நியூ ஜெர்சி: உலகப் பெண் கவிஞர் பேரவை பன்னூல் வெளியீட்டு விழா
ஏப்ரல் 20, 2024 அன்று, உலகப் பெண் கவிஞர் பேரவை உறுப்பினர்கள் எழுதிய நூல்கள் மற்றும் மொழியாக்க நூல் வெளியீட்டு விழா அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள பிளைன்ஸ்பரோவில் அதியாத்மா நிகழ்கலைப் பள்ளியில் நடந்தேறியது. இந்த நிகழ்ச்சியில் கலைமாமணி முனைவர் அமிர்தகணேசன் (அகன்) அவர்கள் பங்கேற்று 10 பெண் எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார்.



கவிஞர் விஸ்வசாந்தி எழுதிய 'கலர் கோழிக்குஞ்சு' என்னும் சிறார் நூல், கவிஞர் சாந்தி சந்திரசேகர் எழுதிய 'பாப்பாவுக்குப் பறவைப் பாட்டு' என்ற பறவைகள் மீதான நூல், கவிஞர் இரம்யா நடராஜன் எழுதிய 'வீட்டில் விளையாடலாம் வாங்க' கட்டுரை நூல், கவிஞர் பவளசங்கரி எழுதிய 'சிந்தனைத் தாக்கங்கள்' கட்டுரை நூல், முனைவர் வேல்விழி எழுதிய 'முதல் மலர் மணம், முனைவர் சுவர்ணா முத்துக்கிருஷ்ணன் எழுதிய 'கண்ணம்மாவின் மடல்கள்' மற்றும் 'என் பெயர் ரங்கநாயகி' என்ற கவிதை நூல்கள், கவிஞர் மஞ்சு எழுதிய 'கன்னம் கிள்ளிப் போனால்' கவிதை நூல், கவிஞர் உமா பால்ராஜ் எழுதிய 'எழுதித் தீரா வலி' போர்க்கால மழலையர் நூல், கவிஞர் இராஜி வாஞ்சி எழுதிய 'ஏன் விரட்டினீர்கள் எங்களை' பயணக் கவிதை நூல் மற்றும் கவிஞர் மேனகா நரேஷ் மொழிபெயர்த்த கவிஞர் சொல்லாக்கியன் எழுதிய 'துளிமொழி' என்ற ஹைக்கூ கவிதை நூலின் ஆங்கில ஆக்கமான 'Wordlet' ஆகிய நூல்கள் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன.



'Wordlet' குறித்த ஆய்வுரையைக் கவிஞர் கனிமொழி சிறப்பாக வழங்கினார். திரு. நரேஷ் குமார் வரவேற்புரை வழங்கினார். கவிஞர் மேனகா நரேஷ் ஏற்புரையும் நன்றியுரையும் வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.



மேனகா நரேஷ்,
நியூ ஜெர்சி

© TamilOnline.com