இருபது ரூபாய் நோட்டு
"வேற ஏதாவது சாப்பிடறீங்களா சார்?" சர்வர் மணியன் அந்த நடுத்தர வயது மனிதரிடம் கேட்டான்.

"இல்லைப்பா வேற எதுவும் இல்லை. பில் கொண்டுவாப்பா!"

மொத்தம் நூற்றி ஐம்பத்தி மூன்று ரூபாய். பில் கொண்டு வந்தான் மணியன். "கேஷா கார்டா?"

"கார்டு". பர்சில் இருந்து எடுத்து, கிரெடிட் கார்டை வைத்தார் அவர். அதை மணியன் மேனேஜரிடம் கொடுத்தான்.

மணியன் கிரெடிட் கார்டை மேனேஜரிடம் இருந்து வாங்கி அந்த நடுத்தர வயது மனிதரிடம் கொடுத்தான். அதை அவர் பர்சில் வைத்துகொண்டார். தனியாக டிப்ஸ் எதுவும் வைக்கவில்லை.

"அப்புறம், நூறு ரூபாய்க்குச் சில்லறை இருந்தா கொண்டுவாப்பா." பர்சில் இருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை வைத்தார்.

"சரி சார்"

'இப்பெல்லாம் ஹோட்டலுக்கு வர்றவுங்க, பெரும்பாலும் கார்டுலதான் பணம் கட்றாங்க. யாரும் அதிகமா பணம் கைல கொண்டு வர்றதில்லை. அதனால, என்னை மாதிரி சர்வர்களுக்கு டிப்ஸ் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அதுலயும் இந்த ஆளு, நூத்தியம்பது ரூபாய்க்குச் சாப்பிட்டு, டிப்ஸ் வெக்காம, சில்லறை வேற கேட்கிறாரு?' மணியன் யோசித்தான்.

மணியனின் புத்தி கொஞ்சம் வேறுவிதமாக யோசித்தது. அவனிடம் ஒரு கிழிந்த இருபது ரூபாய் நோட்டு இருந்தது. மேலாகப் பார்த்தால் கிழிசலும் ஒட்டப்பட்ட இடமும் தெரியாது. திருப்பிப் பார்த்தால்தான் தெரியும். நான்கைந்து இடங்களில் மாற்றிப் பார்த்தான். 'இது கிழிஞ்ச நோட்டா இருக்கே?', 'தம்பி, வேற நோட்டு இருந்தா கொடுப்பா'. எல்லோரும் திருப்பிக் கொடுத்துவிட்டனர்.

அவர் கொடுத்த நூறு ரூபாய்க்கு மணியன் கல்லாப்பெட்டியில் இருந்து சில்லறை வாங்கினான். அதில் இருந்த ஒரு நல்ல இருபது ரூபாய் நோட்டை எடுத்துத் தன் சட்டைப்பையில் வைத்துக் கொண்டான். தன்னிடம் இருந்த கிழிந்த நோட்டைச் சில்லறையுடன் வைத்தான். மேலாகப் பார்த்தால் கிழிசல் தெரியாதபடி மற்ற ரூபாய்த் தாள்களுடன் வைத்தான் மணியன்.

"சார். இந்தாங்க நூறு ரூபாய்க்கு சேஞ்ச்!"

"இந்தாப்பா, இதை வெச்சுக்க!" என்று அந்த சில்லறையில் இருந்த கிழிசல் இருபது ரூபாய்த் தாளை மணியனிடம் டிப்ஸாகக் கொடுத்துவிட்டு, பாக்கிச் சில்லறையைப் பர்ஸில் வைத்துக்கொண்டார்.

ராகவேந்திர பிரசாத்,
ஹூஸ்டன், டெக்சஸ்

© TamilOnline.com