சரோஜா ராமமூர்த்தி
அக்காலத்தின் முக்கியமான பெண் எழுத்தாளர்களில் ஒருவர் சரோஜா ராமமூர்த்தி. இவர் காஞ்சிபுரத்தில் ஜூலை 27, 1921 அன்று ராமச்சந்திரன் - கிரிஜா இணையருக்குப் பிறந்தார். இளவயதில் தாயை இழந்த சரோஜா, தந்தையுடன் ஏற்பட்ட மனவேறுபாட்டால் மும்பையில் இருந்த அத்தை வீட்டிற்குச் சென்று வசித்தார். தொடர் வாசிப்பார்வம் எழுத்துக்கு வித்திட்டது. முதல் சிறுகதை 'புதுவெள்ளம்' 1938ல் ஆனந்தவிகடனில் வெளியானது. தொடர்ந்து பல சிறுகதைகள் விகடனிலும், கலைமகளிலும் வெளியாகின.

காந்தியக் கொள்கைகள் மீது ஆர்வம் கொண்டிருந்த சரோஜா, வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தில் ஈடுபட்டார். எழுத்தாளர் து. ராமமூர்த்தியுடன் திருமணம் நடந்தது. காந்தியக் கொள்கைகள் இருவரையும் கவரவே, பல போராட்டங்களில் இருவரும் இணைந்து பங்கேற்றனர். காந்தியின் வார்தா ஆசிரமத்தில் பயிற்சி பெற்றனர். சுதந்திரத்துக்குப் பின் கிராம நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டனர். கூடவே இலக்கிய முயற்சிகளும் தொடர்ந்தன.

சரோஜாவின் முதல் நாவல், 'மனைவி', கலைமகள் (அக்டோபர், 1946) இதழில் தொடராக வெளியாகிப் பின் 1947ல் நூலாக வெளியானது. 'முத்துச்சிப்பி', 'பனித்துளி', 'இருளும் ஒளியும்' போன்றவை இவரது பிற நாவல்கள். சரோஜா ராமமூர்த்தி பற்றி அம்பை, தனது 'உடலெனும் வெளி : பெண்ணும் மொழியும் வெளிப்பாடும்' நூலில், "சரோஜா ராமமூர்த்தி. முப்பதுகளின் இறுதி ஆண்டுகளில் எழுத ஆரம்பித்து எதிர்க் கேள்விகளை தைரியமாகக் கேட்டவர். தொடர்ந்து எழுதியவர். 16 வயதில் சரோஜா தன் முதல் கதையை எழுதினார்" என்கிறார்.



சிறுகதைகளும், தொடர்களுமாக சரோஜா ராமமூர்த்தி, சுதேசமித்திரன், ஆனந்தவிகடன், கல்கி, மங்கை, சக்தி, கலைமகள், நவசக்தி, காதல், அமுதசுரபி, தினமணி சுடர் போன்ற இதழ்களில் எழுதினார். 'சௌந்திரம்', 'குடும்பக்காட்சி', 'ஆகி வந்த படம்', 'பிள்ளை வளர்ப்பு', 'பார்வதி', 'யாருடைய சித்தம்', 'ரங்கத்தின் ஆவி' போன்றவை இவரது முக்கியமான சிறுகதைகள். அறுநூறுக்கும் அதிகமான சிறுகதைகளை எழுதியிருக்கிறார். இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, 'நவராத்திரிப் பரிசு', 'குழலோசை முதலிய கதைகள்' என்ற தலைப்புகளில் வெளியாகின. 'அன்னை', 'மாளவிகா', 'இரு கதைகள்', 'நெஞ்சு பொறுக்குதில்லையே' போன்றவை இவரது பிற படைப்புகளாகும். 'கல்கி' இதழில் நிறையச் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆர்., பத்மினி நடித்த விக்கிரமாதித்தன் படத்தின் திரைக்கதையின் ஒரு பகுதி இவர் எழுதியதுதான். சரோஜா ராமமூர்த்தியின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை, 'சரோஜா திறக்கும் உலகம்' என்ற தலைப்பில் காலச்சுவடு வெளியிட்டது. அம்பை அந்நூலைத் தொகுத்து சரோஜாவின் படைப்புலகம் குறித்த விரிவான முன்னுரையை அளித்திருந்தார்.

சரோஜா ராமமூர்த்தி எழுதிய பல கதைகள் குடும்பக் கதைகளாக இருந்தாலும் அவை நவீனத்துவமான கருத்துக்களைக் கொண்டவையாக இருந்தன. மிக எளிமையான நடையில் பாசாங்கற்ற மொழியில் அமைந்திருந்தன. சொல்லாமல் சொல்லும் தன்மை இவரது படைப்புகளில் வெளிப்பட்டது. சரோஜா ராமமூர்த்தியின் குடும்பமே எழுத்தாளர் குடும்பம். கணவர் து. ராமமூர்த்தியும், மகன்கள் ரவீந்திரனும், ஜெயபாரதியும் எழுத்தாளர்களே! 'குடிசை' என்ற படத்தை இயக்கியிருக்கிறார் ஜெயபாரதி. மருமகன் சுப்ரமண்ய ராஜுவும் ஓர் எழுத்தாளரே!

சரோஜா ராமமூர்த்தியின் நூல்களில் சில
சிறுகதைத் தொகுப்பு: வெறும் கூடு, குழலோசை முதலிய கதைகள், நவராத்திரிப் பரிசு, சரோஜா திறக்கும் உலகம்,

நாவல்: மனைவி, முத்துச்சிப்பி, பனித்துளி, இருளும் ஒளியும், மலையில் ஒரு மாளிகை, அவள் விழித்திருந்தாள், இன்பம் எங்கே?


காலமாற்றத்தால் சரோஜா ராமமூர்த்தியின் மனம் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டது. காஞ்சி மஹா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியைத் தன் குருவாக ஏற்றார். மெல்ல மெல்ல எழுதுவதைக் குறைத்துக் கொண்டார். ஆகஸ்ட் 8, 1991ல் சரோஜா ராமமூர்த்தி காலமானார். சரோஜாவின் மறைவுக்குப் பின், 2010-ல் தமிழக அரசு அவரது படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியது.

அரவிந்த்

© TamilOnline.com