சென்னை எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் தமிழ்ப் பேராயம் சார்பில், சிறந்த தமிழ் நூல்கள், சிறந்த தமிழ் இதழ்கள், சிறந்த தமிழ்ச் சங்கம், தமிழறிஞர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் ஆண்டுதோறும் 12 விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்ப் பேராய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது 'சிலாவம்' நூலை எழுதிய ஆசிரியர் சு. தமிழ்ச்செல்விக்கு வழங்கப்படுகிறது.
பாரதியார் கவிதை விருது 'நினைவின் ஆழியில் அலையும் கயல்கள்' என்ற நூலுக்காக கவிஞர், ஆவணப்பட இயக்குநர் ரவிசுப்ரமணியனுக்கும், அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது 'பெரியார் தாத்தா' என்ற நூலுக்காக அருண்.மோவிற்கும், 'கடலுக்கு அடியில் மர்மம்' என்ற நூலுக்காக சி. சரிதா ஜோ அவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
ஜி.யூ. போப் மொழிபெயர்ப்பு விருது எம். பூபதிக்கும், ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அறிவியல் தமிழ் மற்றும் தொழில்நுட்ப விருது 'இதம் தரும் இதயம்' என்ற நூலை எழுதிய டாக்டர் க. மகுடமுடிக்கும், பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது 'தனித்தமிழ் இயக்கம் ஒரு நூற்றாண்டு வரலாறு' என்ற நூலுக்காக க. தமிழ்மல்லனுக்கும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது 'நிலத்தியல்பின் அரசியல்' என்ற நூலுக்காக முனைவர் சிவ. இளங்கோவிற்கும் வழங்கப்படுகிறது.
சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது சமூக அரசியல் பண்பாட்டுக் காலாண்டிதழான 'மானுடம்' என்ற இதழுக்கும், தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது, மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்திற்கும் அளிக்கப்பட்டது. அருணாச்சல கவிராயர் விருது மறத்தமிழன் கலைக்குழுவிற்கும், பாரிவேந்தர் பைந்தமிழ் விருது எழுத்தாளர் சிவசங்கரிக்கும் வழங்கப்படுகிறது.
விருதாளர்களுக்குத் தென்றலின் நல்வாழ்த்துகள்! |