பாசிப்பருப்பு மசாலா தால் (Spicy Moong dhal)
தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - 1 கிண்ணம்
பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1 கிண்ணம்
தக்காளி (பொடியாக நறுக்கியது) - 1/4 கிண்ணம்
உரித்த பூண்டு முழுப் பல் - 1
கரம் மசாலாத் தூள் - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் (நறுக்கியது) - 1 தேக்கரண்டி
பெரும்சீரகம் - 1/4 தேக்கரண்டி
லவங்கப் பட்டை - 1 சிறிய துண்டு
உப்பு - தேவைக்கேற்ப
ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை

பிரஷர் பானில் (Pressure Pan) ஆலிவ் எண்ணெய் விட்டு, காய்ந்த பின்பு பெரும் சீரகம், லவங்கப் பட்டை போட்டு, சற்று வறுக்கவும். பின்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்துச் சிறிது வதக்கவும்.

பின்னர் கரம் மசாலாத் தூள், சிவப்பு மிளகாய்ப் பொடி, தேவையான உப்பு போடவும்.

பாசிப்பருப்பைக் கழுவி இதனுடன் சேர்த்து, 3 கிண்ணம் தண்ணீர் விட்டு, கரண்டியால் நன்றாகக் கலந்து விட்டு பிரஷர் பானை மூடவும். ஆவி வந்த பின்பு வெயிட்டைப் (weight) போட்டு ஐந்து முறை சத்தம் வந்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

பிரஷர் தானாக அடங்கிய பின்பு, திறந்து கரண்டியால் சற்று மசித்துக் கிளறி, பச்சைகொத்துமல்லி இலைகளைத் தூவவும்.

இதைச் சப்பாத்தி அல்லது பாசுமதி சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.

சரி இதெல்லாம் வேண்டாம். நமது தென்னிந்திய வழக்கப்படி சாதம், குழம்பு, ரசம், செய்ய வேண்டுமானால் அதையும் எளிய முறையில் சீக்கிரமாக செய்ய முடியும். துவரம் பருப்பை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குச் சேர்த்து வேகவைத்து குளிர்பதனப் பெட்டியில் (Refrigerator) வைத்துக் கொள்ளலாம்.

திடீர் குழம்பு மற்றும் ரசம் ஒரே முறையில் கீழே கண்டவாறு வைத்துவிடலாம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com