காரைக்காலம்மையார்
உலகத்துக்கெல்லாம் தாயும், தந்தையுமான இறைவன் சிவபெருமானால் "அம்மையே" என்று அழைக்கப்பட்ட பெருமையை உடையவர் காரைக்காலம்மையார். இயற்பெயர் புனிதவதி. இவரது வரலாறு பக்தியின் மாண்பை, சிறப்பை, பெருமையைப் பறைசாற்றும் ஒன்று.

தோற்றம்
காரைக்காலில் வணிகர் குடியில் தனதத்தர் என்பவர் வாழ்ந்து வந்தார். சிறந்த சிவபக்தரான அவருக்கு மகளாகப் பிறந்தார் புனிதவதியார். புனிதவதி சிறுபருவம் முதலே சிவபெருமான்மீது பேரன்பு பூண்டிருந்தார். தந்தையைப் போலவே சிவனடியார்கள்மீது அன்பு பூண்டவராகவும், தந்தைக்கு உதவியாக அடியார் பணிவிடை செய்பவராகவும் வளர்ந்தார்.

திருமணம்
புனிதவதி மணப்பருவம் எய்தியவுடன் திருமணத்திற்காகப் பெற்றோர் வரன் பார்க்கத் தொடங்கினர். நாகப்பட்டினத்தில் சிறந்த வணிகராக இருந்த நிதிபதி என்பவரின் மகனான பரமதத்தனுக்கும் புனிதவதிக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டது. சான்றோர் நிச்சயித்த நன்னாளில் திருமணமும் நடந்தது.

சிவபக்தி
தனதத்தர், புனிதவதி ஒரே மகள் என்பதாலும், அவளைப் பிரிய மனமில்லாததாலும், காரைக்காலில் தனி இல்லம் ஒன்றில் மணமக்களைக் குடி வைத்தார். கணவனும் மனைவியும் மனமொத்த தம்பதிகளாய் வாழ்ந்து வந்தனர். புனிதவதி சிவபெருமானைத் தினந்தோறும் தவறாது வணங்கி வந்தார். இல்லம் நாடிவரும் சிவனடியார்களை வணங்கி அவர்களுக்கு அமுது படைத்து வழிபட்டு வந்தார்.

ஒருநாள் பரமதத்தன் கடைக்கு வியாபார விஷயமாக வந்த வணிகர்கள் சிலர் இரண்டு மாம்பழங்களை அவனிடம் கொடுத்தனர். பழங்களைப் பெற்றுக் கொண்ட பரமதத்தன், தன் பணியாள் மூலம் அவற்றை வீட்டிற்குக் கொடுத்தனுப்பினான். புனிதவதியார் மாங்கனிகளைப் பெற்றுக்கொண்டு இல்லத்தில் ஓரிடத்தில் வைத்தார். பின் சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தார்.

அப்பொழுது மிகுந்த பசியுடன் சிவனடியார் ஒருவர் அங்கு வந்தார். அவரை வணங்கிய புனிதவதி அவருக்கு ஆசனம் அளித்து, தாகம் தீர்க்கத் தண்ணீர் அளித்தார். பின் உண்ணுமாறு வேண்டிக் கொண்டு விரைந்து உணவு தயாரித்தார். அவசரமாகச் சமைத்ததால் அவரால் அன்று கறியமுது செய்ய முடியவில்லை. அதனால் கணவன் கொடுத்தனுப்பியிருந்த மாம்பழங்களில் ஒன்றைக் கறியமுதிற்குப் பதிலாக வைத்துச் சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் அதனை விரும்பி உண்டார். பின் ஆசி கூறி விடைபெற்றார்.

சிவன் செய்த அற்புதம்
சிவனடியார் சென்ற சிறிது நேரத்தில் கணவன் பரமதத்தன் மதிய உணவு உண்ண இல்லம் வந்தான். கணவனை உபசரித்து, உணவு பரிமாறிய புனிதவதி, சிவனடியாருக்கு அளித்தது போக எஞ்சிய ஒரு மாம்பழத்தைக் கணவன் இலையில் இட்டாள். அதனை உண்ட பரமதத்தன் அதன் சுவையைக் கண்டு வியந்து, "மற்றொரு கனியும் இருக்குமே, அதையும் கொண்டு வா" என்றான்.

