திருமதி இராஜலட்சுமி கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக ஆசிரியர், குரல்வளக் கலைஞர் எனப் பன்முகம் கொண்டவர். வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வரும் இவர், முன்னணி OTT தளங்களில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத் திரைப்படங்கள், வலைத்தொடர்களைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். திரைப்படம் ஒன்றிற்குத் திரைக்கதை-வசனம் எழுதி முடித்திருக்கிறார். பிரபல திரை இசை அமைப்பாளர் தனது அடுத்த படத்தில் பாடல் எழுத இராஜலட்சுமியைத் தேர்வு செய்துள்ளார். தன் எழுத்துலகப் பயணம் பற்றிய கருத்துக்களை தென்றலுடன் பகிர்ந்து கொண்டார் இராஜலட்சுமி.
★★★★★
கே: உங்கள் இளமைப்பருவம், கல்வி குறித்துச் சில வார்த்தைகள். ப: நான் பிறந்தது, என் தாயார் பத்மாவதியின் ஊரான பள்ளத்தூர் (சிவகங்கை மாவட்டம்). தந்தையார் இராமகிருஷ்ணன் ஐயர் மதுரையைச் சேர்ந்தவர். பாட்டனார் இரங்கரத்னம் ஐயர், மகாகவி பாரதியாரிடம் சேதுபதி ஹைஸ்கூலில் மாணவராக இருந்து பின்னாளில் அதே பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். என் தந்தை தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர். அவரது பணியிட மாற்றம் காரணமாக தொடக்கக் கல்வி விழுப்புரத்திலும் நடுநிலைப் பள்ளி முதல் பட்டப் படிப்பு வரை சென்னையிலும் படித்தேன்.
கே: எழுத்தார்வம் வந்தது எப்போது, எப்படி? ப: எழுத்தார்வம் பள்ளிப் பருவத்திலேயே இருந்தது. பல கட்டுரைப் போட்டிகளில் பரிசுகள் வாங்கியுள்ளேன். சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் படிக்கும்போது கவிதை எழுதத் தொடங்கினேன். கல்லூரி இதழில் ஆண்டுதோறும் என் கவிதை இடம் பெற்றது. அனைத்துக் கல்லூரி விழாக்களிலும், கல்லூரி தமிழ்ச் சங்கம் நடத்திய போட்டிகளிலும் தவறாமல் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றேன். ஜூனியர் விகடன் மாணவ நிருபராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டேன். ஆனால் சில சொந்தக் காரணங்களால் பயிற்சியில் சேரவில்லை.
கே: உங்கள் முதல் எழுத்து பற்றி, அதற்குக் கிடைத்த வரவேற்பு, அப்போதைய உங்கள் மனநிலை குறித்துச் சொல்லுங்கள் ப: நான் எழுதிய முதல் சிறுகதை 'பேய்க்கொம்பன்'. இச்சிறுகதை உதிரிகள் இலக்கிய இதழ் நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டி 2023ல் பரிசு வென்றது. உணவிற்காக காடுவிட்டு ஊருக்குள் வரும் யானை ஒன்று, அதன் உயிரைப் பறிக்க நினப்பவர்கள், காப்பாற்ற விழையும் முதியவர் ஒருவர் என்று இவர்களைப் பற்றிய கதைக்களம். கதை தேர்ந்தெடுக்கப் பட்ட விபரம் தெரிந்த போதும், உதிரிகள் பரிசு பெற்ற சிறுகதைகளின் தொகுப்பில் இச்சிறுகதை இடம் பெற்ற போதும் நானடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.
புத்தகக் கண்காட்சி 2023ல் முன்னணி இலக்கிய எழுத்தாளர்கள் சிலரை முதல்முறையாக ஒன்றாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியபோது, அவர்களில் இருவர் "ஓ! நீங்கள்தான் 'பேய்க்கொம்பன்' இராஜலட்சுமியா?" என்று வியந்து பாராட்டிய தருணம் மிகப் பெருமையானது. பிறகு இச்சிறுகதை பெருமைக்குரிய பிரித்தானிய தமிழ்ச் சங்கம் வெளியிட்ட (ஏப்ரல் 2024) தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழிலும் வெளியானது
கே: எது உங்களை எழுத வைக்கிறது? ப: என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும், நான் சந்திக்கும் பல்வகையான மாந்தர்களும்தான் என்னை எழுதத் தூண்டும் காரணி. இயல்பாகவே புதுப்புது இடங்களைச் (நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும்) சுற்றிப் பார்ப்பது, நம்மிலிருந்து வேறுபட்ட அவர்களின் வாழ்வியலைப் பதிவு செய்வது எனக்குப் பிடித்த விஷயங்களில் ஒன்று. அதற்காகவே நிறையப் பயணங்களை மேற்கொள்வது வழக்கம். அப்படி நான் வியந்த, என்னைப் பாதித்த நிகழ்ச்சிகளும் மனிதர்களுமே பெரும்பாலும் என் எழுத்துக்கு வித்திடுவன.
