அன்று சாந்தி முகூர்த்தம். மாலை நெருங்க நெருங்க, என் இதயம் கட்டுக்கடங்காமல் துடிக்க ஆரம்பித்தது. மேலெல்லாம் பதறியது. இடியும் மின்னலும் ஆட்சி செய்யும் நள்ளிரவில், ஆந்தைகளின் அலறல் இதயத்தை அதிரச் செய்யும் வனாந்தகாரக் காட்டில், தனியாகச் செல்லும்போது எழும் கொடிய உணர்ச்சி மேலிட்டது. அடுத்த அறையில் சிரிப்பும் விளையாட்டுமாகச் சீட்டாடும் நண்பர்களது இரைச்சல் வேறு என் நிம்மதியைக் கலக்குகிறது. வருகிறவர், போகிறவர்களெல்லாம், சின்னஞ் சிறுமியர் கூட, கடைக்கண்ணால் என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போகிறார்கள். அவர்களையெல்லாம் பளீரென்று அறைந்து விடலாமா என்று தோன்றுகிறது. ஓயாமல் 'டிக்' என்று, நெருங்கி வரும் கோர ஞாபகத் தீயில் நெய் வார்க்கும் கடிகாரத்துக்கும் என்னிடம் இரக்கம் பிறக்கவில்லை. உலகமெங்கும் சோகப் பூச்சைப் பூசிவரும் இரவு, என் மனத்தில் பதிந்து ஒளிவிடும் பார்வதியின் அன்புச் சித்திரத்தையும் அழித்துவிட முயல்கிறதா?
என் நெஞ்சில் என்றோ இடம்பெற்று விட்டாள் அவள்! அவளை மணக்கக் கொடுத்து வைக்காத பாவி நான். கல்கத்தாவுக்குப் போய்விட்டாள் அவள். கடிதம்கூட இல்லை. இல்லையென்றால், அன்பு உலர்ந்துவிடுமா? பிரிவிலும் மறைவிலும்தானே காதல் தளிர் விடுகிறது. தளிர்த்துத் தழைவிட்டு, மலரச் சித்தமான பார்வதியை மணந்தாலல்லவோ என் மனத்தென்றல் சாந்தியடையும்! பார்வதிக்காக என் மனத்தில் ஒரு தூய வெண்பனி படர்ந்த இமயச்சாரலையும், பசுங்கொடிகள் குழையும் தபோவனத்தையுமே சிருஷ்டித்துக் கொடுத்திருக்கும் எனக்கா, இந்தப் புதுமணப் பெண்ணால் சாந்தி ஏற்பட்டுவிடப் போகிறது? இனிமேல் ஒரே ஒரு சாந்திதான் உண்டு. அதைக் கொடுப்பதற்கும் மறுக்கிறானே ஈசன்!
ஐயோ பாவம்; என்னை மணப்பதாக எண்ணி இறுமாந்து, தன்னை மறந்து அங்குமிங்கும் நடமாடும் ஒரு ஜடவஸ்துவைக் கல்யாணம் செய்துகொண்ட பெண் - அவள்தான் லட்சுமி - என்ன செய்வாள்? என்னைத்தான் பண்ணிக் கொள்வதாகச் சொல்லி அவள் பிடிவாதமா செய்தாள்? என்னவோ, கல்யாணம் நடந்துவிட்டது. கருவானில் சுருளும் மின்னல் போல, இன்று, தான் பெறப்போகும் புதிய இன்பத்தைப் பற்றி அவள் உள்ளம் என்னென்ன கனவு வலைகளைப் பின்னிக்கொண்டிருக்கிறதோ, யார் கண்டது! கல்யாணத்தன்றுதான் கடைக்கண்ணால் எத்தனை ஆவலோடு பார்த்தாள்! நான் தப்பித் தவறி அவளைப் பார்த்துவிடும் பொழுது, அவளது இதழ்க் கடையில் உதயமாகிய முறுவலும் நாணமும்தான் எத்தகைய மகிழ்ச்சியைப் பிரதிபலித்தன!