என்ன செய்வது என்று அறியாமல் திகைத்த புனிதவதி, மாம்பழம் கொண்டு வருவதற்குச் செல்வதைப் போல உள்ளே சென்றார். "இறைவா, ஒரு கனியை சிவனடியாருக்கு அளித்துவிட்டேன். மீதம் இருந்த ஒரு கனியை கணவனுக்கு இட்டுவிட்டேன். அதனை அறியாத கணவர் இப்போது மீண்டும் ஒரு மாம்பழம் கேட்கிறார், நான் என்ன செய்வேன்" என்று வருந்தி, சிவனைத் துதித்தார்.

சிவபெருமானின் மாபெரும் கருணையால் புனிதவதியின் கையில் மாங்கனி ஒன்று தோன்றியது. மகிழ்ந்த புனிதவதி சிவனின் கருணையை எண்ணி வணங்கினார். அந்தப் புதிய மாங்கனியைத் தன் கணவரது இலையில் இட்டார். பரமதத்தனும் அதனை உண்டான். அதன் சுவை மிக மிக இனிமையாக இருப்பதை அறிந்தவன், "இது முன்னர் நான் உன்னிடம் தந்த மாங்கனியல்ல; மூவுலகிலும் பெறுவதற்கு அரியது. இது உனக்கு எங்கிருந்து, எப்படிக் கிடைத்தது?" என்று கேட்டான்.

இது இறைவனின் அருளால் தோன்றியது என்பதைச் சொல்லத் தயங்கி, கணவனிடம் உண்மையை மறைத்தல் தகாது என்பதால் அதற்கும் அஞ்சி என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அம்மையார் சிறிதுநேரம் அமைதியாக நின்றார். பின் "இறைவனின் அருளால் இக்கனி தோன்றியது" என்று கூறி, நடந்த உண்மையைச் சொன்னார்.

மனைவி சொன்னதைப் பரமதத்தன் நம்பவில்லை. "சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், அதேபோல் மீண்டும் ஒரு கனியை அவன் அருளால் இங்கே வரவழைத்துத் தா, பார்க்கலாம்." என்றான்.

உடனே பூஜையறைக்குச் சென்று சிவபெருமானைத் தொழுத புனிதவதி, 'இன்னுமொரு மாம்பழத்தை இப்போது நீங்கள் எனக்கு அளிக்காவிட்டால் இதுவரை நான் சொன்னது பொய் என்று ஆகிவிடும். ஆகவே, ஐயனே, ஆதரித்தருள்வீராக' என்று வேண்டினாள்.

உடனே அவரது கையில் முன்போலவே மற்றொரு மாம்பழம் வந்து தோன்றியது. அதனைக் கொண்டுபோய்க் கணவரின் கையில் கொடுத்தார். அவனும் வியந்து அதைத் தன் கையில் வாங்கினான். அவன் வாங்கிய அக்கணமே அக்கனி மறைந்து போனது. அதைக் கண்டு அவன் மிகுந்த அச்சமடைந்தான். மனம் தடுமாறினான். "இறையருள் பெற்றவர் இவர். இவர் மனிதப்பிறவியன்று; தெய்வமே! இவர் இனி எனது மனைவியுமன்று" என்று மனதுள் நினைத்தான். 'தெய்வத்தன்மை உடைய இவருடன் குடும்பம் நடத்துதல் தகாது. விரைவில் இவரை விட்டு நீங்கிவிட வேண்டும்' என்று மனதுக்குள் முடிவு செய்தான். ஆனால் அதை யாருக்கும் சொல்லாமல், அவ்விடம் விட்டு அகன்றான்.



