1600 கதை சொல்லிய அபூர்வக் கலையரசி ரம்யா வாசுதேவன்
ரம்யா வாசுதேவன், தினந்தோறும் யூட்யூபிலும், வாட்ஸப்பிலும் கதை கேட்பவர்களுக்கு நன்கு தெரிந்த பெயர். 1600க்கும் மேற்பட்ட கதைகளைத் தன் குரலில் தந்திருக்கும் ரம்யா, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கதைகளையும், ஆன்மீகச் செய்திகளையும் 2019 முதல் தினந்தோறும் சொல்லி வருகிறார். நாள்தோறும் இவரது கதைகளைக் கேட்டு ரசிக்கும் ரசிகர்கள் உலகெங்கிலும் உள்ளனர். சிறு குழந்தைகள் முதல், வயதானவர்கள், கதைகளைப் படிப்பதற்கு வாய்ப்பில்லாத பார்வையற்றவர்கள், கார் ஓட்டும்போது மட்டுமே கதைகளைக் கேட்டு ரசிக்கும் பரபர ஆசாமிகள், வாக்கிங் பொழுதைக் கதை கேட்கும் பொழுதாக்குபவர்கள் என்று பல தரப்பட்டவர்கள் இவரது கதைகளுக்கு ரசிகர்கள்.

சரி, யார் இந்த ரம்யா வாசுதேவன்? எதற்காக இவர் இப்படி மெனக்கெட்டு கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்? நீங்கள் மட்டுமல்ல, நாங்களும் இந்தக் கேள்விகளுக்கு விடை தேடினோம். ரம்யா வாசுதேவன், 'கதை சொல்லி' ரம்யா வாசுதேவன் ஆனது ஒரு சுவையான கதை.



ரம்யா வாசுதேவன் பிறந்தது ராஜபாளையம். தந்தையின் பணி நிமித்தம் ராஜபாளையம், ஸ்ரீரங்கம் என்று பல இடங்களில் பள்ளி, கல்லூரிப் படிப்புகள் தொடர்ந்தன. இயற்பியலில் பி.எஸ்.சி. பட்டமும், விஷுவல் கம்யூனிகேஷனில் பட்ட மேற்படிப்பும் படித்து முடித்தார். சிறுவயது முதலே வாசிப்பார்வம் உண்டு. அது திருமணமானபின் மேலும் தீவிரமாகத் தொடர்ந்தது.

2019ல், பள்ளித் தோழிகள் இணைந்து ஆரம்பித்த ஒரு வாட்ஸப் குழுவில் முதன் முதலாக ரம்யா ஒரு கதையைச் சொன்னார். அது இயக்குநர் தங்கர்பச்சான் எழுதிய கதை. தோழிகளிடம் அதற்கு மிகப்பெரிய வரவேற்பு. தொடர்ந்து இப்படிக் கதை சொல்லும்படி எல்லாரும் கேட்டுக் கொள்ளவே, எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் கதைகளைச் சொல்ல ஆரம்பித்தார். மென்பொருள் துறைப் பொறியாளரான கணவர் வாசுதேவனும் இதனை ஊக்குவித்தார்.

பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்காகவும் கதைகள் சொல்லும்படி தோழியர் ஊக்குவிக்கவே, குட்டி குட்டியாக ஆன்மீகக் கதைகள் சொல்ல ஆரம்பித்தார். அப்போதுதான் கோவிட் தொற்றால் நாடு முழுவதும் லாக்டவுனை அறிவித்தது இந்திய அரசு. அக்காலகட்டத்தில் கதை சொல்லுவதைத் தீவிரப்படுத்தினார் ரம்யா. கதை சொல்வதற்காகவே 'அண்டர் தி ட்ரீ' என்னும் பாட்காஸ்டிங் வலைத்தளம் ஒன்றை ஏற்படுத்தினார், ரம்யாவின் தோழி கிருத்திகா. அந்தத் தளம் மூலம் சிறுகதைகளைப் பற்றிய போஸ்டர் ஒன்றை உருவாக்கி, புத்தகங்களின் அட்டைப்படத்தையும் பகிர்ந்து, எழுத்தாளர் பெயர் மற்றும் அறிமுகம் சொல்லிப் பின் கதைகளை வாசிக்க ஆரம்பித்தார். அதற்கு மிகச் சிறந்த வரவேற்பு. பல்வேறு வாட்ஸப் குழுக்களில், மின்னஞ்சல் குழுமங்களில் ரம்யாவின் கதைகள் பகிரப்பட்டன. அது புதிய உத்வேகத்தைத் தர, தினந்தோறும் கதை சொல்வது என்று தீவிரமாக இயங்க ஆரம்பித்தார். அப்படி ஆரம்பித்தது இதோ இன்று அது ஆயிரத்து அறுநூறு கதைகளுக்கும் மேல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.



தமிழ்ச் சிறுகதைகள், ஆன்மீகக் கதைகள், ஆங்கிலப் புத்தகங்கள், நூல் விமர்சனங்கள், குழந்தைகளுக்கான கதைகள் என்று ரம்யாவின் கதை சொல்லல் விரிகிறது. பாட்டி, தாத்தாக்கள் முதல் சுட்டிக் குழந்தைகள் வரை தினந்தோறும் ரம்யா சொல்லும் கதைகளைக் கேட்கக் காத்துக் கொண்டிருக்கின்றனர். முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு ரம்யாவின் கதைகள் மிகப்பெரிய வரப்பிரசாதம்.

