நம்பியாண்டார் நம்பி
தோற்றம்
திருத்தொண்டர்களின் வரலாற்றைக் கூறும் 'திருத்தொண்டர் திருவந்தாதி' என்னும் நூலைப் படைத்தவர் நம்பியாண்டார் நம்பி. திருத்தொண்டர் திருவந்தாதியை இயற்றியதோடு, தேவாரப் பாடல்களைத் தேடிக் கண்டறிந்து அவற்றைத் திருமுறைகளாக வகுத்ததும் இவர்தான். இவர் சிதம்பரத்தை அடுத்த திருநாரையூரில் ஆதிசைவர் குலத்தில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் அனந்தீசர். அனந்தீசர் அவ்வூரில் இருக்கும் பொள்ளாப் பிள்ளையார் ஆலயத்தின் பூஜகர். 'பொள்ளா' என்றால் 'உளியினால் செதுக்கப்படாத' என்பது பொருள். அந்த வகையில் சிற்பியின் கை வண்ணத்தில் உருவாகாமல், சுயம்புவாக எழுந்தருளிய பிள்ளையார் என்பதால் இவர், பொள்ளாப் பிள்ளையார் என்று அழைக்கப்பட்டார்.

"நம்பி, பொறு!"
உரிய வயது வந்ததும் மகன் நம்பிக்கு வேதாகமங்களைக் கற்பித்த அனந்தீசர், உபநயனமும் செய்து வைத்தார். ஒருநாள் அனந்தீசர் வெளியூர் செல்ல நேர்ந்ததால் நம்பியை அழைத்து அன்றுமட்டும் கோவிலுக்குச் சென்று பிள்ளையாரைப் பூஜித்து வருமாறு கூறினார். சிறுவனாகிய நம்பி நிவேதனம், அர்ச்சனைப் பொருட்களுடன் ஆலயத்துக்குப் புறப்பட்டார்.

விநாயகருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்தார். இறைவன்முன் நிவேதனப் பொருட்களைப் படைத்து இருகை கூப்பி, "எம்பெருமானே, அமுது செய்தருள வேண்டும்" என்று வேண்டிக் கொண்டார்.

விநாயகப் பெருமான் அதை உண்பார் என்று காத்திருந்தார். வெகுநேரமாகியும் விநாயகர் வரவில்லை. தாம் ஏதோ தவறு செய்து விட்டோம் போலும்! அதனால்தான் விநாயகப் பெருமான் நிவேதனத்தை ஏற்கவில்லை என்று எண்ணிய நம்பி அழுதார், அரற்றினார், தம் தவறுகளை மன்னிக்கும்படி வேண்டினார். அப்பொழுதும் பெருமான் வரவில்லை. "நீ இந்தத் திருவமுதை ஏற்கவில்லை என்றால் நான் இந்தத் தூணில் முட்டிக்கொண்டு உயிர் துறப்பேன்" என்று சொல்லி, தூணில் தலையை முட்டிக் கொள்ள ஆரம்பித்தார்.

சிறுவனின் அன்புக்கு இரங்கிய பெருங்கருணைப் பெருவயிறன் உடனே அங்கு தோன்றி, "நம்பி, பொறு" என்று சொல்லி, நிவேதனப் பொருள் முழுவதையும் உட்கொண்டார்.

ஞானோபதேசம்
அதைக் கண்டு மகிழ்ந்த நம்பி, விநாயகப் பெருமானை வணங்கி, "ஐயனே, நான் இன்று பள்ளிக்குச் செல்ல நேரமாகி விட்டது. தாமதமாகச் சென்றால் ஆசிரியர் அடிப்பார். ஆகையால் எல்லாம் அறிந்த நீங்களே இன்று எனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும்" என்று வேண்டினார்.

பெருமானும் சம்மதித்தார். ஞான விநாயகரிடம் ஞானோபதேசம் பெற்ற நம்பி கலைஞானி ஆனார். நம்பியாண்டார் நம்பியாக உயர்ந்தார். நாளடைவில் பெற்றோருக்கும் உற்றோருக்கும் இந்த விஷயம் தெரிய வந்தது. அனைவரும் வியந்தனர். மகிழ்ந்தனர்.

மன்னனின் வேண்டுகோள்
மாமன்னன் ராஜராஜனுக்கு இச்செய்தி எட்டியது. வியந்துபோன அவன், விநாயகப் பெருமானுக்காகப் பல்வேறு நிவேதனப் பொருட்களை எடுத்துக் கொண்டு நம்பி இருக்கும் திருநாரையூரை நாடி வந்தான். நம்பியைக் கண்டு பணிந்து வணங்கினான். தான் கொண்டு வந்த உணவுப் பொருட்களை பொள்ளாப் பிள்ளையாருக்குப் படைத்து அவரை ஏற்றுக்கொள்ளச் செய்யும்படி வேண்டி நின்றான்.

