பத்ம விருதுகள்
இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியம், கலை, இசை, நாடகம், மருத்துவம், அறிவியல், விவசாயம், விளையாட்டு, சமூகசேவை எனப் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, ஆண்டுதோறும் மத்திய அரசால் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. 2024ம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு மொத்தம் 132 பேர் இவற்றைப் பெறுகின்றனர்.

பத்மவிபூஷண்
வெங்கையா நாயுடு, பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், நடனக் கலைஞரும் மேனாள் நடிகையுமான வைஜயந்திமாலா பாலி, நடிகர் சிரஞ்சீவி, பீஹாரைச் சேர்ந்த சமூக சேவகி பிண்டேஸ்வர் பாட்டக் ஆகிய ஐவர் பத்மவிபூஷண் விருது பெறுகின்றனர்.

பத்மபூஷண்
பத்மபூஷண் விருது 17 பேருக்கு வழங்கப்படுகிறது. சமீபத்தில் காலமான நடிகர் விஜயகாந்த், தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி, பின்னணிப் பாடகி உஷா உதுப், இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, கேரளாவைச் சேர்ந்த வளஞ்சேரி ராஜகோபால், கர்நாடகாவின் சீதாராம் ஜிண்டால், மகாராஷ்டிராவின் ஸ்ரீ பியாரிலால் சர்மா உள்ளிட்டோர் பத்மபூஷண் விருது பெறுகின்றனர்.

பத்மஸ்ரீ
மருத்துவர் நாச்சியார், வள்ளிக் கும்மியாட்ட நடன ஆசிரியர் பத்ரப்பன், நாதஸ்வரக் கலைஞர் சேஷம்பட்டி சிவலிங்கம், விளையாட்டு வீரர் ஜோஷ்னா சின்னப்பா, எழுத்தாளர் ஜோ டி குரூஸ், இந்தியாவின் முதல் பெண் யானைப் பாகரான பார்பதி பரூவா, எழுத்தாளரும் கல்வியாளருமான கேரளாவின் ஸ்ரீ முனி நாராயண ப்ரஸாத், அந்தமானின் இயற்கை விவசாயி கே. செல்லம்மாள், பெண் ஹரிகதா விரிவுரையாளர் உமா மகேஷ்வரி உள்ளிட்ட 110 பேர் பத்மஸ்ரீ பெறுகின்றனர். ஃப்ரான்ஸ் போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இப்படியலில் இடம் பெற்றுள்ளனர்.

விருதாளர்களுக்குத் தென்றலின் நல்வாழ்த்துக்கள்!

© TamilOnline.com