ரம்யாவின் நோக்கம், வாசிப்பார்வத்தை தூண்டுவதும், இந்திய எழுத்தாளர்களின் படைப்புகளைப் பரவலாகக் கொண்டு சேர்ப்பதும்தான். அதை ரசித்து விரும்பிச் செய்து கொண்டிருக்கிறார். அதே சமயம், ரம்யா கதையை வரிக்கு வரி வாசிப்பதில்லை. தன் போக்கில் கதையாகச் சொல்வதே அவர் பாணி. ஆனால், ஆங்கிலத்திலுள்ள சில புத்தகங்களை மட்டும் குழந்தைகளுக்காக வரிக்கு வரி சொல்லியிருக்கிறார். ரம்யாவின் குரல் மற்றுமொரு சிறப்பு. கதைகளில் வரும் பாத்திரங்களின் உணர்ச்சிகளுக்கேற்ப பல்வேறு பாவங்களில் ஒலிப்பது கேட்பவர்களுக்கு அதனோடு ஒன்றிப் போகும் மன உணர்ச்சியைத் தருகிறது. "ரேடியோல அந்தக் காலத்துவ வர்ற ஒலிச்சித்திரம் கேட்கற மாதிரி ரொம்பச் சிறப்பா இருக்கு" என்பது அந்தக் காலத்து ஆசாமிகள் சிலரது பாராட்டாக இருக்கிறது. குறிப்பிட்ட படைப்பின் சுருக்கத்தை, அதன் சாரத்தைத் தன் பாணியில் கூறுவது பல இளையோரை, குறிப்பாகப் பெண்களை, கவர்ந்திருக்கிறது.



ரம்யா வாசுதேவனின் கதைகள் 10க்கும் மேற்பட்ட வாட்ஸப் குழுக்களில் வெளியாகின்றன. ஸ்பாட்டிஃபையிலும் கேட்கலாம். ரம்யாவின் கதைகளைச் சில அரசு நூலகங்களிலும் கேட்கலாம். அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தின், 'ஆடியோ லைப்ரரி'யிலும், அசோக் நகர் நுாலகத்தில் நான்கு கணினிகளில் 'ஹெட்போன்' வைத்துக் கேட்பதற்கும் வசதி செய்துள்ளனர். இதுவரை உலக அளவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ரம்யாவின் கதைகளைக் கேட்டிருக்கின்றனர்; அதில் அமெரிக்காவில் இருந்தும் கணிசமான அளவினர் கேட்டுள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு.

பலரது கதைகளைக் கூறியிருந்தாலும் கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, தி. ஜானகிராமன், லா.ச. ராமாமிருதம் போன்றோரின் கதைகள் ரம்யாவுக்கு விருப்பமானவை. இளம் எழுத்தாளர்கள் பலரது கதைகளையும் வாசித்து அறிமுகப்படுத்துகிறார். சிறுகதைகள் மட்டுமல்ல; ஆண்டாள் பாசுரம், ரமண மஹரிஷியின் அக்ஷரமணமாலை, ஸ்ரீமத் பாகவதம், ஆதிசக்திக்கு ஆயிரம் நாமங்கள், யோகி ராம்சுரத்குமார் சரிதம் என்று பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார். சிறுவர்களையும் இளையோர்களையும் கதை சொல்ல ஊக்குவிக்கும் வகையில் ஆன்லைன் கதை சொல்லல் கொண்டாட்ட நிகழ்வுகளையும் நடத்தி வருகிறார்.


ரம்யா வாசுதேவனின் கதைகளை ஸ்பாடிஃபை தளத்தில் கேட்க: open.spotify.com
இணையதளம்: underthetree.co.in
சிறுகதைகள்: sirukadhaigal.weebly.com
சிறுகதைகள் ஃபேஸ்புக் பக்கம்: facebook.com/ramya.vasudevan.988



புத்தக வாசிப்பு ஒருவருக்குள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். ரம்யாவின் கதைகளைக் கேட்டு நிறையப் பேர் வாசிப்பிற்குள் வந்திருக்கிறார்கள். மட்டுமல்ல; ரம்யாவை முன்மாதிரியாகக் கொண்டு கதை சொல்பவர்களும் பெருகியிருக்கிறார்கள். இவர்கள் யூட்யூப், பாட்காஸ்ட்களைத் தொடங்கிக் கதைகளைக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

ரம்யாவின் சாதனையைப் பாராட்டி சிறுவாணி வாசகர் மையம் 'ஆயிரம் கதைகள் சொன்ன அபூர்வ கதைசொல்லி' என்று பாராட்டி விருதளித்தது.



ரம்யா வாசுதேவன் கதைசொல்லி மட்டுமல்ல. லயோலா கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். ஈவன்ட் மேனஜ்மெண்ட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். விளம்பர வடிவமைப்பாளர். குறும்பட இயக்குநரும்கூட. இத்தனை பொறுப்புகளோடு கதை சொல்வதையும் ஒரு பணியாக விரும்பி ஏற்றுக்கொண்டு சலிக்காமல் நாள்தோறும் சொல்லிக் கொண்டிருக்கும் ரம்யா வாசுதேவனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ரம்யா வாசுதேவன் மேலும் மேலும் கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கத் தென்றலின் வாழ்த்துகள்!

தென்றல் ஆசிரியர் குழு

© TamilOnline.com