ஸ்ம்ரிதி விஸ்வநாத்
ஸ்ம்ரிதி விஸ்வநாத் ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட், சிறந்த பாடகர்; தேர்ந்த பரதநாட்டியக் கலைஞர். சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் ஏ கிரேடு கலைஞர். பல நாடுகளில் நடக்கும் பல்வேறு நாட்டிய நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு வருகிறார். பல்வேறு விருதுகள் பெற்றிருக்கும் ஸ்ம்ரிதி விஸ்வநாத், தனது நாட்டிய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அதிலிருந்து…

★★★★★


கே: பரத நாட்டியத்தின்மீது ஆர்வம் ஏற்பட்டது எப்போது?
ப: என்னுடைய குடும்பம் பாரம்பரியமாக இசை சார்ந்த குடும்பம். என் தந்தைவழிப் பாட்டி கலைமாமணி சீதா துரைசுவாமி ஜலதரங்க வித்வான். நாற்பது வயதுக்குப் பிறகு, தனது குடும்பக் கடமைகள் எல்லாம் முடிந்த பின்னர் தான் அவர் முழு அளவில் கச்சேரிகள் செய்தார். 40 வயதில் தொடங்கி 80 வரை பாட்டி ஏராளமான கச்சேரிகளில் வாசித்தார். அந்தக் காலகட்டத்தில்தான் நான் வளர்ந்தேன். பாட்டிதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே வீட்டில் இசையும் நடனமும் நிகழ்ந்து கொண்டிருந்து. அத்தைகள் இருவரும் கலாக்ஷேத்ரா மாணவிகள். அப்பா கிருஷ்ணமூர்த்தி, எனது அக்கா பிறந்த பிறகு மஸ்கட்டில் இருந்தார். எனக்கும் அக்காவிற்கும் ஆறு வயது வித்தியாசம்.

அக்கா, சிறு வயதில் எனது அத்தையிடம் பரதம் கற்றார். சிறு குழந்தையான என்னை அத்தை வீட்டுக்கு உப்பு மூட்டை தூக்கிக் கொண்டு போவார். எனக்கு அப்போது 3 வயது இருக்கும். வகுப்பில் அவள் ஆடுவதைக் கவனிப்பேன். மற்றவர்களின் நாட்டியத்தையும் கவனிப்பேன்.

அம்மா ஆனந்தலட்சுமி, கீதா சுந்தரேசன் அவர்களின் மாணவி. கீதா சுந்தரேசன், டி.கே. பட்டம்மாளின் மாணவி. அம்மா மஸ்கட்டில் வசிக்கும்போது நிறையக் குழந்தைகளுக்கு இசை சொல்லிக் கொடுத்திருக்கிறார். இப்படி இசையும், நடனமும் நிரம்பிய பின்னணியில் வளர்ந்ததால் எனக்கும் இயல்பாகவே அவற்றின்மீது ஆர்வம் வந்தது.



கே: உங்கள் இளமைப்பருவம் குறித்துச் சொல்லுங்கள்…
ப: நான் பிறந்தது, ஆறாம் வகுப்புவரை படித்தது எல்லாமே மஸ்கட்டில். என் அக்கா மெடிகல் படிக்க வேண்டும் என்பதற்காகச் சென்னைக்கு வந்தோம். 2006-ல் நான் எனது குரு நாட்டிய மேதை அனிதா குஹா அவர்களிடம் மாணவியாகச் சேர்ந்தேன். பள்ளிக்குச் சென்று வீட்டுக்கு வந்த பின் கொஞ்ச நேரம் ஓய்வு. பின் பாட்டு, டான்ஸ் வகுப்பு, படிப்பு. இதுதான் எனது வாழ்க்கையாக இருந்தது. பின் சி.ஏ. முடித்தேன்.