நம்பியும் ஆலயம் சென்று, திருவமுது படைத்து பொள்ளாப் பிள்ளையாரை வேண்டி நின்றார். அவரும் தோன்றி அவற்றை ஏற்றுக் கொண்டார். அதைக் கண்டு வியந்த மன்னன் நம்பியின் அடிபணிந்து, "ஐயா! அடியேனுக்கு ஒரு வேண்டுகோள் உண்டு. மூவர் பாடிய திருமறைகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. திருத்தொண்டர் வரலாறுகளும் மக்களுக்குக் கிடைக்கவில்லை. அவற்றைத் தாங்கள் கண்டறிந்து, தொகுத்துத் தரவேண்டும்" என்றான்.

நம்பி அதனை ஏற்று, "இது இப்பொள்ளாப் பிள்ளையாரின் அருளினால் மட்டுமே சாத்தியமாகும்" என்று சொல்லி விநாயகரைப் பணிந்தார். திருவருள் புரிய வேண்டினார்.

நம்பியாண்டார் நம்பி இயற்றிய நூல்கள்
திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
திருத்தொண்டர் திருவந்தாதி
ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி
ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை
ஆளுடையபிள்ளையார் திருஉலாமாலை
ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்
ஆளுடையபிள்ளையார் திருத்தொகை
திருநாவுக்கரசு நாயனார் திரு ஏகாதசமாலை


விநாயகரின் அருள்
பக்தனின் கோரிக்கையை ஏற்ற விநாயகப் பெருமான் "மூவர் பாடிய திருமுறைகள் சிதம்பரம் தலத்தில் வைக்கப்பட்டுள்ளன. சிற்றம்பலத்தில் நடராஜர் சன்னதிக்குப் புறத்தே இருக்கும் ஓர் அறையில், மூவரது கைகளின் அடையாளம் பொறிக்கப்பட்ட ஓரிடத்தில் அவை உள்ளன" என்று அசரீரியாக வழி காட்டினார். மேலும் நம்பியாண்டார் நம்பிக்கு தேவாரத் திருமுறைகள் பற்றியும், திருத்தொண்டர் வரலாறு பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

விநாயகரைப் பணிந்து தொழுத நம்பி, திருமுறைகள் இருக்கும் இடம் பற்றி மன்னனுக்குத் தெரிவித்தார்.

மன்னனும் மகிழ்ந்து, தில்லை திருத்தலம் சென்று தில்லைவாழ் அந்தணர்களிடம் அதுபற்றித் தெரிவித்தான். அவர்களோ, மூவரின் கை அடையாளம் வைக்கப்பட்ட அறை என்பதால், அம்மூவரும் அங்கே வந்தால்தான் அறையைத் திறக்க முடியும். இல்லாவிட்டால் முடியாது என்றனர்.

கிடைத்தன திருமுறைகள்!
நம்பியுடன் ஆலோசித்த மன்னன், தேவார மூவர் உருவச் சிலைகளுக்குப் பெருவிழா எடுத்து, அவர்களுக்குப் பூஜைகள், அர்ச்சனைகள் செய்து, பல்லக்கில் அமர்த்தி, சிதம்பரம் தலத்திற்கு எழுந்தருளச் செய்தான். சிற்றம்பலத்திற்கு அருகே உள்ள அறையருகே வந்ததும் அங்கு அவர்களை நிறுத்தி அம்பலக் கூத்தனை வேண்டித் துதித்தான். நம்பியாண்டார் நம்பி பொள்ளாப் பிள்ளையாரையும், அம்பலவாணனையும், அப்பர், சுந்தரர், சம்பந்தர் என்னும் மூவரையும் அறையைத் திறக்க வேண்டி மனத்தால் துதித்தார். பின் அங்குள்ள அந்தணர்களிடம், "மூவரும் வந்துவிட்டனரே! இனி இந்த அறையைத் திறக்கத் தடையேதுமில்லையே!" என்று கேட்டார்.

வேறு வழியில்லாத தில்லைவாழ் அந்தணர்கள் கதவைத் திறந்தனர். அங்கே அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரது கை அடையாளம் பொறிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அனைவரும் வியந்தனர். அதே சமயம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அந்த ஏடுகளைக் கறையான் புற்று மூடியிருக்கக் கண்டு வருந்தினர். புற்றை அகற்றி, சுவடிகளைத் தூய்மைப்படுத்திப் பார்த்தபொழுது பல சுவடிகள் செல்லரித்துச் சிதைந்திருந்தன. அதுகண்டு மன்னன் அளவில்லாத துயருற்றான். நம்பி வருந்தினார்.

திருமுறை தொகுத்தல்
அப்பொழுது சிவபெருமான் அசரீரியாக, "மன்னா, வருந்த வேண்டாம்! தேவார ஏடுகளில் இக்காலத்துக்கு வேண்டியதை மட்டும் வைத்துவிட்டு மற்றவற்றை யாமே செல்லரிக்கச் செய்தோம்" என்று சொன்னார். மன்னன் மகிழ்ந்து சிவபெருமானைத் தொழுதான். ஏடுகளைத் தொகுத்துத் தருமாறு நம்பியாண்டார் நம்பிகளை வேண்டிக் கொண்டான்.