பாவம், பேதைப் பெண், என் இதய வேதனையை எவ்வாறு அறிவாள்? அறிந்தால், என்ன ஏமாற்றம், எவ்வளவு வருத்தம் அடைவாளோ? அவளை நினைக்கையில், வினோதமான ஒரு பரிவு ஏற்படுகிறது. என் இதயத்தில் அவளுக்கு இடமிருக்கிறது. ஆனால், அவள் நினைக்கும் இடமில்லையே அது! அந்தச் சொர்ண பீடத்தில் பார்வதியல்லவா தனிச் சுடர் விடுகிறாள்! இன்னும் சற்று நாழிகையில், சயன கிருஹத்துள் நுழைய வேண்டும், கூண்டிலடைபடும் மிருகத்தைப் போல. ஈச்வரா, லட்சுமிக்கு என்ன பதில் சொல்வேன்! அவள், படித்த பெண்ணாயிற்றே!
திரள் திரளாக எழும் சிந்தனைச் சிக்கலில் பட்டுத் தத்தளித்து மெய்ம்மறந்து போன என்னை, சேகரின் கரங்கள் தொட்டன. திடீரென்று திரும்பினேன். "அடேயப்பா, என்ன அவசரம்! கற்பனைக் குதிரையில் கந்தர்வ லோகம் சென்று திரும்பினாயா?..." என்றான் நகைத்துக் கொண்டே.
கல்லூரி நண்பர்கள் வர்க்கத்துக்கே, சமய சந்தர்ப்பமறியாத பரிகாசப் பேச்சு தனியுரிமை போலும்.
ஜன்னல் வழியாகப் பாய்ந்த பால் வெள்ளிக் கிரணங்கள் சேகரின் முகத்திலே படர்ந்தன. "நீ சொல்வது நிஜம். என் கற்பனைக் குதிரை வாழ்க்கை என்ற ஆற்றில் கரைந்து போய்விட்டது" என்றேன் அமைதியாக. ஆனால், உள்ளத்தில் மட்டும் பிரளயப் புயல் குமுறிக் கொண்டிருந்தது.
"என்னடா அசடு! உளறுகிறாய்? எழுந்திரு. ஸ்நானத்தைப் பண்ணிவிட்டு வா. நாழிகையாகிறது" என்று சொல்லிவிட்டுப் போனான் சேகர். அவன் மறையுமட்டும் 'நாழிகையாகிறது' என்ற சொல் என் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது.
எழுந்து ஜன்னலை மூடினேன். அறையை இருள் விழுங்கியது. சயன அறைக்குள் நுழைந்த போது, என் இதயம் 'பக்'கென்று நின்றது, கண் ஒளி மங்கியது, கால் தள்ளாடியது. இயந்திரம் போல் கட்டிலருகே சென்றேன். மல்லிகை மணத்தை அணிந்துகொண்டு உலவிய தென்றல், சன்னலின் வழியாகப் பாய்ந்த பால் நிலவொளியில் தவழ்ந்தது. நிமிர்ந்து நோக்கினேன். கண்ட காட்சி என்னைத் துணுக்குறச் செய்தது. மின்னற்கொடியை அலங்காரம் செய்துவிட்டது போல் அன்று தோன்றிய லட்சுமியா இது? முகமெல்லாம் ஏன் இப்படிச் சிவந்து போயிருக்கிறது?
அடுத்த கணம், என் உடலையே உலுக்கி அதிரச்செய்த ஒரு பொருமல் வந்தது. அவள் விக்கி விக்கி அழுது கொண்டிருந்தாள். என்ன அதிசயம் இது.
"லட்சுமி, ஏன்? ஏன் அழுகிறாய்?" என்று திகைப்புடன் கேட்டேன். விவரிக்க முடியாத ஒரு புதிய அன்பு பிறந்தது அவள்மேல்.
அழுகை ஓயவில்லை. கட்டிலில் பாய்ந்து, மெத்தையிற் புரண்டு விளையாடிய நிலவொளியில், அவள் கண்களினின்றும் வெண் முத்துக்கள் உதிர்ந்தன. "லட்சுமி!" என்றேன் சாவதானமாக. என் சிந்தனைகள் எங்கெங்கோ அலைந்தன. "என்னைப் போல்தானா நீயும்?"
