சே. அப்துல் லத்தீப் (நீரை அத்திப்பூ)
கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல திறக்குகளில் இயங்கி வருபவர் சே. அப்துல் லத்தீப் என்னும் நீரை அத்திப்பூ. இவர் ஜனவரி 10, 1951 அன்று, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கடியாச்சேரி கிராமத்தில், அ. சேக் இப்ராகிம்–தாவூது அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். நாகை மாவட்டத்தில் உள்ள நீர்முளை கிராமத்தில் வளர்ந்தார். தொடக்கக்கல்வியை நீர்முளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியை மணக்குடி, வையாபுரியார் அரசினர் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். தஞ்சை மன்னர் சரபோஜி அரசினர் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் பயின்று பட்டம் பெற்றார்.



சே. அப்துல் லத்தீப் பள்ளி மாணவராக இருக்கும்போதே கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டார். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றார். தனது ஊர்ப்பெயர் மற்றும் தனது பெயரின் சுருக்கத்தை இணைத்து 'நீரை. அத்திப்பூ' என்ற புனை பெயரில் எழுதினார். முதல் கவிதை சேலத்திலிருந்து வெளிவந்த 'சங்கொலி' இதழில் வெளியானது. தொடர்ந்து இவரது கவிதைகள் செந்தமிழ், கவிதை உறவு, முல்லைச்சரம், கவிதா மண்டலம், அமுதசுரபி, புதுகைத் தென்றல், அன்புப்பாலம், தமிழ்ச் சிட்டு, பெரியார் பிஞ்சு, கோகுலம் போன்ற இதழ்களில் வெளியாகின. சிறார்களுக்காகவும் பல கவிதை, பாடல்களை எழுதியிருக்கிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு 'வண்ண ஒளி எண்ண அலை சின்னவரி' 1992-ல் வெளியானது. முதல் சிறார் பாடல் தொகுப்பு 'பாடி விளையாடு பாப்பா'. தொடர்ந்து பல நூல்களை எழுதினார். சந்த நயத்துடன் கூடிய கவிதைகளை எளிய சொற்களில் எழுதிப் புகழ் பெற்றார். மொழிபெயர்ப்பிலும் தேர்ந்தவர். திட்ட வரைவாக்கங்கள், முனைவர் பட்ட ஆய்வேடுகள், குடியரசுத் தலைவர் உரைகள் ஆகியவற்றை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். 30க்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

1964-ல், 'மாலை இலக்கிய வட்டம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். அதன் மூலம் 'மாலை' கையெழுத்து இதழைத் தொடங்கி நடத்தினார். தொடர்ந்து 'மாலைக் கையேடு', 'மாலை அச்சிதழ்' போன்ற இதழ்களைத் தொடங்கி நடத்தினார். அத்திப்பூ (நகலச்சு இதழ்), 'அஞ்சல் முத்துகள்' இதழ்களின் பொறுப்பாசிரியர் ஆகச் செயல்பட்டார். 'தமிழ்நாடு போஸ்ட்' இதழின் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தார்.



சே. அப்துல் லத்தீப், கவியரங்கங்கள் பலவற்றில் பங்கேற்றுக் கவிதை வாசித்தார். கவியரங்குகளுக்குத் தலைமை வகித்தார். பட்டிமன்ற நடுவராகச் செயல்பட்டார். தமிழ்க்கவிஞர் மன்றம், இலக்கிய வட்டம், சிறுவர் மன்றம் ஆகியவற்றின் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார். வானொலி நாடகங்களில் நடித்தார். வானொலி அறிவிப்பாளர் தேர்வுக்குழு உறுப்பினராகப் பணியாற்றினார். வானொலியில் பல கவிதைகளை வழங்கினார். முன்னணித் தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தன்னம்பிக்கை வகுப்புகள், தலைமைப் பண்பு வகுப்புகள், கவிதைப் பயிலரங்குகளைப் பொறுப்பேற்று நடத்தினார். அரசு மற்றும் தனியார் வழங்கிய பல்வேறு நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றினார். குழந்தைக் கவிஞர் பேரவையின் துணைத் தலைவராகப் பணிபுரிந்தார்.