மறக்க முடியாத நாட்டிய நிகழ்வுகள்
நாதஸ்வர இசைக்கு நடனமாடும் அரிய வாய்ப்பு சமீபத்தில் எனக்குக் கிடைத்தது. மல்லாரி ஒன்றைச் செய்தேன். அந்தக் காலத்தில் கோவில்களில், நாதஸ்வரத்துடன்தான் சுவாமி புறப்பாடு நடக்கும். அதற்கு முன்பாக நாட்டியம் நடக்கும். இப்படி இறைவனுக்கு முன்பாக நாட்டியமாடுவது பெரிய பாக்கியம். அந்த பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

★★★★★


வருடா வருடம், நான் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தின் வசந்தோத்சவத்தில் நாட்டியமாடி வருகிறேன். சிவபெருமானுக்கு முன்பாக, அவரது நாட்டியத்தை அவருக்கே செய்வதை, பெரிய கொடுப்பினையாகக் கருதுகிறேன். ஒவ்வொரு வருடமும் வசந்தோத்சவம் எப்போது வரும் என்று ஏங்குவேன்.

★★★★★


எனக்கு மெலட்டூர் சித்தி புத்தி விநாயகர் கோவில் பிரம்மோத்சவத்தில் ஆடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அதற்கு மறுநாள் தூர்தர்ஷனில், காலை வேளையில் 'ஏ' கிரேடு ஆர்டிஸ்ட் ஆடிஷன் உள்ளதாகக் கடிதம் வந்தது.

அதனால் அப்பாவும் நானும் போய் தூர்தர்ஷனில் பேசி, எங்கள் நிலைமையை எடுத்துச் சொன்னோம். "அந்தக் காலைவேளையில் என்னால் வரமுடியாது. ஏனென்றால் நான் அப்போதுதான் மெலட்டூரில் நாட்டியம் முடித்துவிட்டுச் சென்னைக்கு வருகிறேன். அதனால் எனக்குச் சில மணி நேரம் மட்டும் ரெடியாவதற்கு நேரம் கொடுங்கள், நான் வந்துவிடுகிறேன்" என்று சொன்னேன். ஒப்புக் கொண்டார்கள்.

ஆனால், மெலட்டூர் நிகழ்ச்சிக்கு முன்னால் எனக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஃபுட் பாய்ஸனிங். இருந்தாலும் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சியைச் செய்யாமல் இருப்பது சரியல்ல என்பதால், அங்குள்ள நரசிம்ம சுவாமி மற்றும் விநாயகரின் அருளால் சிறப்பாக ஆடினேன். பிறகு ரயிலில் மிகுந்த களைப்புடன் சென்னைக்குத் திரும்பினேன். தூர்தர்ஷன் ஆடிஷனுக்குப் போனேன்.

அப்புறம் வீட்டிற்கு வந்த பிறகுதான் என்னால் ஓய்வு எடுக்க முடிந்தது. சில மாதங்களுக்குப் பிறகு 'ஏ' கிரேடு ஆர்ட்டிஸ்ட்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தூர்தர்ஷனில் இருந்து கடிதம் வந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதில் சிறப்பு என்னவென்றால் அந்த ஆடிஷனில், இந்தியா முழுவதிலிருந்துமே இரண்டு பேர் மட்டுமே தேர்வாகி இருந்தனர். அவர்களில் நான் ஒருவள்.
- ஸ்ம்ரிதி விஸ்வநாத்


கே: உங்கள் குருநாதர்கள் யார் யார்?
ப: ஆறாம் வகுப்பு முடிக்கும் வரை நான் மஸ்கட்டில் என் அத்தை கலா சீனிவாசன் அவர்களிடம் கற்றுக் கொண்டேன். 2006 முதல் நான் ஆச்சார்ய சூடாமணி, கலைமாமணி ஸ்ரீமதி அனிதா குஹா அவர்களிடம் மாணவியாகச் சேர்ந்தேன். குருவின் வழிகாட்டலில் செப்டம்பர் 27, 2012 அன்று எனது அரங்கேற்றம் கிருஷ்ணகான சபாவில் நடந்தது. தற்போது அனிதா குஹா பரதாஞ்சலியின் மூத்த மாணவியாகவும், பரதாஞ்சலியின் சீனியர் ஃபேகல்டி ஆகவும் உள்ளேன்.