கே: சிறுகதை, நாவல் - எதை உங்கள் பலமாகக் கருதுகிறீர்கள்? ப: சிறுகதை, நாவல் இரண்டுமே எனக்குப் பிடித்தமானவைதான். என்றாலும் நாவல்கள் மீது சற்றுக் கூடுதல் ஈர்ப்பு எனக்கு உண்டு. நாவல் எழுதுமுன் கதைக்கருவைத் தேர்வு செய்து கொண்டு, அந்தக் கதைக்குத் தேவையான ஆராய்ச்சி மற்றும் களப்பணியில் ஈடுபடுவது வழக்கம். உதாரணமாக, தற்போது 'சுடுமண்' என்னும் தலைப்பில், முந்நூறு வருடங்களுக்கு முன்பு ஆங்கில ஆட்சி இருந்த சமயத்தில் நடந்த ஒரு கதைக்கு நாவல் வடிவம் தந்திருக்கிறேன். அதற்காக நூல்கள், இணையம் ஆகியவை மூலம் ஆராய்ச்சிக் குறிப்புகள் எடுத்துக் கொண்டேன். பிறகு கதை நடக்கும் ஒரு ஊர், அதைச் சுற்றிய கிராமங்களுக்கு நேரில் சென்றேன். அந்த இடங்களின் பூகோள அமைப்பு, சுற்றுச் சூழல், வாழ்வாதாரம், நம்பிக்கைகள், அவர்களின் மூதாதையர்கள் பற்றிய சுவாரஸ்யமான செய்திகள் போன்ற முக்கியத் தகவல்களை, நேரடியாக சுற்றிப் பார்த்தும், அங்குள்ள மக்களிடம் உரையாடியும் தெரிந்து கொண்டேன். இவ்வாறு சரியான மற்றும் அரிதான விஷயங்களை எழுத நாவல் மற்றும் குறுநாவல் வடிவம் மிக ஏற்றதாக இருப்பதாகக் கருதுகிறேன்.
கே: உங்களைக் கவர்ந்த முன்னோடி மற்றும் சமகால எழுத்தாளர்கள் யார், யார்? ப: என் எழுத்துலக குருநாதர் - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் ஐயா. மற்றும் சுஜாதா, கல்கி, ராஜம் கிருஷ்ணன் ஆகியோர் என் மனம் கவர்ந்தவர்கள். சமகால எழுத்தாளர்களில் நான் விரும்பிப் படிப்பது: ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், அம்பை, ராஜேஷ் வைரபாண்டியன், நெய்வேலி பாரதிகுமார், நாராயணி கண்ணகி, வா.மு. கோமு, உமா சக்தி, ரஃபீக் ராஜா ஆகியோர்
கே: உங்களைப் பாதித்த எழுத்து என்று யாருடையதைச் சொல்வீர்கள், ஏன்? ப: ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' மற்றும் பாலகுமாரனின் 'புருஷவதம்'. இரண்டிலுமே பெண் கதாபாத்திரங்கள்தான் பிரதானம். முன்னதில் வரும் கங்கா படித்து நல்ல வேலையில் இருக்கும் அறிவாளி, இரண்டாவதில் நீலி வெளியுலகம் அறியாத பேதை. இருவரின் வாழ்வும் சந்தர்ப்பவாதம், சுயநலம், காமம் மற்றும் நம்பிக்கைத் துரோகம் செய்யும் ஆண்களால் சின்னாபின்னம் ஆகின்றன. அதனால் அவர்கள் படும் துயரமும் தவிப்பும் வாசகர்களைக் கதிகலங்க வைத்துவிடும். ஆனால், பிறகு அவர்கள் எப்படி அதிலிருந்து மீண்டனர் என்று சொல்லும் விதம் பெண்கள் சமுதாயத்திற்கு அந்த எழுத்துலக பிரம்மாக்கள் தரும் அறிவுரை, பாதிக்கப்படும் பெண்களின்பால் அவர்களின் நேசம், அக்கறை ஆகியன என்னை உருகிக் கரைய வைத்து பாதிப்பை ஏற்படுத்தின. இவ்விரு புத்தகங்களையும் பலமுறை வாசித்துள்ளேன். இவை தவிர, எழுத்து நடை மற்றும் கற்பனை வளத்தால் கவரப்பட்டு நான் ஏழுமுறை வாசித்தது அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்'.
