மலைச்சரிவின் இறக்கத்தில் உள்ள பள்ளிக்கூடத்து வாசலில் கூடையாக விரிந்த மரத்தடியில் காத்துக் கொண்டு நின்றார் அமர்நாத். குளிர் காலமாதலால் பனி மூடிய தோற்றம் நகரத்தையே ஏர்-கண்டிஷனாக்கி இருந்தது. காஷ்மீரின் பள்ளத்தாக்கிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் வயதான காரணத்தால் குளிரைத் தாங்க முடியவில்லை.
தினமும் இப்படித்தான் பேத்தி குலாபைப் பார்க்க வந்து நிற்பார். தாயற்ற குழந்தை என்ற செல்லம். ஆனால் அவளோ அவருடன் வரமாட்டாள். சற்றுத் தொலைவில் குல்மார்க்கில் இருக்கும் அவருடைய இன்னொரு பெண் சுமனின் வீட்டிற்குப் பள்ளி பஸ்ஸில் போய் விடுவாள். கிழவருக்குச் சொந்தமாகப் படகு வீடுகளும், குங்குமப் பூந்தோட்டங்களும் உண்டு.
வாழ்க்கையின் சுகங்களைச் சுவைத்து மகிழ்ந்த பொழுதுதான் அவருடைய பெரிய மகள் குலாபை விட்டுவிட்டு மறைந்தாள். அமர்நாத் தளர்ந்துபோனார். மனைவி படுக்கையிலேயே விழுந்து விட்டாள். மருமகன் சுரேந்தர் அங்கும் இங்கும் அல்லாடிய பிறகு ஒரு வேலையைத் தேடிக் கொண்டு அமெரிக்காவிற்குப் பறந்தான். ஒரு தடவை அவன் வந்த பொழுது குலாபைத் தன்னுடன் அழைத்துப் போக நினைத்தான்.
"நான் என் உயிர் மூச்சு உள்ளவரை குலாபைத் தர மாட்டேன். அவளாக வர வேண்டும் என்றால், அதற்குத் தடையாக இருக்கவும் மாட்டேன்" என்று அமர்நாத் கூறி விட்டார்.
"தாதாஜி கல்ஸே தஸ் தின்கி சுட்டி ஹை" (நாளையிலிருந்து பத்து தினங்களுக்கு விடுமுறை) என்று கூறிக் கொண்டு ஓடி வந்த குலாப் அவர் கையில் மணக்கும் கேக்கைப் பிடுங்கிக் கொண்டாள். தாத்தா வயதை மறந்து அவள் பின்னால் ஓட வேண்டியிருந்தது.
"இந்தா, உன் அப்பா எழுதிய கடிதம்" என்ற அவர் தந்த கடிதத்தைப் படிக்கும் குலாபின் முகத்தில் மாறுதல் ஏதும் இல்லை. கடிதத்தைத் தாத்தாவின் கையில் திணித்தவள், பஸ் புறப்படுவதைப் பார்த்து வேகமாக ஓடினாள். பூங்கொத்துக் கரத்தை ஆட்டியதும், புறப்படும் பஸ்ஸைப் பார்த்துத் தாத்தா ஓடி வருவதைக் கண்டு கண்டக்டர், "ஆத்தே?" என்ற கேள்வியுடன் பஸ்ஸை விசில் கொடுத்து நிறுத்தினான்.
"நீ என்கூட வா குலாப் பேட்டி" என்று கொஞ்சலுடன் அழைத்தார் அமர்நாத். அருமையாகப் பேத்தியின் தலையைக் கோதினார்.
"ஆமா, அங்கே வந்தா சும்மா படகு வீட்டிலேதான் சுத்த வேண்டும் தாத்தாஜி, சாச்சா ரெண்டு குதிரைகள் வாங்கி இருக்கார். இந்தப் பத்து நாளும் ரைடிங் போகப் போறேன்... ஒரே குஷி தான்."
"அப்பா வரப் போகிறாரே, நீ வரவில்லையா?" என்றார் பரிதாபக் குரலில்.
