பரதநாட்டியம்: பிரியங்கா ரகுராமன்
டிசம்பர் 9, 2023 அன்று, அமெரிக்காவில் இந்திய நடனத்தை ஊக்குவிக்கும் அமைப்பான 'யுவ பாரதி'யின் ஆதரவில் திருமதி பிரியங்கா ரகுராமன் பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றை வழங்கினார். பிரியங்கா, குரு 'கலைமாமணி' அனிதா குஹா (கலை இயக்குனர், பரதாஞ்சலி, சென்னை) அவர்களின் மூத்த சீடர். தற்போது அவர் கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதியில் 'பிரியதா ஆர்ட்ஸ்' என்ற பரதநாட்டியப் பள்ளியை நடத்தி வருகிறார். நிகழ்ச்சியில் பிரியங்கா பாரம்பரிய 'மார்கம்' ஒன்றை வழங்கினார்.

ஆதிசங்கரர் அருளிய கணேச பஞ்சரத்னத்துடன் பிரியங்கா நிகழ்ச்சியைத் தொடங்கினார். இந்த பாடல் ராகமாலிகையில் ஆதி தாளத்தில் அமைந்திருந்தது. வித்வான் ஸ்ரீ ராம்சங்கர் பாபு அமைத்த விறுவிறுப்பான ஜதிகளும் நுட்பமான அபிநயமும் பக்தி பாவமும் இதில் சிறப்பாக வெளிப்பட்டன.

பின்னர் நிகழ்ச்சியின் மகுடமான வர்ணத்திற்குச் சென்றார். வர்ணம் பரதநாட்டிய மார்கத்தில் மையமான, மிக விரிவான பகுதி. இது நடனக் கலைஞரின் பயிற்சி, திறமை மற்றும் கற்பனைத் திறன் ஆகியவற்றைச் சோதிக்கிறது. பொதுவாக சிருங்கார ரசத்தைச் சித்திரிக்கும். நாயகி தனது நாயகனைச் சந்திக்க ஏங்குவதை வருணிக்குமாறு அமைந்திருந்தது. ஆனந்தபைரவி ராகத்தில், ஆதி தாளத்தில், சிவானந்தம் (தஞ்சை நால்வர் குழு) அவர்கள் இயற்றிய "சகியே இந்த வேளையில்" என்ற இந்த வர்ணம் மன்னார்குடி ராஜமன்னாரைப் போற்றுவதாக இருந்தது. வித்வான் பி.ஆர். வெங்கடசுப்ரமணியம் அமைத்த ஜதிகளுடன், ராஜமன்னாரை அடைய எண்ணும் கதாநாயகி, தோழியின் உதவியை நாடுவதை அழகாகச் சித்தரித்தார். மன்னார்குடி கோவிலின் பிரம்மாண்டமான கோபுரங்கள், அவற்றில் உள்ள தசாவதார சிற்பங்கள், கோயிலின் மணிமண்டபங்கள், அனைத்தையும் அற்புதமாகக் காண்பித்தார். ராஜமன்னாரின் அழகை அற்புதமாக வர்ணித்தார். வர்ணத்தின் இரண்டாம் பாகத்தில், அவருடைய அடவுகள் இசையுடன் அழகாகக் கலந்தன.



அடுத்த பகுதி, திருமதி அம்புஜம் கிருஷ்ணாவின் 2 பாடல்களை இணைத்தவாறு அமைந்திருந்தது. முதலில், திருமதி சாருமதி அவர்களின் இசையமைப்பில் கர்ணரஞ்சனி ராகத்தில், "ஓம் நமோ நாராயணா" என்ற உருக்கமான பாடலில், தேவகி-வசுதேவர் இருவரும் மஹாவிஷ்ணுவை தினந்தோறும் பிரார்தித்ததன் பலனாகப் பரமாத்மாவான கிருஷ்ணரையே மகனாகப் பெற்ற வரலாற்றை விவரித்தார். அடுத்த பாடல் மதுரை N. கிருஷ்ணன் அவர்கள் இசையமைப்பில் ரீதிகௌளை ராகத்தில் அமைந்த "குருவாயூர் அப்பனே அப்பன்". குருவாயூர் கோயிலின் ஸ்தலபுராணத்தை வர்ணித்ததோடு, குருவாயூரப்பனின் அழகையும் கருணையையும் அருமையாக அபிநயித்தார். 'நாராயணா என்று நாவாற' என்ற வரிகளுக்கு மிகப் பொருத்தமாக பிரகலாதன் கதையையும் பிரியங்கா அழகாகச் சித்திரித்தார்.

