மேகங்களுக்கு மேலே ஒரு கோவில்
4560 அடி உயரத்தில், மேகங்களுக்கு மேலே சிவனுக்கு ஒரு கோவில். அதுவும் தமிழ்நாட்டில். அதுதான் "அடிக்கொரு லிங்கம்" என்று பெயர்பெற்ற திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள " பிடிக்கொரு லிங்கம்" என வழங்கப்படும் பர்வத மலை.

மலை ஏறும் முன்பு, அடிவாரத்தில் நாங்கள் கண்ட காட்சியே மயிர்க்கூச்சிடச் செய்தது. பெரிய ஜடா முடியுடன், ஒரு சித்தர் குனிந்து யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். அருகில் சென்றவுடன்தான் தெரிந்தது, அவர் பேசிக் கொண்டிருந்தது ஒரு நாயுடன் என்று! இங்கிருக்கும் நாய்களை பைரவர் என்றே அழைக்கின்றனர். சித்தர்களே இந்த உருப்பெற்று, திக்குத் தெரியாதவர்களுக்கு வழி காண்பிப்பதாக ஓர் ஐதீகம். பலரும் இதைப் பற்றி சிலாகித்துச் சொல்கின்றனர். ஒரு சின்ன பிஸ்கட்கூடப் போடாமலே, 4000 படி வரை, இரவில் வழிகாட்டிவிட்டு மறைந்ததைப் பலரும் நினைவு கூறுகின்றனர்.

ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு சென்ற பொழுது, கீழே விழுந்த ஒரு சொட்டுத்தான் இந்த மலை என்கிறார்கள். பர்வத மலை முழுவதும் பச்சைப் பசேலென்று மூலிகை மரங்கள் நிரம்பியுள்ளன. அதனாலேயே பலர் மதியத்திற்குமேல் கிளம்பி, மலை உச்சியில் ராத்திரி முழுவதும் இருந்துவிட்டு, அதிகாலை சூரிய உதயத்தை தரிசித்துவிட்டு, அதீதப் புத்துணர்ச்சியுடன் திரும்புகின்றனர். "இங்கே வரலேன்னா, யூத் இல்ல" எனப் பேசிக்கொண்டே சில இளசுகள் நாங்கள் காலை ஏழு மணிக்கு மலை ஏறும்போது இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

முதலில் ஆஞ்சநேயரையும் அதன் பிறகு கீழே காவல் தெய்வமான வீரபத்திரரையும் வணங்கி ஏற ஆரம்பித்தோம். "மூலிகை நீர் குடிக்கிறீர்களா ?" என்ற விருந்தோம்பலுக்குப் பலர் செவி சாய்த்தனர். சுமார் ஒருமணி நேரம் மண் சாலையில் நடந்த பிறகு தென்பட்ட ஒரு கடையில் கூழ் குடித்தோம். "இன்னும் எவ்வளவு தூரம்?" எனக் கேட்டபோது, "ஒரு மணி நேரம்தான்" என்ற பதில் திருப்தியைத் தந்தது. கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கடந்து, 1263 படிக்கட்டுகள் ஏறி முடித்தபிறகு , மற்றொரு கடையிலும் "இன்னும் ஒருமணி நேரம்தான்" எனச் சொன்னபோது, உண்மை அதுவல்ல எனப் புரிந்தது.

பெரும் பாறைக் கற்களால் ஆன பாதையில், ஏறுவது சிறிது சிரமம்தான். கால் மட்டுமன்றி, பல சமயம் கையும் ஏறுவதற்குத் தேவைப்பட்டது. இவ்வாறு மீண்டும் ஒருமணி நேரப் பயணம். ஒன்றும் சாப்பிடாமல், கூழ் மட்டும் தந்த தெம்பில், உடல் லேசாக இருந்ததால், சோர்வின்றிப் பயணப் பட்டோம்.

பர்வத மலை ஏறுபவர்களுக்குக் கண்டிப்பாக செக்யூரிட்டி செக் உண்டு. கையில் நீங்கள் கட்டாயம் பாஸ் வைத்திருக்க வேண்டும். இல்லையேல், உங்கள் கதி அதோகதிதான். ஆம், இங்கிருந்த பைரவர்கள் பர்வதமலையின் ஹீரோஸ் என்றால், குரங்குகள்தான் மலையின் 'வில்லன்கள்'. இவர்கள்தான் இங்கே உங்கள் பையைச் செக் செய்வது. கம்பு என்ற பாஸ் கட்டாயம் இருத்தல் அவசியம். குரங்கைப் பார்த்து மிரட்டும் தொனியில் தட்டிக்கொண்டே போக வேண்டும். இல்லையேல், அது உங்களை மிரட்டி, உருட்டி பையை நோண்டி தனக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்ளும்.