"அவர் அங்கே வரட்டும். சலோ காடி சலோ" என்று பாடி ராகம் இழுக்கும் பேத்தியைப் பார்த்து அவர் திகைத்தார்.
குலாப் பஸ்ஸிலிருந்து குதிக்கும் பொழுது 'லபக்' என்று ராஜீவ் பிடித்துக் கொண்டான். அவனைப் பார்த்ததும் இளநுங்குத் தாடையின் மேல் பழத்துண்டங்களாகக் கனிந்த இதழ்கள் விரியச் சிரித்தாள் அவள். அவன் அவளுக்காக தூத்பேடாவோ, பைன் சப்போட்டாப் பழங்களோ கொண்டுவருவான். இன்று தூத்பேடா கொண்டு வந்திருந்தான். தாத்தா கொடுத்த கேக்கை எடுத்து அவனுக்குக் கொடுத்தாள்.
மலைவாழ் மக்களின் வஞ்சனை இல்லாத செழுமை இருவருக்குமே இருந்தது.
"உன்னுடைய அப்பா வரப் போகிறாராமே?"
"வரட்டுமே?" என்று அலட்சியமாகச் சொல்லி விட்டுத் தூத்பேடாவைக் கடிக்கிறாள்.
"அவருடன் போய் விடுவாயோ?"
"மாட்டேன். என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது."
செக்கச் சிவந்த இதழ்கள் பிரியச் சிரிக்கும் அவளைப் பார்த்துப் பெருமூச்சை விட்டான் அவன். மெதுவாக அவள் கரத்தைப் பிடித்துக் கொள்கிறான். "ஷ்! தூர நகர்ந்து கொள். சாச்சி பார்த்தால் ஏதாவது திட்டுவாள்."
குர்தாவின்மேல் படிய மேல்துணி போட்டுத் தன்னை மறைத்துக் கொள்ளும் வளர்த்தியை உடைய உடலை, அவன் தன் பார்வையால் தடவுகிறான்.
"நாளைக்கு ரைடிங் போறேன் வரியா?"
அவள் சிரிக்கிறாள். "அமர்நாத் குகைக்குப் போன மாதிரியா?"
அமர்நாத் குகை பார்க்கப் போக அவனை அழைத்துக் கொண்டு போனபொழுது, அவள் ஒரு பனிக் குவியலில் காலை வைத்து உள்ளே சரிந்து விட்டாள். அவள் சரிவதைக் கண்ட அவன்தான் அவளைப் பிடித்து வெளியே இழுத்துவிட்டான். அது நினைவுக்கு வர, அவர்கள் சிரிக்கிறார்கள்.
"வர மாட்டியா?"
"எனக்குக் கடை உண்டு." அவனுக்குப் படிப்பு வராத காரணத்தால் ஒரு செருப்புக் கடையில் வேலை பார்த்து வந்தான். இருவரும் மெளனமாக நடந்தனர்.
அவன் படிப்பு வராத தன் மட்டி மூளையையும், செருப்புத் தைத்துக் காய்ச்சிப் போன விரல்களையும் பார்த்துத் தன்னையே நொந்து கொண்டான். குலாபை நினைக்கத் தனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? பெருத்த தனவந்தரின் குடும்பத்தில் பிறந்த அவளை அடையமுடியுமா?
★★★★★
அவள் தந்தை சுரேந்தர் வந்துவிட்டார். மகளின் வெல்வெட் போன்ற வளர்த்திப் பளபளப்பும், குறும்புத்தனம் நிறைந்த செயல்களும் அவருக்குப் பிரமிப்பைத் தந்தன. படகு வீட்டிலிருந்து குதித்து நீந்திக் கரையேறும் லாகவமும், மலைமேல் குதிரையைச் செலுத்தும் தீவிரமும் சாச்சாவுடன் போட்டியிட்டுக் கொண்டு வண்ணம் தீட்டுவதும், மரப்பொம்மைகளைச் செதுக்கி வடிவம் தருவதும் அவரை அயர வைத்தன.