கே: உங்கள் குருநாதர்களிடம் நீங்கள் கற்றதும், பெற்றதும் என்னென்னன?
ப: அப்பா, அம்மாவை அடுத்து எனக்கு ஆச்சார்யா ஸ்ரீமதி அனிதா குஹா அவர்கள். என் வாழ்க்கையையே மாற்றி அமைத்தது அவர்தான். பள்ளியில் படிக்கும்போதே என் ஆச்சார்யா மிகக் கண்டிப்பாய்க் கடைப்பிடித்தது என்னவென்றால், எல்லாரும் நன்றாகப் படிக்க வேண்டும், நன்றாக நாட்டியமும் ஆட வேண்டும் என்பதுதான். தேர்வுக்காக நாட்டிய வகுப்புக்கு வராமல் இருக்கக் கூடாது; மார்கழியில் நிகழ்ச்சிகள் செய்கிறோம் என்பதற்காக அரையாண்டுத் தேர்வில் மதிப்பெண் குறையக் கூடாது. கல்வியும் நடனமும் என் குருநாதருக்கு இரண்டு கண்கள். அவர்களுடைய எல்லா மாணவிகளுமே highly qualified தான் டாக்டர், சார்டர்ட் அக்கவுண்டண்ட், ஆர்கிடெக்ட், டெண்டிஸ்ட், லாயர் என்று. ஆனால், யாருமே டான்ஸை விட்டது கிடையாது.

எங்கள் குருநாதர், எனக்கும், எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்தது என்னவென்றால் கடின உழைப்பு, விடாமுயற்சி, பொறுமை என இவை மூன்றும்தான். அவர்கள் இந்த வயதிலும் சின்ன விஷயமாக இருந்தாலும் மிகவும் நேர்த்தியாகச் செய்வார்கள். Perfection எல்லாவற்றிலும் எதிர்பார்ப்பார்கள். அவர்கள் செய்கிற ஒவ்வொன்றிலும் செய்நேர்த்தி இருக்கும். சிரத்தை இருக்கும். அப்போதுதான் முதல்முறை செய்வதுபோல ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் செய்வார்கள். இவையெல்லாம் குருநாதரிடம் நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடங்கள்.

நான் சிறு பெண்ணாக இருந்தபோது, என் குருநாதர் எடுக்கும் வகுப்புகளில் என்னையும் வந்து வகுப்பை கவனிக்கச் சொல்வார். கற்றுக் கொள்ளச் சொல்வார். அவை முதன்முதலில் விஜயதசமிக்குச் சேரும் சிறு குழந்தைகளின் வகுப்பாக இருக்கும். அதைத்தான் என்னை முதலில் கவனிக்கச் சொல்வார். பிறகு என்னையே வகுப்புகள் எடுக்கச் சொன்னார். குருநாதரும் வந்திருந்து நான் எப்படி வகுப்பு எடுக்கிறேன் என்பதை கவனிப்பார். அப்படித்தான் நான் கற்றுக் கொண்டேன். எனது குரு எனக்கு நாட்டியத்தை மட்டும் சொல்லிக் கொடுக்கவில்லை. நாட்டியத்தை எப்படிச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்தார். எவ்வளவு பெரிய கலைஞராக இருந்தாலும், எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்கு அவர் ஒரு நடமாடும் உதாரணம்.



கே: பரதத்தில் நீங்கள் யாருடைய பாணியைப் பின்பற்றுகிறீர்கள்?
ப: என் குருநாதரிடம் பலமுறை பலரால் கேட்கப்பட்ட கேள்வி இது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் என் குருநாதர் முதலில் சில வருடங்கள் கற்றுக் கொண்டது வழுவூர் பாணியைப் பின்பற்றிய குருவிடம். அதற்குப் பிறகு பந்தநல்லூர் பாணி குருவான கோவிந்தராஜப் பிள்ளை மாஸ்டரிடம் பல வருடங்கள் கற்றுக் கொண்டார். அதற்குப் பிறகு கலாக்ஷேத்ரா பாணியைப் பின்பற்றிய ஆனந்தா ஷங்கர் ஜெயந்த் அவர்களிடம் கற்றார். 18, 19 வயதிலேயே என் குருநாதர் ஆசிரியராக இருந்துள்ளார். ஆக, அவர்கள் சொல்லிக் கொடுக்கும் பாணி என்னவென்றால், கலாக்ஷேத்ராவின் நளினம், பந்தநல்லூர் பாணியின் துல்லியம், வழுவூராரின் கம்பீரம். இது மூன்றும் கலந்து அனிதா குஹா உருவாக்கிய பாணியில் கற்றுத் தருவார்.

அவர்களே உருவாக்கிய பாணிதான் 'அனிதா குஹா'வின் பரதாஞ்சலி. அந்தப் பாணியில் என்ன அழகு என்றால் கலாக்ஷேத்ராவின் வீர்யம் உண்டு. வழுவூர் மற்றும் பந்தநல்லூரின் அழகும் உண்டு. அவர் கற்ற எல்லாவற்றின் சுவையான கதம்பம் அது. அதைவிட என் குருநாதரின் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு மாணவிக்கும் அவரவர் உடல்வாகுக்கு ஏற்றபடி, எது அழகாக இருக்குமோ அதற்கேற்றவாறு அவர்களை மாற்றி அமைப்பார். ஒரு மாணவர் எப்போதும் இன்னொரு மாணவர் போல் இருக்க மாட்டார். எந்த ஒரு மாணவரிடம் இருந்தும் சிறந்தவற்றை மட்டுமே என் குருநாதர் வெளிக் கொணர்வார். ஆக நாங்கள் எந்தப் பாணியையும் சேர்ந்தவர்கள் அல்ல. நாட்ய சாஸ்திரத்தை நாங்கள் பின்பற்றுகிறோம்; அபிநய தர்ப்பணத்தை ஒட்டி, ஒரு கலைஞரின் சிறந்த அம்சங்களை வெளிக்கொண்டு வருகிறோம்.



கே: நீங்கள் பரதம் கற்பிக்கிறீர்கள் அல்லவா?
ப: ஆம். கற்பிக்கிறேன். முதுநிலை மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறேன். இவை தவிர்த்து மார்கழி மாத நிகழ்ச்சிகளில் தனித்து ஆடவும் பயிற்சி அளித்து வருகிறேன்.

தவிர, இப்போது ஆன் லைனிலும் சொல்லித் தருகிறேன். தனி வகுப்பு. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, வட இந்தியாவில் உள்ளவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். கற்பிப்பது சிறந்த அனுபவம். நாம் சொல்லிக் கொடுக்கும்போதே நிறையக் கற்கலாம். எதையெதை மாற்றி இன்னும் அழகாகச் செய்யலாம் என்று செய்து பார்க்கலாம். தானும் நிகழ்ச்சிகள் செய்கிறவராக இருந்துகொண்டு குருவாகவும் இருப்பவர்களுக்கு அது பெரிய அனுகூலம் என்று நினைக்கிறேன்.

