குற்றப் புதினங்கள், விஞ்ஞானக் கதைகள், குடும்பக் கதைகள், காதல் கதைகள், சமூகக் கதைகள், இஸ்லாமிய நீதிக் கதைகள் எனப் பலவிதமான படைப்புகளைத் தருபவர் ஆர்னிகா நாசர். இயற்பெயர் வி.ச. நாசர். இவர் நவம்பர் 13, 1960-ல், மதுரை கோரிபாளையத்தில், சம்சுதீன் - ரகிமா இணையருக்குப் பிறந்தார். தொடக்கக் கல்வியை நேருஜி ஆரம்பப் பள்ளியில் முடித்தார். உயர்நிலைக் கல்வி திண்டுக்கல் புனித மரியன்னை பள்ளியில். காந்திகிராமம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம் மூலமாக எம்.ஏ. (சமூகவியல்), எம்ஃபில் (சமூகவியல்) மருத்துவ மேலாண்மை நிர்வாகத்தில் எம்.ஏ. முதலிய பட்டங்களைப் பெற்றார். வெகுஜன தொடர்புக்கான முதுகலை பட்டயம், மருத்துவ நிர்வாகத்தில் பட்டயம் ஆகியவற்றையும் பெற்றார். தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கான மொழிபெயர்ப்புத் தேர்வு, மெடிக்கல் கோட் தேர்வு, அக்கவுண்ட் தேர்வுகள், யூஜிசி நெட் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார். தற்போது முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.
தொடக்க காலத்தில், திண்டுக்கல் முகமதியாபுரத்தில், 'டியாரா டியூஷன் சென்டர்' என்ற பெயரில் தனிப்பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்தினார். கிடைத்த ஓய்வுநேரத்தைப் பயனுள்ளதாக்க 'ஆர்னிகா' என்ற கையெழுத்து இதழ் ஒன்றை ஆரம்பித்து நடத்தினார். (ஆர்னிகா என்பது ஒரு மலரின் பெயர்). அதில் ஓவியமும் வரைந்தார். கதை, கட்டுரைகளை எழுதினார். வி.ச. நாசர், ஆர்னிகா நாசர் ஆனார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுகாதார அதிகாரியாகப் பணி சேர்ந்தார். மனைவி: வகிதா. மகள்: ஜாஸ்மின். மகன்: நிலாமகன்.
பள்ளிப்பருவத்தில் வாசித்த வாண்டுமாமா, தமிழ்வாணன் நூல்கள் ஆர்னிகா நாசருள் எழுத்தார்வத்தை விதைத்தன. ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், சுஜாதா போன்றோர் இவரது ஆதர்ச எழுத்தாளர்கள். ஆர்னிகா நாசரின் முதல் சிறுகதை, 'முதல் வகுப்பு டிக்கெட்' 1985ல், குங்குமம் இதழில் வெளியானது. தொடர்ந்து குமுதம், தினமலர் - வாரமலர், தினமலர் - கதைமலர், கல்கி போன்ற இதழ்களில் சிறுகதைகள் வெளியாகின. முதல் தொடர் 'குற்றாலக் கொலை சீசன்' தினமலர் - வாரமலர் இதழில் வெளியானது. முதல் நாவல் 'சுடச்சுட ரத்தம்' அக்டோபர் 1988-ல், மாலைமதியில் வெளியானது. தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள் குறுநாவல்கள் என்று எழுதிக் குவித்தார். 'கல்கண்டு' இதழில் பல தொடர் கதைகளையும், ஜி. அசோகனின் 'பாக்கெட் நாவல்' இதழில் பல நாவல்களையும் எழுதிப் புகழ்பெற்றார். சங்கர்லால், கணேஷ்=வசந்த், விவேக், பரத் போன்ற புதினத்தில் இடம்பெறும் துப்பறிவாளர்களின் வரிசையில் ஆர்னிகா நாசர் படைத்த 'டியாரா' ராஜ்குமாரும் இடம்பெற்றார்.
அக்டோபர், 1993-ல், சிதம்பரத்தில், தனது பதினாறு புத்தகங்களை ஒரே மேடையில் வெளியிட்டு லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார். தொலைக்காட்சிக்கும் இவர் பங்களித்தார் இவரது 'நீலக்குயிலே கண்ணம்மா' ஜீ தொலைக்காட்சியில் தொடராக ஒளிபரப்பப்பட்டது. இவரது படைப்புகளை மணிமேகலை பிரசுரம், வானதி பதிப்பகம், நக்கீரன், ஜீயே பப்ளிகேஷன்ஸ், நேஷனல் பப்ளிஷர்ஸ், புஸ்தகா நிறுவனம் போன்றவை வெளியிட்டுள்ளன. இவரது படைப்புகளை ஆய்வு செய்து ஒருவர் இளம் முனைவர் பட்டமும், மூவர் முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர்.