இரவு சுக்கா ரொட்டியும், பால் சப்ஜியும், பழங்களும் உண்ட பிறகு தன் மாமனாருடன் நிதானமாகப் பேச ஆரம்பித்தார்.
"லீவ் முடிந்துகொண்டு வருகிறது. இந்தத் தடவை குலாபை அழைத்துக் கொண்டு போக நினைக்கிறேன்."
"அங்கே வந்து என்ன செய்யப் போகிறாள்?" கிழவர் கட்டிலில் சாய்ந்து கொண்டு கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொள்ளுகிறார். விரைத்துப் போகும் விரல்கள் கம்பளியின் அணைப்பில் சுகம் காணுகின்றன.
"கொஞ்ச காலம் என்னுடன் வந்து தங்கட்டுமே? அவளும் அமெரிக்கா போன்ற நாடுகளை எப்பொழுதுதான் பார்ப்பது?"
அழகான மரத் தட்டுக்களை வண்ண ஓவியம் தீட்டிக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்தாள் குலாப்,
"குலாப், அப்பா உன்னை அமெரிக்காவுக்கு அழைக்கிறார்" கிழவரின் குரல் சொல்லும் பொழுதே தழதழத்தது.
"டாடி, நாளைக்கு மலை ஏறிட்டு வரலாமா? சாச்சாவோட குதிரையை எடுத்துக்கிட்டுப் போயிட்டு வரலாமே?"
"நான் கேட்டேனே, நீ பதில் சொல்லவில்லையே?" மகளின் அருகே நெருங்கி வந்து உட்கார்ந்து கொண்டா சுரேந்தர்.
"கொஞ்ச நாள் வந்து இருப்பேன். எப்போ வேணுமோ அப்பவே கிளம்பி வந்துடுவேன்."
பேத்தியின் பேச்சு தாத்தாவுக்கு அதிர்ச்சியைத் தந்தது. அதைத் தன் மனைவியிடம் கூற உள்ளே போனார்.
தந்தையிடம் உள்ள பாசம் அவள் நெஞ்சில் குடியிருப்பதை அப்பொழுதுதான் புரிந்து கொண்டார்.
★★★★★
"நீ அமெரிக்கா போகப் போறியாமே? எங்கிட்டே ஏன் சொல்லலே?" மனத்தாங்கலுடன் கேட்டான் ராஜீவ்,
"போயிட்டு வந்துடுவேன். நீயும் வரியா?" நீண்ட விரல்களில் செம்பஞ்சுப் பூக்கள். சிறிது நாளாகவே இடையிலிருந்து தலைவரை சுற்றி மேல் துணி எல்லாம் உடுத்திக்கொண்டிருந்தாள். அது ஒரு தனி அழகு, நிலவை மேகத்திரை மறைப்பது போல.
"பைத்தியமே! நான் அங்கெல்லாம் வர முடியாது. நீ பிளேன்லே போவே. நான் கீழே நிற்பேன்" சொல்லும் பொழுதே கண்களில் நீர் பளபளப்பு.
"நான் சீக்கிரமா வந்துடுவேனே! நீ தூத்பேடாவைச் சேர்த்து வை" என்று அரும்புப் பற்கள் ஒளியிடச் சிரித்தாள்.
அவனுடைய உணர்ச்சிகள் அவளுக்குப் புரியவில்லை. அவள் தன் தந்தையுடன் கிளம்பும் நாள் நெருங்கும் பொழுதுதான் ராஜீவ் ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டான். "குலாப், நான் ராணுவத்தில் சேரப் போகிறேன்."
அவள் இல்லாத காஷ்மீர் அவனுக்கு எதுவுமே இல்லாத சூன்யம். மலை சூழ்ந்த ஒரு கோட்டை போல் உள்ள அந்தப் பூலோக சொர்க்கத்தில். சின், பைன், சினார் சப்போட்டா மரங்கள் எல்லாம் துயர கீதம் இசைப்பது போல் அல்லவா அவன் மனத்தை அசைக்கின்றன!
