துறைவன்
கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர் எனப் பல திறக்குகளில் இயங்கியவர் துறைவன் என்று அழைக்கப்படும் எஸ். கந்தசாமி. வானொலி நாடகங்களில் பல்வேறு புதுமைகளைப் புகுத்திய துறைவன், ஜனவரி 8, 1925 அன்று திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் பிறந்தார். தென்காசியில் பள்ளிப் படிப்பை முடித்தார். திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பயின்று கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பட்டப் படிப்பில் மாநில அளவில் தமிழில் முதலிடம் பிடித்தார். அதற்காக ஃபிராங்க்ளின் ஜெல் தங்கப் பதக்கம் பெற்றார்.

தனது பேராசிரியர் அ. சீனிவாசராகவன் மூலம் டி.கே. சிதம்பரநாத முதலியார் நடத்தி வந்த 'வட்டத்தொட்டி' இலக்கிய நிகழ்வுகளில் தவறாது கலந்துகொண்டார் துறைவன். தொ.மு. பாஸ்கரத்தொண்டைமான், தொ.மு.சி. ரகுநாதன் உள்ளிட்ட பலரது நட்பைப் பெற்றார். இலக்கிய ஆர்வத்தால் மணிக்கொடி, கல்கி, சக்தி, ஆனந்த விகடன், கலைமகள், அமுதசுரபி, தினமணி, சிவாஜி, நண்பன் போன்ற இதழ்களில் கவிதை, சிறுகதை, நாடகம், இலக்கியக் கட்டுரைகளை எழுதினார். அ.சீ.ரா. ஆசிரியராக இருந்த 'சிந்தனை' இதழில் 'நாடகக்காரி' என்ற தொடர்கதையை எழுதினார். துறைவனின் முதல் கவிதைத் தொகுப்பு 'பொற்சுடர்' 1958-ல் வெளியானது. தொடர்ந்து கவிதை, நாடகம், சிறுகதை, நாவல் என பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளை எழுதினார்.



1946-ல், திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் அறிவிப்பாளராகப் பணியில் சேர்ந்தார். நாடகத் தயாரிப்பாளர், நிகழ்ச்சி நிர்வாகி, நிலைய இயக்குநர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். ஏராளமான நாடகங்கள், உரைச் சித்திரங்களை வானொலிக்காக எழுதினார். வானொலியில், காந்திய சிந்தனைகள் பற்றி 'இருளில் ஒளி' என்ற தலைப்பில் ஓராண்டுக்கும் மேல் உரையாற்றினார்.

வானொலி நிகழ்ச்சிகளில் கவிஞர் திருலோகசீதாராம், அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார், கவிஞர் மாயவநாதன், கவிஞர் வாலி, எழுத்தாளர் ஜோஸப் ஆனந்தன், சாரண பாஸ்கரன் உள்ளிட்ட பலரை அழைத்துப் பங்குபெறச் செய்தார். இளம் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலரை வானொலிக்கு அறிமுகப்படுத்தி ஊக்குவித்தார். கவிஞர் வாலியை வானொலி மூலம் பலரறியச் செய்தவர் துறைவன்தான். அதனால் வாலி, 'துறைவன் எனக்கு இறைவன்' என்று போற்றிப் பாராட்டினார். சென்னைக்குப் பணிமாறுதல் பெற்ற துறைவன், பின் பதவி உயர்வு பெற்று, புதுடில்லி வானொலி நிலையத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். வெளிநாட்டு ஒலிபரப்புப் பிரிவில் முக்கியப் பங்காற்றினார். டெல்லித் தமிழர்களின் வாழ்க்கையை 'யமுனா கங்கா' என்ற தொடர் நாடகமாகப் படைத்தார். 'இலவச இணைப்பு', 'மாறுதலுக்காக' போன்ற பல நாடகங்களை எழுதி ஒலிபரப்பினார். மலையாளக் கவிஞர் வள்ளத்தோள் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து ஒலிபரப்பினார்.

துறைவன் நூல்கள்
கவிதை நூல்கள்: பொற்சுடர், ஒன்பது செண்பகப் பூ
கட்டுரை நூல்கள்: திருக்குறள் அறிமுகம், புதியதோர் உலகு செய்வோம், அறிவியல் புரட்சியின் எல்லைகள், இளைஞர் கையில் எதிர்காலம், நாகரிகத்தின் புதுமலர்ச்சி, மாக்கியவெல்லி வரலாறும் சிந்தனைகளும் வாழ்வியல் சிந்தனைகள், பன்மொழிப் பூக்கள், உலகப் பண்பாடு, அறிவியலின் எல்லைகள்
நாவல்: நாடகக்காரி, சிவந்த மல்லிகை
சிறார் நாவல்: எங்கிருந்தோ வந்தான்
சிறுகதைத் தொகுப்பு: கல்லின் கருணை


சண்டிகர், ஹைதராபாத், திப்ருகார், கட்டாக், கோஹிமா மற்றும் கொல்கத்தா நிலையங்களில் பணியாற்றினார். அகில இந்திய வானொலியின் சார்பில், அதன் பிரதிநிதியாக ஜெர்மனி மற்றும் பிலிப்பைன்ஸில் நடந்த கருத்தரங்குகளுக்குச் சென்று வந்தார். நிலைய இயக்குநராக உயர்ந்து 1983-ல் பணி ஓய்வு பெற்றார்.



துறைவன், தகவல் ஒலிபரப்புத் துறைக்காக 'திருக்குறள் ஓர் அறிமுகம்' என்ற நூலை எழுதினார். பல்வேறு கருத்தரங்குகள், இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றுச் சொற்பொழிவாற்றினார்.

துறைவன், பிப்ரவரி 8, 1996 அன்று காலமானார். வானொலி நாடக இலக்கிய வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்காற்றிய டி.என். சுகி. சுப்பிரமணியன், கூத்தபிரான் போன்றோர் வரிசையில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் துறைவன்.

அரவிந்த்

© TamilOnline.com