அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் 34 மாணவர்களுக்குக் கோவை செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாயப் பண்ணையில் 10 நாள் களப்பயிற்சி தரப்பட்டது. இதில் விதைப்பது முதல் அறுவடை வரை பல்வேறு நிலைச் செயல்பாடுகளை அவர்கள் நேரடியாகக் கற்றனர்.
இந்தக் களப்பயிற்சி நவம்பர் 7ம் தேதி தொடங்கி 27 வரை 2 கட்டங்களாக நடைபெற்றது. இதில் ஆலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேளாண் அறிவியல் பாடப் பிரிவில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்றனர். நிலத்தைப் பண்படுத்துவது, இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பது, களை எடுப்பது, புழு பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது, நெல், கீரை, காய்கறி என வெவ்வேறு விதமான பயிர்களைச் சாகுபடி செய்வது உட்பட ஏராளமானவை நேரடிச் செயல் விளக்கத்துடன் கற்பிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் கலந்து கொண்ட ஆலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஹரிஹரன் "என் வீட்டருகில் ஒன்று அல்லது இரண்டு பயிர்களை விவசாயம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். ஈஷா மாதிரிப் பண்ணைக்கு வந்த பிறகுதான் பல பயிர்களின் சாகுபடி முறை குறித்து முதல்முறையாகத் தெரிந்து கொண்டேன். இந்த முறையில் 5, 6 பயிர்களை ஒரே இடத்தில் வளர்க்க முடியும். இதனால், பூச்சித் தொல்லைகள் குறையும், களைகள் அதிகம் வராது, அடிக்கடி உழவு செய்ய வேண்டியது இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். அதேபோல், ரசாயன விவசாயத்தைப் போலவே இயற்கை விவசாயத்திலும் நல்ல மகசூல் எடுக்க முடியும் என்பதையும் தெரிந்து கொண்டேன். இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது" என்றார்.
இப்பயிற்சியில் மாணவர்களுடன் கலந்து கொண்ட வேளாண் அறிவியல் ஆசிரியர் திருமதி. ஆனந்த கலைச்செல்வி, "இந்தப் பயிற்சி எங்கள் மாணவர்களுக்கு மிகப் பயனுள்ளதாக இருந்தது. புத்தகங்கள் மூலம் கற்றுக்கொடுப்பதை நேராகக் களத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளும்போது, அவை மாணவர்கள் மனதில் நன்றாகப் பதியும். இப்பயிற்சியை இலவசமாக எங்களுக்கு வழங்கிய ஈஷாவின் 'மண் காப்போம்' இயக்கத்திற்கு நன்றி " என்றார்.
களப் பயிற்சியின் நிறைவு நாளன்று மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஸ்வாமி ஸ்ரீமுகா அவர்கள் மாணவர்களுக்குச் சான்றிதழும், மரக்கன்றுகளும் வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தார்.
இதுபோன்ற பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் 97894 98792 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்.
செய்திக்குறிப்பிலிருந்து |