அவள் உள்ளத்தில், அமெரிக்காவில் ராஜிவ் இருக்க மாட்டான் என்ற எண்ணம் எழுந்து உறுத்தியது. "நான் அமெரிக்காவிலிருந்து வரும்பொழுது நீ இங்கே இருப்பே இல்லையா?"
"நினைச்சபோது ராணுவத்திலேயிருந்து வர முடியுமா என்ன?" என்றான் அவன். அவளுக்காகத் தானே தைத்த நவநாகரிக சரிகை இழைகள் கோத்த காலணிகளை அவன் கொடுத்தான். அவள் முகம் மலர்ந்தது.
★★★★★
அவளையும் சுரேந்தரையும் வரவேற்க மேரி விமான நிலையத்திற்குக் காரை எடுத்துக்கொண்டு வந்திருந்தாள். சுரேந்தர் அறிமுகப்படுத்தியதும்தான் மேரி தன்னுடைய தாயின் ஸ்தானம் என்பதை குலாப் புரிந்துகொண்டாள்.
"ஹெள ஃப்யூட்டிபுல் யூ ஆர் லைக் யுவர் நேம்" என்ற மேரி அவளை அணைத்துக்கொண்டாள். குலாப் நாணத்துடன் குனிந்து கொண்டாள்.
பசுமை பாய்ந்த மலைகளிலும், ஏரிகளிலும் ஓடியாடித் திரிந்த அவள், அந்த இடத்தில் ஊன்றிக்கொள்ளத் தடுமாறினாள். மேரியும் வேலைக்குப் போய்விடுவாள். தனிமையில் சன்னல் வழியாகத் தெரியும் அடுக்கு அடுக்கான வீடுகளையும் வரிசை தவறாமல் துரத்தி ஓடும் கார்களையும் மனிதர்களின் இயந்திர வாழ்வையும் கண்கள் முன்பு கண்டாலும் நினைவில் பதிவதில்லை. அந்த சன்னலைத் தாண்டி - ஒரு பறவையாகப் பறந்து பறந்து குளிர்ந்த மலைச் சிகரங்களில் இறங்கிப் பூக்கத் தொடங்கி இருக்கும் குங்குமப் பூச்செடிகளைக் கொத்தி - ராஜீவின் கரத்துடன் இணைந்து பள்ளிச் செய்திகளைப் பகிர்ந்து கொண்டு.
அவளுக்கென்று தனியாக ஓர் அறை உண்டு. அந்த அறையில் நீலப் பூவாகக் குளுமை பரப்பும் சிறு ஒளி விளக்கின் ஒளியில் கண்ணுறங்காமல் படுத்துக்கிடப்பாள். பள்ளியின் நினைவுகள் வருவதுண்டு. பள்ளியில் எல்லாரும் சேர்ந்துபாடும் நாட்டு வணக்கப் பாடல் நினைவுக்கு வரும் பொழுது அவளுக்கு ராஜீவின் நினைவுதான் வந்தது. ராணுவ வீரனாகத் துப்பாக்கி ஏந்தி நாட்டைக் காக்கும் பணியில் காடுகளிலும் மலைகளிலும் உலாவும் அவன் ஏன் அவள் நினைவுகளில் குறுக்கிடவேண்டும்?
ஒருநாள் குலாப் சூப்பர் மார்க்கெட்டிற்குச் சென்றிருந்த போது கணக்கிடும் கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆகிவிட்டது. கூட்டத்தில் நின்றிருந்த திவாரிதான் மற்றவர்கள் கணக்கை வேகமாகச் சரி செய்து கொடுத்தான்.
