வேறுபட்ட உறவு
நான் சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையில் சேர்ந்து மூன்று மாதங்கள்ஆகிவிட்டன. இதற்கு முன் படிப்பு முடிந்ததும் திருச்சியில் ஒரு கம்பெனியில் தற்காலிகமாக வேலை பார்த்தேன். சென்னையில் அபார்ட்மென்ட் ஒன்றில் சிறிய ஃப்ளாட் பார்த்து அட்வான்ஸ் கொடுத்தேன். எவ்வளவு பேர் என்று வீட்டுக்காரர் விசாரித்தபோது இரண்டு பேர் என்றேன். பிறகு வெளியே வந்து 'கணவன், மனைவி என நினைத்துக் கொண்டிருப்பாரோ? பரவாயில்லை பெரியம்மாவையும் சேர்த்து இரண்டு பேர்தானே' என எண்ணி வந்துவிட்டேன்.

சனி ஞாயிறு லீவு. திங்கள் ஒருநாள் லீவு போட்டுவிட்டுத் திருச்சிக்குக் கிளம்பினேன். ரயிலில் கதவோரம் உள்ள ஒரு தனிச் சீட்டில் இருந்தேன்; சிதம்பரம் வந்தது. ஒரு பெண் மூட்டை முடிச்சு ஏதும் இல்லாமல் ரயிலில் ஏறுவதைப் பார்த்தேன். ஒருவேளை அவளது உறவினர் முதலில் ஏறி இருக்கலாம் என எண்ணினேன். எனது கவனம் பிறகு வேறு பக்கம் சென்றுவிட்டது.

சிறிதுநேரம் கிழித்து அதே பெண் லெட்ரின் பக்கம் ஒருவித பதற்றத்துடன் வந்தாள். வந்தவள் வலது கதவுப் பக்கம் திரும்பினாள். ஆடையைச் சரி செய்துகொள்ள மறைவுக்கு வந்திருக்கலாம் என எண்ணினேன். ஆனால் அவள் அந்த கதவின் தாழ்ப்பாளைத் திறக்க முயலுவது போலத் தோன்றியது, உடனேஅங்கு சென்று அவள் கையைப் பிடித்து என்ன செய்கிறாய் எனக் கேட்டேன். என்னை விட்டுவிடுங்கள். இதோ கொள்ளிடம் வரப்போகிறது நான் சாகவேண்டும். இப்படி ஒருவர் கையைப் பிடித்ததால்தான் பிள்ளையை வயிற்றில் சுமக்கிறேன். இப்போதாவது என்னை விடுங்கள் என்று கெஞ்சினாள். நான் சொல்வதைக் கேள். இல்லையேல் மற்ற பயணிகளையும் எழுப்பி விடுவேன் எனச் சற்று மிரட்டலாகக் கூறவே அடங்கினாள்.

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய கொள்ளிடமும் அது சமயம் கடந்து விட்டது. அவளை சமாதானப் படுத்தினேன். பிறகு மௌனம்.

மாயவரத்தில் இருவரும் இறங்கினோம். நடந்தவற்றை விரிவாகக் கூறினாள். அவளுக்கு நான் வாக்களித்தேன். உன் அண்ணனாக என்னைப் பார். பிறக்கப்போகும் குழந்தையை நான் தந்தைபோலப் பார்த்துக் கொள்வேன் என்றேன்.

அவள் கதையைச் சுருக்கமாக கூறுகிறேன். அவள் பெயர் லீலா. சிதம்பரத்தில் ஆசிரியராகப் பணி புரிகிறாள். ஒரு பையனை இரண்டு வருடமாக காதலித்து வந்தாளாம். ஒருநாள் கொட்டும்மழையில் இவர்களைத் தம்பதிகள் என நினைத்து ஒரு அம்மாள் தன் வீட்டில் அழைத்து உபசரித்திருக்கிறாள். அங்கு கிடைத்த தனிமையில் அவள் இந்த நிலைக்கு ஆளாகிவிட்டாள். இருவரும் தத்தம் வீட்டில் காதலைத் தெரியப்படுத்தி விடலாம் என இருந்தனராம். ஒரு மாதத்தில்அவளது உடம்பில் ஒரு வித்தியாசத்தை கண்டுள்ளாள். அதற்குள் விதி விளையாடிவிட்டது. காதலன் விபத்தில் இறந்து விட்டான்!