அவர் அதற்கு ஒப்பி, திருமுறைகளைத் தொகுத்தளித்தார். சம்பந்தர் அருளிய தேவாரப் பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளாகவும், நாவுக்கரசர் அருளிய தேவாரப் பதிகங்களை நான்கு, ஐந்து, ஆறாவது திருமுறைகளாகவும், சுந்தரர் தேவாரத்தை ஏழாம் திருமுறையாகவும் வகுத்தருளினார். இவற்றோடு மாணிக்கவாசகரின் திருவாசகம், திருக்கோவையார் ஆகியவற்றை எட்டாம் திருமுறையாகவும், திருமாளிகைத்தேவர் போன்றோர் அருளிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு போன்றவற்றை ஒன்பதாம் திருமுறையாகவும் வகுத்தார். திருமூலர் அருளிய திருமந்திரத்தைப் பத்தாம் திருமுறையாகவும் திருவாலவாயுடையார் அருளிய திருமுகப்பாசுரம் முதலிய பிரபந்தங்களை பதினொன்றாம் திருமுறையாகவும் தொகுத்தருளினார்.

நம்பியாண்டார் நம்பி, சுந்தரர் அருளிய திருத்தொண்டத்தொகையினை மூல நூலாகக் கொண்டும், பொள்ளாப் பிள்ளையார் தனக்கு உபதேசித்தருளிய நாயன்மார்களின் பிற வரலாற்றுச் செய்திகளை இணைத்தும் 'திருத்தொண்டர் திருவந்தாதி' என்னும் நூலை ஆக்கினார். மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க, அந்நூலையும், பொள்ளாப் பிள்ளையார் மீது தான் இயற்றிய 'திருநாரையூர் விநாயகர் திரு இரட்டை மணிமாலை', ஞானசம்பந்தர் மீது இயற்றிய 'ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி', 'ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை', 'திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை' உள்ளிட்ட சில நூல்களையும் பதினோராம் திருமுறையில் இணைத்தார்.

தேவாரப் பண்கள்
இவ்வாறு தொகுத்த திருமுறைகளுக்குப் பண் அமைக்க விருப்பம் கொண்டு, இறைவனை வேண்ட, சிவபெருமான், "திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் வந்த ஒரு பெண்மணிக்கு இவற்றின் பண்களை அறியும் ஆற்றலை. வழங்கியிருக்கிறோம்" என்று அறிவுறுத்தினார். அதன்படி பாணர் வாழ்ந்த திருஎருக்கத்தம்புலியூர் சென்று அப்பெண்மணியைக் கண்டு வணங்கி, இறைவனின் ஆணையைச் சொல்ல, அவரும் பண்ணமைக்க இசைந்தார். அம்பலக்கூத்தன் சன்னிதி முன்பு தேவாரப் பதிகங்கள் இசைக்கப்பட, அம்மையார் அவற்றுக்குப் பண்ணமைத்தார். அதுமுதல் தேவாரப் பதிகங்களைப் பண்ணோடு இசைக்கும் மரபு ஏற்பட்டது.

சேக்கிழாரின் பெரியபுராணம்
சுந்தரரால் இயற்றப்பட்ட திருத்தொண்டத் தொகையையும், நம்பியாண்டார் நம்பியால் இயற்றப்பட்ட திருத்தொண்டர் திருவந்தாதியையும் மூல மற்றும் வழி நூல்களாக வைத்தே விரிநூலாக 'திருத்தொண்டர் புராணம்' என்னும் பெரியபுராணத்தைச் சேக்கிழார் பெருமான் படைத்தார். மக்களும் நாயன்மார்களின் பெருமையை அறிந்தனர். அறுபத்து மூவரும் அடியவர்களாய்ச் சிவாலயங்களில் இடம்பெற்றனர்.

இதற்கெல்லாம் முக்கியக் காரணமாய் அமைந்தவர் நம்பியாண்டார் நம்பி. அவருக்குத் துணை நின்றவன் மாமன்னன் ராஜராஜ சோழன். அதனால் அவன் 'திருமுறை கண்ட சோழன்' என்று போற்றப்பட்டான்.

ஞானசம்பந்தரை தனது ஞானகுருவாகக் கொண்டு வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி, வெகுகாலம் சிவத்தொண்டு செய்து வாழ்ந்து இறுதியில் சிவபதம் அடைந்தார்.

தொழுதும் வணங்கியும் மாலயன்
தேடரும் சோதிசென்றாங்
கெழுதும் தமிழ்ப்பழ ஆவணம்
காட்டி எனக்குன்குடி
முழுதும் அடிமைவந் தாட்செய்
எனப்பெற்ற வன்முரல்தேன்
ஒழுகு மலரின்நற் றார்எம்பி
ரான்நம்பி யாரூரனே.
- திருத்தொண்டர் திருவந்தாதி


பா.சு. ரமணன்

© TamilOnline.com