தென்றல் பேசுகிறது...
வெற்றி பெற்றும் தோல்வி அடைந்தது போலப் பேசப்படுகிற பா.ஜ.க. தில்லியில் கூட்டணி அரசை அமைக்கப் போகிறது. குறைந்த இடங்களைக் கைப்பற்றிய போதிலும் பெருவெற்றி பெற்றதைப் போல மார் தட்டிக்கொள்கிற காங்கிரஸ், இண்டி கூட்டணியோடு எதிர்வரிசையில் அமரத் தகுதி பெற்றுள்ளது. மூன்றாம் முறையாகப் பிரதமர் பதவி ஏற்கப் போகிறார் நரேந்திர தாமோதர தாஸ் மோதி. Anti Incumbency எனப்படும் பதவியில் இருப்போருக்கு எதிரான மக்களின் மனப்பாங்கைத் தாண்டியும், உத்திரப்பிரதேச மாநிலத்தில் சாதகமான நிலை இல்லாத போதிலும், பா.ஜ.க. அரசு அமைவது பேரதிசயம்தான். பசுமை ஆற்றல், உள்கட்டமைப்பு, விண்வெளி ஆராய்ச்சி, பாகுபாடில்லாமல் எல்லோர்க்கும் வளர்ச்சி, இளைஞர்களுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என்று எல்லாவற்றையும் சென்ற பத்தாண்டுகளில் முன்னெப்போதுமில்லாத அளவில் செய்து காட்டியவர் மோதி. உலக அளவில் பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்த பாரதத்தை 5வது இடத்துக்குக் கொண்டு வந்துள்ள நிலையில் அதை 3வது இடத்துக்கு உயர்த்துவேன் என்ற வாக்குறுதியை மீண்டும் கூறியுள்ளார். உலக அளவில் ஆகட்டும், இந்தியாவில் ஆகட்டும் பல்வேறு பிரிவினைச் சக்திகள் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் சிரமமான காலத்தில் பதவி ஏற்கும் மோதியின் முன்னே மிகக் கடினமான பொறுப்பு வைக்கப்பட்டுள்ளது. அவர் வெற்றி பெறட்டும், தேசம் மேன்மை அடையட்டும், மக்களிடையே ஒற்றுமையும் இணக்கமும் நிலவட்டும் என்று வேண்டி, வாழ்த்துவோம் நாம்.

★★★★★


பிருஹத் சோமா ஃப்ளோரிடாவில் 7ஆம் வகுப்பு படிக்கும், இந்திய அமெரிக்கப் பின்னணி கொண்ட மாணவர். இவர் அநாயாசமாக 29 கடினமான சொற்களைட் டை-பிரேக்கரில் பலுக்கி ஸ்க்ரிப்ஸ் நேஷனல் ஸ்ப்பெல்லிங் தேனீ போட்டியில் வியத்தகு வெற்றியைப் பெற்றுள்ளார். நெற்றியில் குங்குமம் பளிச்சிட, கைகளால் தட்டச்சுவது போன்ற பாவனையுடன் அவர் விளாசித் தள்ளியது கண்கொள்ளாக் காட்சி. இந்த வெற்றிக்காக வார நாட்களில் தினமும் 6 மணி நேரமும் வார இறுதிகளில் 10 மணி நேரமும் உழைத்தேன் என்று கூறியது நம்மை மூக்கின்மேல் விரல் வைக்கச் செய்தது. பிருஹத் சோமாவுக்கு நமது வாழ்த்துகள்.

★★★★★


கவிஞர், எழுத்தாளர் இராஜலட்சுமி அவர்களின் நேர்காணல் சுவையானது. 'சின்னச் சங்கரன் கதை'யைப் படித்தால் பாரதி என்ற பன்முக ஆளுமையின் நகைச்சுவை உணர்ச்சி ஒருவாறு உணரக் கிடைக்கும். மெய்வழிச்சாலை ஆண்டவர், சரோஜா ராமமூர்த்தி குறித்த சுவைமிகு கட்டுரைகள், அருமையான நாடக விமரிசனம், சிறப்பான சிறுகதை என்று இவ்விதழ் உங்கள் ரசனைக்குத் தீனி போட வருகிறது.

நுழையுங்கள், தென்றலில் திளையுங்கள்.

தென்றல்
ஜூன் 2024

© TamilOnline.com