் பணச் சுமையைத் தாங்க முடியாமல் கடலில் மூழ்கித் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறார். அந்த நேரத்தில் வேற்றுக் கிரகவாசி ஒருவன் மனிதர்களை அழித்து பூமிக்கு தனது கிரகவாசிகளைக் குடியேற்றும் திட்டத்துடன் வருகிறான். பூமியிலுள்ள மனிதர்களிடம் பழகி அவர்களின் வாழ்க்கை முறையைத் தெரிந்து கொண்டு சில நாட்களில் திரும்பிப் போய்விடுவேன் எனச் சொல்லி ராமசாமியின் ஆதரவுடன் சாயி என்ற பெயருடன் அவர் வீட்டில் அடைக்கலமாகிறான்.
மனிதர்களிடம் பழகப் பழக, மனிதர்களின் உணர்ச்சிகள் புரியத் தொடங்கி, தானும் பல உணர்ச்சிகளால் தாக்கப்படுவதை அறிகிறான். வேற்றுக் கிரகவாசியின் திட்டத்தைத் தடுக்க, அமெரிக்க மற்றும் இந்திய அரசாங்க ஏஜென்ட்டுகள் சென்னைக்கு வந்து முயல்கிறார்கள். முடிவில், மனிதர்களிடம் அன்பு செலுத்தும் குணம் இயல்பாக இருக்கும்வரை பூமியை யாரும் அழிக்க முடியாது என்று சொல்லி விண்வெளிக் கப்பலில் ஏறி விடை பெறுகிறான் சாயி.
நாடத்தின் பிள்ளையார் சுழியாக NASA ஏஜென்ட்ஜேம்ஸ் கேம்பலும், ராஜனும் வேற்றுக் கிரகவாசியின் வருகையைப் பற்றி விண்வெளி அறிவியல் வார்த்தைகளை நிறையப் பேசுகிறார்கள். ராஜனாக நடித்த ராமலிங்கம் மகாதேவன் புத்திசாலித்தனமான பேச்சுடன், வேற்றுக் கிரகவாசியை அழிப்பதற்கான திட்டத்தில் FBI ஏஜென்ட் ராஜேஷுடன் கூட்டுச் சேர்கிறார். ராஜேஷாக நடித்த கோவிந்தன் சோமாஸ்கந்தன், பொறுப்பான அரசு அதிகாரியாக ரகசியத் திட்டங்கள் தீட்டுவதிலும், அகிலாவைப் பெண் பார்க்கும் காட்சியிலும் வசன மழை பொழிந்து நன்கு நடித்தார். வேற்றுக் கிரகவாசியாகவும் சாயியாகவும் நடித்த விஷி ராமன் நேர்த்தியான நடிப்பிலும், வார்த்தை ஜாலத்திலும், மாயாஜாலம் செய்வதிலும் தனித்துவத்தைக் காட்டினார்.
ராமசாமியாக நடித்த Dr. K. சாரநாதன், தன் நவரச நடிப்பால், நடுத்தரக் குடும்பத் தலைவர், அன்பான தந்தை, சாயியின் நண்பன் எனப் பல காட்சிகளில் ரசிகர்களை அசத்தினார். அவர் மனைவி மரகதமாக நடித்த வித்யா வெங்கட் பாசத்தையும், பரிவையும் கொட்டி, கணவரிடம் சற்று அலுப்பையும் காட்டிச் சிறப்பாக நடித்தார். அவரது அண்ணன் செல்லப்பாவாக நடித்த மணி வைத்தீஸ்வரன் கிண்டலும் கேலியும் சேர்ந்த பேச்சுடன், ஊடகத்திற்குச் செய்தி திரட்டும் முயற்சியை விடாமல், நகைச்சுவைக்கு மெருகேற்றினார். ராமசாமியின் மகன் ரமேஷாக நடித்த வேதாந்த் ஸ்ரீனிவாசன் தன் குடும்பத்தினரிடமும் சாயியிடமும் ஆதங்கம் சேர்ந்த நகைச்சுவையோடு நன்றாக நடித்தார்.
ராமசாமியின் பெரிய மகள் அகிலாவாக நடித்த ரம்யா ஐயங்கார், சாயியிடம் சந்தேகத்துடன் பேசும் காட்சிகளிலும், ராஜேஷிடம் இந்திய கலாச்சாரத்தை உயர்த்திப் பேசுவதிலும் தைரியமான புதுமைப் பெண்ணாக சிறப்பாக நடித்தார். ராமசாமியின் கடைக்குட்டி பாரதியாக நடித்த ஏகாந்திகா மனோஜ் கனிவான குரலில் அழகுத் தமிழில் குடும்பத்தினரிடமும் சாயியிடமும் பேசி அருமையாக நடித்தார்.
ராமசாமியின் வீட்டுச் சொந்தக்காரர் “ஜொல்லு” அர்ஜுனாக குமரன் சிவப்பிரகாசம் அதிரடித் தெலுங்கு சிரிப்பு வசனங்களிலும், அகிலாவிடம் தன் விருப்பத்தைச் சொல்லும் பாங்கிலும், 'நடனமாடுவதிலும் முத்திரை பதித்து ரசிகர்களின் கரகோஷத்தைப் பெற்றார். ராமசாமியின் எதிர்வீட்டு நண்பர் MN ஆக நடித்த விஜய் ஐயங்கார், சாயியாலும் செல்லப்பாவாலும் தான் படும் கஷ்டங்களைப் புலம்பிச் சிரிப்லைகளை எழுப்பினார். மீனவன் மற்றும் RAW ஏஜென்ட் என இரட்டை வேடங்களில் நடித்த லக்ஷ்மிநாராயணன் சுப்ரமணியன் வேறுபட்ட தோற்றத்துடன் பேசும் பாணியில். அசத்தினார். இவர்களுடன் மேடைக்குப் பின்னிருந்து பல கலைஞர்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.
இனிதே அரங்கேறிய sAI 2.0 நாடகம் ஹூஸ்டன் ரசிகர்களை ஆனந்த ஆரவாரத்தில் ஆழ்த்தியதுடன், சாயி ஆஷ்ரயாவின் மருத்துவ சேவைகளுக்கு நிதி திரட்டி வழங்கியது குறிப்பிடத் தக்கது.
SAI 2.0 நாடகத்தின் கருத்தைச் சிறு கவிதை வடிவில் சொல்ல முயல்வோமா?
இரும்பில் செய்த இதயம் ஒன்று அருகில் வந்தது விண்வெளி கடந்து. அருமைக் குடும்பம் ஒன்றைக் கண்டு தெரிந்து கொண்டது உண்மை ஒன்று.
திட்டம் மறந்து குழம்பிப் போனது நட்பாய்ப் பழகிய மனிதருடன் சேர்ந்து சிட்டாய்ப் பறந்தது பலவகை உணர்வு, சுற்றும் பூமியைக் காத்திடும் அன்பு.
வெங்கட் ராமசுவாமி, ஹூஸ்டன் |