அன்னை சாயிமாதா சிவபிருந்தா தேவி (பகுதி-1)
தமிழகத்தின் முதல் பெண் ஆதீனம், அன்னை சாயிமாதா சிவபிருந்தா தேவி அவர்கள். 1983ல் புதுக்கோட்டையில், திலகவதியார் திருவருள் ஆதீன மடம் என்னும் பெண் ஆதீனத்தைத் தோற்றுவித்த இவரது சாதனை வரலாறு மகளிர் மட்டுமல்லாமல் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று.

தோற்றம்
சாயிமாதா சிவபிருந்தா தேவியின் இயற்பெயர் பிருந்தாவனம். இவர் 1927ல் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானான சிவராம நட்டுவனார் - திருக்கோகர்ணம் நல்லம்மாள் இணையருக்கு கடைசி மகளாகப் பிறந்தார். இவருக்கு ஐந்து சகோதரிகள், ஒரு சகோதரர். பாரம்பரியமான இசைக் குடும்பம். சகோதரி ரெங்கநாயகி தமிழ்நாட்டின் முன்னோடி பெண் மிருதங்க இசைக் கலைஞர். மற்றொரு சகோதரி சுப்புலட்சுமி புல்லாங்குழல் மேதை. சகோதரர் உலகநாதபிள்ளை வயலின் இசைக்கலைஞர். டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அன்னை பிருந்தா தேவிக்கு பெரியம்மா முறை உறவினர்.

கல்வியும் இளமைப்பருவமும்
அன்னை பிருந்தா தேவி, தொடக்கக் கல்வியை புதுக்கோட்டை சமஸ்தான ஆரம்பப் பள்ளியில் கற்றார். திருக்கோகர்ணம் ஸ்டேட் செகண்ட்ரி ஸ்கூலில் இடைநிலை வகுப்பு வரை பயின்றார். மேற்கல்வியை இராணியார் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அங்கு படிக்கும்போது 'பிருந்தாவனம்' என்ற பெயர் மாற்றப்பட்டு 'பிருந்தா தேவி' என்று பெயர் சூட்டப்பட்டார்.

அன்னை பிருந்தா தேவி பள்ளியில் படிக்கும் காலத்தில் திருக்கோகர்ணம் பிரகாதாம்பாள் கோயிலில் இருந்த சாது ஒருவரால் ஆசிர்வதிக்கப்பட்டார். அது முதல் ஆன்மீக நாட்டம் பெற்றார். சமய இலக்கியங்களில் நாட்டம் சென்றது. அவ்வப்போது கதை, கவிதைகள் எழுதினார். வீணை வாசிக்கக் கற்று அதில் தேர்ச்சி பெற்றார். சொற்பொழிவாளராகவும் தன்னை வளர்த்துக் கொண்டார்.

அக்காலத்தின் பெண்கள் கல்வி கற்கத் தடை இருந்தது. அதுவும் மேற்கல்வி என்பது பெண்களுக்கு இயலாத ஒன்றாகவே இருந்தது. டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி போன்ற முன்னோடிகளால் அன்னை பிருந்தாதேவி அதனை எதிர்கொண்டார். தந்தையின் நண்பரான இசைப் பேராசிரியர் சித்தூர் சுப்ரமணியப் பிள்ளையின் வீட்டில் தங்கி, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பயின்று தத்துவத்தில் பட்டம் பெற்றார். திருவாசகமணி, முத்து சு.மாணிக்கவாசக முதலியார், அருணை வடிவேல் முதலியார் போன்றோரிடம் பயின்று தத்துவ நுட்பங்களைக் கற்றார். பட்டமளிப்பு விழாவில் இமய ஜோதி சிவானந்தர் கலந்துகொண்டு உரையாற்றினார். அவரிடம் அன்னை பிருந்தா தேவி ஆசி பெற்றார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுத்தானந்த பாரதியும் அம்மையாரை ஆசிர்வதித்தார்.



பிருந்தா தேவியின் திறமையையும், ஆன்மீக நாட்டத்தையும் அறிந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் அப்போதைய பதிவாளர் சச்சிதானந்தம் பிள்ளை, பிருந்தாதேவியை தருமபுர ஆதீனத்தால் நடத்தப்பட்ட சைவ சித்தாந்த சாத்திர வகுப்பில் சேர்ந்து பயில அனுமதி பெற்றார். அக்கால கட்டத்தில் அப்பயிற்சியைப் பெற்ற ஒரே பெண் அன்னை பிருந்தாதேவி தான். மகாவித்வான் தண்டபாணி தேசிகரின் வீட்டில் தங்கி அப்பயிற்சியை நிறைவு செய்தார் பிருந்தா தேவி.

இலக்கிய ஆர்வம்
இளவயதிலிருந்தே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்த பிருந்தா தேவி தமிழ் நூல்கள் பலவற்றைக் கற்றுத் தனது இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றினார். கரந்தை தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல இடங்களில் தமிழ் மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவுகள் ஆற்றினார்.

காங்கிரஸ் ஈடுபாடு
அன்னை பிருந்தா தேவி காங்கிரஸ் இயக்கத்தின் பால் ஈடுபாடு கொண்டார். தந்தையின் நண்பர்களது ஆதரவாலும், முத்துலெட்சுமி ரெட்டி போன்றோரது ஊக்குவிப்பாலும் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டார். காந்தி, காமராஜ், வ.உ. சிதம்பரம் பிள்ளை போன்றோர் பற்றிச் சொற்பொழிவாற்றி மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார். காமராஜரின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார்.