தனது படைப்புகளுக்காகப் பல்வேறு பரிசுகளும் அங்கீகாரங்களும் பெற்றார் ஆர்னிகா நாசர். தினமலர் வாரமலர் சிறுகதைப் போட்டியில் 'ஆறு பவுண்டு ரோஜாக்குவியல்' என்ற சிறுகதைக்காக முதல் பரிசு பெற்றார். தொடர்ந்து பல்வேறு பரிசுகளும், விருதுகளும் இவரைத் தேடிவந்தன.
ஆர்னிகா நாசர் நூல்கள்
நாவல்கள் இரத்தப்பந்து, தூண்டில் சூரியன், கொன்றுவிடு விசாலாட்சி, தாக்கு மின்னலே தாக்கு, பரபரப்பு பூகம்பம், ஆக்டோபஸ் விபரீதங்கள், சூழ்ச்சிகளுடன் போரிடு, தெய்வம் தந்த பூவே, எலிப்பொறி, இருள் தேசத்து சதி, ஒரு துளி நரகம், தமிழ்ச்செல்வி, நொடிக்குநொடி, சுடச்சுட ரத்தம், யாழினி, எல்லாப் பூக்களும் எனக்கே, நூறு கோடி தாகம், கனாக் கண்டேன் கண்ணே!, ரோஜா ஓவியம், தீ தித்திக்கும் தீ, கொலை வயல், வசீகரா வசீகரா, குற்ற ரோஜா, பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே, கனகசிந்தாமணி, லப்டப் லடாக், ஆக்ஸிஜன் நரகம், மின்மினி பிரபஞ்சம், கிருமி, மம்மி, மரணக்காடு, செக்கச்சிவந்த தங்கம், கொஞ்சம் கொல்லுங்கள் ராஜாவே, சாத்தானின் கவிதைகள், சாத்தான் தேவதை, மானே மயிலே மஞ்சரி, மழைக்குருவித் திருவிழா, சாமியம்மா, இரத்த சமுத்திரம், ஆர்னிகாவும் 1001 ஆவிகளும், ரோபோட் தொழிற்சாலை, திமிங்கல வேட்டை, பாதரச நிலவில் மரணப்புயல், ஆப்பிள் தேவதைகள் (சிறார் நாவல்). மற்றும் பல.
சிறுகதைத் தொகுப்புகள் பவளச் சூரிய மயக்கம், தீபாவளித் தாத்தா, நூறுகோடி தாகம், ஆர்கானிக் இலக்கியம், அம்மாவும் புஸ்ஸிக்குட்டியும், பத்துத் தலை தெரிவை, நாளை நமது நாள், ஒரு வாசகனின் மரணம், ஐஸ்வர்யா ராய்களும் கோவை சரளாக்களும், டாஸ்மாக் எச்சரிக்கை, தொலைந்து போன தோழிக்கு, ஜிப்ஷா காத்திருக்கிறாள், மற்றும் பல.
இஸ்லாமிய மார்க்க நூல்கள் உலகப் பொதுமறை திருக்குர் ஆன் - நீதிக்கதைகள், சொந்தமாய் ஒரு கபர்ஸ்தான் - இஸ்லாமிய நீதிக்கதைகளின் தொகுப்பு, திருமறை நபிமொழி - இஸ்லாமிய நீதிக்கதைகள் (பத்து தொகுதிகள்), மற்றும் பல.
கட்டுரை நூல்கள் சூரியன் சந்திப்பு: நேர்காணல் தொகுப்பு (இரண்டு பாகங்கள்), மற்றும் பல
ஆர்னிகா நாசர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள், 50 தொடர்கதைகள், குறுநாவல்களை எழுதியுள்ளார். நூற்றுக்கணக்கான பேட்டிகள் எடுத்துள்ளார். மூன்று வானொலி நாடகங்கள் எழுதியுள்ளார். 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமியச் சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவலை எழுதியுள்ளார்.
மொழிபெயர்ப்பாளராகவும் செயல்பட்டுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதியுள்ளார். கவியரங்குங்களுக்குத் தலைமை, மேடைப்பேச்சு, தன்னம்பிக்கைப் பேச்சு, விழாத் தொகுப்பு எனப் பல களங்களில் செயல்பட்டு வருகிறார். பணி ஓய்வுபெற்ற ஆர்னிகா நாசர், குடும்பத்தினருடன் தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.
அரவிந்த் |