மறக்க முடியாத பாராட்டு
இந்த வருடம் (2023) எனக்கு ஒரு பாராட்டுக் கிடைத்தது. நான் நாட்டியப் பேரொளி பத்மினி மாதிரி நடனமாடுவதாக. பத்மினி அவர்களின் தில்லானா மோகனாம்பாளை நான் மஸ்கட்டில் சிறுமியாக இருந்தபோதே பலமுறை பார்த்திருக்கிறேன். அதில் அவருடைய முடி அலங்காரம் எல்லாம் என்னை மிகவும் கவர்ந்தன. அவருடைய நாட்டியத்தைப் பார்த்துத்தான் வளர்ந்தேன். அப்படிப்பட்ட எனக்கு, நான் பத்மினி மாதிரி ஆடுகிறேன் என்று ஒருவர் சொன்னது பெருமையாக, மகிழ்ச்சியாக இருந்து. அதே போல் எனக்கு வைஜயந்திமாலா பாலி அவர்களின் நாட்டியம் மிகவும் பிடிக்கும். அவர் கையாலேயே எனக்கு ஒரு விருதும் கிடைத்து. அது மிகவும் நிறைவாக இருந்து.
- ஸ்ம்ரிதி விஸ்வநாத்


கே: நினைவில் நிற்கும் பரத நாட்டிய நிகழ்ச்சி பற்றிச் சொல்ல முடியுமா?
ப: இந்த வருடம், முக்கியமான சபா நிகழ்ச்சி ஒன்று. அதற்கு முந்தையநாள் தான் என்னுடைய செல்ல நாய் கோகோ காலமானது. கடைசி இரண்டு நாள் மிகவும் போராடினாள். ஆண்டவனாகப் பார்த்து எனக்குக் கடைசி நாளில் ரிஹர்சல் என்று எதுவும் வைக்காமல், அதற்கு முந்தைய இரண்டு நாட்களில் முடித்துக் கொடுத்தான். நான் ஒத்திகை புக் ஆகும் போதே நினைத்தேன், நிகழ்ச்சிக்கு ஒருநாள் முன்பு நமக்கு எதுவும் இல்லை. ரிஹர்சலில் நடக்கும் தவறுகளை அந்த நாளில் மறுபார்வை செய்யலாம் என்று . பிறகுதான் தெரிந்தது, அந்த ஒரு நாள் அவளுடன் நேரம் செலவழிப்பதற்காக எனக்குத் தரப்பட்டது என்பது.

மறுநாள் மாலை எனக்கு நிகழ்ச்சி. அதை கோகோவுக்காகவே நான் ஆடியது மாதிரி இருந்தது. ஏனென்றால், அவள் எங்கள் வீட்டிற்கு வந்தில் இருந்து, நான் எப்பொழுது வகுப்பு எடுத்தாலும் அல்லது பிராக்டிஸ் செய்தாலும் அவள் வந்து சோபாவின் அருகில் அமர்ந்துகொண்டு என்னைப் பார்த்துக் கொண்டு இருப்பாள். அதேபோல் எங்கள் அம்மாவின் வீட்டில் பாட்டு வகுப்பு நடக்கும்போதோ அல்லது பாட்டு வகுப்பில் கலந்துகொள்ளும்போதோ என் அம்மாவின் மடியில் தலையை வைத்துக் கொண்டு தூங்குவாள். ஏனென்றால் அவளுக்கு இசை, நாட்டியம் என்றால் மிகவும் பிடிக்கும். அந்த ஒரு ஜீவனுக்கு எப்படி அந்த அளவுக்கு எல்லாம் புரிந்தது என்பது இன்றுவரை எனக்குத் தெரியவில்லை. But she was the lover of arts.

மிகவும் களைப்பாகி நான் பயிற்சியை நிறுத்தினால், அவள் கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்ப்பாள். ரொம்ப நேரம் ஆனால், அவள் கத்த ஆரம்பிப்பாள். திரும்ப ஆரம்பி என்பதைச் சொல்லாமல் சொல்லுவாள். அந்த மாதிரியான ஓர் உறவு. So, that was s dedication to her. That program is my most memorable program.



