சாந்தா தத்
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர் எனப் பல திறக்குகளில் இயங்கி வருபவர் சாந்தா தத். தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் பிறந்தார். எஸ்.எஸ்.கே. எனப்படும் சோமசுந்தர கன்யா வித்யாலயாவில் பள்ளியிறுதி வகுப்புவரை படித்தார். இளவயதிலேயே தத்தாத்ரேயாவுடன் திருமணம் நிகழ்ந்தது. அதன் பின் கணவருடன் ஹைதராபாதிற்குக் குடி பெயர்ந்தார். கணவர், மனைவியின் திறமையை அறிந்து ஊக்குவித்தார். சாந்தா தத், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளை முழுமையாகக் கற்றுக் கொண்டார்.

சாந்தா தத்தின் முதல் படைப்பு ஆனந்தவிகடனில் வெளியானது. தொடர்ந்து கல்கி, அமுதசுரபி, கலைமகள், சாவி, குங்குமம், ராணி, இதயம் பேசுகிறது, மங்கையர் மலர், தினமணிகதிர், தினத்தந்தி, உரத்தசிந்தனை போன்ற இதழ்களில் எழுதினார். எழுத்தாளரும் 'கனவு' இலக்கிய இதழின் ஆசிரியருமான சுப்ரபாரதிமணியன் அப்போது செகந்திராபாதில் வசித்து வந்தார். அவர் சாந்தா தத்தை இலக்கியச் சிற்றிதழ்களில் எழுத ஊக்குவித்தார். அவரது ஊக்குவிப்பால் நண்பர் வட்டம், சுபமங்களா, முங்காரி போன்ற இலக்கியச் சிற்றிதழ்களில் எழுதினார் சாந்தா தத். அதுபோல மொழிபெயர்ப்புத் துறையிலும் சாந்தா தத்தை சுப்ரபாரதிமணியன் ஈடுபடுத்தினார். அவரது தூண்டுதலால் தெலுங்கிலிருந்து பல படைப்புகளைத் தமிழுக்கு மொழிபெயர்க்கத் தொடங்கினார் சாந்தா தத்.

சாந்தா தத்தின் முதல் மொழியாக்க நூல் 'தெலுங்கானா சொல்லும் கதைகள்'. தெலுங்கானாப் போராட்டத்தின் தொடக்கக் காலகட்டங்களைச் சித்திரிக்கும் கதைகள் இவை. தொடர்ந்து பல படைப்புகளைத் தமிழில் மொழியாக்கம் செய்தார். இவரது மொழியாக்க நூல்கள் சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள், நாவல்கள் எனப் பன்முகத்தன்மைக் கொண்டவையாய் அமைந்தன.



நேரிடை மொழியாக்கம் காரணமாக, மூலநூலின் அடிப்படைத் தன்மைகளில் மாற்றமேதும் செய்யாமல், மூன்றாம் மொழியின் உதவி ஏதுமின்றி, சிறப்பாகத் துல்லியமாக வெளிபடுத்த சாந்தா தத்தினால் முடிந்தது. அதன் காரணமாக, சாகித்ய அகாதமி வெளியிட்ட நூல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்யும் வாய்ப்பைப் பெற்றார். சாகித்திய அகாதெமி விருது பெற்ற தெலுங்கு நாவலின் மொழிபெயர்ப்பான 'எரியும் பூந்தோட்டம்' நல்ல வரவேற்பைப் பெற்றது. மாலதி செந்தூர் எழுதிய நாவலின் மொழிபெயர்ப்பான 'இதய விழிகள்' பரவலான வாசக வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழில் எழுதப்பட்ட நாவலைப் போன்றே அந்நாவலைச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருந்தார் சாந்தா தத்.

தமிழிலும், தெலுங்கிலும் பல படைப்புகளைத் தந்திருக்கும் சாந்தா தத், தம் சிறுகதைகளில் ஆந்திரா தெலுங்கானா பிரிவினை பற்றியும் அதன் பின்னான வாழ்க்கை பற்றியும் கவனப்படுத்தியுள்ளார். இவரது மொழியாக்கச் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் திசை எட்டும், தமிழ் லெமூரியா, கணையாழி, காக்கைச் சிறகினிலே, நிழல், கனவு, மகாகவி, கதைசொல்லி, காணிநிலம், தளம், இலக்கியச் சாரல், நிறை எனப் பல இதழ்களில் வெளியாகின. சாந்தா தத், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என நானூறுக்கும் மேலான படைப்புகளைத் தந்துள்ளார். 18க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.

சாந்தா தத்தின் நூல்கள்
சிறுகதைத் தொகுப்புகள்: உயிர்ப்பு, எல்லைகள், இவர்கள், வாழ்க்கைக்காடு.
கட்டுரை நூல்கள்: ஆண்களுக்கான இட ஒதுக்கீடு, ஹைதராபாத் டைரி.
மொழியாக்க நூல்கள்: (தெலுங்கிலிருந்து தமிழுக்கு) கையளவு கடல் (தெலுங்குச் சிறுகதைகள்); மோகனா ஓ மோகனா மற்றும் சில கவிதைகள்; இருபதாம் நூற்றாண்டின் தெலுங்குப் பெண் எழுத்தாளர்கள்; வீரத்தெலுங்கானா சொல்லும் கதைகள் மற்றும் பல.


சாந்தா தத், தனது இலக்கிய முயற்சிகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். அமுதசுரபியில் வெளியான 'கோடை மழை' என்னும் சாந்தா தத்தின் சிறுகதை 'இலக்கியச் சிந்தனை' அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான பரிசைப் பெற்றது. இதே சிறுகதை, தமிழ்நாடு அரசின் சமச்சீர்க் கல்விப் புதிய பாடத் திட்டத்தின் கீழ், பன்னிரண்டாம் வகுப்புத் தமிழ் பாட நூலில் இடம் பெற்றுள்ளது. சென்னை ராஜாஜி அறக்கட்டளை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, கோவை லில்லி தேவசிகாமணி விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பரிசு, சென்னை 'லேடீஸ் ஸ்பெஷல்' இதழ் விருது, நியூ செஞ்சுரி புத்தக நிலைய விருது, ஹைதராபாத் கோதராஜு இலக்கிய விருது, உரத்த சிந்தனை அமைப்பின் சிறந்த எழுத்தாளர் விருது, தமிழ்நாடு சிற்றிதழ் சங்க விருது, எழுத்தரசி விருது, நல்லி திசை எட்டும் மொழியாக்க இலக்கிய இதழ் விருது, சென்னை மொழிபெயர்ப்பாளர் சங்க விருது, தமிழ் இலக்கியப் பெருமன்ற விருது, ஹைதராபாத் தெலுங்கு இலக்கிய அமைப்புகள் அளித்த விருது எனப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார், சாந்தா தத்.

ஹைதராபாத்தில் வசித்து வரும் சாந்தா தத், 'நிறை' மாத இதழின் ஆசிரியர். 'நல்லி திசை எட்டும்' மொழிபெயர்ப்பு இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார். அவ்விதழின் தெலுங்கு மொழியாக்கப் பிரிவின் ஆசிரியராகச் செயல்பட்டு வருகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com