இந்த நிலையில் அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. வீட்டுக்குத் தெரிந்தால் என்ன நடக்கும்! இந்த முடிவிற்கு வந்து விட்டாள். திருச்சிக்குப் போய் பெரியம்மாவிடம் கூறிப் பரிகாரம் கேட்கலாம் என்றேன். அவளும் வாழ்க்கையில் சிரமப்பட்டு வந்தவவள்தான், உன் கஷ்டத்தை உணருவாள் என்றேன்.

இருவரும் டிஃபன் சாப்பிட்டுவிட்டு அருகில் இருந்த ஜவுளிக் கடையில் அவளுக்கு மாற்றுத்துணி வாங்கிக்கொண்டு பஸ்ஸில் திருச்சிக்குக் கிளம்பினோம். அம்மாவுக்கு நான் வரப்போவது தெரியரது, சர்ப்ரைஸ் கொடுக்கணும் என்று நினைத்தேன். நான் வருவது அவருக்கு உண்மையிலேயே ஆச்சரியம்தான். அனால் என்கூட இவள் ஒருத்தி வருகிறாளே. வீட்டுக்குள் நுழைந்தோம். அம்மாவின் காலில் இவள் விழுந்துவிட்டாள் இதை நானும் எதிர்பார்க்கவில்லை. அம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. என்மீது கோபமான சந்தேகப் பார்வையை வீசினாள். சுருக்கமாக நடந்ததைக் கூறி அவரைத் தெளிவுபடுத்தினேன். என்னைப் புகழ்ந்து பேசி, அவளுக்கும் ஆறுதலை கூறினாள்.

திருச்சியிலிருந்து சென்னைக்கு மாறினோம். புது இடம். யாருக்கும் எதுவும் தெரியப் போவதில்லை. வெளி உலகிற்கு நான் அவளது கணவன் அவ்வளவே. அனால் இந்த உறவு எப்படியெனில் பெரியம்மாவுக்கு அவள் மருமகள் இல்லை. எனக்கு அவள் மனைவியும் இல்லை. அவளோ சுமங்கலியும் இல்லை, அமங்கலியும் இல்லை. கணவனால் கைவிடப்பட்ட வாழாவெட்டியும் இல்லை. அந்த குழந்தைக்கு நான் தகப்பனுமில்லை!

ஓரிரு நாளில் எனது நண்பன் ரகு கையில் ஒரு தினசரியுடன் வந்தான். அவனுக்கும் இந்த விஷயம் பூராவும் தெரியும். "இந்த விளம்பரத்தைப் பார், இது லீலா ஃபோட்டோதானே" என்றான். ஆமாம், அவள் வீட்டு விளம்பரம்தான். இவளைக் காணவில்லை எனக் கொடுத்திருந்தார்கள். பெரியம்மாவிடம் காண்பித்தேன். அதைப் பார்த்துவிட்டு லீலாவிடம் காண்பி என்றாள். காண்பித்தேன் அவள் அதை வாங்கிப் பார்த்துவிட்டு மார்புடன் அணைத்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள். அதைக் கிழித்துப் போடவில்லை.

அன்று சரியாகச் சாப்பிடவுமில்லை. பெரியம்மா இந்தத் தருணத்தில் ஒரு யோசனை சொன்னாள். பெண்மனம் இரங்கினால் கர்ப்பவதி, ஆண் மனம் இரங்கினால் கடனாளி என்பார்கள். இப்போது ரகுவின் மனம் அப்படித்தான் ஆனது. அவனுக்கும் ஒரு எண்ணம் இருந்தது.

இதைப் பெரியம்மா புரிந்துகொண்டு விட்டாள். ரகுவிற்கு இந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து வைக்கலாமே என்றாள். நிதானமாக அவளுடைய சம்மதத்தைப் பெற்றோம். இந்த நிலையில் வேறு வழி தெரியவில்லை. லீலா வீட்டிற்குத் தகவல் கொடுத்து வரவழைத்தோம். பொறுமையாக அவர்களுக்கு விளக்கிச் சொல்லி புரியவைத்தோம்.

இத்துடன் நிற்காமல் இவளது தங்கை வசந்தியை எனக்குப் பேசி முடித்தார்கள். இனிதாகவே இரண்டு கல்யாணங்களும் நடந்தேறின. இந்தப் பெருமை என் பெரியம்மாவையே சேரும். இப்போது அந்த வேறுபட்ட உறவு, மாறுபட்ட உறவாகிவிட்டது.

நரசிம்மன்

© TamilOnline.com