கே: நீங்கள் சென்ற வெளிநாட்டு நிகழ்வுகள் குறித்துச் சொல்லுங்கள்…
ப: என்னுடைய முதல் வெளிநாட்டுப் பயணம் அமெரிக்காவுக்கு. பரதாஞ்சலி நாட்டியப் பள்ளி மாணவிகளுடன் சென்றிருந்தேன். சுவாமி தயானந்த சரஸ்வதிஜி அவர்களின் AIM For Seva-விற்காக நாங்கள் அமெரிக்காவின் 19 நகரங்களில் சுந்தரகாண்டம் நாட்டிய நிகழ்வை நடத்தினோம். அது ஒரு வித்தியாசமான அனுபவம். நாங்கள் 14 பேர் சென்றிருந்தோம். சுமார் ஒன்றரை மாதம் அமெரிக்காவில் தங்கி நிகழ்ச்சிகளை நடத்தினோம்.

ஒவ்வொரு வார இறுதியிலும் (வெள்ளி, சனி, ஞாயிறுகளில்) வெவ்வேறு நகரங்களில் நிகழ்ச்சி இருக்கும். ஓய்வெடுக்க நேரமில்லாமல், தூங்கக்கூட முடியாமல் தொடர்ச்சியாகச் சில சமயங்களில் பயணங்கள் இருக்கும். ஆனாலும் நாங்கள் அதனை விரும்பினோம். யாருக்கும் அலுக்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியான, மறக்க முடியாத நாட்கள் அவை.

அதற்கு அடுத்த வருடம் க்ளீவ்லாண்ட் தியாகராஜ ஆராதனைக்குச் சென்றேன். அது ஒரு மறக்க முடியாத அனுபவம் மற்றும் கௌரவம். நிறைய வித்வான்கள் வரும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டதை மறக்கவே முடியாது. தொடர்ந்து வருடா வருடம் இந்த நிகழ்வுகளுக்குச் சென்று கொண்டிருந்தோம். கோவிட் தொற்றுக் காலத்தில் விட்டுப் போய்விட்டது. மீண்டும் தொடரும் என்று நம்புகிறேன்.



கே: உங்களது கலைப் பணிகளுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் குறித்துச் சில வார்த்தைகள்…
ப: கடந்த இரண்டு வருடங்களாக எனது கணவர் திரு. விஸ்வநாத் அவர்களின் உறுதுணை இல்லை என்றால் என்னால் எதையுமே சாதித்திருக்க முடியாது. ஐந்து நிமிட நிகழ்ச்சி ஆனாலும் சரி, ஒன்றரை மணி நேர நிகழ்ச்சி ஆனாலும் சரி; அது கோவில் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, சபா நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, "இது ஒரு நல்ல வாய்ப்பு. மிஸ் செய்யாதே" என்று சொல்லி ஊக்கப்படுத்துவார். தொடர்ந்து இரண்டு, மூன்று வாய்ப்புகள் வந்து, நான் சற்றுத் தயங்கினாலும் கூட, அவர் அழகாக ஒரு ப்ளான் போட்டுக் கொடுத்து விடுவார். என் மாமியார் வி. லலிதா, மாமனார் எம். வைத்தியநாதன், கணவரின் அத்தை மீனாட்சி என்று எல்லாருமே என்னை ஊக்குவிப்பார்கள். சில சமயங்களில் என்னால் வீட்டு வேலையில் பங்களிக்க முடியாமல் போனால், பயிற்சிகள் அதிகம் இருந்தால், மாமியாரும், கணவரின் அத்தையும், "நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இது ஆடுகிற வயது. உன் அப்பா, அம்மா இவ்வளவு வருடம் உன்னை இதற்காகத் தயார் செய்திருக்கிறார்கள். இங்கு வந்து அது தடையாகக் கூடாது. நீ உன் பயிற்சியைக் கவனி" என்று சொல்லி என்னை ஊக்ககப்படுத்துவார்கள்.

