பீஷ்மர் சிறந்த போர்வீரர்; பற்றின்மை மற்றும் தெய்வக் கிருபை ஆகிய இரண்டின் மூலமும் அவர் பெற்ற மகிமை மற்றும் பெருமைக்காக மிகவும் புகழ் பெற்றிருந்தார். பீஷ்மர் தனது ராஜ்யத்தின் அருகில் ஒருமுறை கதாதரன் என்ற நபரைச் சந்தித்தார். இவன் கடுமையான தவம் செய்து, வெல்லமுடியாத தெய்வீகச் சக்கரத்தைக் கடவுளிடமிருந்து வரமாகப் பெற்றிருந்தான், எனவே மக்கள் அவரை சக்ரதரன் (சக்கரம் என்னும் ஆயுதத்தை வைத்திருப்பவன்) என்று போற்றினர்!
பீஷ்மரின் தந்தை சாந்தனு மரணமடைந்தவுடன் பீஷ்மரை நிந்திக்கும் விதமான கடிதம் ஒன்றை எழுதுமளவு அவன் ஆணவமும், பொல்லாத்தனமும் கொண்டிருந்தான். சக்ரதரன், "விதவை ஆகிவிட்ட ராணியை என் அரண்மனைக்கு அனுப்புங்கள் இல்லையெனில் போரில் என்னைச் சந்திக்கவும்!" என்று எழுதியிருந்தான். இத்தகைய அவமானத்தைப் பொறுத்துக் கொண்டு யார்தான் அமைதியாக இருப்பார்? தரணி (நிலம்), தர்மம் (அறம்), தர்மபத்னி (மனைவி) ஆகியவற்றை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது அல்லவா?
பீஷ்மர் தனக்குள், 'இந்த அவமானத்திற்குப் பழிவாங்காவிட்டால், என் தாயின் மானத்தைக் காப்பாற்ற முடியாவிட்டால், நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்?' என்று சிந்தித்தார். ஆனால், அரசவையில் இருந்த பிராமணர்கள் பத்து நாட்களுக்குப் பிறகே சக்ரதரனுடன் போரில் ஈடுபடலாம் என்று கூறினர். ஏனெனில், தந்தையின் மரணத்தை அடுத்த பத்து நாட்களும் அவருக்குத் தீட்டு இருந்தது; அந்தக் காலகட்டத்தில், அவர் தன்னிடம் இருந்த தெய்வீக அஸ்திரங்களைக் கையாளக்கூடாது. அவற்றை இயக்கும் புனித மந்திரங்களை உச்சரிக்கக் கூடாது.
"தந்தையின் ஆன்மாவைத் திருப்திப்படுத்தும் ஈமச்சடங்குகளை முடித்தபின் எதிரியோடு போரிடுங்கள்" என்று அறிவுரை கூறினர். அவர்கள் கூறியதன் நியாயத்தை உணர்ந்த பீஷ்மர், பத்து நாட்களுக்குப் பிறகுப் போரிடலாம் என்று செய்தி அனுப்பினார்.
ஆனால், சக்ரதரனால் அவ்வளவு காலம் பொறுத்திருக்க முடியவில்லை; அவன் வெற்றிக்காகத் துடித்துக் கொண்டிருந்தான்; தான் புதிதாக அடைந்த ஆயுதமான சக்கரத்தை பீஷ்மரை நோக்கிச் செலுத்தினான்! ஆனால், என்ன அதிசயம்! தந்தைக்கு வைதிகச் சடங்கை, சாஸ்திரப்படி விதிக்கப்பட்ட கடமையை, செய்து கொண்டிருந்த மகனுக்கு, இறைவனின் கையிலிருந்து வந்த அந்தச் சக்கரம் தீங்கிழைக்கவில்லை! அது பத்து நாட்கள் வானில் சுழன்று கொண்டிருந்தது. இறுதிச் சடங்குகளும் தீட்டுக் காலமும் முடிவடையும் வரை காத்திருந்தது!
ஒருவர் தனது கடமையில் அர்ப்பணிப்புடன் இருக்கும்போது, எந்தவொரு தீங்கு விளைவிக்கும் சக்தியும் அணுகத் துணியாத சக்திவாய்ந்த பாதுகாப்பினால் அவர் சூழப்படுகிறார். இறையருள் இப்படித்தான் செயல்படும். தனிநபரின் திறமை தெய்வீக அருளால் வலுப்படும்போது, அதிசயங்களை நிகழ்த்த முடியும். குரங்குக் கூட்டம் வெற்றிகரமாகக் கடலின் குறுக்கே இலங்கைக்கு ஒரு பாலத்தைக் கட்டியது இப்படித்தான்.
நன்றி. சனாதன சாரதி, டிசம்பர் 2023
பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா |