ஒளடதம்
அந்த இளைஞருக்கு அகவை முப்பதுகூட இருக்காது. அழகிய கீர்த்தனைகளால் அமைந்த ஜெபங்களை உற்சாகமாய் முணுமுணுத்தபடி மரப்பட்டைகளை உடைத்து அரைத்துக் கொண்டிருந்தார். மருத்துவமும் அறிவியலும் வானவியலும் அவருக்கு மிக விருப்பமாய் இருந்தாலும் சிறுவயது முதலே வேதங்களைத் தெளிவாகப் படித்திருந்ததால், இறையின் ஆசியுடன் தான் நோய்களைக் களையமுடியும் என மிகத் தெளிவாக நம்பினார். ரோமப் பேரரசின் மூன்றாவது முக்கிய நகரமான சிரியாவின் ஆன்டியொக்கில் (இன்றைய துருக்கி நாட்டின் அன்டகிய) பிறந்திருந்தாலும் கிரேக்க, எபிரேய மொழிகளில் தேர்ச்சி பெற்றவராக, நுனிப்புல் மேயாமல் எதையும் தீர ஆராய்ந்து கற்கும் கொள்கையுடையவராக, கைராசியான வைத்தியராகத் திகழ்ந்தார் இளைஞர் லூக்கா.

ஒய்வு நாட்களில் விரும்பிவரும் பதின்வயதுப் பிள்ளைகளுக்கும், இளைஞர்களுக்கும் மருத்துவம் சொல்லித் தருவதும், காடு மேடுகளில் திரிந்து மூலிகை பறிப்பது, மருந்துக் குறிப்பு, நாட்குறிப்புகளை எழுதுவது என மிகச் சுறுசுறுப்பான வாழ்க்கை.

தண்ணீர் கொண்டுவரச் சென்ற அருமை தங்கை ஷைரா "அண்ணா அண்ணா" என உற்சாகமாக அழைத்தபடியே உள்ளே வந்தாள். இடுப்பில் இடுக்கிவந்த கல்ஜாடியை இறக்கி வைக்க அம்மா அடுக்களையில் இருந்து ஓடிவந்தாள்.

"பெண்ணே! மெதுவாய், மெதுவாய். எத்தி கித்தி விழுந்து விடாதே! அண்ணன் உள்ளறையில்தான் இருக்கிறான்" என அம்மா செல்லமாய் கடிந்தாள்.

திரையை விளக்கிப் பார்த்த லூக்கா, "என்ன ஷைரா? உன் பிரியமான வியாபாரி எஸ்றா ஊருக்குப் போனவன் உன் நினைவு வாட்ட இரண்டே நாளில் திரும்பி வந்துவிட்டானா?" எனக் கேலி செய்தான்.

ஷைராவிற்கு, எஸ்றாவிற்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது. தங்கையை வம்புக்கிழுப்பது லூக்காவிற்கு விருப்பமான பொழுதுபோக்கு.

ஷைரா பொய்யாக முகம் சுளித்தாள்.

"அது இல்லை அண்ணா."

"எது இல்லை?"

"அச்சோ, கொஞ்சம் பொறுமையுடன் கேளுங்களேன் அண்ணா."

"சொல்லு கேட்கிறேன். கிணற்றடிக் கதைதானே. தண்ணீர் மட்டுமா, ஊர்ப்பட்ட கதைகளையும் அல்லவா கொண்டு தருகிறாய்."

அம்மா இடைமறித்து "மகனே லூக்கா, அவள் சொல்வதைத்தான் கேட்போமே" என்றாள்.

ஷைரா சத்தமாக "அந்த அக்காவிற்கு குணமாகிவிட்டது" என்றாள் வாலும் இல்லாமல் தலையும் இல்லாமல்.

லூக்கா "எந்த அக்காவிற்கு?"

ஷைரா "நினைவிருக்கிறதா அண்ணா? மூன்று வருடங்களுக்குமுன் மிரியம் என்றோரு அக்கா 12 வருட காலமாகப் பெரும்பாடு உதிரப்போக்கு கொண்டவள், பண்ணாத வைத்தியம் இல்லை, காணாத மருத்துவர் இல்லை என்று அவர் வீட்டார் உங்களிடம் வந்தார்களே. தீட்டுடையவள் என்பதால் வீட்டிற்கு வெளியே வரமுடியாத காரணத்தால் நானும் அம்மாவும் அவருக்கு நீங்கள் தந்த அத்திப்பழ லேகியங்களைக் கொண்டு சென்றோமே. பாவம் அவள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆறுதல் தரவேண்டிய அவள் கணவர்கூட அவளைப் பிரிந்து வேறோரு திருமணம் புரிந்து கொண்டாரே."

லூக்காவிற்கு அவளை நன்றாக நினைவிருக்கிறது. அந்தப் பெண்மணியின் கதையும் ஆரோக்கியமும் அந்தோ பரிதாபமாக அல்லவா இருந்தது. கேட்டவுடன் அம்மா வானை நோக்கிக் கைகளை விரித்து "எல் ஷடாய், எல்லாம் வல்லவரே! நன்றி! நன்றி! நன்றி!" என்று துதிகளை ஏறெடுத்தாள்.

