ஓவியர் சரண்யா ராஜேஷ்
அந்த இடமே பரபரப்பாக இருந்தது. அனைவரும் அவரை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். காரணம், தன் முன் அமர்ந்திருந்தவர்களை அச்சு அசலாக அப்படியே வரைந்து அவர்கள் கையில் ஓவியமாகத் தந்ததுதான். வரையப்பட்டவர் மட்டுமல்ல; அந்த நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், அரசு அதிகாரிகள் என அனைவருக்குமே அது ஆச்சரியமான நிகழ்வாக இருந்தது. அப்படியே மிகத் தத்ரூபமாக இருந்தன அந்தப் பென்சில் ஸ்கெட்ச் ஓவியங்கள்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், அயலகத் தமிழர் தினம் என்னும் உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினக் கொண்டாட்டத்தின்போது நடந்தது இது. அந்த ஓவியர் சரண்யா ராஜேஷ்.



சரண்யா மதுரையைச் சேர்ந்தவர், பி.டெக். பட்டதாரி. திருமணமானதும் சென்னையில் வாழ்க்கை தொடங்கியது. தனியார் மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனத்தில் மிக உயர்ந்த பணி. அன்பான கணவர். அருமையான புகுந்த வீட்டு உறவுகள். நாளடைவில் குழந்தை வளர்ப்பிற்காக கணவருடன் கலந்தாலோசித்து வேலையிலிருந்து விலகினார். கிடைத்த ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவழிக்க நினைத்தார். என்ன செய்வது என்று யோசித்தபோதுதான் ஓவியம் நினைவுக்கு வந்தது.

சிறுவயது முதலே ஓவிய ஆர்வம் கொண்டிருந்தார் சரண்யா. அவ்வப்போது வரைவார். தஞ்சாவூர் பாணி ஓவியம் வரையக் கற்று அதன் நுணுக்கங்களையும் அறிந்திருந்தார். ஆக, பொழுதுபோக்காகச் செய்யலாம் என்று நினைத்து வரைய ஆரம்பித்தார். பலரும் இவரது திறமையைப் பாராட்ட, தன் திறமையை மேலும் மெருகேற்ற ஃபேஷன் டிஸைனிங் கற்றார். தொடர்ந்து டெஸ்ஸின் அகாடமியில் பயின்று டிப்ளமோ இன் ஃபைன் ஆர்ட்ஸ் பட்டம் பெற்றார். அங்கு ஓவியம் கற்றுத் தந்த ஆசிரியர் ராஜேந்திரன் சரண்யாவை ஊக்குவித்தார். போர்ட்ரெய்ட் ஓவியங்களைச் சரண்யாவால் சிறப்பாக வரைய முடிந்ததால் பலரும் பாராட்டினர். அது மிகப்பெரிய ஊக்கத்தைத் தந்தது.



ஓவியர் இளையராஜாவின் ஓவியங்கள் சரண்யாவுக்கு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன். அதனால் தமிழ்நாட்டின் பண்பாட்டை, கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் ரியலிச பாணி ஓவியங்களை வரைய ஆரம்பித்தார். கற்பனை கலந்த இவரது ரியலிச பாணி ஓவியங்களுக்குச் சிறந்த வரவேற்பு கிடைத்தது. பொழுதுபோக்காக வரைய ஆரம்பித்தவருக்கு, அதுவே அவரது வாழ்க்கையாகி விட்டது. ஆம், தற்போது முழு நேர ஓவியராகி விட்டார் சரண்யா ராஜேஷ்.

கலர் பென்ஸில்ஸ், சாஃப்ட் பேஸ்டல்ஸ், அக்ரிலிக் பெயிண்டிங், ஆயில் பெயிண்டிங், வாட்டர் கலர், சார்க்கோல் என்று எல்லா வகைமைகளிலும் வரைகிறார். மனித உருவங்களை வரைவதில் மிகத் தேர்ந்தவராக அறியப்படும் சரண்யா ராஜேஷிற்கு இன்று உள்நாடு, வெளிநாடு என்று பல வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. ஓவியப் பயிலரங்குகளை நடத்துகிறார். ஓவியம் கற்பிக்கிறார். ஓவியக் கண்காட்சிகளில் கலந்துகொள்கிறார்.



முக பாவங்களைச் சிறப்பாகக் கொண்டு வருவதில் சரண்யா தேர்ந்தவர். சமீபமாக இவர் வரைந்திருக்கும் சிற்ப ஓவியங்கள் பிரமிக்க வைக்கின்றன. உளியின் நேர்த்தியைத் தூரிகையில் கொண்டு வந்திருக்கிறார் சரண்யா.

தனது ஓவியங்களுக்காக ஓவியர் மாருதி, ஓவியர் சிவகுமார் (நடிகர்), ஷ்யாம் உள்ளிட்ட பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். இவரது திறமையைப் பாராட்டி ஓவியர் மாருதி, இவரையே ஓவியமாக வரைந்து பரிசளித்திருக்கிறார் என்றால் அதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் இவரது சிறப்பை.



சரண்யாவின் ஆர்வத்தையும் தேடலையும் புரிந்து முழு ஒத்துழைப்பும் ஊக்கமும் அளித்து வருகிறார் கணவர் ராஜேஷ். புகுந்த வீட்டின் ஆதரவுடன் ஓவிய உலகில் இன்று சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் சரண்யா ராஜேஷை வாழ்த்துவோம்.

சரண்யா ராஜேஷின்: ஓவியங்கள் | முகநூல் பக்கம் | இன்ஸ்டாகிராம்









ஆசிரியர் குழு

© TamilOnline.com