முகத்தை மூடியிருந்த அவள் தளிர்க் கரங்கள் விலகின. அவள் என்னைப் பார்த்தாள். கண்கள் கோவைப் பழமாக இருந்தன. ஆனால், துணிகரத் தோற்றமளித்தன - வாழ்க்கைப் புயலை எப்படியாவது எதிர்த்து விடுவது என்று கங்கணங் கட்டிக்கொண்டவை போல.
"எனக்கு நீங்கள் சொல்வது ஒன்றும் புரியவில்லையே" என்றாள்.
"புரிந்து கொள்ளத்தானே இங்கு வந்திருக்கிறோம், லட்சுமி. உன் உள்ளத்திலும் பழைய நினைவுகள் என்ற புற்றீசல்கள் அரிக்கின்றனவா?" தலையை அசைத்தாள். அவள் கண்களினின்றும் மளமளவென்று நீர்த்துளிகள் உதிர்ந்தன.
திடீரென்று நிமிர்ந்து என்னை நோக்கினாள். மங்கிய - ஆனால் உருக்குப் போன்ற உறுதியான குரலில் பேசினாள்: "என் மனசிலிருப்பதையெல்லாம் உங்களிடம் இன்று சொல்லிக்கொள்ளப் போகிறேன். சொல்லாவிட்டால், இதயம் வெடித்துவிடும் போலிருக்கிறது. என்னை நீங்கள் மன்னிக்கத்தான் வேண்டும்."
லட்சுமியின் துணிச்சலை என் உள்ளம் ஆச்சரியத்தோடு வரவேற்றது. "நானும் என் மனசில் உழலும் வேதனைகளையெல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டுமென்றுதானே இங்கு வந்தேன்!" என்றேன். எங்கள் இருவர் உள்ளமும் ஒன்றையே நினைத்திருக்கிறது. இது என்ன ஒற்றுமை!
புஷ்பம் விரித்த மெத்தையில், ஓர் ஓரத்தில் அமர்ந்தேன். கோடியில் லட்சுமி அமர்ந்தாள். ஸ்வர்ண விக்ரகம் போலிருந்த அவள் அழகை, துக்கம் இன்னும் நன்றாய் எடுத்துக் காட்டிற்று.
"அத்தானைத் தெரியுமோ, இல்லையோ?" என்றாள்.
"தெரியும்; சந்துருவைத் தானே சொல்கிறாய்? அவன்தான் சென்ற வருஷமே கல்கத்தாவுக்குப் போய்விட்டானே."
"கல்கத்தாவுக்குத் தன்னோடு ஓர் இளம்பெண்ணின் இதயத்தையும் எடுத்துக் கொண்டு போய்விட்டான்."
"அவன் விரும்பினானா?"
"என்னவோ, தெரியாது. ஆனால், ஒன்று நிச்சயம். அவள் அவனை வரித்து விட்டாள்."
எனக்கு உடல் புல்லரித்தது. என்ன தீரமான பெண்ணடா இவள்!
"பிறகு?"
"அவனும் என்மீது அன்பு கொண்டிருப்பதாகத்தான் தோன்றியது. லீவுக்கு வரும்போதெல்லாம் என்னுடன் எவ்வளவோ பிரியமாகத்தான் நடந்து கொண்டான். ஆனால், கடைசியில்..."
"மறுத்துவிட்டானா?"
"மறுத்து விட்டால்தான் அல்லல் இல்லையே ?"
"...ம்..."
"ஒரு கடிதம் எழுதினேன், என் உள்ளத்தையெல்லாம் கொட்டி. அதற்குப் பதிலே இல்லை. கல்கத்தாவில் இருக்கும் அவன் எங்கே! கர்னாடக லட்சுமி எங்கே?"
"ஏன்! நீதான் இண்டர் மீடியட்.."
"ஆனால், அவனுக்கு பி.ஏ. பெண் வேண்டுமாம். டென்னிஸ் ஆடத் தெரியவேண்டுமாம். அவனோடு சரிசமானமாக உட்கார்ந்துகொண்டு சாப்பிட வேண்டுமாம்."
"இவ்வளவு செய்யமுடியாதா உன்னால்?"
"ஏன் முடியாது?"
"பிறகென்ன, லட்சுமி!"
