டி. குகேஷ்
இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக உயர்ந்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த, 17 வயதே ஆன டி. குகேஷ். 37 வருடங்களாக இந்திய அளவில் நம்பர் 1 வீரராக இருந்த விஸ்வநாதன் ஆனந்தின் இடத்தை குகேஷ் பிடித்துள்ளார். உலக அளவில் 9-வது இடத்தில் உள்ளார். லைவ் ரேட்டிங்கில் விஸ்வநாதன் ஆனந்த் 2754.0 புள்ளிகளுடனும், குகேஷ் 2755.9 புள்ளிகளுடனும் உள்ளனர். இந்தச் சதுரங்க இளவரசனின் பின்னணியைச் சற்றுப் பார்க்கலாம் வாருங்கள்.

சென்னை வேலம்மாள் பள்ளியில் படித்துவரும் குகேஷிற்கு செஸ்மீது ஆர்வம் வந்தது அவரது பெற்றோர் செஸ் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்துத்தான். குகேஷின் அப்பா ரஜினிகாந்த், மருத்துவர்; அம்மா பத்மா, நுண்ணுயிரியியலாளர். அவர்கள் பொழுதுபோக்காகச் செஸ் விளையாடியதைப் பாரத்த குகேஷ் ஏழாம் வயதில் செஸ் விளையாட ஆரம்பித்தார்.பள்ளியிலும் செஸ் விளையாட்டில் சேர்ந்தார். அவரது ஆர்வமும் திறனும் தந்தைக்கு வியப்பும் உற்சாகமும் ஊட்டின.

2015ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசியப் பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார் குகேஷ். அதில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றார். இந்த வெற்றி தான் குகேஷின் செஸ் பயணத்தையே மாற்றி அமைத்தது. தொடர்ந்து, பல சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றார். விஸ்வநாதன் ஆனந்தை ஆதர்சமாகக் கொண்டு விளையாடினார். குகேஷின் திறனை ஆதரித்து வளர்க்க எண்ணிய தந்தையார், தனது மருத்துவர் பணியைத் துறந்து விட்டு மகனுக்குத் துணை நின்றார்.



குகேஷின் பயிற்சியாளர் கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னா. இவர் இந்தியாவின் 33-வது கிராண்ட் மாஸ்டர். இவர் குகேஷின் திறன்களைப் பல வகையிலும் பட்டை தீட்டினார். தொடர்ந்து பல போட்டிகளில் விளையாடினார் குகேஷ். செஸ் விளையாட்டில் செயற்கை நுண்ணறிவு (AI) செஸ் எஞ்சின்களைப் பயிற்சிக்குப் பயன்படுத்தாமல் விளையாடினார். 2550 புள்ளிகள் ரேட்டிங்கைத் தொட்டார்.

குகேஷ் பொழுதுபோக்காக ஆன்லைன் செஸ் விளையாடுவதில்லை. இது அவருடைய வளர்ச்சிக்கு முக்கியக் காரணம். மேலும் குகேஷ் இணையதளத்தில் விளையாடிய போட்டிகள் எல்லாம் நீண்ட கால அளவைக் கொண்டவை. மற்றொரு காரணம், அவர் எஞ்சின்களைத் தாமதமாக உபயோகிக்கத் தொடங்கியது. "குகேஷ் ஓர் அரிதான விதிவிலக்கு" என்று பாராட்டுகிறார் பயிற்சியாளர் விஷ்ணு பிரசன்னா. குகேஷ் எப்போது ஆட்டத்தில் சிக்கலாக உணர்கிறாரோ அப்போது அவரை எஞ்சின் உபயோகிக்க வைக்கலாம் என்பது விஷ்ணுவின் எண்ணமாக இருந்தது.

ஆனால், கோவிட் சூழ்நிலை அனைத்தையும் மாற்றியது. குகேஷ் வேறு வழியில்லாமல் எஞ்சின் உபயோகிக்க ஆரம்பித்தார். குறிப்பாக, கோவிட் காலகட்டத்தில் விஸ்வநாதன் ஆனந்த் நடத்திய வெஸ்ட்பிரிட்ஜ் ஆனந்த் செஸ் குழுவில் பயிற்சி பெற்றார் குகேஷ். நிறைய விளையாடினார். அதுபற்றி குகேஷ், "நான் ஒரு இயல்பான கிராண்ட் மாஸ்டர். எந்தச் சிறப்பும் இல்லாமல்தான் இருந்தேன். ஆனால் கொரோனா காலத்தில் என்னுள் பெரிய மாற்றம் ஏற்பட்டது. நான் இப்படி மாறுவேன் என்று கொரோனாவிற்கு முன்பு நினைத்ததே இல்லை" என்கிறார்.