பரமதத்தனின் பயணம்
புனிதவதியின் கணவனான பரமதத்தன், சில நாட்களுக்குப் பின் "கடல் பயணம் செய்து பொருளீட்டி வரப்போகிறேன்" என்று கூறிப் புறப்பட்டான். பல இடங்களுக்கும் சென்று பொருட்களை விற்று நிரம்பப் பொருளீட்டி, இறுதியில் பாண்டிய நாட்டின் கடற்கரைப் பகுதி ஒன்றை அடைந்தான். சேர்த்து வைத்த செல்வத்தைக் கொண்டு அங்கே வணிகம் செய்தான். புகழ்மிக்க வணிகர் குலத்தில் பிறந்த ஒருவரது மகளைத் திருமணம் செய்து கொண்டான். புதிய இல்லற வாழ்க்கையைத் தொடங்கினான். ஒரு பெண் குழந்தைக்கும் தந்தையானான். அக்குழந்தைக்குப் 'புனிதவதி' என்ற பெயரை இட்டு மகிழ்ந்தான்.

கணவனுடன் மீண்டும் சந்திப்பு
இந்நிலையில் புனிதவதியாரின் உறவினர்கள், பரமதத்தன் பாண்டிய நாட்டில் மற்றொரு மனைவியுடன் வாழ்ந்து வருகிறான் என்ற செய்தியை அறிந்தனர். புனிதவதியைக் கணவனுடன் சேர்த்துவைக்கும் எண்ணத்தில் பரமதத்தன் வசிக்கும் நகரத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர்.

அவர்களின் வருகையை அறிந்த பரமதத்தன், தனது மனைவி மகளுடன் சென்று, "அம்மா, அடியேன் உமது திருவருளால் இனிது வாழ்கிறேன் இச்சிறு குழந்தைக்கு உங்கள் நினைவாக, உங்களது பெயரையே சூட்டியிருக்கிறேன். தாங்கள் ஆசிர்வதித்து அருள்புரிய வேண்டும்" என்று கூறிப் புனிதவதியின் கால்களில் விழுந்து வணங்கினான்.

உடனே புனிதவதி அச்செயலுக்கு அஞ்சி, ஒருபுறமாக ஒதுங்கி நின்றார். உறவினர்கள் அவன் அவ்வாறு வணங்கியதற்கான காரணத்தைக் கேட்க, பரமதத்தன் நடந்தவை அனைத்தையும் சொன்னான். அதைக் கேட்ட உறவினர்கள், 'இது என்ன ஆச்சரியம்!' என்று எண்ணித் திகைத்தனர்.

புனிதவதி பேயுருவம் பெற்றார்
கணவனின் முடிவு புனிதவதியின் மனத்தில் பெரும் வேதனையைக் கொடுத்தது. இளமையும், அழகும் கணவருக்காகத் தானேயன்றி பிறருக்காக அல்ல என்று நினைத்த அவர், "சிவபெருமானே, கணவருக்காக இதுநாள்வரை நான் காத்து வந்த, இந்த இளமை எழில்மிக்க இவ்வுடல் இனி எனக்கு வேண்டாம். என்றும் உன் திருவடியைத் தொழ விரும்பும் எனக்குப் பேய் வடிவைத் தந்தருளல் வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார்.

சிவபெருமானின் அருளால், அவ்வாறே, அழகும், வனப்பும், தசையும் நீங்கி, எலும்பு தெரியும் பேய் வடிவம் பெற்றார். சுற்றத்தார் பேய் வடிவம் பெற்ற புனிதவதியைத் தொழுது, அவரது தெய்வத்திறம் கண்டு அஞ்சி அவ்விடம் விட்டு நீங்கினர்.

காரைக்கால் அம்மையார்
பேய் வடிவம் பெற்ற புனிதவதி மனமகிழ்ந்து இறைவனைத் துதித்து 'அற்புதத் திருவந்தாதி' பாடினார். தொடர்ந்து 'திருஇரட்டை மணிமாலை' என்ற பிரபந்தத்தைப் பாடினார். அதுமுதல் தொடர்ந்து பல சிவத்தலங்களுக்குச் சென்று சிவனைத் தரிசித்தார். அவர் காரைக்காலைச் சேர்ந்தவர் என்பதால் மக்கள் அவரைக் 'காரைக்கால் அம்மையார்' என்று அழைத்தனர்.