குலாபின் கணக்கைச் சரிசெய்த பொழுதுதான் அவளைக் கேட்க நினைத்த திவாரி நிமிர்ந்தான். அந்தக் காஷ்மீரத்து அழகு அவனைக் கவர்ந்தது. அந்தக் கவர்ச்சியை விடாமல் பற்றிக் கொண்டு அவளைத் தன் ஸ்கூட்டரில் அவள் வீட்டில் கொண்டு வந்து விட்டான். இந்தியாவைச் சேர்ந்த ஒருவன் தனக்கு நண்பனாகக் கிடைத்தது. அவளுக்கு மகிழ்ச்சியே. இரவு அவனைப் பற்றித் தந்தையிடம் புகழ்ந்தாள்.
தனக்குள்ளே புழுவாகச் சிறுத்துக்கொள்ளும் அவள் இப்படி மகிழ்ச்சியுடன் மலர்ந்து நின்றது மேரிக்குப் புரிந்தது.
"டியர், நானே அவளுக்கு ஒரு நண்பனை ஏற்படுத்திக் கொடுத்து 'டேட்டிங்' ஏற்பாடு செய்ய நினைத்தேன். இந்த நண்பனுடனேயே "டேட்டிங்' ஏற்பாடு செய்து கொடுங்களேன்" என்றாள் பூரிப்புடன்.
"எங்க நாட்டிலே 'டேட்டிங்' கிடையாது டார்லிங், கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போம்" என்ற சுரேந்தர், கண்கள் பூக்க அவளைப் பார்த்துச் சிரித்தார்.
கடைசியில் மேரியின் எண்ணமே வெற்றி பெற்றது. திவாரியின் வற்புறுத்தல் பொறுக்காமல் ஒரு நாள் குலாப் அவனுடன் வெளியே கிளம்பினாள். "கூண்டுக் கிளியாக ஆக்காதீர்கள். ஒரு பெண்ணுக்குத் தன்னைக் காத்துக் கொள்ளும் தீவிரம் இப்படி ஒரு சுதந்திரத்தை அளிப்பதன் மூலம்தான் வெளிப்படும்" என்று சுரேந்தரிடம் கூறினாள் அவள்.
"விஷ்யூ பெஸ்ட் ஆப் லக்" என்று கையை ஆட்டி விடை கொடுத்தாள் மேரி.
"எங்கே போகலாம்?" என்று கேட்டான் திவாரி.
"எனக்கு என்ன தெரியும்?" என்றாள் அவள்.
"நீயே சொல்லு பியாரி" என்ற அவன், அவள் தோளைச் சுற்றி இடக்கரத்தைப் போட்டு வளைத்தான்.
"நீ காரைப் பார்த்து ஓட்டு" என்றவள். அவன் கரத்தை விலக்கிவிட்டுக் காரின் சன்னல் ஓரமாக நகர்ந்து கொண்டாள்.
"பிகினி கடற்கரைக்குப் போகலாமா?" கண்கள் சிரித்தன. உதடுகள் விரிந்தன. ஏதோ காதல் ட்யூன் ஹம்மிங். உல்லாசமான ருசியைத் தேடினாளே தவிர, அவனுடைய போதைப் பேச்சும், செய்கையும் பயத்தைத் தந்தன.
கடற்கரையில் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க வந்த கூட்டம். அரை உடுப்போடு மண்ணில் கூடாரத்தில் தங்களை மறந்த லயிப்பில் இருந்தவர்களைப் பார்த்துக் கண்களைப் பொத்திக் கொண்டாள் குலாப்.
"நீயும் ஸ்விம்ஸூட் போட்டுக்கொள். நீந்தப் போகலாம்" தயாராக உள்ள உடுப்பை நீட்டினான் திவாரி.
"உனக்கு நீந்தத் தெரியுமா?"
"எங்கள் மத்தியப்பிரதேஷில் எத்தனையோ பேர் கடலைப் பார்த்ததுகூடக் கிடையாது. நான் இங்கே வந்தபிறகு கற்றுக்கொண்டேன்."
"நீ நீந்திவிட்டு வா. நான் இங்கேயே உட்கார்ந்திருக்கிறேன்" முழங்காலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்து விட்டாள்.