2018ல் இந்தியாவில் நிறைய வீரர்கள் கிராண்ட் மாஸ்டர்களாக உருவாகினர். அந்த ஆண்டின் 8 நபர்களில் பிரக்ஞானந்தா, நிஹல் சரின், அர்ஜுன் எரிகைசி என மூவர் கிராண்ட் மாஸ்டர் ஆனார்கள். இந்திய செஸ் உலகின் வருங்காலமாக அவர்கள் பார்க்கப்பட்டனர். குகேஷ் இவர்களுக்கு ஓராண்டு கழித்துத்தான் கிராண்ட் மாஸ்டர் ஆனார். சர்வதேச செஸ் கூட்டமைப்பு குகேஷிற்கு 2019ம் ஆண்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வழங்கியது. குகேஷ் தற்போது அவர்கள் மூவரையும் கடந்து இந்தியாவின் நம்பர் 1 ஆக உயர்ந்துள்ளார். குகேஷ் மே 2022ல் தனது 16ம் வயதில் உலக அளவில் 100 தரவரிசைப் பட்டியலில் காலடி வைத்தார். உலக அளவில் 10 இடத்திற்குள் இரு இந்தியர்கள் மட்டுமே வந்திருக்கிறார்கள். அவர்கள் முன்னாள் உலக சேம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் கிராண்ட் மாஸ்டர் ஹரிகிருஷ்ணா பெண்டேலா மட்டுமே. தற்போது குகேஷ் அந்த வட்டத்திற்குள் வந்துள்ளார்.

கனடாவில் நடந்த கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ், அமெரிக்காவைச் சேர்ந்த நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவருமே தலா 1/2 புள்ளிகள் பெற்றனர். 14 சுற்றுகளைக் கொண்ட இறுதிப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகளைப் பெற்று குகேஷ் சேம்பியன் பட்டத்தை வென்றார். அமெரிக்க செஸ் வீரர் நகமுரா 8.5 புள்ளிகள் பெற்றிருந்தார்.

இளவயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சேம்பியன்ஷிப் போட்டித் தொடரை வென்று சாதனை நிகழ்த்தியுள்ளார். குகேஷ். மேலும், இந்தியாவின் மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு, கேண்டிடேட்ஸ் சேம்பியன்ஷிப் போட்டித் தொடரை வெல்லும் இந்திய வீரர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ள இந்தப் போட்டித் தொடரை வென்றதன் மூலம், உலக செஸ் சேம்பியன்ஷிப் போட்டியில், சீனாவின் டிங் லிரெனை எதிர்கொண்டு விளையாடும் தகுதியைப் பெற்றுள்ளார்.



குகேஷின் சாதனையைப் பாராட்டித் தமிழக முதல்வர் 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். மேலும் சிறந்த வீரர்களுக்கான அரசின் ‘எலைட்’ திட்டத்தில் குகேஷ் சேர்க்கப்பட்டுள்ளார். எலைட் திட்டம் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்.

முன்னாள் சேம்பியன் காஸ்பரோவ், குகேஷை 'இந்தியாவின் பூகம்பம்’ என்று எக்ஸ் தளத்தில் வர்ணித்துள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்தின் பல முன்னணி செஸ் இளம் வீரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்களின் செஸ் ஆர்வம் மற்றும் சாதனைகளைக் கவனித்து வருவதாகவும் காஸ்பரோவ் தெரிவித்துள்ளார். "இளவயதில் உலக சேம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்று குகேஷ் வரலாற்றுச் சாதனை செய்துள்ளார். போட்டியில் அவரது முதிர்ச்சியும் வெளிப்பட்டது. நெருக்கடியான சூழ்நிலைகளைச் சமாளித்து விளையாடியது சிறப்பு. குகேஷ் பெற்ற வெற்றி ஆச்சரியமானது" என்று விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டியுள்ளார்.

குகேஷின் வெற்றி ஒவ்வொரு இந்தியரும், தமிழரும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.

சதுரங்க இளவரசன் குகேஷ், சக்ரவர்த்தி ஆகும் நாள் வரட்டும் என்று வாழ்த்துவோம்.

தென்றல்

© TamilOnline.com