"ம்ம். அப்படியா? சரி, யாரந்த வைத்தியர் எனக்குப் போட்டியாக?" என்று லூக்கா குறும்பாகக் கேட்ட மாத்திரத்தில் ஆயிரம் நிலவுகள் ஒளிர்ந்தது போலானது ஷைராவின் முகம்.

"ஆமாம் அண்ணா. வைத்தியர்தான். தலைமை வைத்தியர்! நசரத்து நகர் வாழ் உன்னதர், தாவீது வழிவந்த தச்சனின் மகன் இயேசு கிறிஸ்து" என்றாள்.

இன்னும் அவள் "மிரியம் அக்கா அவர் மகிமையை அறிந்து அத்தனை மக்கள் கூட்டத்தினிடையே அவரைக் காணச் சென்றிருக்கிறாள். அவரிடம் தனியே தனக்கான ஆசி கிடைக்காது என்பதால் அவர் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டால் போதுமென எண்ணி எப்படியோ நெருக்கியடித்துத் தொட்டேவிட்டாள். அந்தக் கணமே தான் சுகம் அடைந்தை உணர்ந்தாளாம்" என்றாள்.

லூக்கா சிரித்துக் கொண்டே "உனக்கு யாரிந்த இட்டுக் கட்டிய கதையைச் சொன்னது?" எனக் கேட்டார்.

ஷைரா "அவளேதான் சொன்னாள். அவளைத்தான் இன்று கிணற்றடியில் பார்த்தேன். தீட்டுடையவள் தன்னைத் தொட்டாளே என்று அவர் கடியாமல், அக்காவை அன்பொழுகப் பார்த்து ‘மகளே, திடன் கொள்! உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடே போய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு’ என வாழ்த்தினாராம்."

உடனே அம்மா "அவரைப் பற்றி நானும் கேள்விப்பட்டேன். எத்தனை உடற்சுகம் குறித்த சாட்சிகள், எண்ணிலடங்கா அதிசயங்கள், அற்புதங்கள்! கடினமான வேத ரகசியங்களை அழகிய ஆழ்ந்த உவமைக் கதைகள் சொல்லிப் புரியவைப்பாராம். அவரைக் காணும் வரம்தான் இன்னும் நமக்கு வாய்க்கவில்லை" என்றாள்.

லூக்காவிற்கு மிக ஆச்சரியமாயிருந்தது. என்ன மாய்மாலம் இது என ஒரு கணம் ஸ்தம்பித்தார். சின்னஞ்சிறு வயதுமுதல் பாடங்களைத் தேர்ந்து கற்ற என்னால் இயலாதது எப்படி இவருக்குச் சாத்தியமாயிற்று? சிலர் பயங்கரமான தோற்றத்தோடு மந்திர தந்திரங்களைச் செய்து பேய்களை ஓட்டுவதெல்லாம் அவர் அறிந்திருந்தபடியால் இதன் உண்மையை முழுமையாகத் தெரிந்து கொள்ள உறுதிபூண்டார்.

தாவீது வழிவந்தவரெனில் பெத்லேகேமில் விசாரிக்கலாம் என்று எண்ணிக் கொண்டார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே யூதாவிலுள்ள மலைப் பட்டணமான ஹெப்ரான் செல்ல வாய்ப்பு வந்தது. அது இயேசு கிறிஸ்துவின் ஒன்றுவிட்ட அண்ணணாகிய யோவான் பிறந்த ஊர் என்பதையும் அறிந்திருந்தார். அங்கே இயேசுவின் பெரியம்மா மூதாட்டி எலிசபெத் அம்மையாரைக் காணும் வரம் பெற்றார்.

இயேசு என்ற பெயரை உச்சரித்ததும் அவள் பரவசமாகப் பாடத் தொடங்கினாள்:

"முதிர்வயதினளாய், முடியாதவளாய் இருந்தேன்
என்னை, என் ஆசையை ஆசிர்வதித்து
என் வறண்ட கைகளில் பால்வடியும் பாலகனை,
யோவானை ஏந்தும் பேறு பெற்றேன்!
முதல் இறையின் தலைமைத் தேவதூதன்...
கேப்ரியல் நேராய் வந்து சொன்ன வரம்தான் என் யோவான்!
கேட்டதும் மகிழ்ச்சியில் வாயடைத்துப் போனேன்!
என்னவரோ இறைத்தூதனை கேள்வி கேட்டதால்
ஊமையானார் கொஞ்சகாலம் வரை
ஆம், யோவானைக் கொஞ்சும் காலம்வரை!
எனதருமைத் தங்கை மரியாளின் பிள்ளை
கன்னி வயிற்றில் விளைந்த நல்முத்து
இறையின் கொடை இயேசுவிற்காய்த் துணை வந்த மகன்தான் யோவான்!
ஜோஷ்வாவுக்கு ஒரு கேலப் போல, ரூத்திற்கு கிடைத்த நவோமி போல.
ஆம், தனியே ஒருவனையும் தேவன் படைப்பதில்லை மகனே!
எருசல நகரப் புழுதி வீதியில், கலீலியின் கடற்கரை மணலில்
கடந்து வர எம்மான் உலகில் உதித்த கதை சொல்கிறேன் கேள் என்றாள்."
லூக்காவினால் நம்பவும் முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை…
உன்னிப்பாகக் குறித்துக் கொண்டார்.
"அழகு மகள் மரியாளிற்கு நிச்சயம் செய்யப்பட்ட
யோசேப்பிற்கோ அவள் சொற்பமாய்தான் பரிச்சயம்!
இப்படியாயிருக்க தேவதூதன் அவள் ஜெப நேரத்தில் தோன்றித் தந்த சேதி
"மரியாளே நீ தேவ பிள்ளையைப் பெற்றெடுப்பாய், கிறிஸ்து என்றழைப்பாய்"
அவள் நன்றியுடன் சேவித்தாலும், கல்யாணமாகா கன்னி என்னை உலகம்
களங்கம் கற்பிக்குமே எனக் கலங்கினாள்.
விடயம் அறிந்த யோசேப்போ மரியாளை ரகசியமாய் விட்டுவிடத் திட்டம் செய்தான்.
ஆனால் தேவதூதனாம் கேப்ரியல் அவருக்கும் சொப்பனத்தில் தோன்றி
மரியாள் ஈன்றெடுக்கும் சேய், பாரை ரட்சிக்க வந்த பரமனின் மகன்
மரியாளை மணம் செய், அங்ஙனம் இறையை நீ கனம் செய்" என்றான்.
கிழக்கில் விண்மீன் ஒன்று பகல்போல ஒளிர
தாவீது பட்டணத்தில் ஆடுகளும் மாடுகளும் அடைத்து வைத்த கொட்டிலில்
பிறந்தவனாம் இன்று ஊர் போற்றும் எங்கள் இயேசு கிறிஸ்து"


என்று சொல்லிச் சிலாகித்தாள் எலிசபெத் மூதாட்டி.

"மெத்தப் படித்தவன் போலிருக்கிறாய், நீ வேதங்களை அறிந்தவனா தெரியவில்லை. எங்கே ஏசாயா தீர்க்கதரிசியின் சாரம் தெரியுமா? மெசியாவை பற்றிய வரிகளை சொல் பார்க்கலாம்" என வினவினாள் பாட்டி.

உடனே தலையாட்டி மனப்பாடமாய் தனக்கு தெரிந்ததைச் சொன்னார் லூக்கா

"ஏசாயா 7:14
இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
ஏசாயா 9:6
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்;
அவர் நாமம் - அதிசயமானவர், ஆலோசனை கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு எனப்படும்."

"பார்த்தாயா? தீர்க்கதரிசனம் உண்மையானதைக் கண்டாயா? இப்போது சொல் அண்ட சராசரங்களைப் படைத்த தேவனின் திருக்குமாரனுக்கு நோய்கள் எம்மாத்திரம்! அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!" எனச் சொல்லிக் கண்களை மூடித் தியானித்தாள்.

மீண்டும் "அவர் பெயர்தான் காயங்களைக் கட்டும் அருமருந்து – ஒளடதம்! அவரே ஒளடதம்!" என்றாள்

லூக்கா அசையாது அமர்ந்திருந்தார். கடவுளின் திருக்குமரனா இயேசு கிறிஸ்து?சந்தையில் ஆடுகளை விற்க வந்த கண்காணி ஒருவன் தேவர்கள் துதிபாடக் குழந்தை ஒன்று பிறந்தது என்றானே. அது உண்மைதானா?

குருடர்களும், குஷ்டர்களும் சுகப்பட்டார்களெனக் கேள்வியுற்றானே, அது நிஜந்தானா? முப்பதாண்டுகளுக்கு முன் கிழக்கில் ஒரு நட்சத்திரம் நின்றதே என எண்ண அலைகள் ஆர்ப்பரிக்க இன்னும் இன்னும் அவரைப்பற்றி அறிய, இன்னும் அவராற்றிய மருத்துவ அதிசயங்களைக் குறிப்பெடுக்க, அன்பை விதையாய்த் தூவிவரும் அவர் கிருபையை தீர விசாரித்து எழுதத் தீர்மானித்தான்.

இத்தனை நூற்றாண்டுகள் கழிந்தும் அன்பை அருமருந்தாய் ஆற்றிய அந்த வல்லமைமிகு தலைமை வைத்தியராம் இயேசு கிறிஸ்துதான் பல கோடி மக்களின் ஊனுக்கும் உயிருக்கும் ஒளடதமாய்த் திகழ்வது எத்துணை ஆச்சரியம், எத்துணைப் பேறு!

தேவி அருள்மொழி,
சிகாகோ, இல்லினாய்

© TamilOnline.com