சே. அப்துல் லத்தீப் அஞ்சல்துறையில் பணியாற்றினார். 39 ஆண்டுகள் பணி செய்து, மதுரை அஞ்சல் பயிற்சி மைய உதவி இயக்குநராகப் பணி ஓய்வு பெற்றார். இவரது மனைவி பெயர், பதுருன்னிசா. மகள்கள்: சம்சுலுஹா, மாஜிதா பர்வீன். மகன்கள்: பாரக் அலி, நிசார் அகமது.



சே. அப்துல் லத்தீப், 2011 முதல் 'தகவல் முத்துகள்' என்ற சிற்றிதழை நடத்தி வருகிறார். 'அத்திப் பூ கவிமாலை' என்ற மின்னிதழின் ஆசிரியராக உள்ளார்.

அரவிந்த்

சே. அப்துல் லத்தீப் பெற்ற விருதுகள்
புதுவை அரசின் 'பாவேந்தர் பட்டயம்', சென்னை கம்பன் கழகம் வழங்கிய 'தமிழ்நிதி' விருது, தமிழ்க்கவிஞர் மன்றம் வழங்கிய 'கவிப்பேரொளி' விருது, கவிதை உறவு வழங்கிய 'விக்கிரமன்' விருது, அன்புப்பாலம் வழங்கிய 'சாதனையாளர்' விருது, , புதுக்கோட்டை இலக்கியப் பேரவை வழங்கிய 'பைந்தமிழ்ச் செல்வர்', 'தொகுப்பாளர் திலகம்' விருது, வண்ணப்பூங்கா வழங்கிய 'எழுத்து இமயம்' விருது, மனிதநேய அறக்கட்டளை வழங்கிய 'பாரதிதாசன்' விருது, பாரதி நற்பணி மன்றம் வழங்கிய 'இலக்கியச் சுடர்மணி' விருது, சேலம் அட்சயா டிரஸ்ட் வழங்கிய 'தொகுப்புரைச் சிகரம்' விருது, சிராஜுல் மில்லத் விருது, கவிதைப் பௌர்ணமி பட்டம், கவிச்செல்வர் பட்டம், இணைப்புரை இனியர் பட்டம், சிறுவர்சீர் பாவலர் பட்டம், அறிவியல் கவிஞர் பட்டம்




நூல்கள்
வண்ண ஒளி எண்ண அலை சின்னவரி, பாடி விளையாடு பாப்பா, சிறுவர்க்கான அறிவியல் கூறும் அற்புதப் பாடல்கள், குறுஞ்செய்திக் கவிதைகள், அறிவியல் நாடு, அஞ்சல் தலை அறி(ரி)ய பாட்டு, நிலவுக்கே போகலாம், இதழ்கள் ஏந்திய மலர்கள், மறுபக்கம், குழந்தைக் கவிஞர் பாடல் பரம்பரை, களம் பொன்மொழி கவிதை வரிசை, திருக்குவளைத் தீந்தமிழ், கலாம் பொன்மொழிகள் கவிதை வரிசை 1, SMS கொடுத்த கவிதைகள், மற்றும் பல…

மொழிபெயர்ப்பு நூல்கள்
சாமர்த்தியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் (மூலம்: பிரையன் டிரேசி), அதிர்ஷ்டத்திற்கான 13 அற்புத வழிமுறைகள் (மூலம்: அஷ்வின் சாங்கி), நண்பர்களை வெற்றிகொள்வதும் மற்றவர்களைக் கவர்ந்திழுப்பதும் எப்படி? (மூலம்: டேல் கார்னகி), சிறந்த மதிப்பெண் பெற முதன்மையான 13 வழிகள் (மூலம்: அஷ்வின் சாங்கி-அசோக் ரஜனி), விற்பனைத் திறமையில் அற்புதம் (மூலம்: லெஸ் கிப்ளின்), கோடீஸ்வரராகக் குறிப்பான வழிகள் (ஜிம் ஸ்டோவல்), வியத்தகு விந்தைமனம் வெளிக்கொணர்வோம் அரிய திறம் (மூலம்: அல் கொரன்), மற்றும் பல

© TamilOnline.com