சமூக, அரசியல் பணிகள்
அன்னை பிருந்தா தேவி சமூக நற்பணிகள் பலவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். அந்த விஷயத்தில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவருக்கு முன்னோடியாக அமைந்தார். 1955-56-ல், சமூக சேவைக்கென ஒரு பயிற்சி முகாம் காந்தி கிராமத்தில் நடைபெற்றது. அன்னை பிருந்தா தேவி அதில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டையில் கீழ மூன்றாம் வீதியில் மாதர் சங்கம் ஒன்றை நிறுவினார். அதன் மூலம் சிறார் கல்வி, ஹிந்தி போதனை, சர்க்கா நுாற்பு, முதியோர் கல்வி போன்ற பணிகளை முன்னெடுத்தார். பெண்களின் கல்வி, சுகாதார முன்னேற்றத்திற்காக உழைத்தார்.

மச்சுவாடியில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பெயரில் மகளிர் இல்லம் ஒன்றை அமைத்து, ஏழைப் பெண்கள், குழந்தைகள், கைம்பெண்கள், கணவர், உறவுகளால் கைவிடப்பட்ட பெண்கள் எனப் பலரை ஆதரித்தார். அவர்கள் நல்வாழ்வு பெற உழைத்தார்.

பிருந்தா தேவி, புதுக்கோட்டை நகர்மன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நின்று வெற்றிபெற்றார். பல சமூக நற்பணிகளை மேற்கொண்டார். தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட மாதர் காங்கிரஸ் அமைப்பாளராகவும் மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். வங்கி கெளரவ ஆர்பிட்ரேட்டர், மாவட்ட மதுவிலக்குக் குழு உறுப்பினர், மாவட்ட வளர்ச்சிக்குழு உறுப்பினர், ஐந்தாண்டுத் திட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர், மாநில சமூகநலத்துறை உறுப்பினர், மாநில உடல் ஊனமுற்றோர் நலக்குழு உறுப்பினர் எனப் பல பொறுப்புகளை வகித்தார்.



சொற்பொழிவுகள்
சமயச் சொற்பொழிவில் தேர்ந்தவராக இருந்த அன்னை பிருந்தாதேவி, 1960ல், குன்றக்குடி அடிகளார், கி.வா. ஜகந்நாதன், புலவர் முருகவேள் போன்றோருடன் இணைந்து இலங்கைக்குச் சொற்பொழிவாற்றச் சென்றார். தொடர்ந்து தமிழகத்தின் பல ஊர்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, பினாங்கு போன்ற நகரங்களுக்கும் சென்று சமய, இலக்கியச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். திருவண்ணாமலை - குன்றக்குடி ஆதீன வித்வானாகவும், பேரூர் ஆதீனப் புலவராகவும் செயல்பட்டார்.

ஆன்மீகத் தேடல்
சமூக, அரசியல் பணிகள், இலக்கியப் பணிகள் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தாலும் அன்னை பிருந்தாதேவியின் ஆழ்மனதில் ஆன்மீக அருளுக்கான தேடல் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. துறவு பூண்டு ஆன்மீகத் தொண்டாற்ற வேண்டும் என்பதே அவரது ஆழ்மனத் தேடலாக இருந்தது. ஆன்மத் தேடலின் விளைவால் சாந்தானந்த சுவாமிகள் உள்ளிட்ட பல்வேறு குருமார்களைச் சந்தித்து ஆசி பெற்று வந்தார்.

அருளுபதேசம்
ஒரு சமயம் 1967ல், இளையாற்றங்குடியில் முகாமிட்டிருந்த காஞ்சி மகா பெரியவரைத் தரிசிக்கச் சென்றார். அப்போது, அன்னை பிருந்தா தேவி அணிந்திருந்த ரோலக்ஸ் கைக்கடிகாரம் தொலைந்து போய்விட்டது. அது அடியவர் ஒருவர் அன்பளிப்பாகத் தந்தது. என்றாலும் அன்னை அது குறித்துக் கவலை கொள்ளவில்லை.

அன்னை சாயி பிருந்தா தேவியின் பணிகளைப் பாராட்டிய மகா பெரியவர் பேச்சோடு பேச்சாக, “விட்டது கிடைக்கும். ஆனால், விடவேண்டியதை விட வேண்டிய நேரத்தில் விட்டுவிட்டால், கிடைக்க வேண்டியது, கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும்" என்று சொல்லிவிட்டு அன்னை பிருந்தா தேவியை ஆழமாக உற்றுப் பார்த்தார். அதனையே தனக்கான அருளுபதேசமாக அன்னை பிருந்தாதேவி உணர்ந்தார். அதற்கேற்றவாறு அவருடைய தொலைந்து போன ரோலக்ஸ் வாட்ச் கிடைத்துவிட்டது ஆனால், பெரியவர் 'விடவேண்டியதை விட வேண்டிய நேரத்தில் விட்டுவிட்டால்...' என்று சொன்னதன் உட்பொருளைக் குறித்துச் சிந்தித்தவாறு இருந்தார். மறுநாள், தபோவனம் ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளைத் தரிசிக்கச் சென்றார். ஆசி வழங்கிய சுவாமிகள் அங்குள்ளவர்களிடம், “இவள் நம்மோடு சேர்ந்துவிட்டாள். இனி எதிலும் சோர்ந்துபோக மாட்டாள்” என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வுகள் அனைத்துமே அன்னை பிருந்தாதேவியின் மனதில் பல மாற்றங்களை ஏற்படுத்தின. துறவியாக வேண்டும் என்ற அவரது எண்ணம் நாளுக்கு நாள் வலுப்பட்டது. பற்றற்ற நிலை நோக்கி அவர் மனம் பயணப்பட்டது. இப்படியே ஆண்டுகள் சில கடந்தன.

(தொடரும்)

பா.சு. ரமணன்

© TamilOnline.com