"இப்படி மூடியாக இருக்க, நீ வந்தே இருக்க வேண்டாம்."
அவன் ஆசைதீர நீந்திவிட்டு வந்தபொழுது, குலாப் உட்கார்ந்த இடம் காலியாகக் கிடந்தது. எங்கேயாவது சுற்றிவிட்டு வருவாள் என்று சாப்பாட்டு விடுதியில் காத்துக் கொண்டிருந்தான். எங்கேயோ போய்த் தொலைந்து விட்டாள் என்ற ஆத்திரம் எரிச்சலாக மாறி வதைத்தது. அந்த எரிச்சல் அதிகரிக்க ஒரு முறை கடற்கரையில் சுற்றிவிட்டு நியூயார்க்கிற்கே திரும்பினான்,
"குலாபைக் காணோமா?" சிறுத்தையாகச் சீறினார் சுரேந்தர்.
"நான் நீந்திவிட்டுப் பார்த்தபொழுது அவளைக் காணோம். உங்கள் பெண் குறும்புத்தனம் மிக்கவள். அதனால் எங்கேயாவது மறைந்துகொண்டு என்னை அலையவைத்து வேடிக்கை பார்க்கிறாளோ என்னவோ என்று எனக்குத் தோன்றியது."
"எதுவானால் என்ன? நீ காத்துக்கொண்டு அங்கே இராமல் வந்துவிட்டு என்னென்னவோ சாக்குகளைச் சொல்கிறாயே?"
"நான் அவளை எங்கே என்று தேடுவது?"
"டேட்டிங் அனுப்பவேண்டும் என்றாயே, இப்பொழுது பார் அவளுடைய தாத்தாவுக்கு என்ன பதிலைச் சொல்வது?"
மேரி நடுங்கினாள்.
சுரேந்தரும் மேரியும் குலாபைத் தேடக் கிளம்பிய பொழுது திவாரியும் உடன் கிளம்பினான். "எதற்கு இன்னும் எங்களுடன் வருகிறாய்? இர்ரெஸ்பான்ஸிபிள்மேன். உன் பொறுப்பை நீ சரிவரச் செய்யவில்லை" என்று சுரேந்தர் கத்தினார். திவாரியின் முகம் சுண்டியது.
தன் மகளை மீண்டும் பார்ப்போமா என்ற கலக்கம் அவரைப் பிடித்து ஆட்டியது. தன் மாமனார் அமர்நாத் குலாபைக் காணோம் என்றால் எப்படித் துடித்துப் போவார் என்பதை நினைக்கும் பொழுதே ஸ்டியரிங்கைப் பற்றிய அவரது கரங்கள் நடுங்கின.
"ப்ளீஸ், நீங்க இந்த நடுக்கத்துடன் காரை ஓட்ட வேண்டாம்" என்று மேரி காரை ஓட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டாள்.
கடற்கரை, உணவு விடுதிகள் என்று எல்லா இடங்களிலும் தேடிக் களைத்த பின், போலீஸில் புகார் செய்ய நினைத்துப் போலீஸ் ஸ்டேஷனில் அவர்கள் நுழைந்த பொழுது "அப்பா" என்று குலாப் அங்கிருந்து ஓடிவந்தாள்.
காரில் போகும்பொழுது, "என்னம்மா நடந்தது?" என்று கேட்டார்கள் மேரியும் சுரேந்தரும்.
"டாடி, திவாரிகூட வந்தேனே. தவிர, அவனுடைய சோஷியல் கொள்கைகளுக்கு என்னால் உடன்பட முடியவில்லை, அதனாலே நீந்திவர மறுத்துவிட்டுத் தனியாகக் கடற்கரையிலே உட்கார்ந்திருந்தேன். யாரோ நாலைந்து பேர் வம்பு செய்தார்கள். நான் திவாரியின் பெயரைச் சொல்லிக் கத்தினேன். திவாரி நீந்துவதில் குறியாக இருந்தான். அதனாலே தப்பித்துக்கொள்ளவே போலீஸ் ஸ்டேஷன்லே சரணடைந்தேன்."