இராஜலட்சுமியின் படைப்புகள்: குறுநாவல்கள்: கன்னி நெஞ்சின் ஓவியம் - வரலாற்று நாவல்; வேகத்தடை - சமூக நாவல்; பூ மரப்பாவை - பெண்ணியம் (குவிகம் 2023 போட்டியில் பரிசு பெற்ற படைப்பு) கண்ணோடு காண்பதெல்லாம் - காதல் நாவல்; மறக்கத் தெரிந்த மனம் - குடும்பம் (குடும்ப நாவல் மே 2024 இதழில் வெளிவந்தது.)
சிறுகதைகள் 1. பேய்க்கொம்பன் (சுற்றுச்சூழல்) - உதிரிகள் சுற்றுதல் போட்டியில் மூன்றாம் பரிசு வென்றது. 2. பல்லவியே சரணம் (நகைச்சுவை) - மின் கைத்தடி ஜனவரி 2024 இதழில் வெளியானது. 3. சபலம் (சைபர் கிரைம்) 4. மாரல் ஆப் த ஸ்டோரி - (அறம்) 5. அர்த்தனாரி (சமூகம்) 6. இமயவரம்பன் ஆவி (வரலாற்றுப் புனைவு) 7. நூல் புடவை (சமூகம்) 8. கனவுக் கோவில் (சமூகம்) 9. சூரிய தேசம் (சமூகம்)
மேடை நாடகம் 1. பேசும் பலகை 2. காதலில் இது புது வகை - ஓரங்க நாடகம்
கே: உங்கள் எழுத்து முயற்சிகளுக்கு உங்களின் குடும்பத்தினரின் ஆதரவு குறித்துச் சொல்லுங்கள்… ப: எனது எழுத்துலகப் பயணத்தை மிக இளவயதிலேயே தொடங்கி வைத்தவர் எனது தந்தையார். வாசிப்புப் பழக்கத்தில் தொடங்கி எண்ணங்களுக்கு எழுத்து வடிவம் தரச் சொல்லி ஊக்குவித்தவர். பன்மொழிப் புலமையின் பலத்தை உணர்த்தியவர். கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கில் மனம் தளர்ந்திருந்த வேளையில், இயல்பான எனது எழுத்துத் திறமையை நினைவுபடுத்தி, ஆர்வத்தைத் தூண்டி எழுத வைத்தவர் என் மகன் ஆனந்த். இப்போதும் நானெழுதியவற்றைப் படிக்கச் சொல்லி கேட்டு முதல் வாசகராகக் கருத்துச் சொல்வதும் அவரே. எனது எழுத்தில் இருந்த பொறியைக் கண்டறிந்து நானெழுதிய முதல் வரலாற்றுப் புதினத்தைப் புத்தகமாகக் கொண்டுவர என்னுடனிருந்து ஒவ்வொரு படியிலும் என்னை வழி நடத்திய, என்மீது என்னைக் காட்டிலும் அதிக நம்பிக்கை கொண்டிருக்கும் என் கல்லூரி வகுப்புத் தோழன் திரு ஸ்ரீராம். இவர்களே என் பின்புலம்.
கே: எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன? ப: காலம் கடந்தும் பெயர் சொல்லும் படியான எழுத்துப்பணியைச் செய்ய வேண்டும். பெண்கள் தங்களின் உண்மையான சக்தியைப் புரிந்துகொண்டு விடாமுயற்சி செய்தால் சாதனை படைக்கலாம் என்ற கருத்தை வலியுறுத்தும் விதத்தில் படைப்புகளை உருவாக்க வேண்டும்.
இராஜலட்சுமி பெற்ற விருதுகள் 1. மலர்வனம் சிறந்த எழுத்தாளர் விருது - 2024 2. லயனோஸ் உலக சாதனையில் பங்கேற்ற எழுத்தாளர் விருது - 2024 3. வளரி பன்னாட்டு மகளிர் கவியரங்க விருது - 2023 4. புதுச்சேரி தமிழ்ச் சங்கப் பாப்போட்டியில் இரண்டாம் பரிசு - 2023 5. 'ஹர் ஸ்டோரிஸ்' பதிப்பகம் வழங்கிய சத்தியவாணி முத்து சிறந்த எழுத்தாளர் நினைவுப் பரிசு - 2023
உரையாடல்: அரவிந்த் |