அரங்காயணம்: சரித்திர ஆவணப் படம்
அரங்காயணம் பலரும் அறியாத சரித்திர நிகழ்வுகளை ஆதாரமாகக் கொண்ட ஆவணப் படம். 700 ஆண்டுகளுக்கு முன்னால், 14ம் நூற்றாண்டில், அந்நியப் படையெடுப்பு ஒன்றில் திருவரங்கம் கோவில் சூறையாடப்பட்டது. அந்தத் தருணத்தில், பிள்ளை லோகாச்சாரியார் தலைமையில் 52 பேர் அடங்கிய பக்தர் குழு ஒன்று அழகிய மணவாளனைச் சுமந்து கொண்டு, காடு, மலை எனப் பாராமல் 48 ஆண்டுகள் அலைந்து திரிந்து காப்பாற்றி, இறுதியில் திருவரங்கம் திரும்பி வந்தனர். இந்தச் சரித்திர நிகழ்வுதான் ‘அரங்காயணம்’ ஆவணப் படத்தின் கரு.

52 பேரோடு தொடங்கிய இந்தப் பயணம் விஜயநகரப் பேரரசில் முடிவுறும்போது எஞ்சியது ஒருவரே!



இதற்கு ஆதாரமாக அமைந்த குறிப்புகள் கோவிலொழுகு மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. 48 ஆண்டுகள் அரங்கனை எந்தெந்த ஊர்களுக்குக் கொண்டு சென்று பூஜித்தார்களோ, அந்த ஊர்களுக்கே நேரடியாகச் சென்று படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகளை பாம்பே கண்ணன் தொகுத்து வழங்கியுள்ளார். பாம்பே கண்ணன் ஒலிப்புத்தகம் மற்றும் தொலைக்காட்சிப் படங்கள் தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர், நடிகர். 50 ஆண்டுகளுக்கு மேல் இத்துறையில் அனுபவம் உள்ள இவர் இதுவரையில் 25 சரித்திர, சமூக நாவல்களை ஒலிப்புத்தகங்களாக வெளியிட்டு நல்ல வரவேற்புப் பெற்றுள்ளார்.



160 நிமிடம் ஓடும் இந்த ஆவணப்படத்தை எல்லா ஊர்களிலும் திரையிட்டு அரங்கன் அருளை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார் பாம்பே கண்ணன்.

இந்த ஆவணப்படம் பென் டிரைவில் விற்கப்படுகிறது. இது வெளிநாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

மேலும் விவரங்கள் அறிய: பாம்பே கண்ணன் - +91-9841153973

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com