எனது திருமணத்திற்குப் பிறகு, இவர்கள் அனைவரது அன்பான ஆதரவு இல்லை என்றால் என்னால் இந்த அளவுக்கு நாட்டியத்தில் மேம்பட்டிருக்க முடியாது. அதுபோல, திருமணத்திற்கு முன்னால் என் அப்பா, அம்மா என்னை மிகவும் ஊக்குவித்தார்கள். நான் மனம் சோர்ந்து போகாமல் இருவரும் என்னை உற்சாகப்படுத்திப் பயிற்சிகளில் ஈடுபட வைத்தனர். என் அக்கா சிறு வயதில் டான்ஸ் கற்றுக் கொண்டதால், இன்றளவும் எனக்கு மிகவும் சப்போர்ட் ஆக இருக்கிறார். என்னைப் பாராட்டுவார். அவளை மாதிரி ஒரு அக்கா கிடைக்க நான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இவர்களோடு எனது ஆச்சார்யா குரு அனிதா குஹா இல்லையென்றால் நான் ஒன்றுமே இல்லை. அதுபோல பரதாஞ்சலி நாட்டியப் பள்ளியின் சீனியர் ஃபேகல்டி மெம்பர் ஜெயஸ்ரீ ராமநாதன் அவர்களையும் சொல்ல வேண்டும். அவருடன் இணைந்து நான் நிறையப் பணி செய்திருக்கிறேன். என்னுடைய வகுப்புகளை அவர் நடத்தியிருக்கிறார். நிறைய நிகழ்ச்சிகளில் என்னுடன் இணைந்து பணி செய்திருக்கிறார்.

ஸ்ம்ரிதி விஸ்வநாத் பெற்ற விருதுகள்
இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி வழங்கிய 'சிறந்த நடனக் கலைஞர்- 2020 விருது.
திண்டிவனம் அன்னம்புதூர் ஸ்ரீ நிதீஸ்வரர் திருக்கோவில் வழங்கிய 'நிதி நாட்டியக் கலை அரசி' பட்டம்.
அமெரிக்கா, கிளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனா விழா 2018ல், நடனப் போட்டி மற்றும் செயல்திறன் சுற்றில் இரண்டாம் பரிசு.
ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா வழங்கிய 2018 சீசனுக்கான சிறந்த நடனக் கலைஞர் விருது.
அனிதா குஹா பரதாஞ்சலி வழங்கிய சிறந்த கலைஞர் விருது - நவம்பர், 2018
நவம்பர் 2014 ல், ஸ்ரீ கிருஷ்ணா கான சபை நடத்திய 58வது டிசம்பர் கலை மற்றும் நடன விழாவில், டாக்டர் ஏ.எஸ். வைஜெயந்தி மாலா பாலி அவர்கள் வழங்கிய சிறந்த நடனக் கலைஞருக்கான விருது, 'குரு சம்யுக்த பாணிகிரஹி'.


கே: உங்கள் குடும்பம் பற்றி…
ப: அப்பா சார்ட்டர்டு அக்கவுன்டன்ட். அம்மா, ஆப்டோமெட்ரிஸ்ட். நான் இன்றைக்கு டான்ஸராக இருக்கிறேன் என்றால் அதற்கு மிக முக்கியக் காரணம் என் பெற்றோர்கள். அது போல என் கணவர் விஸ்வநாத் ஒரு சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்தான். என் சாதனைகள் எல்லாவற்றுக்கும் நான் என் குடும்பம் மற்றும் குருவுக்குத்தான் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஸ்ம்ரிதியின் சில நடனங்கள்
வர்ணம் | ஸ்ரீ சாரங்கபாணி பதம் | ஸ்ம்ரிதியின் இன்ஸ்டாகிராம் பக்கம்


உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்
உதவி: திரு. பிரகாஷ், நங்கநல்லூர் சபா

© TamilOnline.com