"பிறகென்னவா? இளங்காதல் வாழ்க்கையை, கனவு விளையாட்டாக மதிக்கும் வாலிபர்கள் இருக்கும்போது, நம்பிக்கை, காதல் உறுதி என்ற நிழலில் நிற்கும் என்னைப் போன்றவர்கள் என்ன செய்வது? பணத்தை விதைத்து 'மனைவி' என்ற பொருளைப் பயிரிடும் தகப்பனார்கள் வேறு இருக்கிறார்கள். எங்கப்பா ஐயாயிரம் ரூபாய் ரொக்கத்திற்கு எங்கே போவார்?''
"அடப்பாவிகளா, ஐயாயிரமா? சந்துரு ஒன்றும் சொல்லவில்லையா?"
"ஏன் சொல்லவில்லை. 'ஆறாயிரம் வேணு'மென்றான்." - இப்படிச் சொல்லும்போது லட்சுமிக்கு நாக்குக் குழறியது.
"மேலும் அவனுக்குக் கல்கத்தாவில் வேறு லட்சுமி அகப்பட்டு விட்டாள்!"
முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டு விம்மினாள்.
"ம்... நீ என்ன செய்தாய்?"
"மறுபடியும் அத்தானுக்குக் கடிதம் எழுதினேன்."
"பதில் என்ன?"
"பதிலா?" என்று சொல்லிக்கொண்டே, கோவென்று கதறினாள் லட்சுமி. வெளியே இருள் படர்ந்தது. சந்திரன் மேகங்களுக்குள் முழுகினான். அறையில் எரிந்த தீபம் பரிதாபமாகத் துடித்தது.
"என் கடிதத்தை எரித்த கரியை வைத்து அனுப்பினான்" என்றாள்.
என் மனம் பதைத்தது. சந்துருவின் செய்கையை என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.
அழுகை நின்றது. அதுவரை மௌனமாக இருந்தேன். லட்சுமி மறுபடியும் நிமிர்ந்தாள். அவள் கண்களில் ஒரு புது ஆவேசம் மிளிர்ந்தது. "அதனால் மனமுடைந்து விட்டேனா? சந்துரு - என் சொந்த அத்தான் - பிக்ஷா பாத்திரத்தில் கல்லைப் போட்டான். சரி, பிராப்தம் அவ்வளவு தான் என்று மனக் குமுறலை அடக்கினேன். வாழ்க்கை வெள்ளத்தை எப்படியும் எதிர்த்து நீந்துவது என்று திடமாகச் சங்கல்பம் செய்துகொண்டேன். உங்களைக் கல்யாணத்தன்று பார்த்தபோது எனக்கு ரொம்பவும் பெருமையாகத்தான் இருந்தது. கல்யாணம் ஆன பிறகு, இரண்டு பேருமாய்க் கல்கத்தாவுக்குப் போய்வர வேண்டும் என்றுகூட கொண்டேன். ஆனால்..."
"ஆனால் என்ன, லட்சுமி!" என்றேன் ஆத்திரத்தோடு.
லட்சுமியின் இளகிய குரல் என் கண்களில் நீரை வருவித்தது.
"சாயங்காலம், நீங்கள் இருந்த கோலம் என்னைப் பொசுக்கிவிட்டது." என்று சொல்லிக் கொண்டே விம்மினாள்.
"கடைசியில், சந்துரு யாரைப் பண்ணிக் கொண்டானாம்?"
"பார்வதியை..."
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. என் பார்வதியும் கல்கத்தாவுக்குத் தானே போயிருக்கிறாள்!
"எந்தப் பார்வதியை? மஹாலிங்கய்யர் பெண்...?"
"ஆமாம். அவள் செய்த பாக்கியம்... ஏன், இப்படி நடுங்குகிறீர்கள்?"
"அவள்... என் பார்வதி, லட்சுமி! என் பார்வதி!" என் கண்கள் சுழன்றன. மனத்தில் ஒரே குழப்பம். லட்சுமி, ஆவேசம் கொண்டவள் போல் எழுந்து, என் மடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டு விசிக்க ஆரம்பித்தாள்.
என் மனத்திலிருந்து ஒரு பெரிய பாறாங்கல்லை இறக்கிவிட்ட மாதிரியிருந்தது.
"அழாதே, லட்சுமி. அழாதே... எழுந்து உட்கார்... இதோ, இந்தப் பாலைச் சாப்பிடு" என்றேன்.
துறைவன் |