மேரி குலாபை அணைத்துக்கொண்டாள்.
"தாத்தாஜிக்கு உடம்பு சரியில்லை" என்ற செய்தி வரவே குலாப் வந்துவிட்டாள் காஷ்மீருக்கே. அவள் வந்ததில் தாத்தாஜியும் நன்றாக எழுந்து உட்கார்ந்து விட்டார்.
தாத்தாஜிக்குப் பணிவிடை செய்த நேரம் போக அவள் தான் ஆடிப் பாடிய இடங்களைச் சுற்றி வந்தாள். தந்தையைப் பார்க்க குல்மார்க்கிலிருந்து வந்த சாச்சிதான் குலாப் கலியாண வயதை எட்டி விட்டதை உணர்த்தினாள். தலைப்பாகை கட்டிக் குதிரையில் அமர்ந்து மாப்பிள்ளை வரப்போகும் கோலம் தாத்தாஜியைப் புல்லரிக்க வைத்தது. தன்னை வரச் சொல்லிக் கடிதம் கண்டதும், சுரேந்தரும் மேரியும் வந்துவிட்டார்கள். மேரிக்கு இந்தியாவைப் பார்க்கும் ஆசை.
"தாத்தாஜி, ராஜீவ் எங்கே இருக்கிறான்?"
தாத்தாஜி ராஜீவின் விலாசத்தைக் கொடுத்தார். குலாப் ஒரு கடிதம் எழுதியும் பதில் வரவில்லை. ஆனால் ஒரு பகலில் திவாரிதான் வந்து நின்றான். எதிர்பாராதவிதமாக சுரேந்தர் அவனை வரவேற்றான் உற்சாகமாக, அமெரிக்காவில் நடந்த விஷயத்தைக்கூட அதிகம் பாராட்டாத ஒரு வரவேற்பு
ஆனால், தாத்தாஜிதான் திடீரென்று அந்தப் பேச்சைக் கிளம்பினார். "சுரேந்தர், குலாபை திவாரிக்கே மணம் முடித்தால் என்ன?"
சுரேந்தர் சிந்தித்தார்.
"தற்காலத்தில் எந்த இளைஞன்தான் பொறுப்பாக இருக்கிறான். எல்லாம் போகப் போகச் சரியாகிவிடும்." என்றாள் மேரி.
"நீ சொல்வது சரிதான். திவாரி என்றால் நம்முடன் பழகியவன். ஏதாவது ஒன்று என்றால் அதட்டிக் கேட்கலாம்" என்றார் சுரேந்தர்.
குல்மார்க்கில் விளையாட்டுப் பந்தயம் ஒன்றைப் பார்த்துவிட்டு சாச்சியுடன் அப்பொழுதுதான் திரும்பினாள் குலாப்.
"குலாப், திவாரியைப் பார்த்தாயா?" என்றார் தாத்தாஜி.
"ஹல்லோ, குட்மார்னிங் குலாப்" என்றவாறே உள்ளேயிருந்து வந்தான் திவாரி.
ஓ... குட்மார்னிங்" என்றாள் குலாப்,
டொக்... டொக்... என்று சப்தம் கேட்டது. அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள். மரக்கால் ஒன்றின் உதவியுடன் ராஜிவ் வந்தான்.
"ராஜிவ்!" என்று அவனருகில் ஓடிய குலாப் அவன் முகத்தைப் பார்த்ததும் தடுக்கி நின்றாள்.
"என்னப்பா இப்படி ஆயிடுச்சே?" என்ற தாத்தாஜி வருத்தத்தைத் தெரிவித்தார்.
குலாப் சிலை மாதிரி நின்றாள். மேரிதான். "இவனுக்கு என்ன?" என்று மெளனத்தைக் கலைத்தாள்.
"ராஜீவ், ஏன் இப்படி ஆயிடுத்து? கால் ஒன்றைக் காணோம். கண் ஒன்றைக் காணோம்" என்று கேவினாள் குலாப்.