கயிலை மலைப் பயணம்
நாட்டின் பல இடங்களுக்கும் சென்று சிவபெருமானைத் தரிசித்து வந்த காரைக்கால் அம்மையாருக்கு ஒருநாள் திருக்கயிலாயம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. உடன் புறப்பட்டார். வடநாட்டின் பல சிவத் தலங்களுக்கும் சென்று தரிசித்துவிட்டு இறுதியில் திருக்கயிலாய மலையின் அடிவாரத்தை அடைந்தார்.

தலையால் நடந்த தாய்
புனிதமான கயிலை மலைப்பகுதியில் காலால் நடப்பது தகாது என்பதால் காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து சென்றார்.

அவர் தலையால் நடந்து வருவதைப் பார்த்து அதிசயித்த பார்வதி தேவி, சிவபெருமானிடம், "தலையினால் நடந்து வரும் இவர் அன்புதான் என்னே?" என்று சொல்லி வியந்தார்.

அதற்குச் சிவபிரான் மகிழ்வுடன், தன் தேவியிடம் "வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை காண்" என்றார். மேலும், "இந்த உருவத்தை இவளே நம்மிடம் வேண்டிப் பெற்றுக்கொண்டாள்" என்றும் சொன்னார்.

அருகில் வந்த காரைக்காலம்மையாரைப் பார்த்த சிவபெருமான், "அம்மையே வருக" என்று அழைத்து வரவேற்றார்.

உலகத்துக்கெல்லாம் தாயும், தந்தையுமான இறைவன் "அம்மையே" என்று அழைக்கவும், உலகம் உய்ய இறைவன் அளித்த அந்தச் சொல்லைச் செவிமடுத்த அம்மை, "அப்பா" என்று சொல்லிச் சிவபெருமானின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள்.

சிவபெருமான், "அம்மையே, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்று கேட்டார்.

அதற்கு அம்மை,

"இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும் நான்மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும்போது
அடியின்கீழ் இருக்க என்றார்"


அது கேட்ட சிவபெருமான், "திருவாலங்காட்டில் நாம் ஆடுகின்ற பெருநடனத்தைக் கண்டு ஆனந்தித்து நீ எப்பொழுதும் நம்மைப் பாடிக் கொண்டிருப்பாயாக" என்று அருளிச் செய்தார்.

அதைக் கேட்ட அம்மை மனம் மகிழ்ந்து சிவபெருமானையும், உமையம்மையையும் தொழுது, மீண்டும் தலையாலேயே கயிலை மலை அடிவாரம்வரை நடந்து சென்று, பின் திருவாலங்காடு தலத்தை அடைந்தார். அங்கே சிவபெருமானின் உக்கிர தாண்டவமான ஊர்த்துவ தாண்டவத்தைக் கண்டார். அது கண்டு அகமகிழ்ந்து, மூத்த திருப்பதிகத்தைப் பாடினார். தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்து பல பாடல்களைப் பாடி இறைவனைத் துதித்து வாழ்ந்தார். இறுதியில் சிவபதம் பெற்றார்.

காரைக்கால் அம்மையாரின் நினைவாக இன்றும் ஆண்டுதோறும் ஆனி மாதம் பௌர்ணமி அன்று காரைக்காலில் உள்ள சுந்தரம்பாள் உடனாய ஸ்ரீகைலாசநாத சுவாமி கோயிலில் மாங்கனித் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இடர்களையா ரேனும் எமக்குஇரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் - சுடருருவில்
என்பு அறாக் கோலத்து எரியாடும் எம்மனார்க்கு
அன்பு அறாது என்நெஞ்சு அவர்க்கு

- காரைக்கால் அம்மையார், அற்புதத் திருவந்தாதி

பா.சு. ரமணன்

© TamilOnline.com