சுமார் ஒருமணி நேரம் கற்களைக் கடந்தபின், மிகவும் கடினமான கடப்பாரைப் பாதை ஆரம்பிக்கிறது. ஒரு பக்கம் மலை. இன்னொரு பக்கம் அதல பாதாளம். சுமார் 4000 அடி பள்ளத்தாக்கு. மலையை ஒட்டி, சிலக் கடப்பாரைகளைத் தரையில் பதித்து இருக்கிறார்கள். வலக்கைப் பக்கம் ஓர் இரும்புக் கம்பி போட்டிருக்கிறார்கள். அதனால், முன்னைவிட இப்போது பாதுகாப்பாக இருப்பதாக உள்ளூர் வாசிகள் நினைக்கிறார்கள். ஆனால் இதில் ஏறுவது பெரிய சாகசம்தான். சுமார் ஒருமணி நேரம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஏறிய பிறகு, ஒரு பழைய மண்டபம் தென்படுகிறது.

சங்ககாலத் தொகுப்புகளில் ஒன்றான 'பத்துப் பாட்டு' நூலில் ஒன்று மலைபடுகடாம். இதை கூத்தராற்றுப்படை என்றும் சொல்வர். நவிர மலையின் தலைவன் 'நன்னன்' என்ற மன்னனைப் பற்றி 'இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்' என்ற கூத்தர், பாடிய நூல் இது. இவர் குறிப்பிட்டபடி, மூன்றாம் நூற்றாண்டில் நந்தனுடைய அரண்மனை அடிவாரத்திலும், கோட்டை பர்வத மலையின் உச்சியிலும் இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. அந்தக் கோட்டைதான் இப்போது சிதிலமடைந்த மண்டபமாகக் காட்சியளிக்கிறது. அந்த நந்தனின் கோட்டையைத் தாண்டினால், 'ஆகாசப் பாதை' வருகிறது. வெறும் கற்களால் ஆன இந்தப் பாதையைக் கடந்து சென்று கோவிலை அடைகிறோம். அங்கிருந்து பார்க்கும்போது, சுற்றிலும் உள்ள பிற மலைகளும் மேகங்களும் கோவிலுக்குக் கீழே தென்படுகின்றன. வேறு பல மரங்களும் பாதைகளும், ஓவியம் போன்றே காட்சியளித்தன.

சந்நிதிக்குள் நுழையும் முன், நம்மை ஒரு ஜோடி விபூதிப் பாதங்கள் அழைக்கின்றன. அவை சிவனுடைய பாதங்கள். சிவன் கைலாயத்தில் இருந்து இறங்கும்போது, முதல் அடியைப் பர்வத மலையிலும், இரண்டாவது அடியை அண்ணாமலையிலும் வைத்ததாகக் கூறுகின்றனர் இங்குள்ள பூஜாரிகள். சன்னிதிக்குள் நுழைந்தவுடன் மிகவும் குளிர்ச்சியான தரை உங்களை வரவேற்கிறது. மிகச்சிறிய லிங்கமான, மல்லிகார்ஜுனக் கடவுளை நீங்களே அர்ச்சிக்கலாம். தொட்டு வணங்கலாம். சிவனை வந்து அடைவோமா என்று இருந்ததால், கைக்கு மிக அருகில் இருந்தும் அவரிடம் ஒன்றும் வேண்ட மனம் விழையவில்லை.

பிரகதாம்பாள் வைர வைடூரியத்தில் இழைக்கப்பட்டு, பளபளவெனக் காட்சி கொடுத்தாள். "இந்த அம்பாளைப் பார்ப்பதற்காகவே மீண்டும் 80 வயதுவரை வரணும்" என யாரோ தனது குடும்பத்தாரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஏற்றங்கள் எப்போதுமே கடினமானவையாக இருந்தாலும், ஆபத்துக்கள் அற்றவையாகவே உள்ளன. மலையேற்றத்தில் நிகழும் விபத்துகளில் 75% இறங்கும்போதே நடக்கின்றன. அதுவும் பர்வதமலையில் இருந்து இறங்குவது மிகச் சவாலான ஒன்றே. கம்பிமேல் நடப்பது போன்றே இருந்தது அந்தக் கடப்பாரை மலையில் இறங்குவது. கஷ்டப்பட்டு வெகு ஜாக்கிரதையாக மூன்று மணி நேரம் இறங்கி வந்து சேர்ந்தோம். ஆனால் அந்தக் கோவிலின் பூஜாரி, அரை மணியில் ஜெட் வேகத்தில் இறங்கியதைப் பார்த்து வெட்கத்தில் தலை குனிந்தோம்.

மலை உச்சிவரை செல்ஃபோன் டவர் கிடைக்கிறது நம் நாட்டில் என ஷொட்டு போட்டுக் கொண்ட வேளையில், மலை உச்சி வரை நெகிழி குப்பிகள் வந்ததற்கு நம்மை நாமே குட்டுப் போட்டுக் கொள்ளவும் வேண்டி இருந்தது. திருப்பதியைப் போல திருவண்ணாமலையிலும், பர்வத மலையிலும் கண்டிப்பாகப் பிளாஸ்டிக்குக்குத் தடை போட வேண்டும். இல்லையேல் பர்வத மலை பிளாஸ்டிக் மலையாகி விடும்.

ஆண்டுதோறும் மார்கழி ஒன்றாம் தேதி, பர்வத மலையை கிரிவலம் செய்வதால் கோடி புண்ணியம்.

சசிகலா ரகுராமன்

© TamilOnline.com