சுவரில் கட்டையைச் சார்த்திவிட்டு நாற்காலி ஒன்றில் உட்கார்ந்தான் ராஜீவ்.
"ஒரு சமயம் அஸ்ஸாமை ஒட்டிய காடுகளில், தங்க வேண்டி வந்தது. அங்கே தலைமறைவு நாகர்கள் வசித்தார்கள். ஒரு நாள் இரவு ஒரு பெண்ணின் அலறல் கேட்டது. பலாத்காரமாகப் பிடிபட்டு நாகர்களால் துன்பப்பட்ட அந்தப் பெண் ஓர் அதிகாரியின் செல்லப் பெண். அதிகாரி எப்பொழுதோ செய்த சில இடையூறுகளுக்காக அவர்கள் அவளைக் கொண்டு வந்துவிட்டார்கள். என் நண்பர்களின் துணையோடு அந்தப் பெண்ணை மீட்டு அவர்களோடு அனுப்பிவிட்டேன். "
பழைய துயரத்தில் ஒன்றிய அவன் சிறிது துயரம் தேங்க நிறுத்தினான்.
"நான் தப்பிவந்த பிறகு அவர்கள் நான் போகும் பாதையைக் குறிவைத்து எறிந்த ஈட்டிகள் என் கண்ணையும், காலையும் பலிவாங்கிவிட்டன. இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் இருந்தேன். என் சேவையைப் பாராட்டி சீல்டு கொடுத்தார்கள். ஆனால் நான் ராணுவத்தில் தொடர்ந்து இருக்க முடியவில்லை. ஏனென்றால் நான் ஊனமுற்றவன்" என்ற ராஜீவ் நீர் வழியும் ஒற்றைக் கண்ணைத் துடைத்துக் கொண்டான்.
"நல்ல வேளையில்தான் வந்திருக்கிறாய். இவர்தான் திவாரி. குலாபை மணக்கப் போகும் மாப்பிள்ளை" என்று திவாரியை அறிமுகம் செய்தான் சுரேந்தர்.
"தாத்தாஜி?" வீறிட்டாள் குலாப்,
ராஜீவ் தலையைத் தாழ்த்திக் கொண்டவன், "எனது வாழ்த்துக்கள்" என்றான் நலிந்த குரலில்.
"தாத்தாஜி, எனக்கு விருப்பம் என்று ஒன்றும் இல்லையா? என்னைக் கடற்கரையில் தேடாது. போலீஸில் புகார் கொடுக்காமல் போன திவாரியையா மணக்க வேண்டும்? ஒரு நாளைக்கே பாதுகாப்பாக இருக்கமுடியாத ஒருவனால் வாழ்க்கை பூராவும் எப்படிப் பாதுகாப்பாக இருக்கமுடியப் போகிறது? ஒரு பெண்ணுக்கு வாழ்க்கைக் காவலன் அவள் கணவன்தான்"
தாத்தாஜி நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார்.
"யாரோ ஒரு பெண்ணைக் காக்க தன் கண், கால், வேலையைத் தியாகம் செய்த ராஜீவைத்தான் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன்" ஆணித்தரமாக ஒலித்த அசைக்க முடியாத குரல்.
ராஜீவ் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவன் ஒரு பெண்ணை காப்பாற்றியது தியாகமா? அல்லது குலாப் அவனை மணக்கப் போவது தியாகமா?
அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி பிறந்தது. "ராஜீவ், நீ எனக்குத் தூத்பேடா எப்பொழுதும் தருவியே, இன்று நான் உனக்கு அதைத் தருகிறேன்" என்று இனிப்புத் துண்டுடன் வந்த குலாபின் கையைப் பிடித்துக் கொண்ட ராஜீவ், "என் வாழ்வில் மணம் வீச வந்த என் அருமை ரோஜாப் பூவே" என்று அவளது மலர்க் கரத்தைப் பற்றிக் கொண்டான்.
லட்சுமி ராஜரத்னம் |