கீரை மசியல்
தேவையான பொருட்கள்

உறையவைத்த கீரை - 1 பொட்டலம்
துவரம் பருப்பு - 1/2 கிண்ணம்
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 1
பெருங்காயம் - 1 சிட்டிகை
ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை

ஒரு பிரஷர் பானில் (Pressure Pan) ஒரு கிண்ணம் தண்ணீர் விட்டுப் பருப்பைப் போடவும்.

உறையவைத்த கீரையை அதில்போடவும். பின்னர் தேவையான உப்பு, சீரகம் சேர்க்கவும்.

நன்றாகக் கலக்கியபின் பிரஷர் பானை மூடியால் மூடி வைக்கவும். ஆவி வந்த பின்பு வெயிட்டைப் (weight) போட்டு முதல் சத்தம் வந்தபின்பு அடுப்பை மெதுவாக வைக்கவும்.

நான்கு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிடவும்.

பிரஷர் தானாக அடங்கிய பின்பு திறந்து கரண்டியால் நன்கு மசிக்கவும்.

எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும். தண்ணீர் அதிகம் இருந்தால் கீரையை நன்றாக மசிப்பது கடினமாக இருக்கும். இந்த நிலைமை ஏற்பட்டால் நீரை இறுத்துவிட்டுக் கீரையை மசித்து விட்டு, பின்னர் இறுத்த நீரைக் கீரையிலேயே விடவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com