தொடர்ந்து கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "பொன்னம்மாள் ரொம்ப பொல்லாதவள்" என்ற பாடல் இடம்பெற்றது. திருமதி B. மீனாக்ஷி அவர்களின் இசையமைப்பில் ராகமாலிகையில் அமைந்த இந்தப் பாடலில், பொன்னம்மாள் என்ற பெண்ணின்மேல் நாயகனின் ஆசை நகைச்சுவையாகச் சித்திரிக்கப்பட்டது. "அவளுடைய நேர்த்திக்கும் அழகுக்கும் இணையில்லை. அவளுடைய அழகான நடையும் மெல்லிய குரலும் கண்டு அன்னமும் குயிலும் வெட்கித் தலை குனிகின்றன" என்றவாறு உணர்ச்சிமிக்க வர்ணனையுடன் காண்பித்தார். இந்தத் தனித்துவமான பாடல் பார்வையாளர்களை எளிதில் கவர்ந்தது.



திரு பி.ஆர். வெங்கடசுப்ரமணியம் இயற்றிய தர்பாரி கானடா ராகத்தில் அமைந்த தரானா (ஹிந்துஸ்தானி பாரம்பரியத்தின் தில்லானா), மற்றும் மராத்தி மொழியில் ஹனுமான்மேல் அமைந்த அபங்கம் ஒன்றுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார். தரானாவில் தனித்துவமான அறுதி மற்றும் கோர்வைகளும் இசையுடன் பொருத்தமாக அமைக்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சிக்கு அற்புதமாக இசை வழங்கிய கலைஞர்கள்: திருமதி அனிதா குஹா மற்றும் திருமதி ஜெயஸ்ரீ ராமநாதன் (நட்டுவாங்கம்), திரு ஹரிப்ரசாத், திருமதி நந்தினி அரவிந்த் மற்றும் திருமதி நந்தினி ஆனந்த் சர்மா (வாய்ப்பாட்டு), திரு ராம்சங்கர் பாபு (மிருதங்கம்), திரு முருகானந்தம் மற்றும் திரு ஈஸ்வர் ராமகிருஷ்ணன் (வயலின்), திரு சுருதி சாகர் மற்றும் திரு ரமேஷ் (புல்லாங்குழல்). அனிதா குஹா அவர்களின் திறமிக்க நடன அமைப்பு, ஒவ்வொரு பாடலும் எளிதில் விளங்குமாறு இருந்தது. வர்ணம், தரானா ஆகியவற்றில் அனிதா குஹா அமைத்திருந்த ஜதிகளும் கோர்வைகளும் விறுவிறுப்பாகவும் தனித்துவமாகவும் இருந்தன. பிரியங்கா இந்த நிகழ்ச்சியில் கணேஷ பஞ்சரத்னத்தில் பக்தி, வர்ணத்தில் சிருங்காரம், உருக்கமாக அம்புஜம் கிருஷ்ணா அவர்களின் பாடல்கள், பிறகு நகைச்சுவையாக "பொன்னம்மாள்" எனப் பலவிதமான பாடல்களை வழங்கினார். பிரியங்காவின் நடன நிகழ்ச்சி முழுமையான விருந்தாக அமைந்திருந்தது.

மாதங்கி ஜானகிராமன்,
விரிகுடாப் பகுதி, கலிஃபோர்னியா

© TamilOnline.com